???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 58 – மூவர் கூடம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   10 , 2017  05:25:54 IST


Andhimazhai Image

பாசில் என்றால் சரியாக வராது. அவர் பேர் ஃபாஸில். அவரது படங்கள் என்னைப் பொறுத்தவரை அழுகாச்சி காவியங்கள். பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு கற்பூர முல்லை பூவே பூச்சூடவா போன்றவற்றுக்கு அப்பால் அவர் எடுத்த அரங்கேற்றவேளை படம் எனக்கு மாத்திரமல்ல எங்கள் ஃபேமிலிக்கே ரொம்ப பிடித்த படம். பாத்ரூம் செல்லும் வழியில் தலையில் துண்டைப் போட்டபடி நின்றுகொண்டு மூக்கு நுனி வழியாக கண்களில் டார்ச் அடித்து “பக்கீராம் ஸ்பீக்கிங்” என்று தம்பி பாலாஜியை பயமுறுத்த அவனுக்குக் காய்ச்சலாகி என் அம்மா என்னைத் தன் ராசியான விளக்குமாற்றால் ஆசைதீர அடித்தார். விளக்குமாறு முதலிலும் நான் அடுத்ததாகவும் பிய்ந்து போனோம்.அப்புறம் தான் விட்டார்.

 

தமிழில் ஆல்டர்நேட் சினிமா என்றெல்லாம் சொல்ல முடியாதென்றாலும் கூட அக்கரையில் பெருவெற்றி பெற்ற தன் படங்களை அப்படியே தமிழுருவாக்கம் செய்தவர் ஃபாஸில்.  மொத்தம் பத்துப் படங்கள் அவற்றில் எட்டு பெருவெற்றி பெற்ற ட்ரெண்ட் செட்டர்கள். அதிலும் காதலுக்கு மரியாதை வரலாற்றைத் தன் பேர்கொண்டு எழுதிய படம். என் கல்லூரி காலத்தின் முடிவில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தை மறக்கவே முடியாது. அதன் ஒவ்வொரு ஃப்ரேமும் மனப்பாடம் எனும் அளவுக்கு விடாமல் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஷாலினியின் கண்கள் விஜயின் குரல் மற்றும் நடனம் இளையராஜாவின் இசை இவற்றுக்கெல்லாம் அப்பால் எதிர்பார்க்கவே முடியாத ஒரே ஒரு க்ளைமாக்ஸ்.. அந்தப் படம் இந்தியத் திரைவானின் க்ளைமாக்ஸின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய க்ளைமாக்ஸ். இவ்விரண்டு படங்களைத் தவிர வருஷம் பதினாறு படத்தின் வாயிலாக தன்னிகரற்ற என் கனவுகளின் தேவதை குஷ்பூவை அறிமுகம் செய்த புண்ணியாளர் ஃபாஸில். இந்த அத்தியாயம் ஃபாஸில் மற்றும் ஜேஸூதாஸ் இவர்கள் இருவருடனும் இளையராஜா இணைந்து செய்த மாயங்களைப் பற்றிப் பேசப்போகிறது.

 

அதென்னமோ தெரியாது. எனக்குப் பிரியமான பிடித்தமான பாடகர்கள் வரிசையில் முதலில் பாலு பிறகு மனோ அப்புறம் ஜெயச்சந்திரன் இவர்களுக்கு அப்பால் ஹரிஹரன் மேலும் கேகே. இது தான் ஆடவர் லிஸ்ட். இவர்களைத் தவிர டீஎம்.எஸ் தொடங்கி சமீபத்திய ஜாவேத் அலி அல்லது ஹரிசரண் வரைக்கும் பாடல்கள் அடிப்படையில் தான் ரசனையே தவிர நுகர்வே தவிர மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கிற லிஸ்ட் முன் சொன்னது தான். இவற்றில் நிறைய வித்யாசங்கள் உண்டு என்பதை மேதைகள் மாத்திரமே அறிவார்கள். சொல்லி வைப்போம்.வாசிக்கிற எல்லாருமே மேதைகள் தான் என இன்னொன்றையும் சொல்லி விட்டால் சமன்பாடாகி விடும்.

 

ஆரம்பத்திலிருந்தே ஸ்கூல் யூனிஃபார்ம் போலத் தான் ஜேசுதாஸ் குரலிலான பாடல்கள் எனக்குத் தோன்றியது. விரோதம் என்று சொல்ல முடியாது என்றாலும் ஒரு வழமையான முன் எதிர்பார்ப்பான வடிவமும் செலுத்துதலும் அவரது குரலின் நிரந்தர கம்பீரமும் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம். பற்பல தாஸேட்டன் குரல் பாடல்களைக் கடந்து வந்தாலும் சொந்தம் கொண்டாடத் தோன்றாத குரலாகவே அவர் குரல் எனக்குள் இயங்கிற்று.இதான் நிஜம்.

 

இத்தனைக்கும் என் ஆதர்ச வாழ்வின் ஆகச்சிறந்த முழுமுதல் பாடலான ராஜராஜசோழன் நான் பாடலைப் பாடிய தாஸேட்டனைப் பற்றி நான் இப்படியெல்லாம் சொல்வதை எனக்குள் இருக்கும் இன்னொரு மனசாட்சி நானே ஒத்துக்கொள்ள மாட்டேன். இருந்தாலும் இதான் உண்மை சொல்லித் தானே ஆக வேண்டும்.எனக்குள் எத்தனையோ தாஸேட்டப் பாடல்கள் வந்து வந்து சென்று கொண்டிருந்தாலும் கூட மேற்சொன்ன அத்தனை வார்த்தைகளையும் தகர்த்து எனக்குள் ஜேசுதாஸை பதியனிட்ட முதற்பாடல் எது தெரியுமா..?

                பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

                            

பத்மினி மற்றும் நதியா இருவரோடு தமாஷ் எஸ்வீ சேகர் நடித்த பூவே பூச்சூடவா படத்தைக் கதையாக பேப்பரில் எழுதிப் படிக்கும் போது ஃபாஸிலுக்கே எடுக்கலாமா வேணாமா என்று உள்ளே கிலி எலி ஓடியிருக்கும். ஆனாலும் எடுத்தார். ஒரு பாட்டிக்கும் அவளது பெயர்த்திக்கும் இடையிலான பந்தம். இதற்கு இசை இளையராஜா. சின்னச்சின்ன உணர்வின் இழைகளைக் கதைத் திருப்பங்களாகக் கொள்வதே ஃபாஸிலின் வழக்கம். மேலோட்டமாகப் பார்க்கும் போது மிகச்சாதாரணமான கதையாக இருக்கும்.அதை அவர் செலுத்திக் கொண்டு சென்ற விதம் பக்காவாக மாறி படத்தை பெருவெற்றி பெறச் செய்யும். இந்தப் படத்தில் ராஜா ஒரு கூடுதல் இயக்குனராகவே பணி ஆற்றி இருப்பார். தன் இசை கொண்டு ஏற்கனவே எடுத்த படத்தை மீண்டும் இயக்குவது இசை அமைப்பாளனின் உண்மையான வேலை. அதற்கான முதல் இலக்கணத்தை இந்தப் படத்தில் எழுத ஆரம்பித்தார் ராஜா.ஃபாஸில் அதை அனுமதித்தாரா அவரது தேவை அவ்வாறு இருந்ததா என்பதெல்லாம் வெறும் வினாக்கள். நம்மிடம் வெளிவந்த படம் இருக்கிறது.அது இசைக்கு முன் பின்னாய் நமக்குள் இருவேறாய் விரிகிறது.

 

ஃபாஸிலுக்கு இளையராஜா இசைத்துத் தந்தவற்றில் பதினைந்து பாடல்களைப் பாடி இருக்கிறார் ஜேசுதாஸ். அத்தனையுமே அதிரி புதிரி ஹிட் வகையறாக்கள் தான். அவற்றில் சிலபல மாண்டேஜ் சாங்க்ஸ்.

இந்தப் பாடலுக்கான பின்னணி இசையில் தபேலா நிதான இசையாகவும் குழலின் இசை சோகத்தையும் வயலின் இசை சந்தோஷத்தையும் குழைத்து செதுக்கி இருப்பார் இளையராஜா.

 

   அழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்

   தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்

   கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது

   தீபதீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்

   இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை

   இன்று ஆனந்தம் தந்தாய்

   பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.

 

இதன் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையை லேசான துள்ளல் இசையாக அமைத்து உடனே அதைச் சமன் செய்ய உடனொலிக் குரல்களில் மெல்லிய சோகம் அதன் பின் வயலினும் வீணையுமாய் அதே சோகத்தை பராமரித்து தாஸேட்டனின் குரலில் கொண்டு போய் சேர்த்திருப்பார் ராஜா.

 

உறவில் முதியவர்கள் தன் பேரன் பேத்திகளிடத்தில் சந்தோஷமாய்த் தோல்வியடைவதை ஒரு பாடலாக்குவது எந்த மொழியிலும் இல்லாத தனித்துவம். தமிழில் நிகழ்ந்த ஆச்சர்யம்.

பூவிழி வாசலிலே படத்தில் ஒரு கிளியின் தனிமையிலே பாடல் அற்புதம். தாஸ் இந்தப் பாடலை தன் வழமையிலிருந்து மிக லேசாக விலகிப் பாடி இருப்பார். இந்தப் பாடலும் ஒரு அமானுஷ்யமான மென் சோகத்தை உட்படுத்தியதாக அமைந்திருக்கும். கோரஸ் குரல்களைத் தன் பாடல்களில் அதிகதிகம் பயன்படுத்துவதை விரும்பி இருப்பார் ஃபாஸில். இந்தப் பாடல் சற்றே வேகமாக அமைந்திருப்பதை கவனியுங்கள். அந்த வேகம் ஏற்படுத்தப் பட்டது என்பதை உணர்கையில் இசை பற்றிய ராஜாவின் புரிதல் மேல் வியப்பு ஏற்படுகிறது. இதன் டெம்போ மற்றும் சற்றே நிதானமாக அமைந்திருந்தால் மொத்தப் பாடலுமே சாதாரணமாகப் போயிருக்கும். ஒரு துள்ளல் இசைப் பாடலுக்கு உண்டான தாளக்கட்டுதலை இந்தப் பாடலுக்குள் உட்படுத்தியதன் மூலமாக வெறுமையான பாடல் சிச்சுவேஷன் ஒன்றை எளிதாக சமாளித்திருப்பார் ராஜா. பாடலற்ற பாடல்கள் தான் ஃபாஸிலின் பெருவிருப்பம்.அவற்றில் தலையானது இது.

 

ஒரு இறைவன் வரைந்த கதை எனும் போது குழைந்து பாசம் என்றொரு ராகம் கேட்கும் பாவை அன்பெனும் நீரை வார்க்கும் எனும் போது சமன் செய்து பாடும் நாள் இதுதான் எனும் போது மொத்தமாய்க் கரைந்து சிதறும் தாசண்ணா குரல்.

 

சின்னச்சின்ன ரோஜாப் பூவே பாடல் கேட்கும் போதெல்லாம் மனசைப் பிசையும். என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு பாடலும் அப்படித் தான். கற்பூர முல்லை படத்தில் வரக்கூடிய பூங்காவியம் பேசும் ஓவியம் எனும் பாடலையும் இந்த வரிசையில் சொல்ல முடியும். பள்ளிகாலத்தில் இந்தப் பாடல்களைக் கேட்க வாய்க்கையில் எல்லாம் எனக்குள் சொல்ல முடியாத ஒரு வெறுமை ததும்பும். உண்மையாகச் சொல்வதானால் இப்பாடல்களை மாத்திரம் அல்ல பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் கற்பூர முல்லை படங்களைப் பார்ப்பதும் கூட அப்போது பிடித்தும் பிடிக்காத அனுபவமாய்த்தான் இருந்தது.

          

 வருஷம் பதினாறு படம் ஃபாஸில் எழுதிய காதல் சாசனம்.

 

ஒரு காதல் படத்திற்குண்டான எந்தவிதமான திரைக்கதை சமரசங்களையும் செய்து கொள்ளாமல் உருவாக்கப் பட்ட வருஷம் பதினாறு எதிர்பாராத பெருவெற்றியைப் பெற்றது. படம் வெளிவரும் முன்பே பாடல்கள் ஹிட் தான் என்றாலும் கூட படத்தோடு பாடல்களின் தேவையும் தன்மையும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தன. அதிலும் பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் என்ற பாடல் நாயகன் நண்பர்களுடன் ஆடிப்பாடும் பாடல்களின் அதுவரைக்குமான க்ளிஷே படமாக்கல்களைத் தகர்த்தது எனலாம்.

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி பாடலும் இசையுடனான இன்பாச்சரியம். ஜேசுதாஸின் சாஸ்த்ரிய சங்கீத ஞானமும் இளையராஜாவின் நுட்பமும் கலந்தொலித்த இன்னுமொரு நற்பாடல் கேட்பவரை உருக வைத்தது மேலும் படத்தின் மிக முக்கிய திருப்புமுனைக்கான காட்சிப்படுத்துதலின் தேவையோடு உருவாக்கப் பட்ட பாடல் என்பதால் இந்தப் பாடலின் பின் இசை பலமான அதிர்விசையாக அமைந்தது கூடுதல் செறிவை ஏற்படுத்தியது.

ரேடியோ ஹிட்ஸ் எனப்படுகிற அந்த வருடத்தின் நம்பர் ஒன் ஸ்தானப் பாடல்களின் ஃபாஸிலின் பல பாடல்கள் இடம்பெற்றன. அதிலும் அரங்கேற்றவேளை படத்தின் பாடல்கள் அத்தனையும் பிரமாதம் என்றாலும் ஆகாய வெண்ணிலாவே என்று ஆரம்பிக்கிற பாடல் அந்த வருடத்தின் அஃபீஷியல் ஆந்தம் ஆகிற்று. பல்லாயிரக்கணக்கான முறைகள் கேட்கப்பட்டது. அலுக்காத சலிக்காத நல்லிசையாய் உறைந்தது. உமாரமணனும் தாசேட்டனும் இணைந்து பாடிய பாடல் இது.

 

ஃபாஸில் என்றாலே சோகத்தை பின்புலமாகக் கொண்ட படங்களை எடுக்க விழைபவர் என்பதை அவரது படங்களைத் தொடர்ச்சியான சித்திரமாக்குகையில் உணர முடிகிறது. இந்த வரிசையில் 1993 ஆமாண்டு தீபாவளி தினமான நவம்பர் 13 ஆம் தேதி மொத்தம் பத்து படங்கள் ரிலீஸ் ஆகின. அவற்றில் கிழக்குச் சீமையிலே பாரதிராஜா இயக்கிய படம். திருடா திருடா மணிரத்னம் இயக்கிய படம். இவ்விரண்டுக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான். இவற்றோடு கதிர் இயக்கத்தில் உழவனும் ரஹ்மான் இசைத்த இன்னொரு படம். இளையராஜா இசைத்த சின்னஜமீன் கார்த்திக் நடித்து ராஜ்கபூர் இயக்கிய படம். எங்க முதலாளி விஜயகாந்த் நடித்து பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் லியாகத் அலிகான் இயக்கிய படம். இவற்றுக்கு இசை இளையராஜா.

 

உண்மையில் அந்த தீபாவளி ரொம்ப ஹெவி. எந்த வரிசையில் படம் பார்ப்பது என்பது முதல் சிக்கல். ரஜினி கமல் படங்கள் வரவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். கிழக்குச் சீமையிலே படம் எதிர்பார்த்ததை விடப் பலமடங்கு ஹிட் ஆயிற்று. கட்டபொம்மன் படம் சீ க்ளாஸ் ஆடியன்ஸின் விருப்பப் படமாயிற்று.திருடா திருடா எதிர்பாராத தோல்வியை சந்தித்ததற்குப் பாடல்கள் ஏற்றித் தந்திருந்த எதிர்பார்ப்பும் ஒரு காரணம். அந்த வகையில் டி.ராஜேந்தர் இயக்கி சிம்புவை மையப்படுத்தி எடுத்த சபாஷ் பாபு படம் நல்ல பிசினஸ் செய்தது. இத்தனை படங்களுக்கு நடுவே ஃபாஸிலின் ஒரு படம் மம்முட்டி கனகா நடித்தது கிளிப்பேச்சு கேட்கவா அதே தீபாவளி ரிலீஸ் ஆயிற்று.

மிகவும் வெறுமையான கதை. இளையராஜாவின் இசை மற்றும் அளவு கடந்த வாஞ்சையோடு அவர் ஃபாஸிலுக்காக உருவாக்கித் தந்த பாடல்கள் சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் என்ற சந்தோஷப் பாடல் மெல்ல அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கிற்று. ஜேசுதாஸ் பாடிய அன்பே வா அருகிலே பாடல் தமிழ் திரை இசையின் உன்னதங்களின் பட்டியலில் முதல்வரிசைப் பாடல் என்பது என் நம்பகம்.

             

இந்தப் படத்தை மதுரை அமிர்தம் தியேட்டரில் தீபாவளிக்கு இரண்டு தினங்கள் கழித்து அதாவது 15ஆம் தேதி காலைக்காட்சி பார்த்தேன். இந்தப் படத்தின் கனம் அதன் உருவாக்கம் எல்லாவற்றையும் மீறி என்னோடு இந்தப் பாடல் மாத்திரம் கூடவே வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இதற்கு மேற்சொன்ன ஃபாஸில் வகையறா படங்களுக்குத் தப்பாத இன்னொரு படம் தான் இது. கற்பூர முல்லை பூவே பூச்சூடவா பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆகியவற்றின் வரிசையில் இந்தப் படத்தை தப்பாமல் வைக்கலாம். ஆனால் ஆச்சரியம் இந்தப் படத்தை என்னால் வெறுக்க முடியவில்லை. அதன் பின்னரும் மூன்று முறை அதே தியேட்டரில் பார்த்தேன்.

 

ஒப்பனைகள் அற்ற இந்தப் பாடலைப் பார்க்கலாம்.

 

சொல்லொணாத் துயரை மேலாண்மை செய்வதற்கு இத்தகைய பாடல்கள் பயன்படக் கூடும். என்ன மன நிலையில் இருந்தாலும் இத்தனை சோகமான இந்தப் பாடலைக் கேட்டால் அத்தனையும் மறந்து போய் மனசு சமாதானமாகி ஒருவிதமான கிறக்க உறக்க நிலைக்குச் சென்றுவிடுகிறது. எத்தனை முறை கேட்டாலும் நம் தலை கோதி உறங்கச் செய்யும் அன்பின் கரங்கள் இந்தப் பாடலுக்குள் இருந்து எழத் தவறுவதே இல்லை.

 

அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை எங்கே என் தேவதை தேவதை

நீதானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும்

முள்ளின் மீது தூங்கினேன்

     

இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது

மௌனம் ஏன் தானோ

மின்னலென மின்னிவ்ட்டு கண்மறைவாய் சென்றுவிட்ட

மாயம் நீதானோ

உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்

என்னை நீங்கிப் போனால் உன்னைச் சேரும் பாவம்

எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

 

அன்பே வா அருகிலே

 

உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்லக் கொல்லுவது

காதல் நோய் தானோ

வைகை என பொய்கை என மையலிலே எண்ணியது

கானல் நீர் தானோ

என்னை நீயும் தூண்ட எண்ணக் கோலம் போட்டேன்

மீண்டும் கோலம் போட உன்னைத் தானே கேட்டேன்

எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

 

(அன்பே வா அருகிலே)

 

ஜேசுதாஸின் குரல் ஆறு அல்லது ஏழு வகைமைகளிலான பாடல்களைப் பாடவல்லது. அத்தனை இயங்குதளங்களில் செயல்பட்டிருக்கிறது. அவற்றில் மேற்சொன்ன அன்பே வா அருகிலே பாடலை மிக மென்மையான மேலோட்டமான ஒரு இடத்திலிருந்து மொத்தப் பாடலையும் வழங்கி இருப்பார் தாசேட்டன். எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ என் இதயமே எனும் வரியை மாத்திரம் சற்று காத்திரமாய் எடுத்திருப்பார். எங்கே என் தேவதை தேவதை என்ற இடத்தில் கவனித்தால் அன்பே வா அருகிலே எனும் அதே மென்மையைக் கொண்டுவந்து செதுக்கி இருப்பதை கண்ணுறலாம். தொழில்முறைப் பாடகர்கள் மேடைகளில் இந்தப் பாடலை பாடும் போது அதற்குண்டான அசல்தளத்திலிருந்து வெகு தூரம் விலகிச் செல்வதை ஏமாற்றத்தோடு ரசித்திருக்கிறேன். ஜேசுதாஸால் மாத்திரமே நிகழ்த்த முடிந்த பாடல் இது.இசையின் நகாசு வேலைகள் சற்றே ஓங்கி ஒலிப்பதற்கு ஏதுவான மென் குரலை பாடல் முழுமைக்கும் படர்த்தி இருப்பார் தாஸேட்டன். சொல்லச்சொல்ல இனிக்கும் மாயம் இந்தப் பாடல். அத்தனை அமைதியை இதன் இசையும் குரலுமாய்ச் சேர்த்து நம் கைகளில் இந்தப் பாடலைத் தவழச் செய்யும்.

 

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட பாடலைக் கேளுங்கள். கண்ணுக்குள் நிலவு படத்தின் பாடல் அது. ராஜா இசை. பழநிபாரதியின் வரிகள்..

 

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்..

பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்..?

 

இந்த வரிகளை ஜேசுதாஸ் குரல் ஒரு செவிலியின் ஆதுரத்தோடு நம் மீது படர்த்திச் செல்வதை என்னென்பது..? பாடலை நிகழ்த்துவது தாஸவித்தகம்;டைடில் சாங் ஆக இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருக்கும். எனக்கென்னவோ ஃபாஸில் படங்கள் மேல் ராஜாவுக்கு ஒரு பெருங்காதலே இருந்திருக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பட்டாம்பூச்சி பாடலை தாஸைக் கொண்டு பாடச் செய்திருப்பார். இந்தப் படத்தில் இது.அப்பாடீ என்று கன்னங்களைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு மழையின் முதல் வருடலில் செல்லமாய் ஒரு குளிர் மிக மிகத் தாற்காலிகமான ததும்பலை நேர்த்தும். அத்தகைய உணர்தலை இந்தப் பாடல் ஏற்படுத்தி இருக்கும்.சோகமான இசைப் பின் புலத்தில் தாஸின் குரல் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற குழந்தையின் தனிமைப் பொழுது அழுகையைக் கைவிடுகிற உணர்தலை நமக்குள் எழுப்பும். அதிலும் சரணம் முடிகையில் அச்சச்சச்சோ எனும் போது  ஒரு சிசுவைக் கையில் ஏந்திக் கொள்கிற அலைலாட்டம் மனசில் எழும்.

 

இந்தப் பாடலின் பின் இசை மொத்தமுமே எதையோ யூகிக்கச் செய்தபடி ஒரு சின்ன எதிர்பார்ப்பை மனசுக்குள் நேர்த்தியபடி உருண்டோடும். ஒரு மர்மக் கதையின் முதல் அத்தியாயம் போன்ற அத்தகையை எதிர்பார்ப்புக்குச் சற்றும் தொடர்பற்ற குழந்தையின் சன்னமான கேவலைத் தன் குரலாக இந்தப் பாடல் முழுவதையும் பாடி இருப்பார் தாஸேட்டன். இந்தப் பாடலை தாஸ் பாடியதில் பாதி அளவுக்குக் கூட இன்னொரு குரலால் பாட முடியாது என்று எந்த இசைக்கோயில் முன்னேயும் நின்று சத்தியம் செய்வேன்.

ஃபாஸில்-இளையராஜா-ஜேசுதாஸ் வழமைக்குள் சிக்காத இந்த மூவர்கூடம் நமக்கு வழங்கி இருக்கிற பதினைந்து பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல. இசைவழி வாழ்தல்கள். தன்னை உணர்வதற்கான கண்ணாடித் தருணங்கள். அதிர்ஷ்டவசமாய் இரட்டிக்கிற அற்புதமான கனவொன்றின் நிதானமான வருகை போன்ற அபூர்வங்கள். வாழ்க தாஸேட்டனின் அற்புதக் குரல்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...