அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 78 - ஒவ்வொன்றும் வெவ்வேறு - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   20 , 2018  15:11:53 IST


Andhimazhai Image
ரு பேச்சுக்காக இப்படிக் கேட்போம். இந்தப் பக்கம் எஸ்.பி.பி குரல் என்றால் அந்தப் பக்கம் யேசுதாஸ் குரல்தானே? இந்த இரண்டு குரல்களுக்கும் என்ன வித்தியாசம்? குழைவதற்கும் கரைவதற்கும் என்ன வித்தியாசமோ அது வித்தியாசம். இந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு குரல் என்று மலேஷியாவைச் சொல்லலாம் தானே? யேசுதாஸோடு கூடவே ஜெயச்சந்திரனையும் சொல்லலாம்தானே? பாலுவோடு மனோவும் சேரலாம்தானே? பின்னே ஒரு கார்த்திக் துவங்கி அந்தச் சரளி வரிசையில் மிகச் சமீபத்திய வரவான பெல்லி ராஜ் வரைக்கும் சொல்லலாமென்றால் பட்டிமன்றத்தின் அந்த அணியில் உன்னி மேன உன்னி கிருஷ்ண ஹரிஹர மதுபால கிருஷ்ணர்களை வரிசையில் நிற்கச் செய்யலாம். 
 
 
கொண்டாட்டமும் கரைதலும் இருவேறு கரைகள். இது ஆதிப் பிளத்தல் என்றால் தகும். முன்பே பலமுறை சொன்னாற்போல் பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா போன்ற பல குரல்களை எதிரணிக்கு அனுப்பிவிட்டுக் கொண்டாட்ட அணியின் தலைவராக நியாயமாக டி.எம்.சௌந்திரராஜனை நியமித்திருக்க வேண்டும். ஆனாலும் அது ஒரு எங்கே வேண்டுமானாலும் சேர்க்கக் கூடிய ராஜ குணாம்சம் நிரம்பித் ததும்பிய குரல் டிஎமெஸ்ஸினுடையது. ஒரே ஒரு பாடலைப் பாடிய இன்னொரு குரல். இரண்டாயிரம் முறைகளுக்கு மேல் கேட்டிருப்பேன். ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரம் போலவே அந்தப் பாடல் எனக்குள் ஒலித்தபடி இருக்கிறது. உண்மையில் அப்படி ஒரு பாடலை ஒரு திரைப்படத்துக்காக மற்ற சாதாரணங்களோடு ஒரு அற்புதத்தை ஒளித்து வைக்கக் கூடிய ஒரு யுக்தியைப் போலவே படைத்தார் இளையராஜா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
 
 
அந்தப் பாடலின் முதல் வரியை நினைக்கும்போதே நிகழத் தொடங்கிவிடும் ஒரு ஜாலம், அதை வார்த்தைகளால் வடிப்பது கடினம்.
 
ராதையை.. பூங்கோதையை.." என்கிற இந்தப் பாடல். 
 
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
 
 
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இணைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
 
 
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயம் அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
 
 
குரலால் செல்லம் கொஞ்ச முடியும், குரலே செல்லம் கொஞ்சினால் அதுதான் பாலமுரளி கிருஷ்ணா. உண்மையில் நம்ப முடியாத ஒரு ஆச்சரியமாகவே தொடங்கித் தொனித்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்த வல்லது. காரணமின்றி இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் கரைந்துதான் போகும். இந்தப் பாடல் அதுவே ஒரு காரணம், அதுதான், வேறொன்றும் இல்லை. மேற்படி பாடலை மேற்படி கிருஷ்ணர் பாடியதன் வினோத வித்யாசங்கள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒவ்வொன்றும் வெவ்வேறாய் மனதின் உள்ளாடுகின்றன. உதாரணமாய் ஒன்று சொல்வதானால் வல்லினம் மெல்லினம் இடையினம் அறிவோமல்லவா..? ஜாலமுரளி என்ன செய்திருக்கிறார் என்றால் வலிக்காத வல்லினம் ஒன்றை அதாவது இடையினத்தை விட வலுத்தால் போதுமென்ற அச்சில் வார்த்து எடுத்திருப்பார். அதே சமயம் மெல்லினத்தை சற்றே மத்தியமொழிப் பிரதேசம் நோக்கித் திருப்பியிருப்பார். இடையினத்தை லேசாய் அழுத்தி வேறொன்றாக்கி மலர்த்தி இருப்பார். மொத்தத்தில் பாலமுரளியின் கிருஷ்ணவேலைகளில் ஒன்றாய்த் தமிழும் சற்றே இயைந்திருக்கும்.பேரழகுக் குரலோன்!
 
 
மிகச் சமீபத்திலும் இதைக் கேட்கும்போதெல்லாம் என்னுடைய ஏழு அல்லது எட்டு வயதில் கசங்கக் கசங்க இழுத்துப் பிடித்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துத் தலையைத் துவட்டிக் கப்பல் படம் போட்ட பாக்கெட்டுகளைக் கொண்ட ப்ரௌன் நிற சல்லாத்துணி ட்ரவுசர், கட்டம் போட்ட ப்ரௌன் சட்டை என மேட்ச்சுக்கு மேட்சாக அணிந்து கொண்டு மூன்று மச்சங்களை உடைய ஓவல் குழித் தட்டில் கத்தரிக்காய் எண்ணெய்ப் பொரியலும் குழையப் பிசைந்த வற்றல் குழம்புச் சோறும் நான்கைந்து வடகங்களுமாய் அவுக் அவுக்கென்று சுடுசோற்றைச் சாப்பிட்டுவிட்டு, தட்டைத் தேய்க்கப் போட்டுவிட்டுக் கழுவிய கையைத் துடைக்க அவகாசமின்றி வெளியே விளையாட வீதிக்கு ஓடுகிற அந்த சின்னஞ்சிறுவனாக நானிருந்த பொழுது யாரோ நடுங்கும் கரங்களோடு எடுத்து இது உன்னுடையதுதானே என்று என்னிடமே கொடுக்க முற்பட, ஆமாம் ஆமாமென வர மறுக்கும் வார்த்தைகளோடு அதை எப்படிப் பெற்றுக் கொள்ளுவதெனத் தெரியாமல், திறக்க மறக்கும் கனவின் கரங்களோடு ஒரு கணம் விதிர்விதிர்த்து நினைவுக்குத் திரும்புகிறேன். 
 
 
சிவப்புச் சாந்து மொழுகிய அந்தப் புதூர் வீட்டின் தரை இன்னமும் அதன் மணமும் வழவழப்புமாய் மனத்தில் நிரடுகிறது. ஆட்டு உரல், அம்மி, நீல விளக்கெரியும் வெள்ளைக் கார் பொம்மை, மார்பிள் கல்லால் செய்யப்பட்ட சப்பாத்திப் பலகை, பல்லாங்குழி, விசிறி, அரிக்கேன் விளக்கு, குமுட்டி அடுப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, புகை ஊது குழல், அடுப்புத் திரி, சோழிகள், பாட்டி தலைக்கு வைத்துப் படுக்கும் சின்னஞ்சிறிய மரப்பலகை, வெங்கலப் பானை, ஃபிலிப்ஸ் ரேடியோ, இன்னும் நூற்றுக் கணக்கான பொருட்கள், அவற்றின் இருத்தல்களாய் விலகித் தொலைந்து நெடுங்காலம் ஆன பிற்பாடும் ஞாபகங்களாய்த் தங்களிஷ்டத்துக்கு வருவதும் போவதுமாய் இன்னும் மேலதிக இரண்டு ஞாபகங்கள் அப்பா மட்டும் பாட்டி என்ற பெயர் தாங்கி, இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கிற ஒரு மாபெரும் கலயம் போலத்தான் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா பாடிய, இளையராஜா இசையமைத்த "கவிக்குயில்" திரைப்படத்தின் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" என்கிற இந்தப் பாடல். திரைப் படங்களிலிருந்து எத்தனை தூரம் அந்நியப்பட்டு இருந்தாலும், பாலமுரளி கிருஷ்ணா தமிழ்த் திரையுலகத்துக்குக் கொடுத்த கொடை இந்தப் பாடல் எனலாம். நீங்கா நிழல். நில்லா மழை. அற்புதம்.
 
 
எந்த வகைமைக்குள்ளும் சிக்காத குரல் அதன் வித்தியாசமே அதைப் போற்றுவதற்கான காரணமாகவும் அமையக் கூடும். பாப்புலாரிட்டி க்ரைட்டீரியா பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், தன் அழகு குறித்த ஒரு கொடுங்கோலனின் பிடிவாதத்தைப் போலவே ஒரு பாடலை இன்னார் பாடவேண்டும் என ஒரு இசையமைப்பாளரின் தீர்மானம் என்பது. சில சமயங்களில் எக்ஸ்கியூஸ் மீ எனத் தானே பாடிவிடுவதும் உண்டு. இந்தப் பாடலை முதல் முறை கேட்டபோது அந்தப் பர்ட்டிகுலர் இசையமைப்பாளரைக் கூப்பிட்டு "ஏன் சார் இப்படி ஒருத்தரைப் பாட வெச்சிங்க?" என்று மிதமாய்க் கண்டிக்கலாம் என்றே தோன்றியது. ஆனால் அந்தக் கொழந்தையே அவர்தான் எனத் தெரிந்த மொமெண்ட்டில் "எதுக்கு வந்திங்க?" "சாரி சும்மாத்தான் வந்தேன்" என்று திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 
 
 
பார்க்கப் பார்க்கப் பிடித்துப் போகும் தனுஷ முகம் போல, கேட்கக் கேட்கப் பிடித்துப் பித்தாய் மாறிற்று இந்தப் பாடல். ஒரு கெட்ட பழக்கத்தைப் போலவே விட முடியாமல் தவித்து ஒரு கட்டத்தில் கரண்டில்லாத போதெல்லாம் இந்தப் பாடல் கேட்கும் அளவுக்கு ஒரு பைத்தியப் பித்து இதன் மீது இருந்தது. இப்போது நோக்கினால், இந்தப் பாடலின் ஆளுமை, வகைமை வித்தியாசங்கள் புலப்படுகின்றன என்றால் இதன் தோன்றல் காலத்தில் என்னடா ஏதடா என்றெல்லாம் குழம்பியதும் நிகழ்ந்தது. ஒரு வழியாக இரண்டாயிரம் முறை கேட்ட பிற்பாடுதான் இன்னும் பத்தாயிரம் முறை கேட்டால் என்ன என்கிற பரவச நிலை தோன்றியது. ஒருவகையில் கங்கை அமரன் குரலைக் கம்ப்ரஸ் செய்தாற்போல் தோற்றமளித்தாலும், மிக நிச்சயமானதொரு அதகளம் மரகதமணியின் குரல்.
ஓடி வந்து விளையாடு" 
 
சர்வ நிச்சயமாக இந்தப் பாடல் ஒரு ட்ராவல் கிட். ஒரு பயணத்தைப் பூட்டவாவது, திறக்கவாவது, சிந்தாமல் சிதறாமல் கட்டி வைக்கவாவது இந்தப் பாடல் பயன்படும். வெரிஃபைட், மெய்ப்பிக்கப்பட்ட உண்மை, நம்புங்கள்.அன்னம்மேய் அஞ்சுகமே ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே என்னும் போது மனசு விஸா எடுக்காமல் வானேகும்.
 
 
வனத்தன்மை மிகுந்து ஒலிக்கக் கூடிய ஒரு உலர்ந்த குரல் மரகதமணியினுடையது. ஒரு பாலக்காட்டு அணுகல் லேசாய்த் தோன்றினாலும், வனாந்திர நாடோடியின் குரல்தான் அது. விட்டேற்றித் தனமும், பற்றறுதலும் வெவ்வேறு எல்லைகள். இவ்விரண்டுக்கும் சர்வ சாதாரணமாய்ச் சென்று வருகிற அபூர்வம் இவ்வகைக் குரல். தேளிடும் துளை போல் காத்திரமும், தட்டான் பூச்சியின் முத்தம் போல் மென்மையும் ஒருங்கே தோற்றுவிக்கிற மாயம் இக்குரல். கீரவாணி என்றும், எம்.கரீம் என்றும், மரகதமணி என்றும், மூன்று முகம் தாங்கிய மும்மூர்த்தி பாகுபலி காலத்திலும் தனக்கெனத் தனிவழி நதியாய்த் தொடர்கிறார், என்றாலும் ஒராயிரம் இரவுகளின் கோடி கோடி நட்சத்திரங்கள் ஒரே ஒரு பாடலாய்க் கம்பங்காட்டில் குழைவது லயம்.
 
 
இந்த முறை குரலை விட்டுவிடுவோம். அதே பாலு அதே ஜானகிதான். ஒரு அயர்ச்சியற்ற நிஜமான கிறக்கத்தை இரண்டாம் முறை உணர்ந்தாற்போல் சொல்லக் கடினமான, எப்போதோ எங்கேயோ கிட்டிய ஒரு அரும் சுவை பதார்த்தத்தின் ருசி போல் தோன்றலும் மறத்தலுமாய் நேற்றுப் போட்டக் கோலத்தின் மீது சற்று முன்னர் பெய்த மழைக்குப் பின் மிச்சமிருக்கக் கூடிய வண்ணக் கரைசல்கள் போல், வாகனத்தைத் துரத்தி வந்த நாயொன்று ஒரு புள்ளியில் விக்கித்து நிற்பது ரியர் வ்யூ கண்ணாடியில் மெல்ல மறைகிறாற்போல் முன்பு நன்கறிந்து புழங்கிய நெடுங்காலத்துக்குப் பின் காண வாய்க்கையில் நினைவுக்கு வர மறுக்கும் பரிச்சய மனிதரின் பெயர் போல், அவஸ்தையும் ஆனந்தமும் கலந்து பிசைந்த ஒரு தன்னந்தனி அமுதம் இந்தப் பாடல். இதை இசையமைத்தவர் ஷ்யாம் மாஸ்டர். அவ்விடத்திலே ஆயாளு மிடுக்கன். பக்ஷே இங்கே இருபது படங்கள் குறையாமல் செய்திருந்த போதும் வெகு சில பாடல்களே ஷ்யாம் நாமத்தைப் போற்றுபவை. குறுநதி என்றாலும் தீராநதி. 
 
 
இந்தப் பாடல் "மழை தருமோ என் மேகம்" 'மனிதரில் இத்தனை நிறங்களா' என்கிற படத்தில் ஷ்யாம் இசைத்து பாலுவும் ஜானகியும் பாடி உருவான பாடல். இந்தப் பாடல் ஒவ்வொரு முறையும் முதல் முறை போலவே தோன்றுவது இதன் ஒரு சிறப்பு. அதைத் தாண்டி இதன் வழங்குதலில் தென்படக் கூடிய சின்னஞ்சிறு வித்தியாசம், ஒரு சர்வதேசப் பாடலாக இதனைத் துவக்கியிருப்பார் ஷ்யாம். இந்தப் பாடலின் சாயலில் பின்னாட்களில் ஹம்சலேகா "ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை" என்கிற பாடலைத் துவக்கியிருப்பார். இதையும் அதையும் எஸ்பிபிதான் பாடியிருப்பார். 
 
 
சின்னதொரு புதிர்த்தனமும், மெல்லத் தொடர்ச்சிகளில் அதை அவிழ்த்துத் தருகிற எள்ளலும், நின்று ஒலிக்கும் இணைப்பிசையும், காற்று ஓங்கும் நேரத்தில் மூங்கில் கூட்டத்துக்குத் தீ வைத்தாற்போல் எங்கோ தொடங்கி வெவ்வேறு கலயங்களில் தன்னை நிரப்பிப் பூர்த்தியாகி மறையும். 
 
 
இந்தப் பாடலும் மேற்சொன்ன இந்த அத்தியாயத்தின் முதலிரண்டு பாடல்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாதது போல் தோன்றும். என்றாலும், அது பொய்யல்ல. நிஜம்தான். ஏனென்றால் இந்தப் பாடல்கள் வேறெந்தப் பாடலோடும் ஒட்டாதவை என்பது அவற்றின் முதற்சிறப்பு. 
 
 
[ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்.]

English Summary
Pulan myakkam

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...