![]() |
பொன்னியின் செல்வன்: திரைவிமர்சனம்!Posted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 30 , 2022 17:18:09 IST
![]() பழிவாங்கலையும் சூழ்ச்சியையும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி எதிர்கொண்டது என்பதே பொன்னியின் செல்வன் முதல் பாக படத்தின் கதை.
சோழ மன்னர் சுந்தர சோழர் நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்க, அவரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) வடக்கு நோக்கி படை எடுத்து தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகிறார். இரண்டாவது மகனான அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) இலங்கை மீது படையெடுத்து சோழக் கொடியை பறக்கவிடுகிறார். மகள் குந்தவையோ சோழ சாம்ராஜ்ஜியத்தை சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற எண்ணுகிறார்.
சுந்தர சோழரிடமிருந்து ஆட்சி அதிகாரம் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு செல்லக் கூடாது என நிதி அமைச்சர் பழுவேட்டரையர் சிற்றரசர்களுடன் சேர்ந்து ஆலோசித்து சுந்தர சோழரின் பெரியப்பா கண்டராதித்தன் மகன் மதுராந்தகனை அரசராக நியமிக்க முடிவு செய்கிறார்கள்.
இது பற்றி அறிந்த ஆதித்த கரிகாலன் தன் தங்கை குந்தவைக்கும், அரசருக்கும் சொல்ல வேண்டும் என தனது நண்பன் வந்தியத்தேவனை தூது அனுப்புகிறார். இதனிடையே, பாண்டிய மன்னனைக் கொன்றதால் ஆதித்த கரிகாலனையும், சோழ சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்க பாண்டிய மன்னனின் படையினர் சபதமெடுக்கிறார்கள்.
பழுவேட்டரையரின் மனைவியும், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியுமான நந்தினியும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணை மீது ஆசைப்படுகிறார். இப்படிப்பட்ட சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சோழர்களின் வரலாறு, கல்கியின் புனைவு, பலராலும் வாசிக்கப்பட்ட நாவல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பெரிய நடிகர் பட்டாளம், கைதேர்ந்த தொழில்நுட்ப குழுவினர், ஐந்நூறு கோடி பட்ஜெட் போன்றவை பொன்னியின் செல்வன் மீதான எதிர்பார்ப்பை பூதாகரப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.
ஏறக்குறைய மூன்று மணி நேரம் செல்லும் படத்தில் ஓரிரு காட்சிகளே நம்மை சீட்டின் முனைக்குக் கொண்டு வருகிறது. கல்கி எழுதிய கதையில் பதவி ஆசை, துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, காதல், காமம், குரோதம் என உணர்ச்சி பெருக்கெடுக்கும் காட்சிகளும், வர்ணனைகளும் நிறைய இருந்தாலும், அதை திரைமொழியில் கொண்டு வர இயக்குநர் மணிரத்னம் முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, நாசர் என பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் எந்த கதாபாத்திரங்களும் வலுவாக உருவாக்கப்படவில்லை. அதற்கு காரணம், எல்லா கதாபாத்திரங்களையும் குறைந்த நேரத்தில் அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததும், எல்லா நடிகர்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டதாலேயே இது நிகழ்ந்திருக்கலாம். விக்ரமின் கோபமும், த்ரிஷாவின் சிரிப்பும், ஐஸ்வர்யாவின் சூழ்ச்சி குணமுமே கொஞ்சம் நம்மை ஆறுதல் படுத்துகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை சில இடங்களில் கதையின் போக்கிற்கு கைகொடுத்தாலும், பெரும்பாலான இடங்களில் கைகொடுக்கவில்லை. வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கிறோம் என்பதை ரஹ்மான் மறந்திருப்பார் போல. வரலாற்றுப் படத்திற்கான பாடல்கள் போல் எதுவும் படத்தில் இல்லை.
லைட், பிரேம் என ஒவ்வொன்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் அசத்தியிருக்கிறார். அவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் காட்டுவதில் சிக்கல் இருக்கும் என்பதால், நிலப்பரப்பு சார்ந்த காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கடற்கரை, அரண்மனை போன்றவற்றை மட்டுமே வைடு ஆங்கிளில் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். வரலாற்றுப் படத்திற்கான நியாயத்தை செய்திருக்கிறது விஎப்எக்ஸ்.
தோட்டா தரணியின் கலை இயக்கம், ஸ்ரீகர் பிரசத்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினர் உழைப்பு மெச்சதகுந்தது.
ஏற்கெனவே எழுதப்பட்ட கதையை திரைக்கதையாக்கும் பணியில் மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகிய மூன்று பேர் வேலை பார்த்திருக்கின்றனர். ஜெயமோகனின் வசனம் கதையின் போக்கிற்கு ஏற்றார் போல் உள்ளது.
பலராலும் திரைப்படமாக எடுக்க முயற்சிக்கப்பட்ட பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்தினம் அழகாக உருவாக்க முயற்சி செய்திருக்கிறார். அவரின் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.
|
|