அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காம்ரேட் அப்பா! - புகழ் மகேந்திரன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:40:38 IST


Andhimazhai Image

ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு பழைய சைக்கிளில் இரவு 7 மணியளவில் கதவு அருகில் வந்து சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு நிற்கும் அப்பாவின் பிம்பம்தான் அழுத்தமாகச் சிறு வயது நினைவாக மனதில் பதிந்துள்ளது....

‘Capitalism down down‘ என்கிற  கோஷம்தான் சிறு வயதில் என் காதுகளில் விழுந்த முதல் பஞ்ச் டயலாக் ஆக இருக்க வேண்டும் ... கீழ்க்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் வெண்ணிலா பேக்கரி வரை பிக்னிக் ஆக என்னையும் தங்கையையும் அழைத்துச் செல்வார்; ஒரு மஃப்பின் கேக்குக்காக 2 கிமீ நடந்து செல்வோம். தியாகராய நகர் டீலக்ஸ் ஹோட்டல் பிரியாணியும், பாலன் இல்லம் சிங்காரவேலர் நூலகமும் தான் எங்களின் ஊட்டி,கொடைக்கானல்...

எல்லோரையும் தோழர் என்று அழைக்கும் அப்பா, கட்சித் தோழர்களை மாமா என்றும் அக்கா என்றும் தாத்தா என்றும் தான் அறிமுகப்படுத்துவார்......

‘எல்லா அப்பாவும் தீனி வாங்கிட்டு வராங்க' என்று அம்மாவிடம் நான் ஃபீல் பண்ணிச் சொல்லுவேன்.
‘என்ட்ட சில நாள் காசு இருக்கும்; சில நாள் காசு இருக்காது. தீனி வாங்கி வந்து பழக்கினால், தினமும் அப்பா தீனி வாங்கி வருவாங்கன்னு புள்ளைங்க ஏமாந்து போயிருங்க' என்று உதிரிப்பூக்கள் மகேந்திரனாய் அம்மாவிடம் பதில் சொல்லும் அப்பாவின் முகத்தில் அவ்வளவு சோகம் அப்பி இருக்கும்.

மாத இறுதியில் பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் கைமாத்து வாங்கித்தான் அம்மா வீட்டுக்கு அரிசி வாங்குவார். பொறியியல் சேரும் சமயத்தில் அப்ளிகேஷன் வாங்க 300 ரூபாய் காசில்லாமல் அடுத்த மாதச் சம்பளத்தில் முன் பணம் வாங்கி வரச் சொல்லி திருமலை மாமாவுக்கு போன் செய்தார், அப்பா.
ஒரே ஒருமுறை தஞ்சாவூர் கட்சி ஆபீஸில் என்னை குளிக்க வைத்தது, என்னையும் தங்கையையும் வண்டலூர் ஜூவுக்கு கூட்டிட்டுப்போய் கட்டு சாதம் ஊட்டி விட்டது, பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு ட்யூஷனில் நான் முட்டை மார்க் வாங்கிய போது சுவரில் இங்க் தெரிக்க அவர் கொடுத்தது கடைசி அறை.
அப்பாவைப் பற்றிய சிறு வயது, டீனேஜ் நினைவுகள் இவ்வளவே.

மற்ற அப்பாக்கள் மாதிரி நம்மை அவர் சைக்கிளில் டபுள்ஸ் கூட்டிப் போகவில்லையே என்று தோன்றும். எப்படா அப்பா அம்மா கூட டூர் போவோம் என்று தோன்றும். அப்பாவுக்கு நம் மீது பாசமே இல்லையோ என்று கூடத் தோன்றும். 2001-இல் ஐயா நல்லகண்ணுவின் பேத்தி சண்முகபாரதி லெப்டோஸ்பைரோசிஸ் என்கிற நோய் (எலிக்காய்ச்சல்) வந்து தவறி இருந்தார். அதே நோய் எனக்கும் வந்தது.

தோழர் மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களின் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். பன்னிரண்டு நாட்கள் அப்பா என்னுடன் இருந்தார். எனக்கு நோய் சிரமங்கள் இருந்தாலும் அப்பா என்னுடனேயே இருக்கிறார் என்ற சிறிய மகிழ்ச்சி இருந்தது. அம்மா பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமும், தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அப்பாதான் முழு நேரம் என்னுடனேயே இருந்தார்.

ஊசி செலுத்தும்போது அந்த மருந்து நம் நரம்புகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். நான் வலி தாங்க முடியாமல் அழுவேன். எனக்கு ஊசி செலுத்தும் போது மட்டும் அப்பா காணாமல் போய்விடுவார்
ஊசி செலுத்தி நான் அழுது ஓய்ந்தபின் அறைக்குள் வருவார்.

ஒரு முறை நான் அழும்போது அறையின் ஓரத்தில்  அவரும் வாயை பொத்திக்கொண்டு தோள் குலுங்க தேம்பிக்கொண்டிருந்தார். 16 வருடங்களில் முதல் முதலில் அப்பா அழுது அப்போது தான் பார்த்தேன்
அந்த 12 நாட்களில் என் அப்பாவின் பாசம் பென்சிலின் ஊசி மருந்து வழியாக என் உடல் முழுக்க பரவி இருந்தது.

நாங்கள் வாங்கிய 800 சதுர அடி பிளாட்டுக்கு 4000 ரூபாய் மாதத் தவணை. அப்பாவின் கட்சி ஊதியம் முழுக்க தவணைக்குப் போய்விடும். அம்மாவின் சம்பளம் ஐயாயிரத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துவோம். 2008 இல் நான் இன்ஜினீயரிங் முடித்த பின் வேலை கிடைத்தது. நானோ நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு 29000 ரூபாய் சம்பளம். வேலைக்கு சேர்ந்த மூன்று மாதங்களில் நான் வேலையை விட்டு சினிமாவில் நடிக்க தீர்மானித்தேன்..

என்னால் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து குடும்பம் மீண்டு விடும் என்று நம்பிக்கையோடு இருந்த அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மிகப்பெரிய சிரமத்தை தந்தது  என் முடிவு. அப்பா, அம்மா இருவரின் லட்சியப் பயணத்தில் எனக்கான, என் தங்கைக்கான கனவுப் பயணத்தையும் சேர்த்தே அனுமதித்தார்கள்.

இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருவரும் நிற்கிறார்கள். அப்பாவுக்கு கொரோனா உறுதியானது. ‘உங்க  அப்பா எம்.எல்.ஏ., எம்பி எல்லாம் ஆக மாட்டாரா? சொத்தே சேர்க்கல' என்ற பொதுக் கேள்விகளுக்கு.... அன்று எனக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளும் ‘என் குடும்பத்துல ஒருத்தர்ப்பா' .... என்கிற தோழர்களின் குரல் நடுங்கும் அக்கறையும் தான் பதில்.
கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் அட்மிஷன் போட  அப்பாவை அழைத்துச் செல்லும்போது ‘அப்பா ஆஸ்பத்திரியில எதுவும் சரி இல்லன்னா சத்தம் போட்டுறாதீங்க' என்று சொன்னேன்.

‘சரி இல்லன்னா எதிர்ப்பப் பதிவு செஞ்சுதானே தம்பி ஆகணும்' என்றார் அப்பா.
எங்களுக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் பெரிய தியாகங்களை செய்துள்ள என் தந்தைக்கும் தாய்க்கும் ‘எங்களுக்கு என்ன பெருசா செஞ்சீங்க' என்கிற வழக்கமான மகன்களின் வன்முறையான வார்த்தையை தவிர நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.


நீங்கள் எனக்கு தந்தை அல்ல,

நண்பர் தோழர் காம்ரேட்!

- புகழ் மகேந்திரன், சிபிஐ கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரான சி மகேந்திரனின் மகன்


(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை) 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...