???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 65 - தேவன் கோயில் பூமாலை - மோகன்'ஸ் ரீகல்-1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  06:35:26 IST


Andhimazhai Image
அதெப்படி இத்தனை எபிஸோட்களில் நீ மோகனைப் பற்றி எழுதாமலே இருந்திட்டிருக்கே என்று ஒரு தோழி கேட்டார்.அவரிடம் சொல்வதற்குக் காரணம் தெரியவில்லை.உண்மையிலேயே காரணமே இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இளையராஜாவின் சகாப்தத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் மனிதன் என்று மோகனின் பெயரைச் சொல்லலாம். என் அக்காவுக்கு மோகன் தான் முதன் முதலில் பிடித்த ஹீரோ.ஹீரோயின் ரேவதி.என் சின்னூண்டு வயதில் நல்ல வேளை ரஜனிகாந்த் வந்து என்னைக் காப்பாற்றி வேறுதிக்கு அழைத்துச் சென்றார். இல்லாவிட்டால் என் சின்னக் கண்களுக்கு மோகனும் கமலும் அண்ணந்தம்பீஸ் என்று நினைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் அத்தனை வெள்ளந்தியாக உலகம் அறியாத அப்பாவியாக இருந்தேன்.அதுவும் நாலு வயதுக்குப் பிறகு தான் எனக்கு நாலு என்ற நம்பரே தெரியும்.வேண்டாம் இதற்கு மேல் கதை விட்டால் இன்பாக்ஸில் கல்லெறிவீர்கள்.
           
 
ஆக மோகன் இந்த அத்தியாயத்தின் நாயகன். அழகன். தன் தலையை ஒரு குலுக்கு குலுக்கி வெள்ளந்தியாய் சிரித்தால் அன்றைய தினம் வெண்திரைக்குக் கீழே சும்மா லைக்ஸ் அல்லிக்கொண்டு ஸாரி அள்ளிக்கொண்டு போகும். எத்தனை பேர் தூக்கத்தைக் கெடுத்தார் என்பதற்குக் கணக்கில்லை. மோகன் ஒரு லக்கி சார்ம்.
                       
 
 
பிறப்பால் கன்னடரான மோகன் தமிழுக்கு நேராக வருவதற்கு முன் பாலுமகேந்திர எடுத்த கோகிலாவில் கமலின் தோழனாக அவதரித்தார். மூடுபனி படத்தின் பனி விலகிய ஒரு எபிஸோடில் மிகச்சிறிய வேடத்தில் வந்து செல்வார். நாலைந்து க்ளோஸ் அப் மற்றும் அர்த்தமற்ற சில டயலாகுகள். அவர் தோன்றும் காட்சிகளில் ஒரு ஸ்கூட்டருக்குக் கிடைத்ததற்கு அடுத்த மரியாதை தான் அவருக்குக் கிடைத்தது.
       
 
பயணங்கள் முடிவதில்லை எனும் ஒரே ஒரு படம் மோகனை இடுப்பைப் பற்றி எடுத்து தடைச்சுவருக்கு அப்பால் நட்சத்திரப் பூங்காவின் மெத்மெத் புல்வெளியில் எறிந்தது. வெள்ளிவிழா நாயகன் என்ற பேரில் பற்பல படங்கள் பாதிப் படங்களில் பாட்டு இசை என தமிழ் நிலத்தின் வாழ்க்கையின் நிஜ வெம்மைக்குச் சற்றும் சம்மந்தமற்ற ஏர்கூலர் கதாபாத்திரமாகவே பெரும்பொழுதைக் கழித்தார். அவர் உம்மென்று முகம் சுருக்கினால் அது சோகம்.பூ போல முகத்தை மலர்த்தினால் அது சந்தோஷம். இத்தனைக்கும் உடலையும் முகத்தையும் மாத்திரமே அவர் முன்வைத்தார். பின் குரல் தந்தவர் விஜய் என்கிற ஜோசப் விஜயின் தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர். அவர் ஒரு பின்னணிப் பாடகர். ஆனால் அவரது வாட்ச்சில் வீட்டுக் கடிகாரத்தில் என எங்குமே நேரம் இல்லாத அளவுக்கு மோகனின் பை ரன்னராகவே அவரும் படு பயங்கர பிஸியாக இருந்தார். காலம் மோகன் படங்களைக் குறைத்த போது அவருடைய குதிரையும் சேர்த்தே நின்றது. அதுவரை இரண்டு பேருமே பிஸியோ பிஸி.
 
         
 
சுரேந்தர் அவர் வீட்டில் பேசினால் கூட எங்கே மோகன் என்று சுற்றித் தேடுகிற அளவுக்குத் தமிழில் புழங்கிய மிக செல்வாக்கான நகல் குரல் என அவரது குரலைச் சொல்ல முடிகிறது. அந்தக் காலகட்டத்தில் தலை முடி குறைந்த நடிகர் டோப்பா அதாவது விக் இல்லாமல் வெளியே சென்றால் எப்படி அடையாளச்சிரமம் ஏற்படுமோ அப்படித் தான் மோகனின் நிஜக்குரலை ஜீரணிக்க முடியாமல் திணறினார்கள். அந்த அளவுக்கு மந்திரம் கால் மதி முக்கால் என்பார்களே அப்படித் தான் மோகன் முக்கால் சுரேந்தர் கால் என்ற அளவில் இரண்டு வேவ்வேறு நபர்களின் கூட்டு பிம்பமாகத் திகழ்ந்தவர் நடிகர் மோகன்.
                         
 
இளையராஜா இசைத்துத் தள்ளினார். அதென்னவோ இது மோகன் படம் என்று அமர்ந்தாலே எல்லாப் பாட்டும் சும்மா அதிரி புதிரி என்ற அளவிலேயே மற்றவர்கள் எல்லாரும் நடந்து படியேறிய மலையுச்சிகளுக்கெல்லாம் வின்ச்சில் சென்று சர்ரென்று இறங்கும் வீஐபி செல்லம் மோகன். அப்படி ஒரு இரண்டல்ல பற்பல படங்கள் தொட்டதெல்லாம் பாட்டு அதிலும் பாட்டு தான் நான் என் கூடப் பாடுங்க என்னால பாடாம இருக்க முடியாது. பாட்டுக்குள்ள ம்யூசிக்குக்குள்ள தான் என் உசுரே இருக்குது.,பாட முடியாட்டி நான் நாட்டை விட்டே போயிருவேன். உன்னைய ஏன் பிடிக்குது தெரியுமா ஏன்னா நீயும் பாடுறே வா சேர்ந்து தனித்தனியா கூட்டமா எப்பிடியாச்சும் பாடலாம். பாடிட்டே இருக்கணும் ப்ளீஸ்.எனக்கு சோறு வேணாம் தண்ணி வேணாம் ஆனா பாட்டு கட்டாயம் வேணும் அப்டியே தொட்டுக்க நாலைஞ்சு இசை ப்ளீஸ் ப்ளீஸ் 
   
 
தமிழ் மத்தியதர கூட்டு விருப்ப முகமாக மோகன் நிகழ்ந்தார் என்றால் தன் இசை குறித்துப் பேசுவதற்கான ஒரு பிரதிநிதியாகவே இளையராஜா அவரை முன் நிறுத்தினார். இளையராஜாவின் பாடல்களின் பலம் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூனில் பறக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் இளையராஜா தன் இசையின் போக்கை அடுத்த திசை நோக்கித் திருப்பும் போது இந்தப் பாடல் பிரதிநிதித்துவ அதிர்ஷ்ட ஹைட்ரஜன் நாயகனாக ராமராஜன் முரளி  ஆகியோரை மாற்றினார். அதன் பின் அந்த பலூன் கீழிறக்கப்பட்டது.
           
 
ஜோதி படத்தில் சிரிச்சா கொல்லிமலைக் குயிலு மறக்க முடியாத கானாம்ருதம். சோகமான குழலோசையைக் கொண்டுவந்து முத்துதிரும் மறுபுறக் கோர்வையை அதில் கலந்து இரண்டுக்கும் சம்பிரமமாக கொட்டோசையை அமைத்து உற்சாகத் துள்ளலான பாலசுப்ரமணியத்தின் வழிந்தோடும் குரலால் இந்தப் பாடல் ஒரு போதைவஸ்து. உடன் பாடிய ஷைலஜா இன்னொரு பக்கம் பட்டையைக் கிளப்பி இருப்பார். மோகனராகம் இது. கல்யாணச் சேலை உனதாகும் நாளை எஸ்.பி.பி மோகன் ராஜா இணையின் இன்னொரு ஹிட் கோரஸ் எனும் உடனொலிகளுக்காகவே குறிப்பிட வேண்டிய பாடல்களிலொன்று. அம்பிகை நேரில் வந்தாள் படத்தின் பாடல் இது. இதே படத்தின் இனி தித்திக்கும் முத்தங்கள் எத்தனை சொல்லிவிடு என்ற பாடல் வாணியுடன் மனோ பாடிய இந்தப் பாடல் மனோவின் ஆதி ஆரம்பங்களில் ஒன்று அத்தனை மனோரதமான குரல்,. வாலி கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய மகுடி ஒரு மோகன் பேர் சொல்லும் சூப்பர் ஹிட். நீலக்குயிலே உன்னோடு தான் பண்பாடுவேன் பாடல் அதிரிபுதிரி. அமானுஷ்யமான ஒரு மந்திரத்தைப் போல மனங்களை வருடிச் செல்லவல்லது இந்தப் பாடல். பல்லவி முடியும் வரை ஒவ்வொரு வரியும் சுழன்று முடிந்து திரும்புகிற அருமையான ஜிப்ஸி ஸ்பின் இந்தப் பாடல். இளையராஜா பாடிய கரட்டோரம் மூங்கில்காடு இன்னொரு திசைமுனையில் விரியக் கூடியது.
       
 
நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் பருவமே புதிய பாடல் பாடு அமைதியான அதிகாலைப் பனிப் பொழியும் ஜாகிங் செல்லும் அந்த நேரத்தின் மனோ நிலையைப் பாடலுக்குள் பெயர்த்துத் தந்திருக்கும். இன்றைக்கும் எத்தனை முறைகள் இந்தப் பாடலைக் கேட்டாலும் ஏன் சலிக்கவில்லை என்பதன் பின்னே இருக்கக் கூடிய சங்கதிகள் ஆச்சர்யம் தரும்.
   
 
இந்தப் பாடல் என்றில்லை. பல பாடல்களில் இளையராஜா பாடலின் தொடக்கத்தில் இருந்தே ஒரு முரண் இசையை ஒலிக்கச் செய்தபடி தொடங்குவார். பல பாடல்களை உதாரணமாய்ச் சொல்ல முடியும். ஒரு சப்தம் தொடக்கத்தில் இருந்தே எழுந்து தொடர்ந்து தன்னை இரட்டித்தபடி பாடலின் மைய இசையோடு கலந்து காணாமற் போகும். சொடக்கிடும் சப்தம் மழைத்துளிகள் விழுவது மணி ஓசை எதாவது ஒரு பொருளின் உருண்டோடும் இசை என இன்னது என்று வகை பிரிக்க முடியாத அந்த இசையற்ற இசையைக் கொண்டு பாடலை நம் மனனத்துக்குள் அதற்குண்டான ஆழத்தைத் தாண்டிய வேறொரு ஆழத்தில் செருகுவது இளையராஜா ஸ்டைல்.இப்படியான இசையற்ற இசை பயன்பாட்டிற்கான இன்னொரு உதாரணம் ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் பாடலின் ஆரம்பத்தில் வரக் கூடிய சொடக்கிடும் ஓசை. நன்கு கவனித்தால் பல்லவி முடியும் வரை வாகனத்தை நாய் துரத்துவது போல விடாமல் வந்திருக்கும் அந்த ஒலி பிற்பாடு தயங்கிச் சரிந்து நிற்கும். பின்னரும் ஆங்காங்கே வந்துசெல்லும்.
           
 
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா என்ற போது கவனித்தால் இந்தப் பாடலின் ஜிப்ஸி தன்மை புரியும். ஒவ்வொரு வரியும் முடிந்து முடிந்து தொடங்கும் சுழலிசை பாடல் இது,மொத்தப் பாடலையும் தன் மீது சுமந்தபடி காலடிச் சப்தங்கள் மைய இழைக்குப் பதிலியாகத் தொடரும். 
 
   
ராஜ ராஜ சோழன் நான் என்ற மு.மேத்தா பாடல். ரெட்டை வால் குருவி படத்தின் இந்தப் பாடலும் புலன்மயக்க்த்தின் செல்லப் பாடல் அல்லவா.இதைத் தாண்டலாம்.
       
 
மோகன் என்பதை மீறி அவர் பாடல்களின் உட்பொருளைப் பார்க்கலாம் ''பாடு நிலாவே தேன் கவிதை...பூ மலரே...தேனே தென்பாண்டி மீனே இசைத் தேனே...இசைத் தேனே...மானே இளமானே நீ தான் செந்தாமரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ என்ற பாடலின் மையப்புள்ளி இதனுள் மறைந்திருக்கும் தாலாட்டுத் தன்மை. காவேரியா கானல் நீரா பெண்மை என்ன மென்மை முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு.அம்மாடியோ நீ தான் இன்னும் சிறுபிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை..இந்தப் பாடல் நிலாவே வா செல்லாதே வா..மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ.. இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்.. அதில் வாழும் தேவி நீ. இசையை மலராய் நானும் சூட்டுவேன் உதயகீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன் தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை மாடத்திலே தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை மாடத்திலே... தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க.. சொன்ன வார்த்தை காற்றில் போனதே ஒரு மாயம் ஆனதேன்...ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே...கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே..கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் , வைகரையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்.. வான் உயர்ந்த சோலையிலே....ராஜாமகள் ரோஜா மகள்...
                               
 
மேற்காணுகிற தனிப்பாடல்களைப் பார்க்கலாம். மோகனுக்கென்று தனிப் பாடல்களை படைக்கும் போது இளையராஜா செய்து காண்பித்த மாயம் என்ன தெரியுமா..? இவைகள் எல்லாமே சிடுக்கில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் பிரவாக வார்த்தைகள். ஃப்ளோ என்போமே அப்படிப் பாடலின் வார்த்தைகளை அடுத்தடுத்து எழுதிக்கொண்டே சென்றால் எங்கேயும் தட்டாமல் அப்படியே சென்று நிறையக் கூடியது. இந்த இலகுவான தன்மையை முன் வைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது தான் மேற்சொன்ன மோகன் தனிப்பாடல்கள் எல்லாவற்றின் பொதுத் தன்மை.அத்தனை பாடல்களின் மைய இழையாக இருக்கும் தாலாட்டுத் தன்மை. இந்தப் பாடல்களை எந்த வரிசையில் கேட்டாலும் சரி. இளையராஜா இசைத்து மோகனுக்காகப் படைத்த தனிப்பாடல்களில் மெலடி என்ற வகைமையில் அது சோகமோ அல்லது சிற்சில படங்களில் சந்தோஷமோ எப்படி இருந்தாலும் அத்தனை பாடல்களையும் எப்படி எத்தனை முறை கேட்டாலும் உறக்கத்தை நோக்கிய மயக்கத்தினுள் நம்மை ஆழ்த்துவதை உணரலாம்.
                 
 
கலைஞர்கள் பலவிதம். ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைஞர்களை அவர்தம் வாழ்வியலை மையப்படுத்தி படங்கள் உருவாவதும் அவை மக்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படுவதும் சகஜம். தில்லானா மோகனாம்பாள் தொடங்கிக் கரகாட்டக்காரன் நாட்டுப்புறப் பாட்டு வரை எத்தனையோ உதாரணங்கள் உண்டு. மேலும் நாயகனை எதேனும் ஒரு கலைத்திறமை படைத்தவனாக சாதாரணத்திலிருந்து நட்சத்திரமாக மின்னத் துடிப்பவனாக கதைகள் புனையப்பட்டன.இவற்றுக்கும் உதாரணங்கள் உண்டு. ஆனாலும் மோகனின் காலகட்டம் வித்யாசமானது. அவர் போலீசாக திருடனாக நடித்தாலும் கூட அந்தப் பாத்திரங்களின் குணத் தோற்றம் மீதெல்லாம் முந்தைய பிந்தைய பாட்டுக்காரன் தோற்றத்தை எழுதிச் செல்கிற அளவுக்கு அவரை பாடகனாகவே ஆக்கிப் பார்த்தார்கள். மைக் மோகன் என்றழைத்தார்கள்.
டி.ராஜேந்தர் இசைத்த கிளிஞ்சல்கள். பின்னாட்களில் சிம்பு நடிக்க விண்ணைத் தாண்டி வருவாயா என்று கிட்டத் தட்ட இந்தப் படத்தின் அதே ப்ளாட் அதே ட்விஸ்ட் அதே ஃபீல் என முக்காலே மூணு சத மீவுரு வந்தது.அதைப் பார்த்திருந்தால் அதன் முன் ஜென்மம் தான் கிளிஞ்சல்கள். பாடல்களில் என்னவெல்லாம் முடியுமோ அத்தனை கொனஷ்டைகள் செய்வார் மோகன். அதும் ஸார் சந்தோஷத்தை நமக்கு புரியவைக்க குழந்தையாகவே மாறிவிடுவார். அப்படிப்பட்ட பாடல்களுக்கு ஒரு நல்லுதாரணம் இந்தப் படத்தில் வருகிற அழகினில் விளைந்தது என்ற பாடல். அப்படி ஒரு உற்சாகம் போதும் ஸார் என்று கடுப்பாகும் அளவுக்கு பர்ஃபார்மன்ஸை அள்ளி ஊற்றி இருப்பார்.,பாடல் முழுக்க மழை வேறு ஊற்றும்.அதே படத்தின் வேறோரு பாடல் ஒரு மோகாற்புதம். விழிகள் மேடையாம் இமைகள் சிறைகளாம் ராஜேந்தரின் கவித்துவத்துக்கும் இசைஜரிகைக்கும் குரல்வளத்துக்கும் எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழில் அபூர்வமான ஜாஸ்+மெலடி+பீட் என்ற மூன்றும் கலந்த கலவைக்கான உதாரணம் இந்தப் பாடல். எத்தனை கேட்டாலும் தீர்ந்து போகாது.
       
 
ஞான் ஒந்நு பறயட்டே என்றொரு மலையாளப்படம் நம் மோகன் தான் ஹீரோ. சின்னதொரு ரோலில் மோகன்லாலும் நடித்திருப்பார். முல்லநெழி எழுதிய பாடலுக்கு ராகவன் இசை அமைத்திருப்பார்.ஈ நீலயாமினி என்ற ஜேசுதாஸ் பாடல் அத்தனை ரம்மியமாக இருக்கும். மோகனம் பாடும் வேளையில் போய்க் கேட்டு வையுங்கள். பிடித்தமாயிருக்கும். 
   
 
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நெடுநாள் ஆசை ஒன்று மற்றும் எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை  இரண்டும் சரணாலயம் படத்தின் சக்கைப் பிரதம ஹிட்கள்.
         
 
வைத்திலக்ஷ்மண் இசையில் லாட்டரி டிக்கட் படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ ஜெயச்சந்திரன் வாணி இணைந்து பாடிய பாடல் இது. அசரடிக்கும் பாடல் இதன் பின் வைத்திலக்ஷ்மண் என்னவானார் என்பது தெரியாத புதிர்.
            
 
ஷங்கர் கணேஷ் இசையில் நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பாடல் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஒரு தாமரை மொட்டு வந்து என்னைத் தொட்டு புது தாகம் தந்து..எஸ்,பி.பாலசுப்ரமணியம் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடல் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் டீஎஸ்.பி மாறுவேடத்தில் ரெய்ட் செல்லும் போது ஒரு பாடல் வரும் இசையற்ற பாடல் மட்டும் ஒலிக்கும். அந்த பாடலைத் தான் இங்கே மோகனுக்காக மீவுரு செய்திருப்பார்கள் சங்கர் கணேஷ் இரட்டையர்கள்.இதோ அந்தப் பாடல்
                           
 
அந்திசாயிற நேரம் மந்தாரச் செடி ஓரம் ஒரு அம்மாவைப் பார்த்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாளாம் பொண்ணு கொக்கரகோ கொக்கரகோ கொக்கரகொக்கரகொக்கர கோ டிக்கிரி டீ டிக்கிரி டீ டிக்கிரிடிக்கிரி டீ
                     
 
விதி படத்தில் ஷங்கர் கணேஷ் இசையில் எல் ஓ வீ ஈ லவ் தான் என்ற சூப்பர் ஹிட் அந்தக் காலத்தின் ரேடியோ நம்பர் ஒன். படம் வேறு தலை தெறிக்க ஓடியதன் காரணம் பாடல்கள் அல்ல. மோகன் இந்தக் கதைப்படி வில்லன். ஸாரி. வில்லர். அவரை வென்றெடுக்கும் பெண் பூர்ணிமா பாக்யராஜ். கோர்ட் சீன்களுக்காகப் புகழ்பெற்ற போன ஜென்மத்துப் படங்களில் ஒன்று விதி. ஒரு பாடல் நான் கேட்டேன் என்ற வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் வெகு ஆழத்தில் நம்மை ஆழ்த்தும்.
ஓசை சங்கர் கணேஷ் வாணி ஓரு பாடல் நான் கேட்டேன். கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் கங்கை அமரன் இசைத்த அண்ணி படத்தில் வைகாசி மாதம் வெப்பங்கள் தீர குற்றாலச் சாரல் விழும் என்ற உற்சாகமான பாடல் கேட்க ரசமான ஒன்று. இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்தவர் சுரேஷ்மேனன்.
தென்றலடிக்குது மின்னலடிக்குது தேனே குங்குமக் கோடு படத்தில் எஸ்.ஏராஜ்குமார் இசையில் பாலு சித்ரா பாடியது. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானந்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூ மேகம் தானே..? இது ஒரு தொடர்கதை. மனோ கங்கை அமரன் இசைத்தது வசந்தி படத்தில் சந்திரபோஸ் இசைத்த சந்தோஷம் காணாத வாழ்வுண்டா பாடல் ஒரு மோகன்ஸ் சிக்னேச்சர். ரவிவர்மன் எழுதாத கலையோ இன்னொரு மோகாம்ருதம்.    
           
 
நரசிம்மன் பற்றிய அத்தியாயத்தில் பார்த்து விட்ட பாடல் பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ என்ற பாடல். இதுவும் ஒரு மோகன்ஸ் சிக்னேச்சர் தான். பாலசுப்ரமணியத்தின் உள்ளே மோகன் புகுந்து கொண்டு தனக்காகப் பாடினாற் போன்றதொரு ஜாலப் பாடல் இது.
   
 
உயிரே உனக்காக படத்தில் வரக் கூடிய அத்தனை பாடல்களிலும் ஒரே ஒரு சின்னப் பாடல், பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாதை இல்லாமல் ஓடுகிறேன் ஊமைக் காற்றாய் வீசுகிறேன் உறங்கும் போதோ பேசுகிறேன் இந்த ராகமும் தாளமும் எதற்காக உயிரே உனக்காக....உயிரே உனக்காக லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் இசைத்த இந்தப் பாடல் என் சின்னஞ்சிறுவயதில் அனேகமாக எனக்குள் காதலுக்கான ஆதி இசை மற்றும் ஆரம்பச்சொற்கள் இரண்டையும் நேர்த்திப் பதியனிட்ட பாடலாக இதைத் தான் கருத வேண்டி இருக்கிறது. இன்றைக்கும் இந்தப் பாடலுக்குள் என் பால்ய முகமும் மனமும் ஞாபகமாய் ஒருங்கே திரும்பிப் பார்ப்பதை உணர்கிறேன்.வேண்டும் பாடலாகவும் வேண்டாத பாடலாகவும் ஒருங்கே ததும்புகிறது இந்தப் பாடல். இப்படிப் பலரும் இசைத்து அளித்த அமுதம் நமக்கெல்லாம் மோகன் படப் பாடல்களாகக் கிடைத்தது. இளையராஜா மோகனை பாடல்கள் பூட்டிய ரதத்தில் ஊர்வலமாய் அனுப்பினார்.அந்த ரதம் சென்ற திசையெல்லாம் கானமழை பொழிந்தது
               
 
எத்தனையோ படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை வெற்றிகரமாக ஏற்றுத் தன் நடிப்புத் திறனை நிரூபித்தவர் மோகன். எனக்குப் பிடித்த மோகன் படங்களில் ஒன்று நூறாவது நாள். ஸ்வீட் கோடட் வில்லன் வரிசையில் மோகனை சொல்லியே தீரவேண்டும். இன்னொரு படம் கோபுரங்கள் சாய்வதில்லை. தமிழில் இரு தார மணாளனாக நடித்தவர்களில் மோகன் நடித்த ரெட்டை வால் குருவி படமும் சாயாத கோபுரம் தான். பிழைக்குப் பின்னதான அவஸ்தையை அழகாக நடித்துக் காண்பித்தவர் மோகன். அதீதமான வாழ்வில் நம்பகம் கிஞ்சித்தும் இருந்திடாத ட்விஸ்ட்களைக் கொண்ட படங்களில் வரிசையாக நடித்தார் மோகன். அவற்றின் வரிசையில் மௌனராகம் எனக்கு மிகமிகப் பிடித்த மோகன் படம்.கதைப்படி ரேவதி தான் அதன் மையம். கார்த்திக்கின் சொற்ப நேரத் தோற்றத்தை மீறி மோகன் அந்தப் படத்தில் அந்த இருவரையுமே வென்று தன் கொடியை நாட்டினார் என்றால் தகும். மௌனராகம் மோகன் எண்பதுகளின் மத்யம ஆண் உதாரணமாகக் கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சூப்பர் ஹிட்டில் தோன்றவில்லை மோகன்.
   
 
ராம நாராயணனின் செல்லப் பிள்ளை மோகன் வாய்ப்பந்தல் என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்குமா தெரியாது சகாதேவன் மகாதேவன் மனைவி சொல்லே மந்திரம் வேங்கையின் மைந்தன் எனப் பல படங்களில் மோகனை இயக்கினார் மணி ரத்னத்தின் ஆரம்ப காலப் படங்களில் மோகன் நடித்த இரண்டு. பாலு மகேந்திரா தன் கோகிலாவில் செதுக்கிய மோகனை மறுபடி ரெட்டை வால் குருவியில் இயக்கினார். நெஞ்சத்தைக் கிள்ளாதே மகேந்திரன் படம் ஆர்.சுந்தர்ராஜன் தொடங்கி மணிவண்ணன் ரங்கராஜ் மனோபாலா கே.விஸ்வநாத் எனப் பலருடைய படங்களிலும் நடித்தார் மோகன். பாரதிராஜா படத்தை மறுத்தார் என்றும் பாலச்சந்தர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் வரை சென்றதாகவும் சேதிகள் உண்டு. அவற்றின் நம்பகம் உறுதியற்றது. மோகன் எழுபதுகளின் இறுதி தொடங்கி தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை பதினைந்து ஆண்டுகள் நீடித்து நின்ற சாக்லேட் முகமும் தனக்கென்று தனி இடமும் கொண்ட நட்சத்திரம்.
           
 
மிகப் பரபரப்பான உச்சம் எப்படி முன் கூட்டியே வழங்கப்பட்டதோ அப்படியே பரபர என்ற உயரத்திலிருந்தே டாட்டா காட்டவும் செய்தார்கள். மோகன் மட்டும் தான் ஒரு கிரிக்கெட் ப்ளேயரைப் போல முப்பதுகளின் மத்தியில் விருப்பமில்லாத போதும் கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட ஸ்டார். இன்னும் சொல்வதானால் அவர் தான் எண்பதுகளின் சூப்பர்ஸ்டார்.ரஜினிக்குச் சமமான இன்னொரு உச்ச நட்சத்திரம் மோகன் தான். அவர் ஓட்டம் முடிந்த பிற்பாடு தான் ரஜினி கமல் என்ற வரிசையே உறுதிசெய்யப்பட்டது.
                         
 
வேறொரு அத்தியாயத்தில் மோகனின் சந்தோஷ பாடல்கள் மற்றும் டூயட்ஸ் ஆகியவற்றைப் பார்க்கலாம்.மோகன் ஹிட்ஸ் என்று இன்னமும் கேஸட்டுகள் காலம் தொடங்கி பெண்டிரைவ் வரை தொடர்ந்து வருகின்றன. இன்னமும் தொகுக்கப் படாத மோகன் பாடல்கள் அனேகம். அவர் படங்களில் அதிகதிகம் ஹிட் அடிக்காத பாடல்களுக்குக் கூட இன்னமும் உலர்ந்துவிடாத கான ஈரம் மிஞ்சி இருப்பதாகவே தோன்றுகிறது. வரலாற்றில் சில இனிமைகளுக்கு மீவருகை இருப்பதே இல்லை.இருக்கத் தேவையும் இல்லை.போதுமான மோகன்.
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர்செவ்வாய்தோறும் வெளியாகும்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...