தமிழ்நாட்டுப் பையனுக்கும் இங்கிலாந்து பெண்ணுக்குமான காதலை கலகலவென சொல்லும் திரைப்படம் தான் ப்ரின்ஸ்.
பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைப் பார்க்கும் சிவகார்த்திகேயன் (அன்பு). அதே பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேரும் நாயகி ஜெசிகா (மரியா ரியாபோஷாப்கா) மீது காதல் கொள்கிறார். அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால் மகனின் காதலுக்கு முட்டுக் கட்டைப் போடுகிறார் சத்தியராஜ். வெள்ளைக்காரர்கள் என்றாலே அவருக்கு ஆகாது. அதேபோல, மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே ஆகாது. இதற்கு நடுவில், இவர்களின் காதலைப் பிரிக்க பிரேம்ஜி தலைமையில் ஊரே திட்டம் போடுகிறது. சவால்களைக் கடந்து, இந்த காதல் கைக்கூடியதா என்பதே 'ப்ரின்ஸ்' படத்தின் மீதிக் கதை.
ஒரு நல்ல கலகலப்பான கதையை மிக எளிமையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் அனுதீப். வழக்கம் போல் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் எப்படியிருக்கும் அப்படித்தான் இந்த படத்திலும். வரும் காட்சியில் எல்லாம் காமெடியால் கலக்கிக் கொண்டே இருக்கிறார். டான்ஸ், நடிப்பு இரண்டிலும் மாஸ்காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜெஸ்ஸிகா பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் உக்ரைனிய நடிகையான மரியா ரியாபோஷாப்கா. அவர் பேசும் தமிழ் வசீகரித்தாலும் நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும். சத்தியராஜ் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால், நச்சென்று நின்றிருப்பார். சீரியஸான காட்சிகளையும் காமெடியாக்கி சொதப்பியிருக்கின்றனர்.
காவல் ஆய்வாளராக வரும் ஆனந்த்ராஜ் செய்யும் காமெடிகள் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. சூரி வரும் காட்சிகளில் சரவெடியாக இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றம் தான். வில்லனாக வரும் பிரேம்ஜி நல்லவனா? கெட்டவனா என்று குழப்பியடிக்கும் அளவுக்கான கதாபாத்திரம். வரிவரியாக வசனங்கள் பேசுகிறாரே தவிர எங்குமே பயமுறுத்தவுமில்லை, சிரிக்க வைக்கவுமில்லை. சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், பாரத், சதீஷ் ஆகியோர் அப்பப்போ வந்துபோகிறார்கள்.
"இவர்தான் எங்கப்பா... வயசுல என்னைவிட மூத்தவரு", "எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்கு பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?" போன்ற வசனங்கள் சரவெடி காமெடியாக வெடித்தாலும், காட்சியமைப்புகள் வலுவாக இல்லாததால் சில இடங்களில் அலுப்பை ஏற்படுத்துகின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு அழகோ அழகு. கலர்கலரான ஆடைத் ஆடை வடிவமைப்பு சூப்பர். தமனின் பின்னணி இசையும் பாடலும் படத்திற்கு ஓரளவு தாங்கிப்பிடிக்கிறது. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட அளவுக்குப் பாடல் வரிகள் ஈர்க்கவில்லை.
ப்ரின்ஸ் கொஞ்சம் சிரிப்பு; கொஞ்சம் அலுப்பு.