???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 57 - ஆரம்ப மலர்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   27 , 2017  07:24:06 IST


Andhimazhai Image
இசை என்பது பொதுவாக ஒரு மெல்லின வஸ்துவாகவே பார்க்கப்படுகிறது. உலகம் ஒற்றைத் தன்மை கொண்ட வாக்கியங்களைப் பெரும்பாலான பொதுக் கூற்றுகளாக எப்போதும் நிறுவுகிறது.
"சார் கூச்ச சுபாவம். ரொம்ப ரொம்ப நல்லவர். சத்தம் போட்டுப் பேசமாட்டார்" என அடுத்தடுத்த தளங்களை ஏற்றிக் கொண்டே போவது. "நறுக்குனு கிள்னா சார் எப்டிக் கத்துவார்?" என்று அங்கே கேட்க முடியாது. 
 
 
நல்லவர் என்று உருவகிக்கப் படும் அத்தனையுமே பின் தொடர்ந்து சென்று பார்த்தால், கடவுளின் குணங்கள் என்பது தெரியவரும். "கடவுளாக இல்லாதவர்தான் மனிதன்" என்று அறிவு கூறும். என்றபோதும், உணர்வுகளால் பலவாறும் செல்வாக்குச் செலுத்தப்பெற்றவன் தான் மனிதன். இந்த இடத்தில், "சார் ரொம்பத் தங்கமானவர்" என்பதன் மேல் எழுதப்படும் அர்த்தோப அர்த்தங்களை நினைவில் கொள்ளலாம்.
 
 
இசை கேட்பது நல்லவர்களின் பிரயாசை. மதம் ஒரு அபின் என்றால் அதனைப் புகைக்க உபயோகப்படும் சிமிழி இசை எனலாம். மதத்தோடு கலந்து ஒலித்த இசை, உபமதமாகவும், ஏன், மதமற்றவர்களின் மதமாகவும் கூடவே ஆனது ரசம். மனிதனின் ஆகச் சிறந்த காரியங்களில் ஒன்று இசை. ஆன்மாக்களின் மீது அன்பென்னும் தூறல் சொரிந்து, அமைதியைப் பதியனாக்கும் மாண்புமிகு காரியம் இசை. உழைப்பு, வியர்வை, மனித எத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக சன்னதத்தின் தன்னியல்பு இசை. 
 
 
அலைவுறும் மனத்தை ஆற்றுப் படுத்துவதில் இசையின் பங்கு பெரியது. ஒரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய மிகப் பெரிய அன்பின் சான்று இசை. மேலும், இசை மீதான் கிறக்கம் முடிவற்றது. ஒரே ஒரு முறை நுழைந்தபின் முடிகிற வரை வெளியேறவியலாத வித்தியாசங்களின் ஆட்டம் அது. இசையின் வருகைகள் மகிழ்ச்சிகரமானவை. படகுப் பயணத்தின் திசைமாற்றுகிற கொழுகொம்பைப் போன்றது இசையின் வேலை. 
 
 
இசைக்கும் மனிதனுக்குமான பந்தம் விசித்திரமானது. தன்னைச் சரணடைபவர்களைக் காதலிக்கிற ஒரே அதே அவஸ்தை அல்லது பரவசத்தைத் தானும் நேர்த்துகிற சமர்த்து காதலைப் போலவே இசைக்கும்  உண்டு. 
 
 
ரேடியோக்களின் நேயர் விருப்பக் காலம் அழகானது. தபாலட்டையில் இன்ன பாடலை எனக்காக ஒலிபரப்புங்கள் என்றெழுதி அனுப்பியவர்கள் எத்தனை எத்தனை பேர்? இதன் மூலமாக ஒரு பாடலுக்கும் தனக்குமான பிரியமான பிரத்தியேகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு சில பாடல்களை நூற்றுக் கணக்கானவர்கள் கேட்டதும் அவர்களது பெயர்கள் அத்தனையும் சொல்ல முடியாமல் போனதெல்லாம் சர்வசகஜமாக நடந்திருக்கிறது. தன் பெயர் சொல்லப்படாமல் 'மற்றும் பலரு'க்குள் ஒளிந்து கொள்ள நேர்கையில் ஒரு போதும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை.
 
 
பாடல்கள் தரும் சந்தோஷங்கள் அவரவர் வாழ்வின் ஆரம்ப மலர்களை மலர்த்திச் செல்லுகின்றன. நிஜத்தில் ஒரு மலர் பல ஞாபகங்களில் வெவ்வேறு வண்ணங்களாகப் படர்வதென்பதும் வாழ்வின் பரவசம்தான். திரும்பிப் போக முடியாத காலம் ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவிடுகிற தன்னியல்பில் திறந்து கொள்ளுகிற நினைவின் சன்னல்களாகவே பாடல்களின் மீவருகைகள். எந்தப் பாடல் யாருக்கானது என்பது நேயர் விருப்பக் காலத்தில் காகித ராக்கெட்டுகள் தூர உயர மலையெங்கும் சென்று செருகினாற்போல் நினைவுகளை ஒளிர்கின்றன.
 
 
மறுபடியும் சொல்கிறேன். ஒரு மென்மையான பாடலை விரும்பிக் கேட்கிற ஒருவர் நல்லவராகத்தானே இருக்க முடியும்? இங்கே இவ்விதம் "மென்மை", "நல்ல" என்றாகிப் போகிறது. நல்லது. திரையிசைக்கென்றே தொலைக்காட்சிச் சேனல்கள் உதித்தபோது யார் யாருக்காகவோ எந்தெந்த பாடல்களோ கேட்கப்பட்டன. பார்க்க முடிந்த பாடல்கள், கேட்க மட்டுமே முடிந்த இடத்திலிருந்து நடந்தே அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. 
 
 
ஒரு பாடலை எங்கனம் சொந்தம் கொண்டாடுவது? உண்மையில், ஒரு பாடல் என்பதன் தோற்றம் எது? 
 
 
பத்து தினங்கள் வேற்று ஊரில் என்.எஸ்.எஸ். எனப்படுகிற தேசிய மாணாக்கர் படையின் சேவை செயல்பாட்டிற்கெனத் தங்க நேர்ந்தபோது எக்ஸ் என்கிற ஒருவன் ஒய் என்கிற ஒருவளைப் பார்த்து, "முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டால் பார்க்க முடியுமா?" என்கிற இந்த வரியை மட்டும் ஒரு நாளைக்கு நூறு தடவைகளுக்கும் மேலாகப் பாடி, அதுவும் அவன் தோன்றாத சட்டகங்களில் கூட அவன் தோன்றினாற்போல், இதைப் பாடினாற்போல் எங்களுக்கே தோற்றப் பிழை ஏற்படும் அளவுக்கு இதைப் பாடிக் கொண்டே இருந்தான். மேலும் ஒரு பாடலுக்கு உண்டான எந்தப் பொதுமையிலும் இதைப் பாடவில்லை. குடிகார எள்ளலோடு இதைப் பாடினான். 
 
 
பத்து நாட்கள் முடிந்து அவரவர் வீடு திரும்பிய பின், ஒய்யின் நலம் விரும்பிகள், எக்ஸின் முகத்துக்கு நேரே எச்சரிக்க, ஆரம்பித்தது வினை. எக்ஸ்  தாக்கப்பட்டு இரு தரப்பாரும் அமர்ந்து பேசி சுமுகமாகி, அதன்பின் கல்லூரி முடியும்வரை காந்த விலக்கத்தோடு இருவரும் முகத்தைத் திருப்பியபடி சென்று வந்தார்கள். இயல்பான தருணங்களில் கூட ஒருவரது வருகை இன்னொருவரது புறப்பாடாகவே அமைந்தது.
 
 
எந்த நோக்கமும் இல்லாமல் தான் பாடியதாக என்னிடம் ஒருமுறை சொன்ன எக்ஸ் , "ஏண்டா அப்டிப் பண்ணே?" என்று கேட்டபோது, "தெர்லடா..போதையில பண்ட்டேண்டா" என்று மட்டும் பதில் சொன்னான். அந்தத் தொனி தவறே ஒழிய அந்த வரிகள் தப்பற்றவை. அவனது வழங்குதலில் எள்ளல் இருந்திருக்கலாம். அவனது நோக்கம் நோக்கமற்றது. அமைதியான ஒரு பெண்ணின் மீதான ஆணின் தைரியம் (Dare) அதுவாக இருந்திருக்கலாம். அவனது நோக்கம் நோக்கமற்றது. 
 
 
உண்மையில் எதோ ஒரு பாடல் எள்ளலுக்கானதாய் மாறும்போது ஏற்படக்கூடிய அபாயத்தின் பெருவெடிப்பு இங்கனம் இருக்க, எள்ளலுக்கான பாடல்களை எங்கனம் அணுகுவது...? தமிழகத்தின் திரைப்பாடல்களில் கேலிப் பாடல்களுக்கென்று தனி அத்தியாயம் ஒன்று இல்லையெங்கில் எங்கனம் சாரே? "பி-ஓ-ஒய் பாய், பாய்ன்னா பையன்" பாடல் தொடங்கி இன்று வரைக்குமான எள்ளல் பாடல்களை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 
 
 
"எல்லாம் சந்தர்ப்பம்தான். ரசிகர்களுக்குப் பிடிக்கிறது. நாங்கள் தருகிறோம். கேட்டார்கள், கொடுக்கிறோம்." என்பதெல்லாம் தாண்டி, பெருமளவில் ஆண் பாத்திரங்கள் பெண் பாத்திரங்களை அடக்க ஒடுக்கமாக மாற்றுவதற்கு ஒரு பிரயத்தன வழியாகவே இப்படியான திருவிளையாடல் பாடல்களைப் பாடி அபிநயித்தார்கள். அவ்வப்போது பெண் பாத்திரங்களும் ஆண் பாத்திரங்களைக் கிண்டல் செய்யும் பாடல்களும் வந்தன் என்றாலும் அவற்றின் விழுக்காடு அற்ப சொற்பமே.
 
                                                                                  **** 
 
இந்தியத் திரைப்படங்களின் மனோநிலை இன்று வந்து நின்றிருக்கும் இடமானது, இன்றைக்கும் வந்தும் வராமலும் ஒரு காலை வைத்து வைத்து எடுக்கிறாற்போலத்தான். "மார்க்குல நில்லு" என்று ஒரு அதட்டுப் போடலாம் போலத் தோன்றுகிறது. அது என்ன எனக் கேட்டால், பாடல்களைக் கடந்து செல்கிற படங்களை உருவாக்குவது. 
 
 
படத்துக்குள்ளிருந்து பாடல்களை கெட் அவுட் சொல்லும் தைரியம் இன்னும் எல்லோருக்கும் வந்தபாடில்லை. ஆமாம், உண்மையில் பாடல்களின் இடம்தான் என்ன? பாடாய்ப் படுத்துகின்றனவா பாடல்கள் என்பது தனிக் கதை. (அந்த நாள், வண்ணக் கனவுகள், ஏர்போர்ட், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பேசும்படம், குருதிப் புனல், உண்மை, குற்றமே தண்டனை போன்ற பாடல்களற்ற படங்கள், மற்றும் அவற்றின் பின்னணி இசை).
 
 
தங்களால் ஆன மட்டும் மேற்கிலிருந்து கதைகளைப் பண்ணிப் பண்ணி இங்கே தருவித்தவர்கள் பாடல்களை ஒரு டிவைடராக உபயோகித்தார்கள்.அதாவது ஒரிஜினல்ல அவன் பேர் ஸாம்..தமிழ்ல அவன் பேரு வேற. ஒரிஜினல்ல பாட்டெதும் இருக்காதுல்ல..? இதுல ஹீரோவுக்கும் அனுஸ்காவுக்கும் ஒரு பாட்டு வச்சாகணும். கதைப் படி அவன் சிந்தனை வளர்ச்சி இல்லாத கேரக்டர்..இப்ப என்ன பண்றது..? இதுலே என்ன ஸார் கஸ்டம்..? ஹீரோ தானே மன வளம் குன்றினவரு..? அனுஸ்கா அவரோட சேர்ந்து பாடுது. அப்டி வச்சிக்கலாம்ல...? வச்சிக்கிட்டதை நாமும் பார்த்தோம். இது முந்தா நேற்றின் இறக்குமதி படமொன்றின் நியாயானியாயம்.
 
 
ஆரம்பத்தில் சலனப் படத்தின் சரிதத் தொடக்கத்தில் பெரும்பாலும் கூத்துகளே ஸ்க்ரிப்ட்டுகளாக மாற்றப்பட்டன.  "தோ பார் மொத்தம் அறுவது பாட்டு, முன்னபின்ன எதாவது பேசிக்கலாம் கொஞ்சம் வசனம்" என்றுதான் படங்கள் எடுக்கப்பட்டன. கிராமங்களில் சிச்சுவேஷன்களுக்குக் குறையே இல்லை என்கிற சிச்சுவேஷன். வள்ளித் திருமண நாடக நடுவாந்தரத்தில் செருகப்பட்ட ப்ஃபூன் காமிக் இண்டெரப்ஷன்கள் கிட்டத்தட்ட மினி இண்டெர்வல்களாகவே கருதப்பட்டன. 
 
 
அதே பழக்கத்தில் காமெடி ரேஷன் சர்க்கரை போல் கட்டாயத் தேவையாயிற்று. மேலும் காமெடியன்களுக்கு, "அந்தப் பயலுக்கு யூனிஃபார்ம் கொடு" என்கிறாற்போல் பாடல்கள் கொடுக்கப்பட்டன. என்.எஸ்.கிருஷ்ணன் தனக்குத்தானே பாடிக் கொண்டார். சந்திரபாபுவும் அப்படித்தான். தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன் அமைந்தார். 
 
"பி-ஓ-ஒய் பாய், பாய்ன்னா பையன் 
ஜி-ஐ-ஆர்-எல் கேர்ள், கேர்ள்னா பொண்ணு
 
சந்தேகம் என்னும் ஒரு சரக்கு
அது பெண்கள் மனசிலேதான் இருக்கு" போன்ற பாடல்கள் காலம் கடப்பவை. 
 
 
ஒரு கட்டத்தில், ரஜினி - கமல் காலத்தில், காமெடியர்களுக்கான பாடல்கள் வேறு, நாயக எள்ளல் பாடல்கள் வேறு என்றானது. மேம்போக்காகப் பார்த்தால், எந்தவிதமான நியாயங்கள் இல்லாத இப்பாடல்களின் வருகை, மிக மௌனமாக ரசிக மனோபாவத்தால் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. பெரும்பாலும் டீஸ் என்று சொல்லக் கூடிய சீண்டல் பாடல்களாகவே, இவை, பின் காட்சிகளில் எந்த நாயகியை "நீ தெய்வம், நீ தேவதை, உன் கால்ல விழறேன்" என்று உருகி ஆராதிக்கப் போகிறானோ, அதே நாயகியை ஓடவிட்டுத் துரத்துவது போல இப்பாடல்கள் அமைந்தது, தொடர்ச்சியாக இரு வெவ்வேறு மனோநிலைகளில் ரசிக அனுபவத்தை நேர்த்துகிற யுக்தியாகவே பயன்படுத்தப்பட்டது.
 
 
கட்டவண்டி, கட்டவண்டி", "நம்ம கடவீதி கலகலக்கும் என் அக்கா மக", "வாடி என் கப்பக் கெழங்கே", "ஆளானாலும் ஆளு", "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே" போன்ற பாடல்கள் அடைந்த மாபெரும் வெற்றி இதுபோன்ற இன்னும் பலவற்றை உற்பத்தி செய்யக் காரணம் ஆயிற்று.
 
 
இரண்டாயிரத்துக்குப் பின்னதான தமிழ் சினிமா மெல்ல மெல்ல இப்பாடல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே, ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனத்திலிருந்து, ஓர் உதிரி பாகத்தைக் கழற்றி எறிகிறாற்போல் மிகக் கடினமான ஒன்றாகவே, பாடல்களையும் திரைப்படத்தையும் பிரிப்பது இருந்து வருகிறது.
 
 
ஒருவகையில் எள்ளல் பாடல்கள் அருகி நீங்குவது நல்லதொரு மாற்றம் என்றே தோன்றுகிறது. புலன்மயக்கம் இதுபோன்ற பாடல்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டுவிட்டுக் கடந்து வருவதைத் தன்னளவில் நிர்ப்பந்திக்க விரும்புகிறது. ஆகவே இந்த அத்தியாயத்தின் பாடல்களாக, நட்பின் பெருமையைப் பறைசாற்றும் பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 
 
நட்பும் சினிமாவில் பிற சாதாரணங்களின் மீது ஜரிகை கொட்டினாற்போல வேறொரு வஸ்துவாகவே ஆக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நட்பின் உணர்தல்களைப் பறை சாற்றும் பாடல்கள் மொட்டைத் தலையில் குளுகுளுவென்று சந்தனம் பூசினாற்போல் இன்பதுன்ப இன்பமாகவே மலர்ந்தன. அவற்றில் என் ப்ரியமான சின்னஞ்சிறு பட்டியல் இங்கே பார்க்கலாம்.என்னை பாதித்த இரு சினிமா நட்புப் படங்கள் உயர்ந்த மனிதன் மற்றும் தளபதி. தளபதி என் பள்ளிப்பிராயத்தின் சிலபஸிலேயே இடம்பெற்றாற் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படம். மலையாள மம்முக்குட்டியோடு ரஜினியின் நட்பு பூத்து காய்த்து கனிது பழுத்துக் குலுங்கியதை கண்கள் கலங்க ரசித்தோம். கலங்காத கண்கள் அருகாமையில் இருந்தால் அவற்றைக் கலக்கி அதையும் ரசித்தோம். 
 
 
ஏன் தெரியுமா..?
ஏன்னா நீ என் நண்-பன் என்று ரஜினி தன் உதட்டு நுனியால் பன் சொல்வதை எத்தனை முறைகள் ரசித்திருக்கிறேன்.மம்முட்டி போல் ஒரு தேவா கிடைக்காததால் நான் சூர்யா ஆகவில்லை என்பதே மெய். ஏன் நீ தேவாவா யாருக்காச்சும் கெடச்சிருக்கலாமே என்று கேட்பவர்களுக்கு கெடச்சிருக்கலாம்தான்..பட் சூர்யா யாரும் தேடி வர்லியே..?
 
 
நெல்லிக்கனி படத்தின் நானொரு கோயில் நீ ஒரு தெய்வம் என்ற பாடல் என்றும் குன்றாத இனிப்பின் நட்புப் பாடல். அபூர்வமான எஸ்.,பிபாலு மற்றும் மலேசியா இருவரும் இணைந்தொலித்த பாடல் இது. ஆரம்பிக்கையில் லேசாக டீஎம்.எஸ் குரலைத் தொட்டு விலக்கி இருப்பார் மலேசியா...அற்புதமான மேலெடுத்தல் இந்தப் பாடல். 
 
 
சரத்பாபு மற்றும் கமல் நட்புப் பாராட்டிய நண்பனே எனது உயிர் நண்பனே கங்கை அமரன் இசையில் மேற்சொன்ன பாலு மலேசியா இணை பாடிய இன்னொரு வைரம்.வெண்ணெயென்று வழுக்கிச் செல்லும் கம்போஸிஷனும் தெளிவான குரல்களுமாக ஒரு முழுமையான பாடல்.
 
 
ஏன் சிவாஜி தன் நண்பர் மேஜரை ட்ரைவராகவே வைத்திருந்தார்..? வேறு ஆபீஸ் வேலை குடுத்திருக்கலாமே..?என்று கேட்ட போது என் அப்பா தயங்காமல் சொன்னார்..ஆபீஸ் வேலை பத்தோடு பதினொண்ணா இருந்திட்டு போகணும்..இது தான் நண்பர்கள் ஒண்ணாவே ட்ராவல் பண்ண முடியும்ல.? என்றார். அப்போது புரியாமல் தலையாட்டினேன். இப்போது புரிகிறது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ஒரு நட்பின் போற்றிப்பாடல். என்றும் அழியாது. இந்தப் பாடலை நினைக்கும் போதெல்லாம் செயின்மேரீஸ் ஸ்கூலில் கூடவே படித்த அன்பின் நண்பன் மார்லன் ப்ராண்டோ நினைவுக்கு வருகிறான்.
 
 
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்... அதை நட்பிடம் என்று பாடுவான் மார்லன்.
திருநகரில் லோகு என்கிற லோகநாதன் அன்பு நண்பன். ட்ராவல்ஸ் நடத்தி வருகிறான். அவனது ரிங் டோன் கடந்த பதினாறு வருடங்களாக ஒரே பாடல் தான். அது லோகுவின் பாடலாகவே ஆகிவிட்டது எங்கள் அளவில். 
 
 
உடன்பிறப்பு படத்தில் ஒரு பாடல் சோழர் குலக் குந்தவை போல் சொர்ணக்கிளி நான் தரவா எனும் பாடல்.கிட்டத்தட்ட அந்தக் காலத்தின் நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை பாடலைப் போன்ற சிச்சுவேஷங்கட்டிய பாடல் எனலாம். இளையராஜா மற்றும் பாலசுப்ரமணியம் ஆகிய இரண்டுபேரின் அத்யந்தமான குரலும் பொழிந்து செல்லும் மழை போன்ற இசையும் இந்தப் பாடலுக்கென்று தனித்த ஒரு ஆன்மாவை சிருஷ்டித்தது எனலாம்.
                                
 
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி பாடல் பரத்வாஜ் இசைத்தளித்தது. ஆட்டோகிராஃப் படத்தின் வெற்றிகரம்  எப்போதெல்லாம் ஒலிக்கின்றதோ அப்போதுகளை எல்லாம் தன் போழ்துகளாக்கித் தக்கவைக்க வல்ல நற்பாடல் இது.
 
 
இன்னமும் காற்றுக்குத் தூது விட்டு எனும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும், முஸ்தபா முஸ்தபா பாடலும், கதவைத் திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசமென்ன சூர்யபார்வை பாடலும், பசுமை நிறைந்த நினைவுகளே பாடலும், தேவதை வம்சம் நீயோ எனும் ஸ்னேகிதியே பாடலும் நட்பின் நன்மைகளைப் பறை சாற்றுகிற இன்னும் சில பாடல்கள். நட்பின் வரலாறு நெடியது
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...