அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புலன் மயக்கம் - 35 இங்கே இவிட இக்கடே - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   18 , 2017  23:20:08 IST


 

 

 அந்நிய நிலமென்பது வேறு அடுத்த நிலமென்பது வேறு தான்.இரண்டையும் பிரிக்கிற மிக முக்கியமான வேறுபாடாக அண்டை நிலத்தின் மீது இயல்பாகவே உருவாகி விடுகிற ஈர்ப்பைச் சொல்ல முடியும்.மலையாளமும் கன்னடமும் தெலுங்கும் நமது அண்டை மொழிகள் என்றாலும் கன்னடம் சற்றே தூரம்.மலையாளம் முற்றிலும் வேறான சினிமாக்களை எழுபதுகளிலிருந்தே முயன்றது.இங்கே தெலுங்குத் திரைப்படங்கள் மீது பெரும் வாஞ்சை தமிழ் ரசிகனுக்கு இயல்பாக எழுந்தது.மலையாள தேசத்தின் காமக்கதை சினிமாக்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது.அதே அளவுக்கு கேரளத்தின் தீவிர சினிமாக்கள் மீதும் பெரும் மரியாதை இல்லாமல் இல்லை. வெவ்வேறு சோலைகளுக்கு இடையிலான கிளைநதிகளாகவே கேரளசினிமாவின் உச்ச நீச்ச சினிமாக்கள் விளங்கின.
  

சிரஞ்சீவி கருமை நிறக்கண்ணன்.நம் ஊரில் எம்ஜி.ஆருக்கு அடுத்து யாரென்ற வினாவே எழவில்லை.நியாயத்துக்கு மோகனுக்கும் கமலுக்கும் தான் போட்டியே.இரண்டுபேரும் அடுத்தடுத்த முகங்களோடு இருந்ததும் ஹேர்ஸ்டைல் உள்பட எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் திரிந்ததும் கமல் உயிரைக் கொடுத்து ராஜபார்வை பார்க்க முயலுகையில் கொஞ்சூண்டு மைக்கும் ஏழெட்டுப் பாட்டுக்களும் தலையைக் குலுக்கி நடனமாடித் தெற்றுப் பல் தெரிய சிரித்து வெல்....மோகன் அதிரி புதிரியாக ஹிட்களை அடித்து ஆடினார்.,ஆனாலும் இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து முதலிடத்தைக் கவர்ந்த கரிய திராவிடன் ரஜனிகாந்த்.இங்கே என்ன மந்திரத்தை நிகழ்த்தினாரோ சமகாலத்தில் அதே மாதிரியான அதிரிபுதிரிகளை எல்லாம் ஓரங்கட்டித் தான் சிரஞ்சீவியும் தெலுகுதேசத்தில் நம்பர் ஒன்றாக தன் கொடி நாட்டினார்.
 

 சிரஞ்சீவி அக்கட தேசத்தில் நடமாடிய நெருப்பாகவே உருமாறினார்.அவர் என்ன செய்தாலும் ரசித்தார்கள்.எதிர்த்து ஆடுவதற்கு ஒன்றல்ல பன்னிரெண்டு கதாநாயகர்கள் ரகரகமாய் இறங்கினார்கள்.பாலகிருஷ்ணா வெங்கடேஷ் டாக்டர்.ராஜசேகர் நாகார்ஜூனா தொடங்கி நேற்று உடன்பிறந்த பவன் கல்யாண் இன்று அவரே பெற்றெடுத்த ராம்சரண்தேஜா என எல்லாருக்கும் முன்னால் முன்னாள் ஆகிவிடாத மின்னல் சிரஞ்சீவி.இதில் நம்மூர் நாயகி விஜயசாந்திக்கென்று ஒரு காலம் இருந்தது தனித்தகவல்.

முதன் முதலில் சிரஞ்சீவி நடித்த கேங் லீடர் படத்தைப் பார்த்தபோது அவருக்கு இன்ஸ்டண்ட் ரசிகனானேன்.என்னடா இது நாம வாழவேண்டிய வாழ்க்கை ஐதராபாத்ல தான் உந்தி போல இருக்கே என்று ஏங்கும் அளவுக்கு முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாவாக தெலுகு சினிமா எண்பதுகளின் மையத்திலிருந்து பல படங்களை உருவாக்கித் தள்ளியது.எங்கள் மதுரையில் செண்டிரல் நாட்டியா நர்த்தனா ராம் பத்மா ஜெயராஜ் என சிலபல தியேட்டர்கள் சிலபல ஆண்டுகள் தொடர்ச்சியாக தெலுகு டப்பிங் படங்களை மாத்திரமே திரையிட்டன.முதலுக்கு மோசமே வராத படங்கள் அவை.எப்படியும் நட்டமற்ற லாபத்தை ஈந்தமையால் எடு படத்தை பண்ணு டப்பிங்கை இந்தா அட்வான்ஸ்..இக்கட ரண்டி என்று வெறி கொண்டு அலைந்தார்கள் மிடில்வியாபாரிகள்.வரிசையாகப் பல நூறு படங்கள் வந்தன.
  

தமிழில் வாய்க்கவே இயலாத அரசியல் படங்களை வெகுவாக ரசித்திருக்கிறோம்.டாக்டர் ராஜசேகர் நடித்த மீசைக்காரன் எவனா இருந்தா எனக்கென்ன இதுதாண்டா போலீஸ் ஆகிய படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன.அதுவும் ராஜசேகர் மதுரைக்காரர் அக்கடதேசத்தில் புண்ணியம் சேர்த்தவர்.மதுரை ராமநாதபுரம் வினியோகஸ்தர் சங்கக் கட்டிடத்தின் பெயரே டாக்டர் ராஜசேகர் மாளிகை என்று தான் இன்றுவரை அடையாளம் சொல்கிறது.எங்காளுங்கோவ்..
 

ராஜசேகர் நரம்பு புடைக்க வசனம் பேசுவார்.எகிறி எகிறி அடிப்பார்.அவருக்கு குரல் கொடுத்தது அனேக ப்ராஜக்டுகளில் சாய்குமார் தான்.இவரும் நடிகர்.பின் நாட்களில் பாக்யராஜின் வேட்டிய மடிச்சுக் கட்டு மற்றும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் விஜய் நடித்த ஆதி படங்களில் எல்லாம் நடித்திருந்தாலும் என் ஞாபகத்தில் சாய் நுழைந்தது வெகுகாலம் முன்பே எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்த காவல்கீதம் படத்தில்.அட்டகாசமான ஒரு பாடல் இளையராஜா இசைத்திருப்பார்.

சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியே என்று.

 இன்றைக்கெல்லாம் கேட்டு மயங்கிக் கொண்டே இருக்கலாம்.ரகளையான மெலடி அது.
 

பூ ஒன்று புயலானது படம் விஜயசாந்தி நடித்து 100 நாட்கள் ஓடியது.புதூர் மூன்றுமாவடி விஜயலட்சுமி தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ரெண்டு மூணு நாட்களுக்கு ரத்தம் குளிரத் திரிந்தேன்.விஜயசாந்தி கத்துவதும் தொடர்ந்து அடிப்பதும் மனசின் ஆழத்தில் அடுத்தடுத்து பதிந்து போயின.அதன் பின் வைஜயந்தி ஐபீஎஸ்.இந்த ரகத்தில் பத்துப் பதினைந்து படங்கள் வந்திருக்கும்.ஒரு கட்டத்தில் விஜயசாந்திக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் உருவாயிற்று.அன்றைய காலகட்டத்தில் இந்திரன் சந்திரன் கமல் விஜயசாந்தி காம்பினேஷனில் வெளியான ஒரு டப்பிங் படம்.பெரிதாக ஓடவில்லை.இன்றைக்கு மிகவும் ரசிக்க முடிகிறது.தசாவதாரத்தில் ஒன்றாக மலர்ந்திருக்கலாம் என்ற அளவில் கமல் ஏற்ற மேயர் பாத்திரம் அல்டிமேட்.
 

 சத்ரு போலீஸ் லாக்கப் சூர்யா போன்ற படங்கள் விஜயசாந்தியின் ரசிகர் கூட்டத்தை அதிகரித்தன.இந்த நேரத்தில் தான் கேங் லீடர் படம் வெளியானது.,இந்தப் படம் மதுரையில் வெற்றிகரமாக 60 நாட்கள் ஓடியது.செகண்ட் ஷிஃப்டிங் எல்லாம் சேர்த்தால் 100 நாட்கள் சொல்லலாம்.ஒரு பர்ஃபெக்ட் கொண்டாட்டம் இந்தப் படம்.சிரஞ்சீவியின் நடனத்துக்கு நான் அடியவன் ஆனேன்.எனக்கே கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. நான் ரஜினி ரசிகன் உருவத்தில் டப் செய்யப்பட்ட சிரஞ்சீவி ரசிகன் தானோ என்று 


பல படங்களில் சிரஞ்சீவியை ரசித்திருந்தாலும் மாண்புமிகு மேஸ்திரி என்றோரு படம்.93இல் வெளியானது.சிரஞ்சீவிக்கு ரெண்டு ஜோடி.ஒரு கூலி மேஸ்திரி நாட்டுக்கே தலைவனாக மாறும் செமை கலர்ஃபுல் படம்.ரோஜாவும் மீனாவுமாய் தலைவரு கலக்கி இருப்பாரு.மதுரை செண்டிரல் தியேட்டரில் தொடர்ந்து மூன்று நாட்கள் வெவ்வேறு ஷோக்கள் பார்த்து ரசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன்.அப்போது பெரிதாகத் தோன்றாத ஒரு உபதகவல்.இன்றைக்கு எனக்கு நானே திகில் அடையும் தகவலும் கூட.அது யாதெனில் சூப்பர்மெகாஸ்டார் சிரஞ்சீவியாருக்கு அந்தப் படத்தில் குரல் கொடுத்திருந்தவர் சாட்சாத் நமது டெல்லி கணேஷ் அவர்கள்.கண் திறந்து பார்த்தால் சிரஞ்கணேஷாகவும் கண் மூடிக் கேட்டால் டெல்லிகணேஷாகவும் இன்பதுன்பசொர்க்கநரகாவஸ்தை அந்தப் படம்.வசனங்களும் இன்னதென்று வகைப் படுத்த முடியாமல் உன்னை கிழிச்சி துண்டு துண்டாக்கி தூன்னு துப்பி தூசி மாதிரி பறக்க விட்டுருவேன் என்றெல்லாம் பேசியே சாவடிப்பார்கள்.இத்தனைக்கும் மேலாக ரசிக்க முடியும்.முடிந்தது.
 

   கூலி நம்பர் ஒன் என்ற வெங்கடேஷ் படம்.ஈஸ்வர் எல்லாமே என் காதலி யாருக்கு மாப்பிள்ளை யாரோ காதல் தேவதை எனப் பல படங்கள் என் உள்படத் தமிழ் இதயங்களைக் கெடுத்தது.திவ்யபாரதி ஸ்ரீதேவி சசிகலா தொடங்கி கஸ்தூரி வரைக்கும் தமிழில் தோன்றாத அல்லது அதிகம் தோன்றாத பலரது பரிமளிப்பையும் ரசிப்பதற்கு டப்பிங் படங்கள் கண்கண்ட தேவதை தரிசனஸ்தலங்களாகின.கன்னத்தில் போட்டுக்கொண்டபடி அவர்களை ரசித்தேன்.
 

 கமல் படங்கள் ஸ்வாதிமுத்யம்=சிப்பிக்குள் முத்து சாகரசங்கமம்=சலங்கை ஒலி இவ்விரண்டும் டப்பிய தெலுங்குப் படங்கள்.முன்னதற்கும் பின்னதற்கும் என்னதொரு வித்யாசமெனில் முன்னதில் பாலசுப்ரமணியம் கமலுக்கு குரல் தந்திருப்பார்.பின்னதில் கமலே பேசி இருப்பார்.
 

 கன்னடத்தில் உருவாக்கப்பட்ட விஜயசாந்தி டைப் படங்களில் வரிசையாக மாலாஸ்ரீ என்றொரு நடிகை.சிலகாலம் இவரது கட்டுப்பாட்டில் என் ரசிகமனம் இருக்க நேர்ந்தது.இரண்டு விசயங்கள் அப்போது தெரியவந்தது.ஒன்று பாண்டியராஜன் படமான சின்ன சின்ன ஆசைகள் என்ற படத்தில் ஜோடியானவர் தான் மாலாஸ்ரீ என்பது.ரெண்டாவது விசயம் கன்னடப் படங்கள் எப்போதாவது தான் டப்பப் படும் என்பது.இந்த இரண்டாவது காரணத்துக்காக என் ஆஸ்தான தலைவியாக மறுபடி விஜயசாந்தியையே நியமித்துக் கொண்டேன்.
 

  மலையாளத்தில் இருந்தும் அவ்வப்போது டப்பிங்க் படங்கள் வந்தாலும் கூட தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான உண்மை என்ற படம் தான் எனக்கு நினைவில் வலுவாய் வேரூன்றிய முதல் மலையாள டப்பிங் படம்.அந்த வகையில் தெலுங்கு என்றால் எனக்குச் செல்லம் என்பது நெடுநாள் உண்மை.
 

  தெலுங்குப் படங்களில் கலைசார் உயர்சீரிய படைப்புகள் சங்கராபரணம் போன்றவை வெளியாகத்தான் செய்தன என்றாலும் அவற்றை டப்பிங் உலகம் பெருமளவு நிராகரிக்கவே செய்யும்.வணிக ரீதியிலான படங்களுக்கே என்றும் டப்பிங்குக்கான மவுசு இருந்தது.அப்படியான படங்கள் அவ்வப்போது சூட்டோடு சூடாக மொழிமாற்றப்பட்டு வெளியாகும்.நேரடித் தமிழ் படங்களுக்கும் டப்பிங் உலகத்திற்குமான முதல் முக்கிய வேறுபாடு என்ன தெரியுமா..?இங்கே ரஜனி ரசிகன் கமல் ரசிகன் என்ற வேறுபாடு இருந்தே தீரும்.அப்படியான வேறுபட்ட ரசிகர்கள் கூட ஒருங்கிணைந்து சிரஞ்சீவி படத்தையும் வெங்கடேஷ் படத்தையும் ரசிக்கமுடியும் என்பது தான்.அப்படியே ஆனது.அரசாங்கமும் திரைத்துறையும் செமை டென்ஷனாகி டப்பிங் படங்களுக்கு எக்கச்சக்க சதவீதம் வரிவிதித்து டப்பிங் படங்களின் வருகையைக் கட்டுப்படுத்தினது பிற்காலக் கதை.
 

இலகுவான நேரான கதை சொல்லல்.ஒரு வில்லன் சேர்வதற்கு ஒரு ஜோடி சேராமல் பரிதவித்து கண்ணீர் மல்க ஒரு ஜோடி ஒரு தங்கை கூட நாலு நண்பர்கள் என்றெல்லாம் கதை விரிய எங்கேயெல்லாம் முடியுமோ அங்கேயெல்லாம் ஐந்தாறு பாடல்கள் ஆறேழு சண்டைகள் என்று திரும்பத் திரும்ப ஞாபகந்தின்னும் பட்டாம்பூச்சிகளாகவே நூற்றுக்கணக்கான தெலுங்கு டப்பிங் படங்கள் வெளியாகின.நானும் அவற்றை எல்லாம் தளராமல் பார்த்தேன்.
 

அந்த வகையில் ராம்கோபால் வர்மா இயக்கிய சிவா தமிழில் உதயம் என்று வந்தது.நேரடித் தமிழ்ப்படங்களையெல்லாம் தாண்டி ஒரு ட்ரெண்ட் செட்டராகவே அமைந்தது.ரகுவரனின் விஸ்வரூபமும் நாகார்ஜூனாவின் இயல்பான நடிப்பும் உதயம் படத்தை வெற்றிபெறச் செய்தன.கிட்டத் தட்ட பத்து தடவைகள் அப்போதே பார்த்தேன் என்பது சொல்லவேண்டிய தகவல்.சித்தார்த்தா என்றோர் படம் நேரடியாகத் தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது.எங்கள் புதூரில் அப்போது கார்த்திக் தியேட்டரில் வெளியானது வனவாழ்க்கை பின்னணியில் நகரும் கதையும் காட்சிகளும் இன்னமும் கலங்கல் சித்திரங்களாக என் மனதாழத்தில் வலம்வருகின்றன.
 

 இசை ஓரியண்டேஷனில் டப்பிங் படங்களும் அவ்வப்போது வெளியாகத் தான் செய்தன.என்றாலும் அவற்றின் பாடல்களுக்கென்று தனி ஒலிவட்டு தயாரித்துக் கொள்ளுமளவிற்குப் பாடல்கள் சேர்வது சற்று அரிதான விசயம் தான்.இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விசயம் மோகன் நடித்த யாரோடு யாரோ நீ எந்த ஊரோ ()கார்த்திக் நடித்த கீரவாணி இரவிலும் கனவிலும் (பாடும் பறவைகள்)பனியில் நனையும் கவிதை இரண்டு (பல்லவி அனுபல்லவி) இதயத்தைத் திருடாதே படத்தின் அத்தனை பாடல்களாகட்டும் டப்பிங் என்ற வகைமையிலிருந்து மனதார விலக்கி அவற்றையும் தமிழ்ப்பாடல்களாகவே ஸ்வீகரித்துக் கொண்டது நான் மட்டுமல்ல.எண்பதுகளின் தலைமுறையே அவ்வாறானது தான்.


            உயிரே உயிரே இது சங்கீத சந்தோஷமோ...(எல்லாமே என் காதலி) 


            திசைமாறிப் போயாச்சு மனசு (உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்) 

 ராஜேஷ் கிருஷ்ணன் பாடிய நிலவொளிப் பாடல்.

முதல் முறை கேட்டதிலிருந்தே ஒரு ரகசியமான பறவையின் தனித்த முத்தத்தைப் போல இந்தப் பாடலைச் சேமித்து வைத்திருக்கிறேன்.மூலப்பாடலைச் சென்றடைய எனக்குப் பத்து வருடங்கள் ஆனது.அதன் பின்னர் மொழிபெயர்க்கப் பட்ட தமிழ்ப் பாடலோடு மூலப் பாடல் தெலுங்கிலும் இரட்டை சந்தோஷமாய் மனதில் தங்கின.


  சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் சின்னப் பைங்கிளி பூவே பொன் பூவே இது மலையாளத்தில் என்ன இனிமையைத் தந்ததோ அதைப் பன்மடங்கு ரெட்டித்துத் தமிழில் தந்தது ஆச்சர்யம்.இளையராஜா ஜேஸுதாஸ் ஜானகி கூட்டணியில் இன்னுமொரு சர்க்கரைவெல்லத்தேன் இந்தப் பாடல். 
            பூந்தென்றலே என்னோடு நீ வருவாயோ...(தமிழில் ஓட்டம் இந்தி தவுத் )  இந்தி டப்பிங் இதற்கு இசை ரஹ்மான்.ஜேஸூதாஸின் வனவேட்டைக் குரலின் ஜாலம் இதன் அபூர்வம்.
  ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க (தேவா ஹரிஹரன் தொலிப்ரேமா/ஆனந்த மழை)
                     

ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க இது யார் என இமைகள் கேட்க இவள் தான் உன்  இதயம் என்றது காதல்

உயிரைத் திறந்துவிடு புரியும் உனக்குள் இருப்பது யார் தெரியும்  மனதில் எனதுருவம் விரியும் காதல் 
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது... ஜில்லென்ற தீயில் ஜீவன் அலைகின்றது
எங்கே எங்கே எங்கே நீ எங்கே..
(ஒரு நாள் )
                ஆனந்த மழை ஒரு மெலோட்ராமா.ஒரு சண்டை பெரிய கண்களுடனான வில்லன் செமை டென்ஷன் க்ளைமாக்ஸ் ச்சேசிங் என அதுவரைக்குமான தெலுகுத் தேவைகள் எதிலும் உட்படாமல் வெகு இயல்பான குடும்பம் நட்பு பாசம் இன்ன பிற இன்னபிறவற்றுடன் வந்த படம்.நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இணையான பெரும் வெற்றியைப் பெறாத போதும் இன்றைக்கும் மனசுக்குப் பிடித்த படவரிசையில் தானாக வந்தமர்கிறது இந்தப் படம்.பவன் கல்யாணின் அற்புதமான நடிப்பும் தேவாவின் இசைபிரவாகமும் இந்தப் படம் பற்றிச் சொல்லியாகவேண்டியவை.


   சக்கரவர்த்தி ஜேடி நடித்த இதயமே இதயமே ஒரு ம்யூசிகல் ஹிட்.அதிலும் என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே அதிரிபுதிரி ஜாஸ்மெலடி.கேட்டால் மயக்கும்.


   இன்னும் சொல்லவேண்டியவை நீளும் மாற்றான் தோட்டத்து மல்லிகைப் படங்கள் தந்த ஓரின்பப் பேரின்பம் சொந்த மொழியில் வாய்க்காதது.மனசு மதில் கடக்கிற பூனை தானே..?அதற்குத் தாண்டியோட உதவுகிற வெளிச்சக் கீற்றெனவே மொழிபெயர்ந்து வந்த படங்களைச் சொல்ல முடியும்.மறக்க முடியாத மாபெரிய சந்தோஷம் காலத்தின் இணைநதிகள் கூழ்பனிக்கனவுகள் என்றும் இனிக்கும் ஞாபகங்கள்.

 

 
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...