அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 81 - சந்திர சூர்ய நட்சத்திரன் - டி.ஆர்.மகாலிங்கம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   17 , 2018  10:52:40 IST


Andhimazhai Image
யாரு தீபன் எனக்குத் தெரியுமா என்றேன். என்னைப் பார்க்கும் போதே அந்தக் கணத்தைத் தனக்குள் மேலாண்மை செய்தவாறே இல்ல ஸார் உங்களுக்குத் தெரியாது அவரை என்றபடியே சன்னலோரம் பார்த்தார். தீபன் என் நண்பர். கட்டிட வரைபடக் கலைஞர். கவிதைகள் மீது பெரும் பற்றுக் கொண்டவர். அதிர்ந்து பேசாத இயல்புடையவர். வரலாற்றின் மீதும் தொன்மங்களின் மீதும் ஆர்வமுள்ளவர். இலக்கியக் கூட்டம் ஒன்றிலாவது அவரைப் பேசவைத்து விட வேண்டும் என்பது என் நெடுநாள் அவா. அதை முன் ஜென்மத்து மூக்கைக் கொண்டு உறிஞ்சினாற் போல அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் சகோ என்றால் போதும் பத்து நாட்களுக்குக் காணாமற் போவார். வருகிறேன் என்று ஒரு வார்த்தையைக் கூட அவரிடமிருந்து வாங்க முடியாது. கேட்டால் வாசக அன்னியம் என்று அறிந்த இரண்டு சொற்களை இணைத்து ஒரு தடவை சொன்னார். அதிசயித்து மனடைரியில் பதிந்து கொண்டேன்.
 
 
மேற்படி சொல்லப்பட்ட தீபனின் நண்பர் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒரு தினம் இறந்து போனார். அவர் பெயர் திருவாசகம். அவர் ஒரு இஞ்சினியர். இதைத் தொடர்ந்து இறங்குவரிசயில் வாழ்ந்து முடித்த ஒரு மனிதனின் சரித்திரத்தைத் தன் இஷ்ட உளிகளால் நொறுக்கிக் கிடைத்த மட்டிலுமான சொற்களைக் கொண்டு அடுக்கிச் சொல்லிப் போவதற்குப் பதிலாகத் தான் உங்களுக்குத் தெரியாது ஸார் என்று ஒரே வாசகத்தில் அடக்க முயன்றார் தீபன். இல்ல தீபன் அவரை நான் இப்ப தெரிஞ்சுக்கிறேன்.உங்களோட உலகத்ல நாங்க ரெண்டு பேருமே இருந்துட்டு வரோம் இல்லையா என்றதும் சற்றே யோசனையுடன் அவரைப் பற்றி என்னிடம் சொல்ல ஆரம்பித்தார் தீபன்.
 
 
தீபன் அதிகம் பேசுகிறவரில்லை. தீபன் போன்ற மென்மன மனிதர்களின் மௌனத்தில் அலப்பறை செய்வதன் மூலமாகத் தம்மைத் தாமே தொழுது கொள்கிற ஒரு பெருங்கூட்டமே உண்டு. பாதி வேக்காட்டுப் பதார்த்தங்கள் சவைத்ததும் துப்புவது அவற்றுக்கான நியாயம் என்ற அளவில் நீர்த்துப் போகிற நீர்ச்சித்திரங்கள். இலைக்கூட்டம் மறைத்துவைத்து விளையாடுகிற நற்கனி போல ஓரிருவர் கண்டடைய வேண்டிய மனத்தலங்களைப் போலக் கிட்டுவார்கள். அவரவர் முற்பிறவிப் பயனொட்டிக் கிடைப்பதும் கிட்டாததும் நேரலாம்.
 
 
திருவாசகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்த தீபன் அவருக்கு டி.ஆர்.மகாலிங்கம் வாய்ஸ்னா ரொம்பப் பிடிக்கும் ஸார் என்றவர் அதிலேயே அயர்ந்து போனார். அதன் பிறகு அந்த சந்திப்பின் எஞ்சிய பொழுதனைத்தும் மகாலிங்கத்துடனான திருவாசகத்தின் வாஞ்சையை எடுத்து மொழிவதிலேயே கழிந்தது.
 
 
தீபனுக்குச் சொந்த ஊர் கரூர். படித்தது எல்லாம் சென்னையில்.எதோ ஒரு பெருங்காற்று திசை மாற்றித் தர வந்து அமைந்தது மதுரையில். மீனாட்சிப் பட்டணத்தில் தீபனுக்கென்று ஒருவள் இருந்ததும் தொழிற்புக வந்த ஊர் புகுந்த ஊருமாயிற்று. கடந்த ஏழு வருடங்களாக மதுரையின் மருமகனாக வலம் வந்து கொண்டிருந்தவருக்கு தொழில்ரீதியான பழக்கங்கள் பற்பல.அதிகம் நண்பர்கள் கொண்டவரில்லை தீபன். தொழில் முறைப் பழக்கங்களில் சிலர் நண்பர்களாகவும் வலுப்பெறுவது இயல்பாக நடப்பது தானே..? அந்த வகையில் கடந்த நாலைந்து வருடங்களாகவே திருவாசகம் ஸார் சொந்த வீடு கட்டுவதற்காக ஒரு க்ளையண்டாக அறிமுகமானதில் இருந்து பழக்கம். நல்ல நண்பர் போலும். அவரது மரணச் செய்தியை அறிவித்தவர்  வெளிநாடு சென்ற இடத்தில் மகன் வீட்டில் காலமானதையும் உடல் இன்னும் இரு தினங்களில் வர உள்ளதையும் சொல்லி விட்டபடியால் உடனே சென்று அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட எதுவும் இல்லாத ஒரு வெறுமையின் அதிர்வில் தான் உங்களுக்குத் தெரியாது ஸார் என என்னிடம் சொன்னார்.
 
 
யதேச்சையாக தீபனைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு ஃபோன் வந்தது. அப்போது தான் சேதி அறிந்து முத்துப் படர்ந்த நெற்றியைத் துடைத்துக் கொண்டார். நாங்கள் இருவருமே  அடுத்துவந்த நாலைந்து நிமிடங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. மெல்ல ஆரம்பித்தேன்.
 
 
தீபன் திருநகர்ல எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் மணிகண்டன் அப்டின்னு ஒரு அண்ணன்.அவரோட சொந்த பெரியப்பா தான் டி.ஆர்.மகாலிங்கம் தெரியுமா..?
என்ன ஸார் சொல்றீங்க..? ஆமா தீபன் அவங்கப்பா பேர் அதாவது மகாலிங்கம் தம்பி பேர் டி.ஆர்.கணேசன். எங்க ஏரியாவுல கணேசன் அங்கிளை ஒரு வீ.ஐ.பி.யாகவேதான் மதிப்பாங்க. அவரும் மணி அண்ணனும் கூட நல்லாப் பாடுவாங்க. மதுரைக்குப் பக்கத்ல சோழவந்தான் வில்லேஜ் தான் அவங்களுக்கு பூர்வீகம். அமைதியாக இருந்தார் தீபன்.
 
 
அடடா திருவாசகம் ஸார் இருந்தா இதைக் கேட்டு எவ்ளோ மகிழ்ந்திருப்பார் ஸார்..? அவருகிட்ட மகாலிங்கத்தோட அத்தனை பாடல்களும் பாட்டுக் கேஸட்ட மாத்திரம் இல்லை இசைத்தட்டு கேஸட்டு சீ.டி தொடங்கிப் பென் ட்ரைவ் வரைக்கும் பாட்டுப் புஸ்தகம் வரைக்கும் எல்லாமே வச்சிருக்கார் ஸார். அவரோட ரூம்ல ஆளுயர ப்ளாக் அண்ட் ஓயிட் படம் அதுல நடந்து வராப்ல மகாலிங்கத்தோட படம் இருக்கும். நான் பார்த்திருக்கேன். என்றவர் இதற்காக வருந்த ஆரம்பித்தது தெரிந்தது.
 
 
என் பதின்ம காலத்தில் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலிலான பாடல்களை அதிகதிகம் கேட்க ஆரம்பித்தேன்.என் சுற்றத்தார் எல்லோருக்கும் பிடித்தவராக அவர் இருந்தார்.
 
 
டி.ஆர். மகாலிங்கம் ஒரு நாற்பது வருட காலம், அதுவும் திரைப்படங்கள் தமிழில் பேச ஆரம்பிக்கும்போது அதிகதிகப் பாடல்கள், பிறகு அழகான பாடல்கள் என ஆகி எழுபதுகளின் மையம் வரைக்கும் ஒரு நெடுநதியின் வரலாற்றைப் போன்றது மகாலிங்கமெனும் குரலாற்றின் நிறைவும். பல ரவுண்டுகளைத் தாண்டி வீழ்த்த முடியாத பாடல்களின் வரிசையில் "செந்தமிழ்த் தேன்மொழியாளு"க்கு ஒரு இடம் உண்டல்லவா? டி.ஆர். மகாலிங்கத்தின் குரல் தன்னளவில் மிகவும் தனித்துவமானது. மேலும், பாடலுக்கு ஏற்றாற் போல் அடுத்தடுத்த சிறு சிறு இடங்களில் தன்னைப் பொறுத்திக் கொள்ள வல்லது. மழையின் பல்வேறு வகைமைகள் மழையென்கிற பொதுப் பதத்தில் அறியப்படுவது போலவே அழகழகான வித்தியாசங்களாய்த் தன் பாடல்களை உருவாக்கினார் மகாலிங்கம். 
 
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
 
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
 
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
 
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
 
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
 
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
 
 
எப்படிப் பாடச் சொன்னாலும் உடனே அதற்குத் தயாராகிற குரல் ஒரு வரப்பிரசாதம்தான். பாடகர்களை அல்லாது குரல்களையும் அல்லாது பாடிய முறைமைகளைப் பிரதியெடுத்து உருவாக்கப்பட்ட பாடல்களைப் பாடினார் மகாலிங்கம். காலம் கைவிடும் வரை பாடல்களுக்கு ஒரு தன்மை இருக்கும் அல்லவா? அந்தத் தன்மையை வழக்கமாகப் பாடுகிற அதிகம் புழங்குகிற பாடகரின் பாணி என்பதாகவும் உணர முடியும். பாடலின் தன்மை என்பது பொதுமை. அதுவே பாணியாக மாறுகையில் தனித்துவம். அதை இன்னொருவர் செய்து பார்க்கையில் அதன் பெயர் போலி செய்தல். அப்படி இல்லாத அபூர்வங்கள் பெருமலையின் மேனி பட்டுத் திரும்பி வருகிற எதிரொலிக்கு ஒப்பான வினோதங்கள். தன் குரலின் எதிரொலியை ஒருவர் தனதெனக் கொள்ளவும் இல்லையெனத் தள்ளவும் பேர் பாதி நியாயங்கள் உண்டு. இந்த வகையில் கிஷோர் குமார் ஜீ.கே. வெங்கடேஷ் உள்ளிட்ட வெகு சிலர் கிட்டத்தட்ட ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுக்கு முன்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் மகாலிங்கம் ஒருவர்.
 
 
பாகவதர் போல டி.எம்.எஸ் சில பாடல்களைப் பாடியிருக்கிறார் தன் குரலிலேயே. ஒரு உதாரணம் "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி". டி.ஆர். மகாலிங்கம் தன் காலகட்டத்தின் ஒரே ஒரு சந்திரசூரியநட்சத்திரனாய் இருந்திருக்கிறார். தன் தனித்துவமாக வகைமை தருதலை வைத்திருப்பது எத்தனை ஆபத்தானது. அதை அனாயாசமாக அதுவும் நாற்பதாண்டு காலம் பராமரித்தவர் மகாலிங்கம். அவருக்குப் பெரும்புகழ் தந்த இன்னும் ஒரு பாடல் "மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே".
 
"இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை" 
 
"தென்றலிலே மிதந்து வரும் செந்தமிழ்ப் பெண்ணாள்" உள்ளிட்ட ராஜராஜ சோழன் படத்தின் அனேகப் பாடல்களை அவர் பாடினார். 
 
 
டி.ஆர். மகாலிங்கம் பற்பல ஆன்மீகப் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பலவற்றில் சின்னதொரு கதை கூறும் தொனியை ஏற்படுத்திவிடுவது அவருடைய பெரும் சிறப்பு. சோகப் பாடல்களை முறையிடல்களாகவும், ஆன்மீகப் பாடல்களைப் பிரார்த்தனைகளாகவும் பாடுவதை வழமையாகக் கொண்டிருந்த ஒரு காலத்தில் சோகப் பாடல்களை மிக லேசான அயர்ச்சியின் முணுமுணுப்பாகவும், ஆன்மீகப் பாடல்களைப் பொது நன்மைக்கான வேண்டுகோள்களாகவும் மடை மாற்றியவர் மகாலிங்கம். 
 
 
வான் நிலவே மன மோகன காதல் வாழ்வில் மகிழ்ந்திருப்போம் நாமே...பாரிஜாதம் படப்பாடல் இதோ... கனிவாய்ப் பேசும் கிளியே உன் காதல் அடிமை நானே... என்று மகாலிங்கம் பாடுகையில் பாடல் அடிமைகளாய் மாறும் பார்வையாளர் குழாம்.
 
 
அழுத்தமும் நடுக்கமும் ஒன்று சேர்ந்த அபூர்வம் அவர் குரல். கர்நாடக சங்கீத மேதமையைக் கொண்ட யாருக்கும் வசப்படாதது மகாலிங்கத்தின் குரலில் மட்டும் தென்பட்டது. அது என்னவென்றால், ஏதுமறியாப் பேதமைக்கு அருகமைந்த வெகுளித் தன்மை. தமிழில் சி.எஸ். ஜெயராமன், டி.ஆர்.மகாலிங்கம் என்ற இரண்டு பேரின் குரல்கள் மாத்திரமே நிகழ்த்திய வெகு அரிதான சில பாடல்கள் இன்றளவும் விஞ்ச முடியாத சிகரம் தொடல்களாக நிரந்தரித்து ஒளிர்கின்றன. ஜெயராமனின் "அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்" என்கிற ஒரு பாடலும், மகாலிங்கத்தின் "செந்தமிழ்த் தேன்மொழியாள்" என்கிற ஒரு பாடலும் அப்படியான புகழேந்திப் பாடல்கள்.  கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்; கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம் என்ற பாடலைக் கேளுங்கள். கண்மனம்ஆன்மா மூன்றும் கலங்கும். நான் கியாரண்டி.
 
 
மகாலிங்கம் நடிகராகவும் கோலோச்சியவர். நடிக்கத் தெரியாத குரலால் பாடியவர். பாடி நடித்த நடிகர்களில் தன் இறுதி சுவாசக் கணம் வரை புகழ் குன்றாப் பெருவாழ்வு வாழ்ந்த சிலரில் ஒருவர். தமிழின் ஆகச் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக இன்னும் சிலபல நூற்றாண்டுகளுக்கு செந்தமிழ்த் தேன்மொழியாள் வருவாள். எதை நினைத்து அந்தப் பாடலின் பதிவின்போது அதைப் பாடினாரோ தெரியாது, நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கிறாற் போன்றது கடவுளுக்குப் பிடித்தமான ஒரு செயலைச் செய்வது. மிஸ்டர் ஆண்டவர் மிக நல்ல மூடில் இருந்தபோது அந்தப் பாடலை அவர் பாடியிருக்க வேண்டும். நிரந்தரத்தின் ஏட்டில் எழுதப்பட்டது அந்தப் பாடல். ஒரு வேளை மகாலிங்கம் இன்றிருந்தால் அவரிடம் இப்படிச் சொல்லலாம், என்ன சார் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது, ஒரே சலிப்பா இருக்கு என்று. 
 
 
 இப்படி ஒரு குரல் எப்படி என சகாக்களே வியக்கத்தக்க குரல்நதி மகாலிங்கம். வாழிய நின் புகழ். 
 
 
 
[ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்.]


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...