???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன்மயக்கம் 94- இளையராஜாவும் புரூஸ்லீயும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   31 , 2018  09:27:14 ISTஅடி பாட்டு அடி பாட்டு என்று தன்னையே நெய்யாக்கி உயிர் தீபம் ஏற்றுவான் ஸ்டீபன். அவனது உலகத்தில் அடிப் பாட்டுகள் மட்டும் தான். அதாவது மெலடி தொடங்கி கர்நாடக சங்கீதம் வரைக்குமான எல்லா சிச்சுவேஷன்களையும் ஏன் அடிப்பாட்டு கொண்டே ஃபில் அப் செய்து விட்டால் ஆகாதா என்று தன் சாந்த முகத்தோடு வினவுவான். பீட் ஸாங்க்ஸ் என்கிற அடிப்பாடல்கள் உற்சாக ஊற்றுகள். மனதின் சந்தோஷ முடுக்குகளை இயங்கச் செய்து அவற்றோடு தாங்களுமாய் சேர்ந்தொலிக்கிற இப்படியான பாடல்களை மாத்திரம் ரசிப்பது ஒரு வகை ரசனை முறை.சர்வ தேசங்களிலும் இப்படியானவர்கள் இருக்கிறார்கள்.கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதற்கிணங்க அடிப்பாடல்கள் மாத்திரம் கனிகள்.மற்றவை யாவும் கவர்வதற்காகாத காய்கள்.

 ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடலாகட்டும் ராக்கம்மா கையத் தட்டு பாட்டாகட்டும் ஆட்டமா தேரோட்டமா பாடலாகட்டும் சொர்க்கம் மதுவிலே பாட்டாகட்டும் ரம்பம்பம் ஆரம்பம் பாட்டாகட்டும் ராஜாதி ராஜனிந்த ராஜாவாகட்டும் மாமா உன் பொண்ணைக் குடு ஆகட்டும் மடை திறந்து தாவும் நதியலைதான் பாட்டென்றாகட்டும் இளையராஜாவின் தனி சாம்ராஜ்யம் இப்படியான பாடல்கள். ஒவ்வொரு வருடத்தின் ஹிட் பாடலை கிட்டத் தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தன் பிடியில் வைத்திருந்த ராஜா மெலடிகளுக்கு சமமாக அடிப்பாடல்களிலும் பின்னி எடுத்தார்.

 உற்சாகத் துள்ளல் என்பது ஏற்படுத்துவதல்ல. ஏற்படுவது. அப்படி ஒன்று மனதுக்குள் நிகழ வேண்டும். கட்டுப்பாடற்றுப் பீறிடும் வெள்ள நீரின் வருகை போல அப்படியான பாடலைக் கேட்கும் போதே எல்லாம் மறந்து போகாவிட்டால் அப்புறம் அந்தப் பாட்டுக்கென்னங்காணும் மரியாதை..?
   

 எனக்குள் ஒரு பாடல் இப்படியான உற்சாக மதுபோதைக் குழப்பங்களை எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் ஏற்படுத்த வல்லதாக முதல் தடவை கேட்டதிலிருந்து இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அந்தப் பாடலுக்கென்று இருக்கும் சிறப்புகளை எழுதித் தீர்த்தாலும் தீராதெனத் தோன்றுகிறது. உற்சாகம் எனும் சொல்லை இசைவழி சாத்தியப்படுத்தினால் அது தான் அந்தப் பாடல். பாலு மகேந்திரா இயக்கத்தில் ராஜா இசைத்த அடியே மனம் நில்லுன்னா நிக்காதுடீ பாடல் தான் அது. மழையில் நனைவது பற்றியும் முத்தத்தில் ஆழ்வது குறித்தும் எழுதி பேசி படித்து உணர்வதை விடவும் அதை செயல்முறையில் அறிவது புனிதம். ஆகவே கேட்டு இன்புறுக


நீங்கள் கேட்டவைஅடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டாமா என்று புலிகேசி கேட்பதையே காதலும் அன்பும் குழைந்த குரலில் இறைஞ்சிக் கேட்பான் ஸ்டீஃபன். இன்றளவும் பீட் ஸாங்சை கேட்க நேரும்போதெல்லாம் கொஞ்சூண்டு ஸ்டீஃபஞாபகம் வந்து தான் செல்கிறது. ராஜாவின் பீட் ஸாங்ஸை அவன் வரவேற்பதே படு பிரமாதமாய் இருக்கும். ஒரு சீஸன் முழுமையாக ஒரே பாடலைக் கேட்டபடி இருக்க அவனால் மாத்திரம் தான் முடியும். தளபதி படம் வந்த போது ஊரே ராக்கம்மா கையத் தட்டு பாடலில் கிறங்கிக் கொண்டிருந்த போது இவனோ காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாடலைத் தன் மனதின் காதுகளால் பல டெஸிபல்ஸ் அதிகரித்துக் கேட்டுக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தான்.


ஸ்டீபன் போதும். இனி ப்ரூஸ்லீ...
   

   மதுரை டு சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸில் இடம் கிடைப்பது எம்பி சீட் கிடைத்து ஜெயிக்கிறாற் போல. அப்படி ஒரு பயணம். மழையற்ற வார நாள் இரவு. நான் மட்டும் தனியாக செல்லும் பயணங்களில் பாடல்களால் என்னைத் தாலாட்டிக் கொள்வது வழக்கம். அன்றைக்கு இரயிலில் எதிர் ஸீட்டில் பயணித்த குடும்பத்தில் எல்லோரையுமே எங்கோ ஏற்கனவே சந்தித்தாற் போலத் தோன்றியது. நீ எப்பவுமே இப்படித் தான் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். பின்னும் அந்தக் குடும்பத் தலைவர் பெரியவரின் முகம் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. ஒரு சாடைக்கு மீசையைக் குறைத்துக் கொண்ட வினுச்சக்கரவர்த்தி போல இருந்ததைக் கண்டுணர்ந்த பின்பே மனசு அமைதி ஆயிந்தி. என்னைத் தவிர ஐந்து டிக்கட்டுகளும் அந்த ஒரே குடும்பம் ஆக்கிரமித்திருந்தது உபதகவல்.

எட்டு மணிக்கெல்லாம் கிளம்புகிற இரயில் பயணங்கள் பதினோரு மணி வரைக்கும் கூட இருளை எதிர்க்கும் விளக்குகள் அவஸ்தை. என் ஸைட் அப்பர் பார்வைக்கு எதிர்பார்வையாய் ஓரிரு தடவை அந்தச் சின்னக் கண்கள் ஊசி நுனி போன்ற எள்ளலும் சாந்தமுமாய் விலகி நெருங்கிப் பூப்பூவாய்ச் சிதறும் வாணவெடி போல வந்து போயின. நிதானமாக அவர்கள் அந்த இரவுக்கான தங்களது சின்னஞ்சிறிய உணவுப்பொட்டலங்களைப் பிரித்து உண்ணத் தொடங்கினார்கள். உணவு உட்கொள்வோரின் திசையை அடிக்கடி நோக்குவது சரியல்லவே. செல்ஃபோனின் ஹெட்ஸெட்டை துழாவினேன். கொண்டு வரவில்லை என்பதை அறிந்த பின்னரும் இன்னொரு சில தடவைகள் பைக்குள் செலுத்திய கரத்துக்கு அந்த ஏமாற்றத்தை அறியவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். ஒருவழியாய் அவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள். நான் கவனித்த வரையில் அந்த முழு உணவு வேளையிலும் அவர்கள் யாருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
   
 கனமான ப்ளாஸ்டிக் பை ஒன்றை எடுத்து எல்லோரும் வரிசையாய் அதில் கை கழுவினார்கள். அந்தப் பெரியவரின் பையன் மட்டும் சென்று குப்பைத் தொட்டியில் அதனை இட்டுவிட்டுத் திரும்பினார். ஐடியாக்காரண்டா நீ என்று சொல்ல விரும்பினேன். சொல்லவில்லை. அந்த நேரம் சரியாக டிக்கட் பரிசோதகர் அந்த ரயிலின் எல்லா முகத்தையும் சான்றுச்சல்லடைகளால் சலித்தபடியே எங்கள் சதுக்கத்துக்குள் வந்தார்.முதலாவதாய் என்னுடையதை நீட்டினேன். அலட்சியமாய் மறுபடி அவர் தந்த பான் அட்டையை தேவபிரசாதமாய் வாங்கிப் பர்ஸூக்குள் பத்திரம் செய்து கொண்டேன். டிக்கட் பரிசோதகர் அவர்களை நோக்கி என்னவோ கேட்க நம்ப முடியாத மென் குரலால் அந்தப் பெரியவரின் மகன் பதில் சொன்னதும் தலையை அசைத்துக் கொண்டே சிரித்தபடி நகர்ந்து சென்றார் பரிசோதகர். அப்போது தான் கவனித்தேன். ஒரே வண்ண ஆடைகள் அணிந்து அந்தப் பெரியவரின் பெயரன்கள் இரண்டு பேர் இரட்டைக் குழந்தைகள் என்பது பார்த்தாலே தெரிந்தது அவர்களை ஒட்டித் தான் அந்தப் பரிசோதகரின் சிரிப்பும் கேள்வியும் எனப் புரிந்தது.


சிறிது நேரத்தில் அந்த மகனானவர் மட்டும் உறக்கம் வராமல் வாசற்பக்கம் வந்து திறந்திருக்கும் கதவு வழியாக ஊடாடிய ராட்சஸக் காற்றுக்குத் தன்னை வருடக் கொடுத்தபடி நின்றிருக்க அவரை சினேகபாவத்தோடு அணுகினேன்.முகமெலாம் நட்போடு கை குலுக்கினார். பேசத் தொடங்கினோம். மதுரைக்கு அருகாமை உப நகரம் ஒன்றின் மனிதர்கள் அவர்கள்.வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு போதுமென்ற மனதோடு பொன் செய்யத் திரும்பியிருக்கும் அவர் பெயர் ஜோதி என்றவரிடம் பசங்க ட்வின்ஸா என்றேன். ஆமாங்க என்றவர் இரட்டைக் குழந்தைகளின் வருகையின் கதையை எடுத்துச் சொன்னார்.  

 என்ன பேரு என்றேன்..மூத்தவன் பேரு ராஜா தம்பி பேரு லீ என்றவர் சிரித்தார். என்னாங்க லீ கட் ஷாட் பண்ணி சொல்றீங்களா என்றதும் அட்டகாசமாக சிரித்தவர் நீங்க கண்டுபிடிக்கிறீங்களான்னு பார்த்தேன்..சின்னவன் பேரு ப்ரூஸ் லீ என்றார் சொல்லும் போதே வெட்கமும் புன்னகையுமாக அந்த இரயிலின் அழகான தகப்பனாக ஜோதி ஒளிர்ந்தார்.


       அட செம்மை பேரு தலைவா...ப்ரூஸ் லீன்னா அவ்ளோ இஷ்டமாக்கும்..என்றேன்.

   எனக்கில்லைங்க ரெண்டு பேருக்கும் பேரு செலக்சன் நானில்லைங்க என்றார்.
   ஓஹ்ஹோ இன்னும் இதே கதைக்குள்ள பல கதைகள் இருக்கும் போல என்றதும் எனது தோளில் செல்லமாய்க் குத்தியபடியே விட மாட்டீங்களே...இருக்குதுல்ல..இருக்காதா பின்னே..?என் சின்னப் பய்யனுக்கு ப்ரூஸ் லீன்னு பேரு வச்சது என் மாமனார் என்றார்.நான் வியப்பானேன். என்னாது மாமனாரா...அட ஆமாங்க அந்தா தூங்குறார்ல அவரு தான் என் மாமனார் ரிடையர்டு போலீஸ் எஸ்.ஐ...கட்டு மஸ்தானவரு..உடம்பை செம்மை ஃபிட்டா வச்சிருப்பார்...என் ஒய்ஃப் அவருக்கு ஒரே மக..அவரு கண்டிஷனே பையன் பொறந்தா ப்ரூஸ்லீன்னு தான் பேர் வைப்பேன்னு முன் கூட்டியே சொல்லிட்டாரு..அதான் அவர் இஷ்டப்படியே வச்சாச்சு என்றார்.அதுவரை அவரை ஜோதியின் தந்தை என நினைத்துக் கொண்டிருந்தேனல்லவா..?அந்த வினுச்சக்கரவர்த்தி டூப்ளிகேட் இஸ் ஈக்கோல் டு அவரது மாமனாராம்.

செம்மை செம்மை என்றேன்..அதுனால மூத்த பய்யனுக்கு ராஜான்னு பேர் வச்சது யாரு உங்க ஒய்ஃபா என்றேன்.

  அட நீங்க வேற ரெட்டைப் பயலுக பொறந்து என்னைய காப்பாத்திட்டானுங்க..இந்த பேரு பிரச்சினையைத் தீக்கணும்னே சாமியா பார்த்து ரெட்டையைக் குடுத்திருக்கணும்.என் மாமனார் தன் பேரனுக்கு ப்ரூஸ்லீன்னு பேரு வைக்கணும்னு சொல்றதுக்கு மின்னாடியே எங்கப்பா சம்மந்தி இல்லைங்களா விட்டுக் குடுப்பாரா அவரோட ஸ்தானத்தை..?அவரோட கண்டிஷன் படி பய்யன் பொறந்தா இளையராஜான்னு தான் வைக்கணும்னு சொல்லிட்டாரு..நல்ல வேளையா அடிதடி எதும் நிகழாம மூத்தவரு இளையராஜா அடுத்தவரு ப்ரூஸ்லீன்னு பொறந்து என் வயித்தில பாலை வார்த்தாங்க..என்றார்.


   உங்க அப்பாரு வர்லீங்களா என்றேன். இளையராஜா என்று பெயர் வைத்தவர் என் தலைவரல்லவா..?
  இல்லீங்க அவரு சென்னையில இருக்காரு. நாங்க ஒரு விசேசத்துக்கு வந்துட்டு திரும்புறம். எங்கப்பாவுக்கு இளையராஜா மேல செமை பைத்தியம் என்று அவர் சொன்னபோது நானும் தாங்க என்று சொன்னதும் இன்னும் சிரித்தார். முடித்த பிற்பாடும் எதற்கோ சிரித்தும் துடித்தும் அந்த உதடுகளும் மூக்கு நுனியும் கண்களுமாக ஜோதியின் முகம் பேசாமல் பேசிக்கொண்டே இருந்தது. ஒத்தைப் பய்யனா பொறந்திருந்தா இளையராஜா என்ற ப்ரூஸ்லீ அப்டின்னு வச்சிருக்க வேண்டியது என்று குறைந்த ஸ்தாயியில் சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு மறுபடி உள்ளே சென்றார்.


   மறுநாள் காலை எழும்பூரை நோக்கிக் கதறி விரைந்து கொண்டிருந்த இரயிலின் எதோவொரு அசைவுக்கு எழுந்தமர்ந்த போது இளையராஜாவும் ப்ரூஸ்லீயும் ஆளுக்கொரு காதில் ஒரே ஹெட்ஸெட்டை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.ஜோதியைப் பார்த்து கேட்டேன்,இளையராஜாவும் ப்ரூஸ்லீயும் எதுலயாச்சும் ஒத்துப் போவாங்களா என்றதும் நீங்க வேறங்க..பெரும்பாலும் ஒத்துப் போவாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்மளைக் கிறுக்காக்குறதே வேலைன்னு வைங்களேன் என்றவர் திடீரென்று நீங்க இவங்க ரெண்டு பேரைத் தானே கேட்டீங்க என்றார் முகத்தைச் சுருக்கிக் கொண்டு.


  அட்டகாசமாய் சிரித்தபடியே சொன்னேன் இவங்களையும் தான்
  அதானே பார்த்தேன்..இளையராஜாவுக்கும் ப்ரூஸ்லீக்கும்  ஒரு பெரிய ஒத்துமை சொல்லட்டுமா...ரெண்டு பேருமே பார்க்க சாதாரணமா சாந்தமா இருக்குறாப்ல தோணும்.அடிச்சா திருப்பி அடிக்க ஆளே கிடையாது என்றார்.

   எக்மோர் வந்த பிற்பாடும் அவரது கடைசி வாக்கியம் அதிர்ந்து கொண்டே இருந்தது.
 


(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...