அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   22 , 2018  19:48:43 IST

 
 
 
 இந்த அத்தியாயத்தைக் கிட்டத் தட்ட ஒன்றரை ஆண்டுகளாக ஒத்திப் போட்டிருக்கிறேன். இளையராஜா இசை பற்றிய கொண்டாட்டங்கள் பலரகம். பலரும் வெளிப்படையாக ராஜா ரசிகர்கள் எனச் சொன்னதும் ஒரு தேக்கத்தினுள் அப்படியே உறைவதை உணர்ந்திருக்கிறேன். இளையராஜாவின் வாழ்காலத்தில் பிறந்ததற்காகவும் வாழ்வதற்காகவும் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்வதாகப் பலரும் நெக்குருகுவார்கள். திரை இசைப் பாடல்கள் என்பதைத் தாண்டி இளையராஜாவின் ரசிகர்கள் அவரை உணர்ந்து கொண்டே வாழ்வது எளிதில் விவரித்து விடத் தக்கதல்ல.
 
எல்லா இசை அமைப்பாளர்களிடமும் பல்வேறு திறன்கள் ஒளிந்திருக்கின்றன. முன் பழைய காலத்தின் இசையமைப்பாளர்களின் மெச்சத்தக்க மேதமையில் இருந்து துவங்கி நேற்றைய ஜீவி ப்ரகாஷ் குமார் அனிருத் வரைக்கும் இசை என்பது அறிந்துகொள்வதும் பாடல் என்பது உருவாக்குவதும் படங்களுக்கான பாடல் மற்றும் பின்னணி இசை வேலைப்பாடுகளை வெற்றிடத்தில் பூர்த்தி செய்து தருவதும் ஒரு வேலை என்ற அர்த்தத்தில் அவ்வளவுதான் எனத் தோன்றக் கூடும்.ஆனால் இசை என்னும் சொல்லில் இளையராஜா என்னும் மனிதரின் வருகை வேண்டுமானால் சினிமாக்களுக்கு இசை அமைப்பதன் மூலமாக நிகழ்ந்திருக்கக் கூடும்.ஆனால் இசை என்னும் மதத்தில் இளையராஜா என்பவரது மந்திரஸ்தானம் வேறு.
 
 
 மேதைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உணரப்படுவதை விட அதிலிருந்து வெகு காலம் கழித்துக் கொண்டாடப் படுவது அதிகதிகம் இருக்கும்.இதனை நேரடியாகப் புரிந்து கொள்வதானால் ஒருவரது மேதமையை முழுவதுமாக உணர்வதற்கு அவர் வாழ்கிற காலம் போதவே போதாது.அங்கே தொடங்கிப் பலரது உணர்தல்களின் தொகுப்பிற்கு அப்பால் நெடுந்தொலைவில் அவரைப் பற்றிய முழுமையான சித்திரம் தெரியத் தொடங்கும்.தென்படுதல் தெரிதல் ஆகாது.தெரிகையில் தென்படுதல் முற்றுப் பெற்றுப் பல காலம் ஆகியிருக்கக் கூடும்.
 
       இது ராஜாவுக்கும் பொருந்தும்.
 
இளையராஜா வந்த காலம் என்பது திரைத்துறையில் சினிமா உருவாக்கம் ஸெட்டிங்குகளைத் தாண்டி மண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று.அடுத்த வருடங்களில் பாரதிராஜா மகேந்திரன் ருத்ரய்யா பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள்.எம்ஜி.ராமச்சந்திரன் என்ற உச்ச நடிகர் முதல்வராகப் பதவியேற்று சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார்.சிவாஜி தனியாவர்த்தனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.போட்டியாளர்கள் பலரை ஒதுக்கி கமல் ரஜினி என்று ஆரம்பத்தில் நகரத் தொடங்கிய புகழ்நதி மெல்ல ரஜினிகமல் என்று ஆனது.மோகன் உருவாகி நிலைபெற்றார். சிவக்குமார் மெல்ல செல்வாக்கானார். இவற்றோடு பல முன்பிருந்த நட்சத்திரங்கள் ஒதுங்கினர்.
 
 
 
இசைத்துறையில் இளையராஜா வருகை நிகழ்ந்தபோது ராமமூர்த்தியைப் பிரிந்து நெடுங்காலம் ஆன எம்.எஸ்.விஸ்வநாதன் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருந்தார். சங்கர் கணேஷ் அதிக எண்ணிக்கையில் படங்கள் பண்ணினார்கள்.ஜீகே வெங்கடேஷ் சலீல் சவுத்ரி வீ.குமார் விஜயபாஸ்கர் செல்லப்பிள்ளை சத்யம் ராஜன் நாகேந்திரா ஷ்யாம் ஆகிய பிறமொழிகளில் பரபரப்பாக இயங்கியவர்கள் தமிழில் அவ்வப்போது படங்கள் செய்தார்கள்.  இன்னொரு பக்கம் கேவீ மகாதேவன் டீகேராமமூர்த்தி ஏஎம்ராஜா எஸ்.எம்.சுப்பையா நாயுடு எம்பீ ஸ்ரீனிவாசன் எஸ்.ராஜேஸ்வரராவ் எஸ்.வி.வெங்கட்ராமன் ஜீ.தேவராஜன் ஆர்.கோவர்தன் ஆகிய முன் காலத்தின் மேதைகளும் படங்களுக்கு இசைத்தார்கள்.
 
 
1977இல் இளையராஜாவுக்கு அடுத்து அறிமுகமான சந்திரபோஸ் பின் நெடுங்காலம் கழித்துச் சிறிது காலம் காலம் கோலோச்சினார்.  இளையராஜா அறிமுகமான பிற்பாடு பதினான்கு வருடங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துக் கொண்டிருந்து பிறகு மெல்ல ஓய்வு பெற்றார்.
 
 
   இங்கே இளையராஜாவின் வருகைக் காலத்தில் அதுவரைக்கும் இசைத்தட்டுக்கள் என்ற பெரிய வடிவம் அவற்றை இசைப்பதற்கான மாபெரிய ப்ளேயர்கள் அவற்றின் ஆட்சிக்காலம் நெடியது.கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் எல்.பி ரெகார்ட் என்ற வடிவத்துக்கான மாற்றேதும் இல்லாமல் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்தது.ஒவ்வொரு தட்டிலும் குழந்தைக்கு சாதம் பிசைந்தாற்போல கொஞ்சூண்டை விடக் கொஞ்சமாய் ஆறு பாடல்கள்.அடுத்து கேட்பதற்கு அடுத்ததை மாற்ற வேண்டும்.பத்துப் பன்னிரெண்டு பாடல்கள் கேட்பதற்கு மெனக்கெட வேண்டும்.மேலும் அவற்றைப் பாதுகாப்பதிலிருந்து புழங்குவது வரை விலையிலிருந்து ஒலிக்கச் செய்தல் வரை எல்லாமே குறுகலான வீதியில் ஓடிப்பிடித்தாற் போல இருந்தது.
                  இளையராஜாவின் இசையாட்சி நிலை பெற்ற காலத்தில் கேஸட்டுகள் வரத்தொடங்கின.மேலோட்டமாய்ப் பார்த்தால் கேஸட்டுகளின் வடிவ எளிமை அவற்றின் ஸ்பேஸ் எனப்படுகிற இடம் அழித்துப் பதிவதற்கான வசதி எல்லாவற்றையும் விட அவற்றின் சின்னூண்டு தேகம் என எல்லா விதத்திலும் மக்களுக்கு அருகாமையில் இசை கேட்பதைக் கொண்டு போய் நிறுத்திற்று.அந்த இடத்தில் புதிய பாடல்களை புதிய ட்யூன்களை புதிய குரல்களை புத்தம்புதிய வரிகளை இடையொலிகளை உடனொலிகளை இசையிடை மௌனத்தை முன்னர் கேட்டிராத பல்லவி சரண சேர்மானத்திற்கான இசைக்கோர்வைகளை என எல்லாவற்றிலும் வெரைட்டி தந்து வான்வரை பேருருக் கொண்டார்.இந்திய இசை உலகில் இப்படியான மாற்ற காலத்தில் தோன்றி வெகு சீக்கிரத்தில் உச்சம் தொட்ட இன்னொரு இசைஞரைச் சொல்வது அரிது.
 
 
      இன்னொரு இளையராஜா காலத்து புதுமை அதுவரைக்குமான ஆல் இண்டியா ரேடியோவின் முன் பழைய பணியாளர்கள் அதிகதிகம் ஓய்வுபெற்றதும் புதிதாய் வந்தமர்ந்தவர்கள் ராஜாவா ஹை ஜ்ஜால்லி என்று சப்புக் கொட்டியதும் அதிகரிக்கப் பட்ட ரேடியோ ஸ்டேஷன்களும் அதிகம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நேரதாராளமும் எனப் பல்வேறு காரணங்கள் இசை என்றாலே பாடல்கள் என்றாலே சர்வாதிகார ஒற்றையாக ரேடியோவை ஆக்கி இருந்த காலத்தில் தமிழக இலங்கை ரேடியோக்களுக்கு வேறு வழியே இல்லாமல் ராஜாவைத் துதிப்பது நித்ய கடமையாயிற்று.எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா மோனோ எனப்படுகிற ஒருதள இசைப்பதிவிலிருந்து ஸ்டீரியோ எனப்படுகிற இருதளத்துக்கு திரையிசைப் பதிவு மாற்றமடைந்த காலத்தில் தன்னாலான அளவு உச்சங்களை அதன் வழியும் நேர்த்தினார்.
 
 
  ஏன் அவர் மேஸ்ட்ரோ எனும் அத்தியாயம் இனித் தான் தொடங்குகிறது. இதுவரைக்குமான எதுவும் ராஜாவின் இசையோடு தொடர்பற்றது அல்ல என்றாலும் இளையராஜா திரைவழி இசையில் முயன்றுபார்த்த புதுமைகள் ஏராளம். ஒரே அத்தியாயத்தில் அவற்றை எல்லாம் வரிசைப்படுத்தி வெளிச்சொல்லி விட இயலாது என்றாலும் இங்கே இந்த அத்தியாயம் அவற்றுக்கான கட்டியத் தொடக்கம் என்றாகிறது
 
 
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வருகிற விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்ற பாடலைக் கவனித்திருக்கிறீர்களா..?
 
  தொடக்க இசை மெல்ல வலுப்பெறுகையில் வயலின் இசை செல்வாக்காகாமலே குழலிசை கொண்டு செல்லும். சட்டென்று ஒரு சின்ன இழை வயலின் இசை வலுப்பெற்று உடனே ஓயும். இந்த இசைத்துணுக்கை மட்டும் நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும்.
 
 ஏற்கனவே வேறொரு அத்தியாயத்தில் சொன்னது தான்.இங்கே தொகுக்கையில் மீவருகை அவசியமாகிறது. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை பாடலில் அதன் இணைப்பிசையாக இரண்டாவது நிமிடம் பதினாலாவது நொடியில் ஒரு துக்கடா தோன்றும்.02.29 வரைக்கும்.
 
 ஒரு சின்னஞ்சிறிய இசை தான் என்றாலும் மிகத் தனித்த ஆன்மாவை அது தக்கவைத்துக் கொண்டிருப்பதையும் சதா ஆர்ப்பரிக்கிற அலையின் குன்றாக் குரலோசை போல அது தொடர்ந்தொலிப்பதையும் கேட்கையிலெல்லாம் பரவசமாய் உணர முடிகிறது.
 இசையில் தன்னாலான அளவுக்கு என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார் ராஜா.ஆயிரம் படங்களில் இப்படியான பாடல்கள் மாத்திரம் சில பல நூறு தேறும்.
 
       இன்னொரு சான்று காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல பாடல். சின்ன மாப்ளே படத்தில் மனோ ஸ்வர்ணலதா பாடியது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் காட்டுக் குயில் என்ற சொற்கூட்டில் குயில் மற்றும் அடுத்த சொற்கூட்டான பாட்டுச் சொல்ல என்பதில் பாட்டு அதாவது குயில் மற்றும் பாட்டு இந்த இரண்டோடும் சேர்ந்தொலிக்கிற சின்னதொரு ஸ்டிக் ப்ளே வரும். பாடலில் எங்கெல்லாம் பல்லவி தொடங்குகிறதோ அப்போது மட்டும் முதல் முறை ஒலித்து அடங்கும். இந்தப் பாடலின் முழுமையான ஞாபகமாக அந்தச் சின்னதொரு துணுக்கிசை மனதில் பசை போட்டுப் பதியவைத்த சித்திரமாக நிலைக்கிறது.
                        
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி பாடலைக் கேட்டிருப்பீர்கள். என் வாழ்வில் அதிகதிகம் கேட்கிற பாடல்களில் முதல் பத்தில் சங்கிலிக்கு இடமுண்டு. சலிக்காத நல்லிசை.அது இருக்கட்டும். இந்தப் பாடலின் பல்லவி முடிந்து சரணத்துக்கு முந்தைய நகர்தலிசையை கவனித்தால் அதன் தாளநதியில் சின்னதொரு முரண் இருப்பதை உணரலாம். தனித்து ஒலித்தால் நாராசம் என்ற அளவுக்கு பயந்து கையாள வேண்டிய பலமான அல்லது முரணான இசைக்கோர்வையை என்னவோ ஒற்றை மல்லிகைப் பூவைக் கையாளுகிறாற் போல எடுத்தாண்டிருப்பார் ராஜா. இந்தப் பாடலில் தபலாவும் குழலும் அப்படியான முரணிசைக் கோர்வையை உண்டுபண்ணும். இப்படி எல்லா வாத்தியங்களையும் கொண்டு இப்படியான பிரயத்தனத்தை எடுத்திருக்கிறார் ராஜா. அது மற்ற யாரிடமும் இல்லாத புதுமை என்பதைத் தாண்டி ஒவ்வொரு பாடலுக்குமான தனித்த உளவியலுக்குள் அந்தப் பாடல்கள் தங்களைத் தப்புவித்துக் கொள்வதற்கான முதற்காரணியாகவும் இப்படியான தனித்தொலிக்கும் துல்லியத் துணுக்கிசைக் கோர்வைகள் செயல்பட்டு வருவதும் கண்கூடு.
             
 
இந்தப் பாடலின் சிறப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
 சின்னத்தாயி படத்தின் நாடித்துடிப்பே கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் என்ற பாடல் தான்.பலமான பறை இசை பம்பையின் உடனோசை மேலும் சோகத்தை மெலிதாகப் படர்த்திச் செல்லும் நாகஸ்வரம் மற்றும் துணைக்கருவிகளோடு இந்தப் பாடலின் பின்னணி இசை அமைந்திருக்கும்.
  விஷத்தின் கொடுமையைத் தன் கண்களிலும் நாவிலும் சுமந்து கொண்டிருக்கிற சர்ப்பத்தைத் தன் குழந்தமையின் அறியாமையோடு அனாயாசமாக ஓற்றைக் கையாலெடுத்து தூர எறிந்து விட்டு விளையாட்டைத் தொடரும் சிறுபிள்ளையின் குரலிலேயே மொத்தப் பாடலையும் பாடச் செய்திருப்பார். அதே நேரம் உறுத்தாத தாளக்கட்டுக்களோடு லேசான மயக்கத்தில் நகர்கிற தன்மையோடு மொத்தப் பாடலின் இசையும் அமைந்திருக்கும்.
 
கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலமாடசாமி
சுடலமாட சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான்
சூடம் ஏத்தி காமி
 
 
கொட்டவேணும் மேளம்�..
கையை கட்ட வேணும் யாரும்�.
அஞ்சி நிக்கும் ஊரும்�.
அருள்வாக்கு சொல்லும் நேரம்�
 
கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலமாடசாமி
சுடலமாட சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான்
சூடம் ஏத்தி காமி
 
அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல .
 
அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல 
 
 
விலையேறி போகுது மார்க்கெட்டுல
 
என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி திங்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல
 
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல.
 
வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரம் ஒன்னு வைக்க சொல்லூறாக
 
மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும்
சீராக வேணும் ஒன்னால தான்
கண்ணால பாரு
வேறாக்கி காட்டு ஒன்னால தான்
 
கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலமாடசாமி
சுடலமாட சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான்
சூடம் ஏத்தி காமி
 
 
ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே
 
ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..
 
ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..
 
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..
 
எல்லோரும் போல் என்னை
நீயும் தான் தள்ளாமே
எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே
 
எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
 
பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாக்கி போச்சே என் மனம் தான்
 
என்னாட்ட சாமி
எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்
விண்ணோடு மேயும்
உன்னோடு நானும் எந்நாளும் தான்
கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலமாடசாமி
சுடலமாட சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான்
சூடம் ஏத்தி காமி
 
கொட்டவேனும் மேளம்
கையை கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும்
அருள்வாக்கு சொல்லும் நேரம்
 
கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலமாடசாமி
சுடலமாட சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான்
சூடம் ஏத்தி காமி
 
           இதன் இன்னொரு உருவெனவே இந்தப் பாடலைச் சொல்ல முடிகிறது.
என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக என்று சின்னப்பசங்க நாங்க படத்துக்காக ஜானகி குழுவினரோடு பாடும் இந்தப் பாடலை அதன் பல்லவித் தொடக்க இசையாக மேற்சொன்ன கோட்டையை விட்டு பாடலின் அதே இசையை இன்னொரு படர்தலாக்கி பயன்படுத்தி இருப்பார் ராஜா.இரண்டு பாடல்களும் இருவேறு உணர்விழைகளாய் கேட்பவர் மனங்களில் பெருகுவது ராஜ-இசை-ரகசியம்.
 
 ஊரு விட்டு ஊரு வந்து பாடலின் ஆரம்பத்தை கவனிக்கலாம்.மெல்ல ஒரு பாடலை வெஸ்டர்ன் முறைப்படி எடுத்த எடுப்பிலேயே அத்தனை பரவசவேகத்தோடு வானேகச் செய்திருப்பார். மொத்தப் பாடலின் டப்பாங்குத்து தன்மைக்கு எதிரான ஒரு ஆரம்பம் என்றாலும் ஒரு உறுத்தலுமில்லாமல் நேர்ந்திருப்பது தான் ராஜா இசையின் சிறப்பு.
 
   சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடல் துவங்குகையில் ஏற்படுகிற உற்சாகமாகட்டும் மடை திறந்து தாவும் நதியலைதான் பாடலின் உற்சாகமாகட்டும் அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்று ஆரம்பிக்கையில் ஏற்படுகிற சந்தோஷமாகட்டும் பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வரேன் பாடலின் துவக்கமாகட்டும் மாமா உன் பொண்ணைக்குடு எனும் ரஜினி ஸ்டைல் சாங் துவங்குமிடமாகட்டும் இன்னும் எத்தனையோ பாடல்களை ஜஸ்ட் லைக் தட் ஆயிரம் முறை கேட்டும் கடந்தும் இருக்கிறோம். உற்றுக் கவனித்தால் அங்கெல்லாம் மாயமீன் ஒன்று துள்ளும்.
 
 
இரவின் பாடல்களாகட்டும் காமம் சொட்டும் கானங்களாகட்டும் தன்னுடைய கையெழுத்தை வித்யாசப்படுத்துவது ராஜவேலை. அவர் அளவுக்கு இன்னொருவர் இல்லவே இல்லை.மயக்கும் ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் என்ற பாடலுக்கும் புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே பாடலுக்கும் இடையே தோன்றுகிற ஒற்றுமையைச் சென்றடைவது ஒளியுமிழும் ஞானவனத்தீ.
 
 
     ஆத்தாடி பாவாடை காத்தாட பாடலின் மைய இழையாகப் பெருகும் இசை சோகமாய்ப் பெருகவல்லது.விரசத்துக்கு அருகாமையில் உதிக்கிற வார்த்தைகள் பாடலெங்கும் ததும்புவது.அவற்றைப் பாடிய ராஜாவின் குரல் அந்தப் பாடலுக்கு ஒரு மலர்ச்சி குன்றாத நல்மாலையாய்த் தன்னை அணிவிக்கும்.வேறாரால் வரும்..?ராஜவரம்.
 
 இத்தனைக்கும் அப்பால் ராஜாவின் இந்த ஒரு பாடலை முன்வைக்கிறேன்.
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி என்ற பாடல் பார்த்திபன் ஐஸ்வர்யா நடித்த உள்ளே வெளியே படத்தில் இடம்பெற்ற பாடல். இதைக் கண் மூடிக் கேட்கும் போது ஒரு அனுபவமாக மனதில் தேங்கும். பார்க்கும் போது இன்னொன்றாய் விரியும்.காட்சியாடல்களுக்கு எந்த விதத்திலும் ஊறு விளைவிக்காமல் அதே நேரத்தில் ஒரு மெல்லிய சோக இசைப்பரவலோடு இத்தனை காதல் குறும்புப் பாடலை வளர்த்தெடுத்திருப்பது வினோதமான நல்லிசை.
 
 
எங்க தம்பி படத்தில் இது மானோடு மயிலாடும் காடு இன்னொரு வைரநிகர்ப்பாட்டு. இந்தப் பாடலும் எதிர்பார்ப்பிற்குள் ஒரு போதும் அடங்கிவிடாத புத்தம் இசையோடு மலரவல்லது.
 
 
இளையராஜா இசையில் சின்னச்சின்னத் தெளிவுகளைக் கண்டறிந்து ரசிப்பதற்குப் பெருநெடுங்காலம் அவசியம். ஆங்காங்கே புலன் மயக்கம் அவற்றை ஊடுபாவுகளாக்கி அத்யாயங்களாய்ப் படர்த்தும்.
 
 
 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)
 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...