???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன்மயக்கம் - 55 - தனித்தொலிக்கும் நல்லிசை- யுவன் ஷங்கர் ராஜா - 2 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  05:18:48 IST


Andhimazhai Image
"அரூபத்தை இசைத்த(யு)வன்"
 
 
மௌனம் பேசியதே எனும் தனது முதல்படத்திலிருந்து வெளிப்பட்டு ராம் எனும் தனது இரண்டாவது படத்தை முற்றிலும் வேறு ஒரு படமாக்கித் தர முயன்றார் அமீர். குறிப்பாக அதன் பின்னணி இசை மற்றும் பாடலிசை பற்றியதாக இந்த உரையாடலைத் தனிக்கச் செய்வோம். ஒரு பொது ராகத்தின் சஞ்சாரத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு தருணங்களின் பாடல்களாக மலர்த்துவதைப் பேர் பெற்ற இசை மேதைகள் அவ்வப்போது முயன்றது தான். இது ஒரு உள் வகைமை என்ற அளவில் இப்படியான பாடல்களைத் தனித்துத் தொகுத்தால் வீர்யமிக்க இசைமாலையாக அது மலரும் அல்லவா? 
 
 
ராம் படத்தின் பின்னணி இசையிலும் பாடல்கள் இசையிலும் ஒரு முக்கியமான தாளக்கோர்வையை படத்தின் ஜீவ இசையாகப் படைத்தார் யுவன். அதன் இருவேறு கிளைத்தல்களில் நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்ற பாடலும் ஆராரிராரோ பாடலும் அமைந்தன.
 
 
செல்வராகவன் படங்களுக்கு அப்பால் அமானுஷ்யத்தின் குமிழிகளை ஆங்காங்கே சிறுமலர்களாக மலர்த்துகிற பாடல்களை இந்தப் படத்தில் முழுமையாக உருவாக்கினார் யுவன். இயலாமையின் கேவலாக நிழலினை நிஜமும் பாடல் அமைந்தது. அதன் இடைச்செருகல் உடனொலியாக யுவனின் உற்சாகமான குரல் முரண் இசைப்பாடலாக இதனை முன் வைத்தது. யுவனின் மிக முக்கியமான பாடல்களில் நிழலினை நிஜமும் பாடல் ஒன்று.இரண்டாவது சரணம் தொடங்கும் முன்பே ஒரு முறை பாடல் முடிவடைகிறது.மறுபடி ஆண் குரலும் பெண்குரலும் குழைந்தபடி இரண்டாவது சரணத்தை வெளிப்படுத்தித் தொடர்கிறது. மேல் கீழ் மேல் கீழ் என்ற வழமையைக் கலைத்துப் போடுவதன் அபாயத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலையின்றி இந்தப் பாடலை மாத்திரமல்ல,இந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் செய்திருக்கிறார் யுவன்.
 
   விடிகின்ற பொழுது தெரிந்திடுமா 
   கடலலை கரையைக் கடந்திடுமா 
   காதலின் உலகம் அறிந்திடுமா 
   நினைப்பது எல்லாம் நடந்திடுமா
 
 
 
இந்தப் பாடல் முடிவடையும் இடத்திலிருந்தே விடிகின்ற பொழுது பாடல் துவங்குவது மாய ஆச்சர்யம். யுவன் இசை வல்லமை. ஸ்ரீமதுமிதாவின் முன்னரறியாக் குரல் சிதறுதடா சொல்லுதடா என்ற வார்த்தைகளை மதுமிதாவின் குரலில் கேட்டவர்கள் உடைந்தார்கள். விஷயம் உளியின் துளைத்தலைத் தாங்க வல்ல மனது மயிலிறகின் வருடலில் தூளாகும் அன்பெனும் மாயை பற்றியது. இது இசையால் நிகழ்வது இன்னும் இனிப்பு. மதுமிதா பாடிய விடிகின்ற பாடலின் சரணங்களுக்கு முன் பிந்தைய இணைப்பிசையாக உற்சாகமாக ஒரு உடனொலியை எப்படிப் பார்த்தாலும் அயர்ந்து விடுகிற குரலாய் மலரச் செய்திருப்பார் யுவன். ஒரு கூட்டுப்பிரார்த்தனை போல இந்தப் படத்தின் பின் இசையை உருவாக்கினார் யுவன்.மிகப் பலமான அதே நேரத்தில் அருகாமையும் தூரமும் இணைகிற தொலைவை இசைப்படுத்தியதைப் போன்ற முன்னர் அறியாத இசைக் கோர்வையாகவே இதன் பின் இசை மலர்ந்தது. ஒரு துளி பதமாக இதன் இசைக்கோர்வைகளைக் கேட்டால் என் கூற்றின் நிசம் அறியலாம்.
 
 
 
ஆராரிராரோ பாடல் கே.ஜே ஏசுதாஸின் குரல் அற்புதம். இந்தப் பாடலின் டெம்போவில் இருக்கிறது விஷயமே.முழுவதுமான ஒரு சோகப்பாடலாக வந்திருக்க வேண்டியது. இதன் டெம்போவை வழமையிலிருந்து அதிகரித்ததன் மூலமாக இதன் ஓட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பார் யுவன். சோகப் பாடல்களைப் பொறுத்தமட்டில் எத்தனைக்கெத்தனை மென்மையாக ஒலிக்கிறதோ அத்தனை சோகமாய்த் தனிக்கும். விரைவான பின்னணி இசையும் ஒரே தாளக்கட்டின் தொடர்ச்சியான மீவருகைகளும் ஏசுதாஸின் துல்லியமான குரலும் எல்லாமும் சேர்ந்து ஒரு அரூபத்தை குரல்வழி இசைவழி உருவாக்கிவிடுவதற்கான முயல்வாகவே இந்தப் பாடலை மாற்றியிருக்கும். இதன் இன்னுமோர் ஆச்சர்யம் ஒரு ஞாபகத்தின் இரண்டு அறைகளாக இதன் பின்னணி இசையின் பிரயோகமும் பாடிய குரலும்வரிகளும் ஸ்டோர் ஆவது தான். எதாவதொன்று மாத்திரமே பெருவாரிப் பாடல்களின் ஞாபகமாய் நம்முள் தனிக்கிறது பாடல்களின் சேகர இயல்பு.இந்தப் பாடலின் அபூர்வம் இசையும் மறக்காது குரலும் மறவாது வரிகளும் அப்படித் தான்.தானாய் ஒலித்தால் தான் உண்டு.தேடிப் போகாத பாடல்களின் இதுவும் ஒன்று. 
                     
 
எக்காளத்தின் பாடல்களுக்கென்று ஒரு இசைமாலை கோர்த்தால் பருத்திவீரன் படத்தின் 2 பாடல்களுக்கு அவற்றில் இடமுண்டு. ஊரோரம் புளியமரம் மற்றும் டங்கா டுங்கா டவுட்டுக்காரி. யுவனின் ஆல்பங்களில் பருத்திவீரன் ஒரு சந்தேகமற்ற சூப்பர்ஹிட். படம் பெரும் ஹிட் என்பது அப்புறம். முதல் ஆச்சர்யம் அதன் இசையில் தொடங்குகிறதல்லவா..? சரிகம பதனி சொல்லித்தரேன் ஒரு வாட்டி பாடலின் சகல துளிகளிலும் பொங்கிச் சிதறுகிற உற்சாகம் ஸ்ரீமதுமிதாவின் அட்டகாசம். இந்தப் பாடலில் எங்காவது பாடறியேன் படிப்பறியேன் பாடல் நினைவுக்கு வந்தால் நீங்களும் என் வகையறா. மிக ஆழத்தில் எங்கேயோ தோன்றும் ஒற்றுமையே ஒரு அபூர்வம்.அதனை அறியவிடாமல் கலைத்துப் போடுகிற உப பரவசங்களாக உடனொலிக்கும் அமீர் மற்றும் மதுரை எஸ்.சரோஜா ஆகியோரது குரல்களைச் சொல்லலாம்.யுவனின் முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று,சண்டாளி ஓன் பாசத்தால பாடலின் மாணிக்கவினாயகம் யுவன் ஷங்கர் ஆகியோரது குரல்களின் உடனொலித்தல்களுக்கு அப்பால் ஷ்ரேயா கோஷலுடன் இந்தப் பாடலை பாடினார் கிருஷ்ணராஜ். வெகு காலத்துக்கு அப்பால் மீண்டும் பாடிய அவரது இந்தப் பாடலும் சூப்பர்ஹிட் தான். ஒரு அலட்சியத்தை மைய இழையாகக் கொண்டு குன்றாத உற்சாகமொன்றை நோக்கிப் பயணிக்கும் இந்தப் பாடல் சிறுவர்களின் டயர்வண்டிப் பிரயாணம் போன்ற அந்தரங்கமான ஒரு உற்சாகத்தை இசைப்படுத்திற்று.
 
 
 
ராஜாவோட ஒரு படம் பண்ணனும். ராஜாவோட வாய்ஸ்ல ஒரு ஓபனிங் சாங் வைக்கணும். ராஜா வாய்ஸ்ல க்ளைமாக்ஸ்ல ஒரு சோகத் துணுக்குப் பாடலோட படத்தை முடிக்கணும். இதெல்லாம் என் சொற்களல்ல. இன்றைக்குப் படம் பண்ணுவதற்காக முந்தா நேற்றுக் கிளம்பி நேற்றுச் சென்னை கண்டார் பலருக்குள்ளும் உடனே மையங்கொள்ளும் ஒரு ஆசைப்புயலின் வெவ்வேறு சீற்றங்கள் தான் இவை.
 
 
அது சரி அய்யா எல்லாருக்கும் கிடைக்குமா ராஜவுபசாரம்? அமீருக்கும் பாலாவுக்கும் கிடைத்தது தமிழ்த் திரை இசையின் வரலாறு. யுவன் இசை அமைத்த படங்களில் சில பாடல்களைப் பாடி இருக்கிறார் ராஜா.அவற்றில் அறியாத வயசு புரியாத மனசு பாடல் ஒரு தியானத்தின் பரவசத்தை அமைதியான ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறவன் தன்னை மீறிப் பழைய நிகழ்வொன்றின் ஞாபகத் தோற்றத்தில் பொங்கிச் சிரித்துப் பின் சூழலறிந்து அமைதி கொள்வானே அதைப் போன்றதொரு அந்தகார ஆனந்தத்தைப் பாடலாக்கி இருப்பார். இன்னும் சொல்வதற்கு ஒன்று. ஒரு தினத்தின் முதல் பாடலாக இதனைக் கேட்டுவிட்டு அடுத்து எத்தனை கேட்டாலும் சரி எதையும் கேளாமற் தனித்தாலும் சரி இந்தப் பாடல் தான் மனதில் நாள் முழுக்க ஒலித்துக்கொண்டே உடன்வரும்.
 
 
பாபநாசம் சிவன் உருவாக்கத்தில் அசோக்குமார் படத்துக்காக எம்.கே.டி. பாகவதர் பாடிய பூமியில் மானிட ஜென்மம் பாடல் காலத்தால் அழியாத ஒரு காவியம். அதனைக் கொண்டுவந்து தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாடலாக இணையுரு செய்தார் யுவன். அதிர வைக்கும் இசைக்கோர்வைகள் இதன் முதற்பலம் அனுஷ்கா மன்சாந்த்தாவின் முன்னர் வழங்காத புத்தம்புதுக் குரல் தேன் டாங்கர்களைத் தெருவில் கொட்டினாற் போல் ஆனது. ஒரு மீபழையப் பாடலை இப்படியும் மீவுரு செய்ய முடியும் என்பதன் பாதகங்கள் அனைத்தையும்  அனாயாசமாகக் கையாண்டு தன் மௌனத்தை மாபெரிய வாள்முனையைப் போலாக்கி இசைத்திருப்பார் யுவன். இந்தப் பாடலை பாடிய ஆண் குரல் ப்ரேம்ஜி அமரன். தமிழ் நிலத்தின் ஆகச்சிறந்த குரல்களில் ப்ரேம்ஜியின் குரலும் ஒன்று என்பது என் தாழ்மையான நம்பகம். அதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இன்னமும் செகண்ட் லேனின் பாடல்களை மாத்திரமே பாடாமல் முழுமையான மெலடி ஒன்றை ப்ரேம்ஜி பாடினார் என்றால் அவரது குரலின் முழு வித்தைகளையும் உணர முடியும்.
    
 
கண்ணை விட்டுக் கண் இமைகள் பாடல் துவக்கத்தை கவனியுங்கள் அத்தனை தன்னந்தனி பேருருவாய்ப் பெருகித் தொடங்குவதை உணரலாம். இதன் இணைப்பிசையில் ஒரு சின்ன இழை ஸ்ட்ரிங் இசை வரும். லவ் யூ யுவன் என்று மனசின் ஆழத்திலிருந்து கத்தலாம் போல இருக்கும். இதனைப் பாடிய உபகுரல் ப்ரேம்ஜி.யுவனின் போதுமான குரலுக்கு மேலதிகமாய் உறுத்தாமல் ப்ரேம்ஜியின் குரல் ஒலிக்கிறதைக் கண்ணுறலாம். ஏதேதோ எண்ணங்கள் வந்து எனும் பாடலை ஷ்வேதாமோஹனுடன் சேர்ந்து வழங்கினார் யுவன் அது ஒரு முழுமையான சினி ஸ்கோராக மலர்ந்தது. இதே பட்டியல் படத்தில் நம்ம காட்டுல மழை பெய்யுது பாடலை ரோஷ்ணியுடன் இணைந்து வழங்கினார் இளையராஜா.
 
 
தாஸ் என்றொரு படம் வந்தது. என் அபிமானத்துக்குரிய ஒயின் குரல் கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மற்றும் சாதனா சர்கம் இருவரும் இணைந்து பாடிய சக்கப் போடு போட்டானே சவுக்குக் கண்ணால எனும் பாடலைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒரு அந்தரங்கமான முத்தத்தைப் பற்றி வெளிச்சொல்வதற்குரிய வார்த்தைகள் வெகு சில என்றாற் போல் இந்தப் பாடல். இந்தப் பாடலின் முழு இசையுமே லேசான கிறக்கத்துடன் அமைத்திருப்பார் யுவன். யூகிக்க முடியாத துணுக்கொன்றின் இறுதி வரி அயர்த்தல் போலவே இதன் சரணங்களின் ஆரம்ப இசை கலந்து தனிக்கிற இடம் அமைந்திருக்கும். மெல்லிய ஆழத்தில் கால் நனைத்துத் திரும்ப மேலெழுந்து ஆடும் சிறுபிள்ளைகளின் நனைந்தும் நனையாத கால்களைப் போல மனம் பரவசத்தின் வரைபடமற்ற துள்ளலில் ஆழும்.
     
 
     
பெலா ஷெண்டே ஒரு அபூர்வி. அப்படி ஒரு குரல் நிகழ்ந்ததில்லை எனும் அளவுக்கு அப்படி ஒரு குரல் ஐஸ்க்ரீமும் பப்பு புவ்வாவும் கலந்தாற் போன்ற ஒரு குரல். வழிபடுவதற்கான வார்த்தைகள் அத்தனைக்கும் மேலான பிரார்த்தனையாக மலரவல்ல குரல்.தமிழில் ஏழெட்டுப் பாடல்களைப் பாடி இருக்கிறார். இளையராஜாவின் நீ தானே எந்தன் பொன்வசந்தம் ஏ.ஆர்.ரஹ்மானின் காவியத் தலைவன் ஆகியபடங்கள் அவற்றின் தெலுகு உருவாக்கங்கள் யுவனின் பதினாறு உள்ளிட்ட படங்களில் பாடி இருக்கிற பெலா ஷெண்டேவுக்கு இன்னும் ஒரு நச்சென்ற அதிரிபுதிரி அமையவில்லை.அமையும். அப்புறம் பாருங்கள் அடுத்த காலத்தின் குரல் அவர் தான் என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.
 
 
பெலாவின் இரண்டு பாடல்கள் என் உறக்கங்களை ஷிஃப்ட் போட்டுக் கெடுத்தன. இன்று நேற்றல்ல.பத்தாண்டுகளுக்கு முன்பு. இந்த இரண்டு பாடல்களுமே யுவன் இசைத்தது. ஒன்றில் அவரோடு பாடியவர் இசைஞானி இளையராஜா. சிலம்பாட்டம் என்கிற சைன்ஸ் ஃபிக்சன் படத்தில் (மூத்த சிலம்பரசனும் பிரபுவும் ஃப்ரெண்டுஸ் ஆக நடித்தார்களே அதே படம்) அதில் ஒரு பாடல் வரும் மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்...எனும் பாடல் கொன்னுப்புட்டே கொன்னுப்புட்டே என்று பாடுவார் பெலா. நானும் பதிலுக்கு அவரைப் பார்த்துப் பாடுவேன் நீ தான் அம்மணி கொன்னுப்புட்டே என்று. இந்தப் பாடலின் சரண இணைப்பிசை ஒரு சக்கரைக்கட்டி. இரண்டாவது சரணத்தில் கொண்டு போய்ச்சேரும் லீட் அற்புதத்தின் உச்சியில் ஆடிவரும் தேன்.
 
 
அடுத்த பெலா பாடல் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் சின்னஞ்சிறுசுக மனசுக்குள் 
இதன் ஆரம்பத்திலேயே விஸ்கி பிராந்திகளை காற்றில் படர்த்தி இருப்பார் யுவன். இதனைப் பெலா ஷிண்டேவுடன் பாடியவர் ஜாவேத் அலி. அவரைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். ரொம்ப முக்கியமான முக்கியஸ்தர். விக்கிபீடியாவில் முக்கிப் பார்த்தால் அறியமுடியும்.ரஹ்மானின் அனேக இந்திப் படங்களில் பாடிவரும்தேன் ஜாவேத்.
 
 
இப்போது இந்தப் பாடலுக்குள் செல்லலாம்..நிலா அது வானத்து மேலே பாடலின் எள்ளல் பின்னிசையின் மைய இழையை இந்தப் பாடலில் மிக லேசான மென்மை குழைவுடன் மீவுரு செய்திருப்பார் யுவன். இந்த மொத்தப் பாடலையுமே கடற்புர உப்புத் தன்மையைக் கரைத்து பிசைந்தாற் போல் உருவாக்கினார் யுவன். முழுவதுமாக லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனில் உருவாக்கப் பட்ட பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. இந்த ஒரு பாடல் காலந்தாண்டி நிரந்தர ஹிட் ஆயிற்று. வேல்முருகன் பாடிய நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா உங்கழுத்தில் என் தாலி என்ற பாடல் யுவனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. வேல்முருகனின் குரல் உச்சத்துக்கும் நீச்சத்துக்கும் அனாயாசமாக சென்று திரும்பக் கூடியது. இந்தப் பாடலே இரட்டைத் தன்மை கொண்ட பாடல்தான். இதனை இவன் கண் விடல் என்றாற் போல வேல்முருகனைக் கண்டறிந்து பாட செய்திருப்பார் யுவன். மொஹமத் அஸ்லம், ராஹூல் நம்பியார், தன்விஷா, ப்ரியா நால்வரின் குரலில் முத்திரை படத்தில் ஜூலைமாதத்தில் பாடல் கேட்க இனிக்கும் இன்னொரு ஸ்கோர்.
 
 
மதுரையின் சின்னஞ்சிறு தியேட்டர் சக்தி. என் பதின் பருவத்தின் பற்பல படங்களை அங்கே தான் ரசித்தேன். 2010இல் பாணா காத்தாடி என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதனை யதார்த்தமாக அந்தவழி செல்லும் போது போஸ்டர் பார்த்துவிட்டு இரவுக்காட்சி சென்றேன். பொதுவாக இரவுக்காட்சிகள் செல்வதில்லை என்பதால் தனியே சொல்லத் தோன்றுகிறது. எனக்குப் பிடித்த நடிகைகள் பட்டியல் சற்று வினோதமானது.குஷ்பூவை மெத்தப் பிடிக்கும் என்கிற அதே நேரம் கவுதமியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எல்லாரையுமே பிடிக்கும் என்பதல்ல இதற்கு அர்த்தம் அரிதான அதே நேரம் காரணங்களற்ற காரணங்களுடனான பட்டியல் அது. நெடு நாட்களாக புதிய வருகைகள் ஏதுமின்றி இருந்த அந்தப் பட்டியலில் முதல் ஷாட்டின் முதல் ஃப்ரேமில் பார்த்த மாத்திரத்தில் இதயம் நெஞ்சு மனசு எட்செட்ராக்கள் அத்தனையையும் இந்தா பிடிச்சிக்கோ என்று பையில் போட்டுக் கொடுத்துவிட்டே தான் அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.சமந்தா.
 
 
 
எனக்குச் சொந்தமான இரண்டு தேசங்கள் இருந்தால் இரண்டையும் சமந்தாவுக்குத் தந்துவிட்டு ஒன்றை மறுபடி பெற்றுக் கொள்வேன். சமந்தா அபிநயித்த சாதனா சர்கம் குரல்தந்த என் நெஞ்சில் ஒரு பூப்பூத்தது பாடல் ஒரு இசைக்கவிதை. இதனை இன்று வரைக்கும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. என் வாழ்வின் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலுக்கு நிச்சயமாக இடம் உண்டு. இந்த இடத்தில் இளையராஜாவின் இன்னுமோர் பாடலை சொல்ல விழைகிறேன். இவற்றுக்கிடையே இசையில் தொனியில் தென்படும் நேரடித் தொடர்புகளை விட சொல்வசம் சாத்தியப்படாத. ஒத்த உணர்தல்களை நிகழ்த்தித் தருகிற அடுத்தடுத்த பாடல்கள் இவை. ஸ்வர்ணலதாவின் சாகாவரக் குரலில் இந்தப் பாடலை என்றென்றும் மறக்க முடியாது, பெரியமருது படத்தின் வெடலப்புள்ள நேசத்துக்கு 
 
 
என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்தப் பேர் என்னவெனக் கேட்டேன்...கேளுங்களேன்.ஆனந்தத்தில் கண்கலங்கிக் கரைவது மானுடத்தின் தனித்த இயல்புகளில் ஒன்று. இந்தப் பாடல்கள் இரண்டுமே அப்படியான கரைதலை நிகழ்த்துபவை.
 
 
இன்னும் ஒரே ஒரு பாடலுடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யலாம். யுவனின் இசை குறித்த மயங்குதல் இன்னும் தொடரும். அந்த ஒரே ஒரு பாடல் கண்ட நாள் முதல் படத்தில் இடம்பெற்ற பனித்துளி பனித்துளி பனித்துளி பாடல். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே தனித்து இனித்து இதயம் கசக்குபவை. ப்ரியா எனும் இயக்குனரின் படமான இதில் டைடில் சாங்கான கண்ட நாள் முதலாய் பாடலும் எப்போதும் கேட்க இனிக்கிற பாடல்தான். என்றாலும் பனித்துளி ஒரு அட்டகாசம். அத்தனை உற்சாகத்தையும் ஒரே பாடலில் கொண்டு வருவதெல்லாம் சாதனை. இளையராஜாவின் மகன் என்ற கூற்றைத் தாண்டி யுவனின் இந்தப் பாடலின் பல்லவி முடிந்து சரண ஆரம்பத்தை சொல்ல வேண்டி வருகிறது. மிக மெல்லிய இசையை பலமான ஒலித்தலால் படர்த்துவதன் இடரைத் தெரிந்தே ஏற்றிருப்பார் யுவன். ஒரு ரகசியம் சொல்லட்டுமா.? இந்தப் பாடலின் பல்லவி முடிந்து சரணத்துக்குள் நுழைகிற இடத்தில் அனேகமாக பாடல் ஆரம்பித்த ஒன்னரை நிமிஷம் எனலாம். அங்கே  உடனொலிகள் உச்சாடனம் செய்கிற தொகையறா ஒன்று வரும். பாடலை ஆரம்பித்து வைக்கிற அதே தொகையறா மறுபடி பாடலின் பல்லவி முடிந்ததும் இரட்டிக்கும். அந்த இடம்தான் யுவனின் மாயப்பொழிதல் தொடங்கும்.
 
கருகரு கருகரு கண்ணு பட்டு
வாடிவிடும் வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு
மாமியாரு கேக்குமுன்னே 
அர டஸன் பெத்துக் குடுங்க
தகதக தகதக தங்கச்சில
தவிக்குது வெக்கத்துல
போதும் அத விட்டுவிடுங்க!
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்குன்னு
தேவைப்படும் தாலாட்டுன்னு
ஒண்ணு ரெண்டு கத்துக்குடுங்க
 
 
தாமரையின் பொற்சொற்களால் இந்தப் பாடல் வரிகள் மிளிரும். சொல்ல வந்தது அதற்குப் பின்னால் ஒரு சின்ன இசைத்துளி வரும். சென்று அதனை இன்புற்று வருமாறு உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறேன். யுவன் இசையின் மந்திர உச்சம் இந்தப் பாடலின் அந்த ஒரு துகள் இசை. எத்தனை முறை கேட்டாலும் இசைஞானியின் வார்ப்பு என்பதற்கு மேலாய் யுவனின் தனித்துவம் அவரது எப்போதும் பசியடங்காத் தேடலும் அரூபத்தை இசைக்கிற துடிப்பும் என்று மொழியத் தக்க சாட்சியமாக இந்தப் பாடலும் அதனுள் இந்த இசையும் பெருகுகின்றது.
       
 
மீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டி இருக்கிறது. பாடல்களின் அரசனாவதற்கு பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. இந்தப் பாடலையும் தன் தனித்த குரலால் பாடி ஒரு ஆசீர்வாதத்தைப் பெருமழையாக்கி இருப்பார் கேகே. அவருடன் ஷ்ரேயா கோஷல் மற்றும் தன்விஷா இருவரும் பாடிய பாடல் பனித்துளி பனித்துளி. யுவனின் தனித்தொலிக்கும் நல்லிசை தொடர்ந்து பெருகும் இசைநதி.
 
 
இன்னும் பார்க்கலாம்..
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்).
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...