அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 77 - உயிரில் கலந்த உறவே - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  16:50:31 IST


Andhimazhai Image
சிலரது கையெழுத்து முத்துப் போல இருக்கும். என் கையெழுத்து கோழிக்கிறுக்கினாற் போலிருக்கும் எனச் சொன்னால் கோ-ழிகளுக்கு கோ-பம் வரும். அப்படி இருக்கையில் நான் எழுத்தாளனாவேன் என்று யாரேனும் சொல்லி இருந்தால் நான் கெக்கேபிக்கே என்று சிரித்திருக்கக் கூடும். விதியின் திரைக்கதை யாரால் யூகிக்க முடியும்?
 
 
பத்தாவது படிக்கும் போது என் வகுப்பில் வெங்கடேஷ் சர்வதத்தன் ஆகிய இரண்டு பேரும் முதல் ராங்கைப் பகிர்ந்து கொள்வார்கள். நானோ கடைசி ராங்கைப் போட்டியின்றிப் பெற்று மகிழ்வேன். கணிதம் மனிதத்துக்கு எதிரானது என்பதை நிரூபிக்க என் கல்விப்புலமெங்கும் முயன்ற போராளி நான். என்னோடு படித்தவர்களில் ராஜன் என்றொருவன் அவனது கையெழுத்து கணிப்பொறியில் டிசைன் கொடுத்து செய்தாற் போல இருக்கும். அழகாக மட்டும் அல்ல வித்யாசமாக எழுதுவான். அதே நேரம் அதே கையெழுத்தை வேகவேகமாகவும் எழுதக் கூடியவன். எந்த அளவுக்கு பிரபலஸாராக அவன் இருந்தான் என்றால் நாலைந்து ஸார்கள் கூட்டமாக வந்து கிளாஸ் வாசலில் நின்று யாருப்பா இங்கே ராஜன் என்று தேடி அழைத்துச் சென்று இன்ஸ்பெக்சனுக்குத் தேவையான மெடீரியல்ஸ் சிலவற்றை எழுதி வாங்கும் அளவுக்கு அய்யா பிசியாக இருந்தார்.
 
 
அவன் கழுத்து சிறிதாக இருக்கும். அல்லது மண்டை சற்றே பெரியதாக இருக்கும். குட்டியூண்டாக அதே நேரத்தில் சற்று பெரிய முகத்தோடு ஒரு லெவலாக வித்யாசமாக இருப்பான். அவனை எல்லோருக்கும் பிடிக்கும். அவனது கையெழுத்துக்காகவே அவனைப் பிடிக்கும். அவன் என் வாழ்வில் அதன் பிற்பாடு தென்படவே இல்லை என்றாலும் நல்ல கையெழுத்து என்று பேச அல்லது எண்ணத் தொடங்கினாலே அவனுடைய நினைவு ஆட்டமேடிக்காக வரும் அளவுக்கு எழுத்தால் என்னுள் நிரம்பி இருக்கிறான் ராஜன்.
 
 
ராஜனை எனக்கு அதிகதிகம் நினைவு படுத்திய இன்னொருவன் இருக்கிறான். அவன் இயற்பெயர் விஜய்ராஜ் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களில் முதன் முதலில் சொந்தப் பெயரை விடுத்து புனைப்பெயர் வைத்துக் கொண்டவர்களில் முதன்மையானவன் விஜய்ராஜ் தான். அவனது புனைப்பெயர் வித்யாசமாக இருக்கும். ப்ரியமுடன் ப்ரியன் என்று எழுதுவான் அதாவது முதல் வரிசையில் ப்ரியமுடன் என்றெழுதி அடுத்த வரியில் யவுக்கும் முவுக்கும் இடையே ப் என்ற எழுத்தோடு ப்ரியன் என்று எழுதி ஒரு டிசைனாக வரைந்தாற் போல் அதை நிகழ்த்துவான்.
 
 
ப்ரியன் ஒரு இரண்டு கோடு நோட்டு வைத்திருந்தான். இது நிகழ்ந்த காலம் 1992-93 என்று கொள்க. அந்தக் காலம் டைரிகள் காஸ்ட்லி. அதைவிட எங்களைப் போன்ற பதின்பருவர்களுக்கு டைரி கிடைப்பதும் அரிது. விலைக்கு வாங்கலாம் என்றால் குதிரை நிஜமாகவே டைரியின் விலைக்குக் கிடைக்கும். ஆகியபடியால் கிடைத்த நோட்டையே டைரி போல் பாவித்து வைத்துக் கொள்வது பாலர் பழக்கம். அப்படித்தான் ப்ரியன் நல்ல அகலமும் நீள உயரங்களும் கொண்ட நோட்டைத் தன் டைரியாக்கி வைத்திருப்பான்.
 
 
முதலில் ப்ரியன் என்பவன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவது நல்லதல்லவா..?
 
 
ஒரே வரியில் சொல்வதானால் சுரேஷ் என் நண்பன். அவனது டீக்கடைக்கு அடுத்தாற் போல இருந்த ஜெராக்ஸ் கடையின் மேனேஜர் கம் க்ளார்க் கம் ஜெராக்ஸ் பாய் கம் ப்யூன் எல்லாம் கலந்த கலவை தான் ப்ரியன். ஜெராக்ஸ் மிஷினை கையாளுவதை ரசனையோடு செய்வான். முத்துராமன் என்றவருக்கு சொந்தமான அந்தக் கடையில் அவரைப் பார்த்தால் யாரு நீங்க என்ன வேணும் என அடுத்த கடை சுரேஷே கேட்கும் அளவுக்கு எப்போதாவது தான் வருவார். சகலமும் ப்ரியன் தான். வேலை இல்லாத நேரங்களில் தானும் தன் டைரியுமாக வாழ்வான். சரி. இப்போது அந்த டைரி என்கிற வஸ்துவுக்குள் வாஸ்து படி நுழைந்து விடலாம்.
 
 
ப்ரியனின் நோட்டின் முதல் பக்கத்தில் இதயம் தொட்ட இனிய வரிகள் என்று இரண்டு வரியாகப் பிரித்து எழுதி இருப்பான். அந்த நோட்டை அவன் உயிருக்கு அருகாமையிலிருந்தே அணுக விரும்புவான். அதில் அப்படி ஒன்றும் காதல் கவிதைகளோ கதை கட்டுரை இத்யாதிகளோ ரகசிய குறிப்புகளோ சம்பவங்களோ சரித்திர விள்ளல்களோ எதுவுமே இருக்காது என்பது முதல் விசேஷம். அவற்றைத் தாண்டிய வேறொன்றால் தன் நோட்டு முழுவதையும் அலங்கரித்திருப்பான் என்பது நிசமாகவே இந்த அத்தியாயத்தில் ப்ரியனை எழுதுவதற்கான நிசக்காரணம்.
 
 
தன் மனசுக்குப் பிடித்தமான பாடல்களிலிருந்து இரண்டே இரண்டு வரிகளைத் தேர்ந்தெடுத்து அதை மட்டும் அழுத்தமாய்த் தன் ஓவியக் கையெழுத்தால் விதவிதமான கலர் பென்ஸில்கள் பேனாக்களால் அலங்காரமாக எழுதி கீழே டபுள் லைன்ஸ் கொடுத்து அட்டகாசம் செய்திருப்பான் ப்ரியன்.
 
 
இன்றைக்கு யோசித்தால் எப்படி திரைப்படத்தின் நெடிய முழுமையான கதை முழுவதையும் ஒரே வரியில் ஒன்லைன் என்ற பெயரில் சொல்ல முடிகிறதோ சொல்ல முனைகிறார்களோ அங்கனம் அப்படித் தான் ஒவ்வொரு பாடலின் ஆன்மா போன்ற அசைக்க முடியாத பேருரு வாக்கியங்களை மிகச்சரியாகப் பெயர்த்தெடுத்து அவற்றைத் தன் மனசுக்கு நெருக்கமான காகிதச்சுவர்களில் கல்வெட்டுக்களுக்கு நிகரான சொல்வெட்டுக்களால் பதிப்பித்து மகிழ்ந்து வந்திருக்கிறான் என்பது புரிகிறது.
 
 
காதல் என்ற வார்த்தையே தனித்த நறுமணம் கொண்டு பட்டாம்பூச்சியாகப் படபடத்துப் பருந்துகளைப் போலப் பறந்து திரிந்த அந்தக் காலகட்டத்தில் காதலின் பல்வேறு நிலைப்பாடுகளை குறிக்கிற திரைப்பாடல்களின் வைரநிகர் சொல்லடுக்குகளை மாத்திரம் தனியே எடுத்துத் தொகுத்து வைத்தது சிறப்பான ஒரு தனித்துவம் தானே..?
 
 
அந்த டூ லைனர் நோட்டை அவன் எல்லாருக்கும் தந்துவிட மாட்டான். வீட்டுக்குள் யார் வரலாம் வரக்கூடாது என்று நாலும் சிந்தித்து நல்லோரை மாத்திரம் அனுமதிக்கிற சமூக ஒழுங்கைப் போலத் தான் தனித்த அற அகழிகளைத் தாண்டித் தன் மனசுக்கு நெருக்கமான ப்ரியமுடன் ப்ரியன் நோட்டுக்குள் படர்கிற கண்கள் எவ்வெவை என்பதையும் அவனே தீர்மானித்தான். எத்தனையோ கெஞ்சினாலும் தவசிக்கோ ப்ரகாஷூக்கோ அதை காட்ட மாட்டான். என்னவோ என்னை அவனுக்குப் பிடித்தது. அதனால் அடிக்கடி உரிமையாக நானாய் எடுத்து புரட்டுவேன். புதிய வரவுகள் எதாவது நிகழ்ந்தால் என் வருகைக்காகக் காத்திருந்து நண்பா இங்க வாங்க என அழைத்து காட்டுவான். நன்றாக அறிந்த பலதடவை கேட்டுப் பழக்கமான வரிகள் தான் என்றாலும் அங்கே அவனது ப்ரசண்டேஷனில் அந்த வரிகள் மின்னத் தான் செய்யும். அதை படித்துவிட்டு அவன் முகத்தை ஒரு தடவை பிரமிப்பாய் பார்ப்பேன். அது ஒரு பாவனை தான். அவன் என்னவோ அவனே புலமைப்பித்தவைரமுத்துலிங்கவாலிகண்ணதாசபழனிபாரதியாகவே மாறி புன்முறுவல் ஒன்றை உதிர்ப்பான். அறிந்தே உடன்படுகையில் அறியாமையின் இன்னொரு பெயர் அன்பு என்றாகிறது.
 
 
ப்ரியனின் நோட்டு முழுவதுமே எனக்கு ஒருகாலத்தில் மனப்பாடம் ஆகி இருந்தது. காலப்போக்கில் அதன் உருவமும் உள்ளடக்கமும் நினைவிலாடுகிற அளவுக்கு அந்தப் பாடல்வரிகளும் அவற்றுக்கிணையான அவனது பின் ஊட்டங்களும் முழுவதுமாக மனனத்தில் இல்லை. சற்றே கலங்கிய சித்திரமாகத் தான் ஞாபகத்தில் எஞ்சுகிறது. ப்ரியன் ஒரு வகையில் பின் காலத்தில் வரப்போகிற ட்விட்டர் ஃபேஸ்புக் இவற்றில் ஸ்டேடஸ்கள் இட்டு அவற்றுக்கான பின் ஊட்டங்களை இட்டு மகிழக் கூடிய இன்னொரு தலைமுறையைத் தன்னாலான அளவில் யூகித்துத் தான் அந்த நோட்டைத் தயாரித்தான் போலும் என அவ்வப்போது எனக்குள் எண்ணியதுண்டு. வியப்பு என்னவென்றால் அந்த இரண்டு வரிகளை பாடலிலிருந்து அகழ்ந்து தேர்வெடுத்துத் தன் நோட்டில் அத்தனை அழகான தன் கையெழுத்தில் வண்ணங்களால் நிரப்பிவிட்டு பக்கத்திலேயே சாதாரண நீல ரீஃபில் எழுத்துகளால் ரத்தினச் சுருக்கமாக ஒரு அல்லது ஒன்றரை வரிகளைச் சேர்த்தெழுதி இருப்பான். அந்த வரிகள்தான் கோன் ஐஸ் மீது இருக்கும் செர்ரி பழம் போல் அதிகதிகம் ஈர்த்தினிக்கும்.
 
 
 
               மந்தையில நின்னாலும் நீ 
               வீரபாண்டித் தேரு
 
               (அவன் அருமை அவளறிவது அருமை)
 
               இனிவரும் முனிவரும்
               தடுமாறும் கனிமரம்
 
               (கண்கனி ரெண்டும் மின்மினி)
  
               பாவையின் மேனி அற்புதம்
               பூக்களால் செய்த புத்தகம்
 
               (சூடத்தானே மாலை)
 
               உனையாள்வதே பெரும்பாடம்மா 
               ஊராள்வதே எனக்கேனம்மா
               
               (பின்னால் இது மாறுமோ)
 
               நானே எனக்கு நண்பன் இல்லையே 
               உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
               (பண்படு.காதல் பண்பாடு)
               
               வீழ்வதை நான் நியாயம் என்பேன்
              (அட இது அநியாயம்) 
 
                ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
                (என்னவள் என்னை என்னவென்பாள்)
 
                 தூரம் நின்று நானும் பார்த்தேன்
                 என்னை நானே காவல் காத்தேன்
                (களவாணிக்குக் காவல்வேலை)
 
            நூறு சந்தங்கள் நான் கூறும் போது
            அர்த்தம் தோன்றாமல் அலைபாயும் மாது
             (என்னைக் கவியாக்கு கண்ணே)
                   
              வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
              வாடைக்குச் சுகமாக வருகின்றதோ
              (சூடாமலே சூட ஒரு பூ நீயோ)
 
 
இதை என்ன செய்யப் போறீங்க நண்பா எனக் கேட்ட போது வெட்கத்தோடு என்னிடம் ப்ரியன் சொன்னது தான் ஹைலைட்.. என் மிஸஸ் வருவாங்கள்ல.. அவங்க கிட்ட காட்டுவேன். எத்தினியோ நாளா யாருன்னே தெரியாம என் வருங்கால மனைவிக்காக நான் ஒவ்வொரு பாட்டா யோசிச்சி இந்த டைரியை உருவாக்குனேன்னு சொல்லி அவங்களுக்கு என்னோட கிஃப்டா இதைத் தருவேன். அவங்க வர்றதுக்கு மின்னாடியே நான் எழுத ஆரம்பிச்ச என்னோட லவ் லெட்டர் தானே பாஸ் இந்த டைரி..?
 
 
கை குலுக்கி ப்ரியனை வாழ்த்தினேன். அதன் பின்னரும் இன்று வரைக்கும் என்னைக் கடக்கிற ஒவ்வொரு பாடலில் இருந்தும் அப்படியான இரண்டு வரிகளை நானும் தனியே சோதித்தறிகிற ப்ராஸஸை இன்றைக்கு வரை கைவிடாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். பாடல் என்பது ஒரு பித்து. அதனுள் ஆயிரமாயிரம் உப பித்துக்களும் சுகசவுக்கியமாய் உறைவதும் நிகழ்கிறது. இது நல்லது.
 
 
நான் நெடு நாட்களுக்கு எனக்குள் அதிரச் செய்து கொண்டே இருக்கிற இரண்டு இப்படியான ப்ரிய வரிகள் என்ன தெரியுமா..? 
   
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே பாடலில் வருகிற அடுத்த வரிகள்தான்
 
 இரவும் பகலும் உரசிக் கொள்ளும் 
 அந்திப் பொழுதில் வந்துவிடு
 
 
இன்னொரு பாடல் நெஞ்சமெல்லாம் காதல்  பாடலில் 
 
    பெண்கள் மேலே மையல் உண்டு 
    நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
 
 
இன்றைக்கும் நான் யாரயெல்லாம் நெருக்கமான நண்பர்கள் என உணர்கிறேனோ என்னை யாருக்கெல்லாம் இணக்கமானவனாக உணர்த்துகிறேனோ அவர்களுடன் சம்பாஷிக்கிற முதல் சில உரையாடல்களுக்குள்ளாக அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன எனக் கேட்கவிழைகிறேன். இன்னும் சொல்வதானால் எந்தப் பாடல் உங்களைக் கதறி அழ வைக்கும் எந்தப் பாடல் உங்களை கரைந்து போக வைக்கும் என்றெல்லாம் கேட்கிறேன். உண்மையாக சொல்லப் போனால் இவை வெறும் கேள்விகள் அல்ல. இவை மெல்ல மெல்ல இரண்டு பேர்களை இணக்கமாக்கும் நெருக்கமாக்கும் அன்னியத்தை உடைத்துத் தூளாக்குகிற அத்யந்தத்தின் உளிகள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. வெறும் பாடல்கள் என்று எந்தப் பாடலையும் புறந்தள்ளி விட முடியாது. பாடல்கள் ஆயிரம் காலத்துப் பயிர்கள் என்பதில் எள்ளின் உள்ளளவும் சந்தேகம் இல்லை.
 
 
ப்ரியன் என்பவனை நினைக்கையிலெல்லாம்   ஒவ்வொரு பாடலுக்கும் தனக்கும் இடையே ஒரு உன்னதமான தொடர்பை எத்தனை அழகாக எளிதாக அந்தப் பதின்ம வயதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை. பாடல்கள் வெறும் பாடல்கள் அல்லவே அவை ஒவ்வொரு காலத்தைப் பற்றிய வாழ்வானுபவங்களாய் அடுத்த காலத்தின் மேலெழுதப்படுகிற ஆன்ம சித்திரங்கள். இப்படியான பாடல்களை எழுதிய கவிகளுக்கே கூட இந்தக் கூடுதல் வரிகளை எழுதிய ப்ரியன் வித்யாசமான அனுபவமாகத் தான் தோன்றுவான். என் வழியாக ஒரு ப்ரியனை நம்மால் இப்போது அறிய முடிகிறது. இன்னும் அவரவர் ஞாபகவனங்களுக்குள் அலைந்து கொண்டிருக்கிற எத்தனை ப்ரியன்களின் தோரணமாலை இந்த வாழ்தல் என்பது? இசை எனும் ஒரு சொல் லட்சோப லட்சம் ஆன்மாக்களைக் கழுவ வல்லது. 
 
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...