அஜீத்குமாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.என் கல்லூரி காலத்தில் உதயமான பலரில் அஜீத் மீது எனக்குத் தனி வாஞ்சை பிறந்ததற்குக் காரணமே இல்லை.அவரைப் பிடிக்கும் என ஆரம்பத்தில் நான் சொல்லும்போது என் உடனாளிகள் சிலர் புதிராய்ப் பார்த்தார்கள்.எண்பதுகளின் மிஸ்டர் சாக்லேட் கார்த்திக் என்றால் அதற்கடுத்து அந்த இடத்தை வென்றவர் அஜீத் தான் என்பேன். வாலி வந்ததன் பின் அஜீத் புதிய ஜூரம் போல் பலரது மனசையும் கவர்ந்துகொண்டார்.நிற்க இந்த அத்தியாயம் அஜீத் பற்றியதல்ல.ஆனாலும் அஜீத்திடமிருந்து இதனைத் துவங்க வேண்டியது வேண்டுதலை என்பதால் வேண்டும் தலை. அமராவதிக்கு அப்புறம் ஆசை அதன் பிற்பாடு காதல் கோட்டை என அஜித்தின் கேரியர் ஸ்ட்ராங்காகவே அடுத்தடுத்த கவன ஈர்ப்பு வெற்றிகளுடனேயே அமைந்தது. அப்படி இருக்கையில் காதல் மன்னன் எனும் படம் பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த சரண் என்கிற சரவணன் இயக்கத்தில் வெளியானது.சரண் படங்களுக்கும் பாலகுமாரன் கதைகளுக்கும் இடையே ஒரு சின்ன ஒற்றுமை என்னவென்றால் கதைக்களன் குறித்த உப-நுட்ப-விவரணைகள் அழுத்தந்திருத்தமாக அமைந்திருக்கும்.பார்வையாளன் சென்று பாராத அல்லது தங்கித் தெளியாத அவனுக்கு பரிச்சயமான உலகத்தின் ஆழம் வரை சென்று அதனை மிக நேர்த்தியாக அவனுக்குக் காணச் செய்வதன் மூலமாகத் தான் சொல்ல வந்த கதையை விவரிப்பது சரணின் கதை சொல்லும் பாணி.

காதல் மன்னன் மேன்ஷன் மெக்கானிக் செக்யூரிட்டி சர்வீஸ் மெஸ் என அறிந்த உலகத்தின் அறியாத வாசல்களைத் திறந்து காட்டிற்று.ஒவ்வொரு படத்திலும் சரண் இவ்வாறான மைக்ரோ டீடெய்லிங்கிற்கான பெரும் சிரத்தையுடனேயே தன் கதைகளுக்கான களனை அமைத்துவருவது இன்றும் தொடர்கிறது.
சரண் படம் என்றாலே இசை பரத்வாஜ் என்று மனதில் பதிந்த கூடுதல் விபரம். ஒரே ஒரு படம் அதுவும் மோதிவிளையாடு என்பது மாத்திரம் தான் பரத்வாஜ் இசையமைக்கவில்லை.மற்ற அத்தனை சரண் படங்களின் சரண பல்லவிகள் அவர்வசமே வழங்கப்பட்டன.இப்படியான சேர்ந்தியங்கும் இணைகள் உலகெங்கிலும் சர்வதேசங்களின் சினிமாக்களிலும் பிரசித்தமானவை.அப்படியான இணைகள் சேர்ந்த பிற்பாடு விலகினாலும் பெரும் பரபரப்பான சேதியாக்கப்படுவது நிகழும்.இன்னமும் விடாமல் வைரமுத்துவும் இளையராஜாவும் எப்போ ஸார் சேருவாங்க என்று ப்ரபா ஒயின்ஸ் ஓனரை இரவில் அழைத்துக் கடை எப்ப ஸார் திறப்பீங்க என்று வடிவேலு கேட்பதைப் போலவே கேட்டுக் கொண்டிருப்பது ஓரிருவரல்ல. பலரும்.
சரண் படங்கள் பிற படங்கள் என்று பிரித்துக் கொள்ளலாம் பரத்வாஜ் முழுமையான இசைமேதை.இளையராஜாவின் வசத்தில் இருந்த அத்தனை பெரிய காலத்தை அத்தனை பெரிய கூட்டத்தை வசீகரிப்பது பெரும் சவால்.தன் தனித்துவத்தின் மூலமாக அசலான தன் பாடல்களால் இளையராஜா ரசிகர்களுக்குப் பிடித்தமான வெகு சில இசை அமைப்பாளர்களின் வரிசையில் பரத்வாஜூக்குத் தனி இடம் உண்டு.பரத்வாஜ் ரமணி பரத்வாஜ் என்ற பேரில் விழுதுகள் என்னும் தொடருக்கு இசை அமைத்தார்.அப்போது தனிப்பெரும் டீவீ சென்னைத் தொலைக்காட்சி மாத்திரமே.அதில் தினமும் ஒளிபரப்பப் பட்ட முழுமுதல் மெகாத் தொடர் விழுதுகள்.பல்வேறு சிறப்புக்களில் ஒன்று பரத்வாஜின் புத்திசை.
பரத்வாஜ் ஒவ்வொரு சரண் படத்திற்கும் ஒரு தீம் அதாவது மைய இசை ஒன்றை உருவாக்குவார்.அதிலிருந்து சகல திசைகளிலும் பல்கிப் பெருகும் பாடல் நதிகள்.என்னளவில் பரத்வாஜ் சரண் கூட்டணியின் காதல் மன்னன் அமர்க்களம் பார்த்தேன் ரசித்தேன் ஜெமினி ஜேஜே வசூல்ராஜா எம்பி.பிஎஸ். அட்டகாசம் அசல் வட்டாரம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப் பட்ட பாடல்கள் என்றே நிறுவ விழைவேன்.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் என்கிற அமர்க்களம் பாடல் தொடர்வசனத்தை நெருக்கமாய்க் கோர்த்த மாலை போலாக்கி உருவாக்கப் பட்ட பாடல்.மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு இள மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு பாடல் ஆன்மாவிலிருந்து பிறப்பிக்கப் பட்ட இசையோடு தொடங்கும்.பரத்வாஜ் சோகப்பாடல்களுக்கு அதுவரை இல்லாத புதுவண்ணத்தையும் புத்தம்புதிய இசைக்கோர்வைகளையும் வழங்கினார்.அவரது குரலில் பாடி உருவான அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற பாடல் எளிதில் கடந்து சென்றுவிடவே இயலாத பாடல்.பரத்வாஜ் சேரனுடன் இணைந்து உருவாக்கிய பாண்டவர் பூமி படத்தின் அத்தனை பாடல்களும் இனித்தன என்றால் ஆட்டோகிராஃப் தேசியவிருது உள்ளிட்டவைகளை சாத்தியப் படுத்தின.ஒவ்வொரு பூக்களுமே என்கிற முரண்வரி விஜய்க்குப் பாடலுக்கான தேசிய அங்கீகாரத்தை அளித்தது.ஜெமினி படத்தின் தலைகீழாப் பொறக்குறான் எனும் பாடல் அந்தரத்தில் வீழ்கிற வேகமான நகர்தலின் அச்சத்தைக் கேட்பவர் மனதில் உருவாக்கித் தருவது.
பரத்வாஜின் அடுத்த பலம் மெலடி பாடல்கள்.அத்தனை மென்மை குழந்தையின் வருடலில் தான் சாத்தியம் என்னுமளவுக்கு ஒன்று இரண்டல்ல பல பாடல்களைப் படைத்திருப்பார்.வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டது காதல் மன்னன் ரோஜாவனம் படத்தின் மனமே மனமே ஆகட்டும் உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை ஆகட்டும் பரத்வாஜ்யம்.எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளா..?இது வெறும் பாடலா..?இல்லைபாடல் வடிவ மந்திராலயம்.
கன்னட பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் குரலில் வட்டாரம் படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றன.இது காதல் காதல் காதல் காதல் தானா..?எனும் ஒன்றும் முதல் முதலா என்ற பாடலும் அத்யந்தமாய் ஒலிப்பவை. தனிப்பாடல்களின் மன்னன் எனலாம் உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே அதுவரைக்குமான அறிமுக ஆவர்த்தனங்களைத் தகர்த்தெறிந்தது.பெண் ஒருத்தி பெண் ஒருத்தி படைத்துவிட்டாய் ஜெமினி யார் தருவார் இந்த அரியாசனம் வட்டாரம் படத்தின் கூறத்தக்க பாடல்களில் ஒன்று.
ஸ்ரீனிவாஸ் குரலில் ஜேஜே படத்தில் காதல் மழையே காதல் மழையே பாடலை எத்தனை இரவுகள் தனித்தபடி கேட்டு உருகிக் கிடந்தேன் என்று கணக்கே இல்லை.பரத்வாஜின் இசை துல்லியம் குறிப்பிடவேண்டிய கூற்று.மேலும் பரத்வாஜ் தன்னாலான அளவு திரை இசை அமைப்பாளர்கள் கைவிட்ட அல்லது தூரத்தில் இருத்திய காற்றுக் கருவிகள் மற்றும் தந்திக் கருவிகள் அனைத்தையும் பிரமாண்டமாய் செல்வந்தமாய் உபயோகித்துத் தன் பாடல்களை உருவாக்கினார்.எண்பதுகளின் ஆரம்பத்தில் விடைபெறச் செய்ப்பட்ட கருவிகளை தொண்ணூறுகளின் இறுதியில் கைக்கொண்டார்.சொல்லப் போனால் ஒருவகையில் இது சிரமமே இல்லாமல் சிக்ஸர் அடித்ததற்குச் சமம் தான்.காலத்தின் வழி பயணிக்காமல் அதன் எதிர்வழியில் பயணிக்க முயலுகிற எத்தனை பெரிய இசை மேதைக்கும் இயங்குதளம் குறுகலாகவே அமையும்.வீ.எஸ்.நரசிம்மன் ரவி தேவேந்திரன் சம்பத் செல்வம் பாலபாரதி போன்றோர் அதற்கு உதாரணங்கள்.இந்த வரிசையில் தப்பிய வெகு சிலரில் பரத்வாஜ் ஒருவர்.கிட்டத் தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட சூப்பர்ஹிட் படங்களைத் தாண்டிய இசை அமைப்பாளரான பரத்வாஜ் தன்னால் ஆன அளவு காலத்தின் போக்கிற்கு எதிரான இசைக்கோர்வைகளை கருவிகளை கையாண்டவண்ணம் தன் பாடல்களை அமைத்தார்.
பார்த்தேன் ரசித்தேன் அவரது உச்சம் எனலாம்.பரத்வாஜின் திரைமுயல்வுகள் அவற்றின் ஆடியோவை முழுமையான ஆல்பங்களாக மாற்றின.அவற்றின் கேள்வியின்பம் படத்தின் தரிசனானுபவத்தைத் தாண்டி நீண்டன.மேலோட்டமாய்ப் பார்த்தால் இது சாதாரணமாய்த் தோன்றலாம்.ஆனானப் பட்ட ரஹ்மானின் பாடல்கள் படம் வருவதற்கு முன் சக்கை சக்கையாய்க் கேட்கப் பட்டதும் படத்தின் ஓட்டகாலம் முடிவடைந்ததும் ஆங்க்...நெக்ஸ்ட் என்று முடங்கி முடிவடைந்ததும் இங்கே கவனிக்கத் தக்கது.அப்படியான தொண்ணூறுகளின் மத்தியில் படங்களின் ஓட்டகாலத்திற்குச் சம்மந்தமே இல்லாத இருபதுக்கு மேற்பட்ட ஆல்பங்களைத் தந்த மாபெரும் இசைவல்லமை பரத்வாஜினுடையது என்பதே இங்கே செய்தி.
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது ஏன்னென்று அறியேனடி
ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது
(எனக்கென ஏற்கனவே ...)
மார்பிற்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகையாலே ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கை விடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் பேசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை
(எனக்கென ஏற்கனவே ...)
இந்தப் பாட்டைத் தன்னாலான அளவிற்குத் தமிழைத் தேனாக்கித் தானாக்கித் தள்ளி இருப்பார் வைரமுத்து.ஆனாலும் இசையெனும் நதி இன்றொரு தினம் மாத்திரம் மழை என மாயம் செய்தாற் போல் தன் தனித்த கோர்வைகளால் பாடலை ஒரு பரவச அனுபவமாக்கித் தந்தது பரத்வாஜின் மேதமை.இன்னும் அவரது ஞானப்பசி தீர்க்கும் வாய்ப்புகள் வந்து சேரவில்லை என்பது எனது ஊகமல்ல.தீர்மானம்.பரத்வாஜ் ஸ்வரசாகரம்.
***************************
இன்னொரு பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியது. எம்.எஸ்.ஆர் தமிழில் மலர்ந்த அபூர்வக் குரல்.உலகின் வேறெந்தக் குரலையும் ராஜேஸ்வரியின் குரலுக்கு இணையாக அல்ல அருகாமையில் கூட சிந்தித்து விட முடியாத தனித்துவம் மிக்கக் குரல் அவருடையது.பல காலம் தென் திரைகளின் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடுகிற ஒற்றையாய் அவரது குரல் விளங்கியது என்பது கூடுதல் தகவல் மாத்திரமே.
சட்டென்று அடையாளம் சொல்ல மியாவ் மியாவ் பூனைக்குட்டி அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே நான் சிரித்தால் தீபாவளி போன்ற பாடல்களைச் சுட்டமுடியும்.சேதி என்னவென்றால் ஒப்பிட முடியாத தன் பாடல்களை 1947 ஆம் ஆண்டு தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பட்டொளி வீசிப் பறந்த தாரகை தான் எம்.எஸ்.ஆர் என்பதே.மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா..?கொடிக்குக் காய் பாரமா பெற்ற குழந்தைதான் தாய்க்குப் பாரமா எனும் பாடல் யாராலும் வார்த்தெடுக்க முடியாத வார்த்தைச் சிற்பம்.புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே உங்கள் எண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க எனும் பாடல் எல்லோரும் அறிந்த இன்னொரு சூப்பர்ஹிட்.குழந்தைகளுக்கான பாடல்களை ராஜேஸ்வரி எஸ்.ஜானகி போன்ற வெகு சிலரே சாத்யப்படுத்தி இருப்பது கூறத்தக்க குறிப்பு.
கீழ்வரும் இந்தப் பாடல் ஒரு கோஹினூர் வைரம்.இதனை ஒரே ஒரு தடவை கேட்டுவிட்டுப் போய்விட முடியாது.எடுத்த எடுப்பிலேயே மயக்கிக் கேட்பவர் மனசை நாய்க்குட்டியாக்கி விடும் அற்புதக் குரல்.அப்பால் என்ன நிகழ்கிறதென்பது குறளிப் பித்தனைய மோனத்தவ ஆழ்தல் தான்.
படம் செங்கமலத் தீவு. பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை கேவீ மகாதேவன்
நினைப்பது நான் இல்லை நெஞ்சம் தானே
தொட்டுவிட்டால் என்னுடலில் தென்றல் பாய்ந்தது
ஒட்டிக்கொண்டால் என் மனதில் காதல் பிறந்தது
அணை போட்டு பார்த்தேன் நிற்கவில்லை
காதல் நினைவெல்லாம் அவன் மீது உறக்கமில்லை
உறக்கமில்லை
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைப்பது நானில்லை நெஞ்சம் தானே..,.
இந்தப் பாட்டை ஆரம்பிக்கிற முதல் வரியின் இறுதியில் இசையும் குரலின் தொனியும் இந்தப் பாடலை மெல்லிய தொன்மக் குழைதலாக ஆக்கி இருக்கும்.குழந்தமையைக் குரலில் பிரதிபலிப்பது குழந்தைகளாலேயே இயலாத கடினம்.அதனை சாத்யப்படுத்திய குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடையது.இளையராஜாவின் தானந்தனக் கும்மி கொட்டி எனத் தொடங்கும் அதிசயப் பிறவி பாடலுடைய மைய இழையும் மேற்காணும் பாடலின் பல்லவியில் மாத்திரம் காணக்கிடைக்கிற தொன்மரசத்தைப் பிரதிபலிப்பது ஆனந்தம் மாத்திரமல்ல இசையால் மட்டுமே வசமாகிற ஆச்சர்யமும்.
(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)