அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் 70 - அவதாரம் தேவதை முகம் - நாஸர் ட்ரையாலஜி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   17 , 2018  12:25:04 IST


Andhimazhai Image
கலை என்பது உண்மையில் தேவையின் நிமித்தமா அல்லது ஒரு திறன் தன்னை நுகர்வதற்கான ஒரு இடத்திற்கு நகர்த்திச் சென்று தயாரித்துத் தன் பரிமாணத்தை நிகழ்த்துவதா? கலை என்பது ஒருபுறம் கண்டனமாகவும் மறுபுறம் குதூகலமாகவும் புரிந்து கொள்ளத் தக்கது. ஆட்சேபங்களும் வினவுதலும் நேர்ப்படுத்துதலும் ஒவ்வாமையும் கோபமும் எப்படிக் கலையில் வெளிப்படத் தக்கவையோ அப்படியே வாழ்த்தும், விஸ்வசித்தலும், நன்றி நவிலலும், கோரிக்கை வைத்தலும், கொண்டாட்டமும் கலையாகின்றன. 
 
 
ஒரு திரைப்படத்தின் தேவை என்னது? கதைகள் தீர்ந்து போகும் வரை கதைகள் பேசவேண்டியதாகிறது. மனிதர்களுக்குப் பின்னால்தான் கதைகள் தீர்ந்து போகும் போல் இருக்கிறது. ஓட்டுக்கு மேலும், தோலுக்கு உள்ளேயும் ஆன கனிப் பகுதி என ருசிக்கிற இந்த வாழ்தல் இனிது. எப்போதும் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எப்போதாவதுதான் திரைப்படங்கள் நிகழ்கின்றன. என் வாழ்வை மாற்றியமைத்த அத்தகைய திரைப்படங்களின் அபூர்வத் தனித்தல்களுக்குப் பின்னே, இளையராஜாவின் இசை என்கிற ஒரு ஒற்றுமை இருக்குமேயானால், அவற்றை அந்தத் தலைப்பின் கீழ்க் கொண்டாடுவதில் தவறேதுமில்லை. 
 
 
நாஸர் ட்ரையாலஜியில் நாம் வசதிக்கேற்ப முதலில் பார்க்கவிருப்பது 'தேவதை'.  நூறு சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் தொகுக்கப்படும்போது, அவற்றில் தேவதைக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. அடுத்த காலகட்டத்தின் திரைப்படத்தை முன்கூட்டி எடுப்பவர்கள் மேதைகள் என்கிற வகைமையின் கீழ் வருகிறார்கள். அரிப்புத் தீராத ஒருவன் தன் சதையை அறுத்துக் கொள்ளுவதைப் போல், தாகம் தீராத ஒருவன் நன்னீர்க் கடல் மொத்தத்தையும் குடிக்க முற்பட்டு வயிறு கிழிந்து இறந்து போவதைப் போல், இந்த உலகின் எல்லாக் காலத்து மதுபானங்களையும் அருந்தி, போதையின் உன்னதம் காண விரும்புகிற கள்வெறியனைப் போல் நடிப்பு எனும் இச்சையில் நாஸரைச் சொல்லலாம். 
 
 
நாஸர் எழுதி இயக்கிய சொற்பமான படங்களில் 'தேவதை' ஒன்று. இது ஒரு நியோ மற்றும் செமி மேஜிக்கல் திரைப்படமாகத் தமிழில் முயலப்பட்டது. அதீதத்தைக் காட்சிப் படுத்திய நாஸர், சேராக் காதலில் சேர வந்த செஷாங்க் என்னும் எதிர் நாயகனாக மாறினார். தீராத காதல் ஒரு சர்ப்பமாக மாறிக் காலத்தின் உடல்களைத் துளையிட்டுத் தன் காதலின் விழிகளைத் தேடித் தீர்க்க முற்படுவதைக் கதையென்றாக்கினார் நாஸர். சொற்ப கதாபாத்திரங்கள். அதிலும், குறிப்பிடத்தக்க 'தலைவாசல்' விஜய், மறுபடி வரையவே முடியாத கீர்த்தி ரெட்டி, தினமும் தன் குரலை முந்தைய தினத்தை விட இளமையாக்கிக் கொள்ளும் எஸ் ஜானகி, ஒப்பிடற்கரிய இளையராஜா. இதுவும் ஒரு பாடலன்று. இது ஒரு பாடல். 
 
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
 
கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
 
உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன்
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்து போனேன்
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது
 
மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்க வேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன்
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்
 
அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம்
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்"
 
 
'தேவதை' படத்தின் இசையிடை மௌனங்கள் அமானுஷ்யமானவை. இசைக் குறிப்புகளோ காலத்தின் முன் பின்னாய்க் கிளைத்துத் தப்புகிற தாளக் கருவிகளைப் பிரதானப்படுத்தி அமைக்கப் பெற்ற பின்னணி இசை உக்கிரம். தேவதை என்றாலே பின்னாலொரு உடுக்கைச் சத்தம் எங்கோ ஆழத்தில் ஒலிப்பது ரசம்.
 
 
நாஸர் எழுதி இயக்கிய 'அவதாரம்' மேற்சொன்ன அதே நூறு படங்களுக்குள் இன்னொரு படமாக வந்தே தீரும். மனித வாழ்வின் அறிவியல் கண்டுபிடிப்பின் பூர்வமான நகர்தல்கள் சிலவற்றைக் கைவிடச் செய்யும். கிராம வாழ்வுகள் சார்ந்த கலைகள் மாற்றி அமைக்கப்படும் போது, நவீனத்துடனான சமனறு தன்மை அவற்றைக் கைவிட நிர்ப்பந்திக்கும். அப்படியான தருணங்களில், புதிய கலைகளின் மீதான நாட்டம், அல்லது கலைகளற்ற வெறுமை இவ்விரண்டில் ஏதோ ஒன்று நிகழும். இதற்கு மேலும், கூட்டு மற்றும் தனிநபர் சார்ந்த நிராகரிப்புகள், தன்னைக் கால வளர்ச்சியோடு பொருத்தி மேலெழுதிக் கொள்ளாத எந்தக் கலையும் அதனைச் சார்ந்தோர் வாழ்வில் நேரடி மற்றும் மறைமுக நிராகரிப்புகளுக்கு உள்ளாவதையும் பதிவு செய்யும். அங்கனம் நிராகரிக்கப்பட்ட ஒரு கலையின் சமூகம் சார்ந்த மதிப்புச்சிதைவெதையும் அறியாமல், அதன் மீதான பற்றுதலை ஆழமாய் நம்ப விரும்புகிற ஒரு வறிய கலைஞனின் எளிமையான நம்பகத்துக்குச் சற்றும் விலகாத வீழ்ச்சியை, அழிதலை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்த திரைப்படம் 'அவதாரம்'.
 
 
ஒரு படத்தின் கனத்தை மீறிய சூப்பர்ஹிட் ஒன்றை வழங்குவதன் மூலமாக அந்தப் படத்தை வேறொரு உயரத்தில் கொண்டு போய் வைக்க இசைஞானியால் பலமுறை முடிந்திருக்கிறது. அவதாரம் படத்தின் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாடல் அப்படியான ஒன்று. இது ஒரு அற்புதம்.
 
 
மேலோட்டமாகப் பார்த்தால் கண் பார்வை அற்ற நாயகிக்கு நாயகன் என்பவன் வண்ணங்களைப் பற்றி எடுத்துச் சொல்வது போலத் தோன்றுகிறது. என்றபோதும் இப்பாடல் முழுவதுமாக அகவிழி என்கிற ஒன்றின் பயன்பாட்டைப் பொறுத்தவரை பார்த்தல் என்பது உணர்தல் என்றே மாறிவிடக் கூடிய உன்னதம் ஒன்றைப் பற்றிப் பேசுவதை உணரலாம். கனவின் அரூபங்களை உருவகித்துக் கொள்வதற்கான அகவிழி திறத்தலை ரூபம் சார் புற உலகத்தின் சித்திரங்களிலிருந்து பெயர்த்தெடுத்து வேறோரு உலகத்தின் வர்ணக்கரைசல்களை நோக்கித் திருப்பிவிடுகிற ஜாலம் இதன் உருவாக்கம். மனதால் உணரக் கூடிய பல வண்ணங்கள் புறவய உலகில் காணத் தக்கவை அல்ல என்கிற பேருண்மையை நோக்கிய இசைவழி தரிசனயாத்திரை இப்பாடல்.
 
 
ஒளிரூப நிறங்களை மாத்திரம் சொல்லிச் சென்றதன் மூலமாக நாஸரின் இயக்க மேதமை நன்றாய்ப் புரிபடும். பெருகிக் குழைகிற வண்ணங்களைக் குழந்தைக்கரங்கள் கையாளுவதைக் காட்சிப் படுத்துவதன் மூலமாய் நிறங்களின் உலகம் சிதறிக் கலைடாஸ்கோப் சித்திரத்தினூடாய்ப் பிறப்பிக்கிற வளையல் துகள்களின் நதியாய்ப் பெருக்கெடுக்கிறது.
 
 
முக்கோணத்தின் நான்காவது கோணமென பொன்னம்மா, கூத்து வாத்தியார், குப்புசாமி ஆகிய மூவரின் வாழ்க்கைச் சிதைவை 'அவதாரம்' நகாசுகளுக்கு இடமின்றி நிரூபித்தது. கலையின் அழிவு, தனிமனிதனின் அழிவு, இவ்விரண்டில் மனிதனின் அழிவுக்குக் காலம் பொறுப்பேற்கிறது, கலையின் அழிவுக்கு அது மனிதர்களைக் கைகாட்டுகிறது. ஒரு சொல்லைக் கூடச் சேர்த்தெழுத இடமற்றக் குறள் வெண்பாவின் வடிவ அழகைப் போல் 'அவதாரம்' திரைப்படத்தில் கதையும், பாத்திரங்களும் பங்கேற்றவர்களும் தத்தமது பணியைச் செவ்வனே செய்தார்கள். 
 
 
நாஸரின் குரல் மிக அபூர்வமானது. பாடல்களுக்குச் சம்பந்தமற்ற வில்ல வாழ்வு அவருடையது. இங்கே கதையின் நாயகன் குப்புசாமியாக நாஸர். பாடல்கள் வந்தே தீரவேண்டும். நாஸரே பாடினாற்போல் பாடினார் இளையராஜா. நானொன்றும் உயர்த்திச் சொல்லவில்லை. படத்தின் உரையாடல் பகுதியோடு எந்த இடத்திலும் அந்நியப்படாமல், பேச்சும் பாட்டுமாய்ப் பெருகும்.  அதில், நாஸர் பேச, அடுத்த கணம் இளையராஜா பாட, துகள் உட்துளியளவு வித்தியாசம் கூடத் தெரியாமல் அந்தப் பாடல்கள் நம் வாழ்வை அலங்கரித்தன. 'அவதாரம்' திரைப்படத்தின் பாடல்கள் ஒரு முழுமையான நான் - ஃபிலிமிக் சௌத் இந்தியன் ஃபோக் ஃப்யூஷன் வகைமையைச் சேர்ந்த ஆல்பம். என்ன கொடுமையென்றால், நான் - ஃபிலிமிக் வகையறாக்கள் பேரெழுச்சி அடையாமல் நாம்தான் பார்த்துக் கொண்டோம். அதனால் அவையும் படங்களூடாகவே மலர்ந்தன. 
 
 
ஞானராஜசேகரனின் 'முகம்' இந்திய அளவில் அபாரமான தோல்வியடைந்த அற்புதமான படங்களில் ஒன்று. பார்க்காமற் போனவர்கள் சமகாலத்தின் ஃபன்னி கய்ஸ். என்னால் எத்தனைதான் முட்டுக் கொடுக்க முடியும்? ஓடிய பதினைந்து நாட்களுக்குள் நான்கு தடவை பார்த்தேன். மதுரையில், 'காலச்சுவடு' 'கடவு' சார்பாக நடைபெற்ற வாசகர் சந்திப்பொன்றில் (ஆறு வருடங்களுக்கு முன்னால்), நாஸர் கலந்துகொண்டார். 'முகம்' போன்ற திரைப்படங்களின் தோல்வி உங்களைப் பாதிக்குமா என்று கேட்டேன். இந்தக் கேள்வியை எழுதியது யார் எனக் கேட்டு என்னை ஒரு கணம் குறுகுறுவெனப் பார்த்துப் பிறகு பதில் சொன்னார். 
 
 
'முகம்' தத்துவார்த்த உளவியல் பூர்வத் திரைப்படம். கதையற்ற கதை கொண்ட குறைந்தபட்சக் கலா மேதமையைக் கோருகிற தமிழின் உன்னதமான திரைப்படங்களில் ஒன்று. "இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசையை சிடி போட்டு, சுட்ட பழ சைட் டிஷ் மேக்கர்களிடம் கொடுத்து, மெகாத் தொடர்களுக்கு இசையமைக்கும்போது இதைக் கொஞ்சம் சுடுங்கள், நரகத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஒரு சில துவாரங்கள் வழியாகக் குளிர்காற்று உங்களை வருடும்" எனச் சொல்லலாமெனச் சித்தம்.
 
 
முகம் என்பது வெறும் முகம் அல்ல என்ற புரிதலின் புள்ளியிலிருந்து கைக்கொள்ளுதலும் நிராகரித்தலுமாய் இரண்டாய் வகுபடுகிற இந்த ஒட்டுமொத்த வாழ்வை முன்வைத்து ஞானராஜசேகரன் படைக்க விழைந்த கதாவுலகத்தின் அலாதி இசைப்பூர்வமான நகர்தல்களின் போது இருளும் வெளிச்சமுமாய்ப் புணர்ந்தியைந்து பெருகிய விசித்திரமான காட்சியின்பம். அகத்தின் தேம்புதலை இத்தனை அழகாக இந்தியப் படங்களில் இசைத்திருப்பார்களா எனத் தெரியாது. இளையராஜா செய்தார். படம் நிறையும் போது நம் கலயங்களத்தனையும் இசையும் இசை தவிர்த்த தத்துவார்த்த வெறுமையுமாய் நிரம்பி இருப்பதை உணரமுடியும். சட்டென்று மாறி மழைக்குத் தோதான வானிலையாய்த் தோற்றம் தருகிற சற்றைக்கு முன்பிருந்த அத்தனை வெயிலையும் காணாது அடித்து வெறும் வெம்மையாய்த் தகிகக்ச் செய்தபடி நம்மை அயர்த்துகிற அந்திக்கு முந்தைய மாலைப் போழ்தின் மழைவருகை கணங்களாய் முகம் படத்தின் இசை நமக்குள் பரவுகிறது.
 
 
தமிழ் திரை உலக மேதமைகளின் பட்டியலில் மாத்திரமல்ல. அதன் வரலாற்றிலும் நாஸர் எனும் பெயர் முக்கியமானது.மேற்சொன்ன படங்கள் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் கலையின் மீதான அவருடைய பூச்சொரிதல். வாழ்க நாஸர்.
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

English Summary
Pulan Maykkam

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...