அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 71 : மணிரத்னம் : அன்பின் எட்ஸெட்ராக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   23 , 2018  15:40:38 IST

 
 
 
என் வாழ்வின் மிக ஹெவியான படங்களில் ஒன்று என்று தாராளமாக 'அஞ்சலி' படத்தைச் சொல்லலாம். இந்தக் கட்டுரையில் ஒரு வேளை பல ரகசியங்கள் வெளிவரக் கூடும், அல்லது எதுவுமின்றிப் போகலாம்.முதலில் இது மணிரத்னத்துக்காக இளையராஜா நேர்த்திய இசை பற்றியது.அவர்களின் கூட்டணியின் எல்லாப் பாடல்களுமே சூப்பர்ஹிட் என்பதால் அவற்றை இங்கே பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன்.இது பாடல்களுக்கான இசை பற்றிய மயக்க எபிஸோட் அல்ல.பின்புல இசைக்கான மயக்கத்துக்கான மேடை.
 
எல்லோரும் பார்த்த படம் 'அஞ்சலி'. கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாகச் சந்தேகப்பட்டுத் திறக்கக்கூடாத ரகசியத்தின் அலமாரி ஒன்றைத் திறந்து பார்க்க முற்படுவார் ரேவதி. அங்கே எல்லோரும் யூகித்து, அவர் எதிர்பார்த்தாற்போல் ஒரு சொல்லாக் காதலின் கதை இருப்பதற்குப் பதிலாக, இந்திய சினிமா அதுவரை பார்த்திராத, முற்றிலும் புதுமையான, திருப்புமுனைத் தோன்றலாக அஞ்சலி எனும் மூன்றரை வயதுக் குழந்தை அங்கே நின்று கொண்டிருக்கும். உண்மையில், மோகனின் வாழ்க்கையை முடித்து வைத்தவர் மணிரத்னம். ஆம், 'மௌனராகம்' படத்தின் சீக்வல்தான் 'அஞ்சலி'. மறக்க முடியாத காதலின் பொத்தி வைத்திருக்கும் சொந்த ரகசியத்தின் வெம்மை அத்தனையையும் விஷம் படர்த்திய சொற்களாக்கித் தன்னை நாடி வரும் கணவனிடமிருந்து விலகிச் செல்ல முற்படும் 'மௌனராகம்' ரேவதி, ஒரு பாடு மோகன தியாகக் காத்திருப்புகளுக்குப் பின், அவரது பொறுமையின், காத்திருத்தலின், காதலின், நிஜத்தின், அன்பின் அத்தனை எட்ஸெட்ராக்களையும் புரிந்து கொண்டு, இல்லறத்தின் பூங்காவில் இரு குழந்தைகளுடன் இன்பம் கொண்டாடி வந்த வேளையில், அஞ்சலி எனும் குழந்தையின் வரவும், பின்னதான பின்னல்களும், 'அஞ்சலி' திரைப்படத்தின் நன்கறிந்த காதை. 
 
 
 
இந்தப் படத்துக்குத் தேவையற்ற சூப்பர்ஹிட் பாடல்கள் வழங்கப்பட்டன. கம்பி மேல் நடப்பதைப் போன்ற இதன் திரைக்கதையும், அதை மணிரத்னம் எடுத்த விதமும், முழுமையான குழந்தைகள் திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலுன், முக்கியமான படம் என்ற அளவில் ஒப்புக் கொள்ள முடியும். ரேவதிக்கும், ஷாம்லிக்கும் இடையிலான வெகு சில நிமிடங்கள் 'இது திரைப்படம்' என்பதையெல்லாம் மீறி, விபத்தில் வெட்டுப்பட்ட ஒருவன், உடல் ரெண்டாகி, தன்னிலிருந்து கொப்பளிக்கும் குருதியை, அசட்டு மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு, இந்த வாக்கியத்தை உணர்வதற்குள் மடிந்து போவானே, அது போன்றதொரு அபத்த இன்பமாய் நம் மனத்தில் தேங்கும் மிக மிக மிக அபூர்வமான மௌனவய பின்னணி இசை.
 
 
சுகப்ரியா திரையரங்கில் முக்கால் வருடத்துக்கு மேல் ஓடிய 'அஞ்சலி' பிற்பாடு திருநகர் கலைவாணி (ஏஸி) தியேட்டருக்கு வந்து சேர்ந்தது. சித்தப்பா மக்கள் பலரும் சேர்ந்து, எக்கச்சக்கக் குழந்தைகளாய் இந்தப் படத்தைச் சென்று பார்த்தது ஞாபகம். மதுரை போன்ற மித நகரத்தில், கனவிலும் பார்க்க வழியில்லாத, அபார்ட்மெண்ட் எனும் அடுக்ககக் கலாசாரத்தில் காண நேர்ந்த முதலாவது படம் என்கிற வகையில் 'அஞ்சலி' மிகவும் பிடித்துப் போயிற்று. பிறகு பார்க்கும்போது, வேறொரு படமாய்த் தோன்றியது. நெடு நாளைக்கு அஞ்சலி படம் எனக்குள் புகுத்திய உயர் மத்தியம வாழ்க்கையின் அபார்ட்மெண்ட் சித்திரம் கலையாமல் இருந்தது.அப்போது மதுரையிலேயே அபார்ட்மெண்ட் வந்திருக்கவில்லை.ஒரு விசயம் வருவதற்கு முன்பே அதனைக் குறித்த அறிவும் அறிதலும் ஏற்பட சினிமா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிற்று.
   எதிர்காலத்தில் அபார்ட்மெண்ட் வீட்டு வாசத்திற்கு வந்து சேரும் வரைக்கும் அடுக்கக வாழ்க்கை குறித்த பாஸிடிவ் எண்ண ஒற்றை மனதின் அடிவாரத்தில் வலுப்பெற்றமைக்கு அஞ்சலி படம் எனக்குத் தந்த அந்த ஆரம்பம் காரணம்.
 
மணிரத்னம் எடுத்த இதயத்தைத் திருடாதே எனக்கு வேறொரு ஸ்பெஷல்.அதாவது மதுரையில் புதூரில் இருந்து நான் படித்த செயிண்ட் மேரீஸ் ஸ்கூலுக்கு வைகை ஆற்றைக் கடந்து தான் சென்றுவர வேண்டியிருந்தது.அப்படிச் செல்கையில் கோரிப்பாளையத்தில் கீழ்ப்பாலம் அப்போது ஒருவழிப் பாதை ஆக்கப்படவில்லை.செல்வதும் மீள்வதும் மேற்பாலம் வழியே மாத்திரம் தான்.பாலத்தின் இரு பக்கங்களிலும் இப்போது போல பெரிய போர்டெல்லாம் கிடையாது.மணிக்குட்டியாய் வினைல் போர்டுகள் வைத்திருப்பார்கள்.உள்ளே லைட் எரியும் போர்டுகள் அப்போது வரவில்லை.அல்லது அப்போது காஸ்ட்லி.இது வெளியே மாத்திரம் தகடு நிமிர்த்திய போர்டு.வரிசையாக மின் கம்பங்களில் இரண்டு பக்கங்களிலும் கிட்டத் தட்ட நாற்பது போர்டுகள் வரும்.அதை விளம்பரவாலாக்கள் பங்கிட்டுக் கொள்வர்.அந்த ஏரியா ஸ்பெஷாலிடி தியேட்டரான சினி மினி சுகப்ரியா தியேட்டர்களின் விளம்பரங்கள் தான் பெரும்பாலும் இருக்கும்.இன்னொரு பக்கம் மற்ற பல தியேட்டர்களின் விளம்பரங்கள் இருக்கும்.
 
 
   இதயத்தை திருடாதே படத்தின் போஸ்டர்களை பார்த்தபடியே அது ஓடிய இருனூற்று சொச்ச நாட்களும் ஸ்கூல் சென்று வந்தோம்.என்ன படம் என்ன கதை ஒரு கம்பார்ட்மெண்டும் புரியாத வயது.என்னமோ திருடாதே என்று ஒரு படம்.இசை இளையராஜா என்பதால்   ஓ ப்ரியா ப்ரியா பாடல் அதிரி ஹிட் ஆஃப் தி புதிரி ஆஃப் தி வருடம்.நாகார்ஜூனா கிரிஜா பேர் கூட சரியாத் தெரியாத காலகட்டம்.நாகராஜூ நா என்று சொல்வான் மார்லன் அதென்னடா பேர் என்றால் ஆந்திரால அப்டி வப்பாங்களாம் என்று விளக்கமும் வேறு தருவான்.மொத்தப் படத்தையும் பார்ப்பதற்கே அந்தப் படம் வெளியான நூறு நாட்களுக்கு அப்பால் தான் இயன்றது.ஒரு மாதிரி வேர்ட் முழுக்க எலாரும் காதலிச்சே ஆய்டுங்க ப்ளீஸ் என்று அந்த வயதில் ஒரு மாதிரி எடுத்ததெதுவும் நேராய்ப் புரியாமல் காதல் காதல் எனும் வார்த்தை மாத்திரம் மனசில் அழுந்தப் பதிந்தது.மணி ஸார் படம் என்பதால் அதற்கே உரிய வினோதஸார்கள் நிரம்பி இருந்தன.
 
 
விஜயகுமார் மற்றும் கிரிஜா இடையே ஒரு காட்சி.சாப்பாடு தரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிப்பார் விஜயகுமார்.அவரிடம் சாப்பாடு தாங்க என்று கெஞ்சிக் கொண்டே சப்பாத்திகளைத் திருடுவார் கிரிஜா.அதை எடுத்துக் கொண்டு நகர்ந்து அடுத்த அறைக்குச் செல்கிற வழியில் தட்டு கீழே விழுந்து திருட்டுத் தனம் தெரிந்து விஜய்குமாரிடம் பிடிபடுவார்.இந்த இடத்தில் ஒரு துள்ளலிசை.முதலில் வேறொரு இசைத் துணுக்கு இரண்டையும் கொண்டு வந்து அடுத்த காட்சியில் சேர்ப்பிக்கிற இடம்....ரயிலில் வந்திறங்கும் டிஸ்கோ சாந்தியைக் கண்டு எச்சில் விழுங்கும் உதவியாளன்.அப்போது ஒரு இசை பிட் வரும் பாருங்கள்.இதற்கு அடுத்த காட்சியில் ஏகாந்தத்தின் வியாபித்தலைக் கொண்டு வந்து காதுகளின் வழியே இதயத்தில் பெயர்க்க இசைராஜா அளவுக்கு இன்னொருவரால் இயலுமா என்பது வினா.
 
   'தளபதி' என் வாழ்வின் வர்ண காலத் தொடக்கத்தின் பின்னணி இசை எனலாம். ரஜினி, மம்முட்டி, ஜிவி ஃபிலிம்ஸ், சந்தோஷ் சிவன் என எத்தனை அம்சங்கள் உயர்ந்தோங்கி இருந்தாலும், இளையராஜாவும் வாலியும் தனியாவர்த்தனம் நிகழ்த்தினார்கள். பாடல்களை விடுங்கள், அலுக்கச் சலிக்கப் பேசியாயிற்று. பின்னணி இசையில் தளபதி ஒரு சப்தச் செல்லம். ஓங்கியும், தாழ்ந்தும் மேகமாய்ப் படர்ந்தும், நதியெனக் கலைந்தும், நிதானித்தும், பிரவகித்தும், அசுர சாதகம் செய்திருப்பார் இளையராஜா. இங்கே 'தளபதி'யின் முழு பிஜிஎம்மைத் தர முயற்சிக்கிறேன். 
 
 
   ரஜினிக்கும் மம்முட்டிக்கும், ரஜினிக்கும் ஷோபனாவுக்கும்,  ஷோபனா சாருஹாசன் ரஜினி ஆகியோருக்கும், ஸ்ரீவிதியா ஜெய்சங்கருக்கும், தனித்தனியாக வரிசையில் நிற்கும் மாணாக்கர்கள் சட்டையில் அவரவருக்கான தேசியக் கொடியைக் குத்தி விடுகிறாற்போல், அழகாக இசைவழித் தனிக்கச் செய்திருப்பார் ராஜவாத்தியார். அதென்னவோ, தன் வில்லன்களைப் பார்த்துத் தானே நடுங்குவார் மணிரத்னம். 'அக்னி நட்சத்திரம்' உமாபதியின் பெரியப்பா மகன் போன்ற அம்ரீஷ் பூரிக்கும், வஞ்சகமின்றி இசையபிஷேகம் செய்திருப்பார். 
 
 
"ஏன்னா நீ என் நந்பந்" என்று ரஜினி சொல்லும்போது, யாரென்றே தெரியாத பக்கத்து சீட்டுக்காரர் கைகளை ஆதுரமாகப் பற்றிக் கொண்டதெல்லாம், இளையராஜா இசைவழி ஆடிய நட்பாட்டம் தான். 
 
'இதய கோயில்' ஒரு க்ளீன் ஸ்லேட் ம்யூசிக்கல் மூவி. அதில் ஓர் இயக்குநருக்குப் பெருத்த சுவாரஸ்யங்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பல்லவி அனுபல்லவி' என்கிற தனது முதல் முதல் படத்தை முடித்துவிட்டுத் தமிழில் ஆரம்பப் படங்களான 'இதய கோயில்' மற்றும் 'பகல் நிலவு' ஆகிய படங்களில் தன்னைத் தானே வழிபட்டபடித் தன் அடுத்த படமான 'நாயக'னுக்குள் நுழைந்தார் மணிரத்னம்.
 
 
உண்மையில், மிகக் குறைவாகப் பேசுகிற கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு எதிரானவையாகக் கருதப்பட்டு வந்தன. அந்த நேரத்தில், அவைகளை மிகத் தைரியமாகத் தன் கதைகளின் மையக் கதையாளர்களாக நியமித்து, பிற பாத்திரங்களுடன் அவற்றை உடன்பட்டும், முரண்பட்டும் தன் கதைகளின் சொலல் முறையை அமைத்துப் பார்த்தார் மணிரத்னம். பில்லா, ரங்கா காலத்து அண்டர்கிரவுண்டு கதாபாத்திரங்களை மத்தியம நம்பக உலகத்தின்பால் திருப்பி, எடுத்ததற்கெல்லாம் பொசுக்கென்று டுப்பாக்கியைத் தூக்கித் தன் விசுவாசிகளில் ஒருவனைக் கொலை செய்துவிட்டு, அவனது டெட்பாடியை மற்ற விசுவாசிகளைக் கொண்டே அப்புறப்படுத்தும் அபத்தப் பழம் பஜ்ஜிகளுக்கு மத்தியில், 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் பாரதிராஜா உருவாக்கிக் காட்டிய ஜி.சீனிவாசன் - கவுண்டமணி இணை மணிரத்னத்தால் இன்னொரு முறை சுத்திகரிக்கப்பட்டு, 'எதுக்குத் தனியா வில்லன்? ஹீரோதான் வில்லன்' என்றாகி, 'அப்ப ஹீரோ? அதான் வில்லன்' என்றும் ஆனது. தனக்கு நேர்ந்த இந்தக் குழப்பத்தைத் தன்னிடம் யாராவது கேட்டுவிடுவார்கள் என்று அஞ்சிய மணிரத்னம், "நீங்கள் நல்லவரா கெட்டவரா" என்று ஒரு கதாபாத்திரம் இன்னொன்றைக் கேட்பது போல் அதை அமைத்தார். இன்றளவும் ரெண்டாவது முதல் வாழைப் பழமாய் இந்தக் கேள்விக்கும் நமக்கு விடை தெரியாமலே இருந்து வருகிறது.
 
 
 
'நாயகன்' திரைப்படத்தில் கார்த்திகா, ஜனகராஜ், கமலஹாசன் ஆகிய மூவரும் பங்குபெறும் ஒரு கடற்கரைக் காட்சி வரும். கடலில் பெய்த மழை போல் இளையராஜாவா, கமலஹாசனா யார் நிஜ ராட்சசன் என்று அறியாமல், டை பிரேக்கர் கோரும் மனது. 
 
  அனில் கபூர்,  நம்ம ஊர் லக்ஷ்மி ஆகியோர் நடித்த 'பல்லவி அனுபல்லவி' தமிழில் 'ப்ரியா ஓ ப்ரியா' என்று டப்பப்பட்டது. இதன் பாடல்களைத் தாண்டிப் பின்னணி இசையும்
இந்தப் படத்துக்காக முதலில் பதியப்பட்ட பின் இசைத் துணுக்கு பிற்பாடு ஏழெட்டுப் படங்களில் பயன்படுத்தப்பட்டது.
'வாழ்க்கை' திரைப்படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் தன் வேலையை" எனத் தொடங்கும் பாடலும் இதன் ஒரு துளிதான். 
 
 
 மணிரத்னத்தின் உலகம் சற்றே மத்யமமானது.மேலும் சாதாரணங்களுக்கு நடுவே காண மறக்கிற அபூர்வங்களைப் பட்டியலிட்டுப் பிரதானம் செய்கிற வேலையை பாலச்சந்தரின் முன் காலப் படங்கள் செய்தன என்றால் அவற்றிலிருந்து விலகி வேறொரு வகைமையைப் பிரதானப் படுத்துகிற நோக்கம் மணிரத்னத்திற்கு இருந்தது.கடுமையின் அழகியலை முன்னரெப்போதும் இல்லாத அளவுக்குத் தன் கதைகளுக்குள் இடம்பெறுவதை மணிரத்னம் செய்தார்.அவரது மனிதர்கள் மிகவும் குறைவாகப் பேசினார்கள்.இன்னொரு புறம் அசட்டுத் தனமாக அதிகம் பேசுகிற பாத்திர முரணைக் கையிலெடுத்தார்.கார்த்திக் ரேவதி மோகன் ரேவதி இரு இணைகளுமே மௌனராகம் திரைப்படத்தில் பங்கேற்கும் காட்சிகளில் மணிரத்னம் விரும்பிய இந்த சமனின்மை புரிபடும்.ஒரு கட்டத்தில் இறைஞ்சுதலுக்குப் பின்னாலான பதில் ஒற்றைச் சொல்லாகவோ அல்லது சம்மதமாகவோ வரும்.இதே தன்மை நாயகன் படத்தில் வேலு நாயக்கர் குறைவாகப் பேசுகிறவர்.அவரது மனைவியாக வரும் சரண்யாவும் அப்படித் தான்.இங்கே ஒன்றைக் கவனிக்கலாம்.அந்தப் பாத்திரம் உடனே செத்துப் போய்விடும்.ஒரு பாட்டுக்கு முன்னும் பின்னுமாய்ச் சில காட்சிகள் மாத்திரமே கதையில் வாழும்.
 
 
அதே நாயகன் படத்தில் மற்ற பாத்திரங்கள் குறிப்பாக கமலின் மகளாக வரும் கார்த்திகா மணிரத்ன வகைமைக்குள் வருவார்.கச்சிதமாகப் பொருந்துவார்.மணி ரத்னம் மௌனத்தை மிகவும் நம்பினார் என்பதைச் சுட்டவே மேற்சொல்லிய நெடிய பத்தி அவர் பாத்திர முரண்களைப் பற்றிப் பேச வேண்டியதாயிற்று.கலைப்படத் தன்மை ஒன்றை வணிக ரீதியிலான அழகியல் படங்களுக்குள் திணிக்காமல் இயல்பாக எழுவதற்கு உரிய ஒரு உத்தியாகக் கூட இதனைக் கருதலாம்.ஆனால் மணிரத்னத்தின் அடிப்படை அவர் ஒரு கதை சொல்லியாக வசனத்தை எங்கனம் பயன்படுத்தினாரோ அப்படித் தான் பாத்திரங்களுக்கு இடையிலான விடலைத் தனம் மற்றும் நிதானம் ஆகியவற்றுக்கிடையிலான இயல்பான முரண் இவற்றையும் பயன்படுத்தினார் எனக் கொள்ள வேண்டி இருக்கிறது.மணி ரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்தில் கூட கார்த்திக் பிரபு இருவரில் பிரபுவுக்கும் அமலாவுக்கும் இடையிலான பாத்திர முரண் மேற்சொன்ன பேசாத் தன்மையும் தொணதொணக்கிற அம்சமும் தான் என்பதை அறியும் போது பிற்காலத்திலும் மணிரத்னத்தின் மற்றப் படங்களாக ரோஜா உயிரே அலைபாயுதே ஏன் சமீபத்திய காற்றுவெளியிடை வரை இது அவரது வெளிப்பாட்டுப் பாணி என்று புரிந்து கொள்ளலாம்.
 
 
   இங்கே இசையின் வேலையைச் சொல்லத் தான் இத்தனையும்.மணிரத்னத்துக்கு இளையராஜா இசைத்த படங்கள் பல்லவி அனுபல்லவி(கன்னடம்) உணரு (மலையாளம்)இதயக்கோயில் பகல்நிலவு கீதாஞ்சலி எ இதயத்தைத் திருடாதே  அஞ்சலி அக்னி நட்சத்திரம் நாயகன் தளபதி 
 
இந்த எல்லாப் படங்களிலும் தன் பாடல்களைத் தாண்டி இன்னொரு நிழல் கோலமாய்த் தன் பின்னணி இசையைக் கொண்டு படத்தின் நகர்தலைத் தன்னாலான அளவுக்கு நேர்ப்படுத்தியபடி தொடர்ந்திருப்பார் ராஜா. அதற்கான தேவை இருந்தது என்பது தான் விஷயம்.ராஜாவைப் போற்றுவது செகண்டரி தான்.
 
 அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் கதை அதற்கு முன் பலமுறை எடுக்கப்பட்ட கதை தான்.ரெண்டு தாரம் கட்டிய ஒருவனது இரண்டு கிளைகளும் ஒன்றாவது என்று சொல்லிச் செல்வது எளிது,பின்னால் க்ளைமாக்ஸில் தான் சேருவார்கள் என்பது யூகிக்கத் தேவையற்ற எளிய பப்பி நிஜம் என்றபோதும் ப்ரபு மற்றும் கார்த்திக் இரண்டு பாத்திரங்களுக்குமான அவமானம் தனிமை இயலாமை கோபம் தவிப்பு வெறி ஆகியவற்றுக்கான காட்சிகளுக்கு ஒரே கோர்வையை வெவ்வேறு கருவிகளைக் கொண்டு வெவ்வேறு டெம்போ அட்ஜஸ்ட்மெண்ட் உடன் படைத்திருப்பார் ராஜா.அமலாவின் குறும்புத் தனம் அமலா பிரபுவிடம் உங்கப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே என்று கேட்பது உடனே பிரபு அவரைத் தள்ளி விட்டபின் தூங்காத விழிகள் ரெண்டு பாடலில் கொண்டு போய்ச் சேர்க்கிற இணைப்பிசை அபாரமாய் இருக்கும்.
 
 
  அக்னி நட்சத்திரம் படமே ஒன்றுக்கொன்று நெருக்கமான அதே நேரத்தில் தொடர்பற்ற அடுத்தடுத்த கண்ணிகளைக் கொண்டு நெய்தெடுக்கப் பட்ட பூவேலை போலத் தான் இருக்கும்.  இரண்டு குடும்பங்களின் பொதுபிம்பம் தந்தை.ஒரே ஊரில் வசிக்க நேர்கிற இரண்டு தார குடும்பங்கள்.ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து பெரிதான தருணத்தில் உருவெடுக்கும் அடுக்கடுக்கான பிரச்சினைகள்.இவற்றைக் கொண்டு போய் கடைசியில் சுபம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைக்கிற மிகச் சாதாரணமான எந்த விதமான கலாமேன்மைக்கும் இடமே இல்லாத மனித சுயநலச் செய்கை ஒன்றை நியாயப்படுத்துகிற மணிரத்னத்தின் முதலும் கடைசியுமான படமாக அக்னி நட்சத்திரத்தை சொல்ல முடியும்.இதில் இளையராஜாவின் இசை ஒரு கூடுதல் இயக்குனராகவே பணி புரிந்திருக்கும்.அதுவும் இறுதி நெருங்குகையில் அந்த ஆஸ்பத்திரி காட்சியில் சப்தமின்றிக் காணவேண்டிய சாதாரணம் ஒன்றின் அத்தனை அபத்தங்களையும் தன் ஜரிகை வேலையால் உயிர்ப்பித்து இருப்பார் ராஜா.
 
 
நல்ல முரளி கெட்ட சத்யராஜ் ரெண்டு பேரையும் கலந்து செய்த அடுத்த பகலின் அடுத்த நிலவு தான் நாயகன் கமல் கேரக்டர்.அவரே நல்ல முரளி.அவரே கெட்ட சத்யராஜ்.,அதனால் தான் நீங்க நல்லவரா கெட்டவரா எனக் கேட்க வைத்து தெர்லியேப்பா என்று பதிலும் வைத்தார்.மறுபடி மம்முட்டி கெட்ட தேவா பட் நல்ல நண்பர்.அவரது நல்ல சூர்யா அதாவது நல்ல நண்பர் ரஜினி.நட்பு என்ற ஜரிகையை அதிகரித்து வன்முறையை நியாயப்படுத்தி மக்களுக்கு நன்மை ஸோ எதும் தப்பில்லை என்றெல்லாம் சுற்றி வளைத்து கதைபலத்தை சுத்தமாய்க் கவலையே படாமல் திரைக்கதையை எடுத்து வைக்கும் முறை என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு தப்பித்துக் கொடி நாட்டினார் மணிரத்னம்.அவரது ஆரம்பப் படங்களில் இம்மூன்று படங்களுமே அவரது ஹிட்ஸ் மாத்திரமில்லை அதற்கு முந்தைய ட்ரெண்டை மாற்றி அமைத்த பஸ்டர் ஹிட்களும் கூட.
 
பூமாலையே பாடல் ஒரு அபூர்வம்.இளையராஜாவின் தனித்த மரகதங்களில் ஒன்று.
 
 
மணிரத்னத்தின் படமாக்கல் எங்கே வித்யாசமாகத் தொடங்கியதென்றால் சாதாரணமான காட்சிகளை அவற்றின் முன் பின்னான மௌனங்களை அதிகரிப்பது.அதாவது நாயகன் கமல் ஆகட்டும் தளபதி மம்முட்டி ஆகட்டும் பகல் நிலவு சத்யராஜ் ஆகட்டும் பெரிய மனிதர்கள்.நிறையப் பேசமாட்டார்கள்.அவர்களை நிறையப் பேர் சந்திக்க வருவார்கள்.அப்படி வருபவர்களை அவர்கள் முதலில் மாடியில் இருந்து பார்த்து ஒரு கும்பிடு அல்லது வணக்கம் செய்து விட்டு அப்புறம் நீண்ட நெடிய படிகளில் இறங்கி வந்து அவர்களையே சந்திப்பார்கள்.இப்படியான பில்ட் அப் காட்சிகள் அழகியலும் நிஜத்திற்கு சம்மந்தமே இல்லாத இருளும் குறைவான வசனங்களும் மணிரத்னத்தின் கையொப்பங்களாகின என்றால் இளையராஜாவின் இசை எங்கே ஆளவேண்டுமோ அங்கே ஆண்டது.எங்கே குன்றவேண்டுமோ அங்கே குன்றியது.மொத்தத்தில் இளையராஜாவின் இசையுடனான மணிரத்னத்தின் படங்கள் அவரது முதல் திரைகாலம் என்று கொண்டால் தன் பரிபாலனத்தை இளையராஜா குறையொன்றுமின்றி இசையால் ஒளிரச் செய்தார் என்பது இசைவழி மெய்ப்படுகிறது.
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...