அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வேளாண் சட்டங்கள்: சாதகமும் பாதகமும்! - அரசியல் கட்சியினர் கருத்து

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   08 , 2020  13:12:07 IST


Andhimazhai Image

வேளாண் துறையில் மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு சட்டமாகிவிட்டன. இவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சட்டங்கள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் பேசினோம்.

"விவசாயத்தில் அந்நிய முதலீடு" - வைகைச்செல்வன், அதிமுக

"வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இடைதத்ரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்துக்கொள்ள முடியும். இதுநாள்வரை இடைத்தரகர் தலையீட்டால் நிறைய நஷ்டங்களை விவசாயிகள் சந்தித்தனர்.

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் வியாபாரிக்கும் பயனளிக்ககூடிய திட்டமாக இந்த வேளாண் சட்டங்கள் உள்ளன. பெருநிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்போவதால் வேலைவாய்ப்பும் கட்டமைப்பும் உருவாகக்போகிறது. முதலீடு அதிகமாகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

தோட்டப்பயிர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு 12 மாதங்களிலும் சராசரி விலை அதிகரிக்கப்பட வேண்டும். தானியங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சராசரி விலை கூட வேண்டும். இதுதான் விவசாயத்தின் அடிப்படை விதி. இவ்வாறு விளைவிக்கப்படும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு இந்த சட்டத்திருத்தம் முழு சுதந்திரம் வழங்குகிறது. இதனால் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயத்திற்கு நேரடி அந்நிய முதலீடு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

உணவு விநியோக கட்டமைப்பில் சில நேரங்களில் குளிர்சாதனக் கிடங்கில் பொருட்களை பதுக்கிவைக்கும் வழக்கம் உள்ளது. வெங்காயம், தக்காளி போன்ற உணவு பொருட்களை பதுக்கிவைக்கும் சூழல் இருக்கிறது. வேளாண் சட்டத் திருத்தம் இந்த பதுக்கல் நடவடிக்கையை தடுக்கும். விலை ஏற்றம், தட்டுப்பாடு நேரும்போது யாரும் குறிப்பிட்ட உணவு பொருட்களை பதுக்கி வைக்க முடியாதபடி திருத்தங்களை மேற்கொள்ள இந்த சட்டங்கள் நெகிழ்வுத்தன்மையோடு வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வியாபாரம், வர்த்தகம் பெருகுகிறது. அடிப்படை ஆதார விலைக்கு இந்த சட்டத்தால் ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது.  

விவசாயிகள் முறையான போட்டி வணிகம் மூலம் லாபகரமன விலை பெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கெனவே உள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த வேளாண் விற்பனை மைய கட்டமைப்புகளையும் மேம்படுத்த இச்சட்டம் உதவும்.

இச்சட்டத்தில் “வணிகப் பகுதி” என்ற புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் வியாபாரம் செய்பவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் இச்சட்டத்தின்படி வசூலிக்கப்படமாட்டாது. விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் நிரந்தர கணக்கு எண் மட்டும் இருந்தால் போதுமானதாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் மூலம், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் போர், பஞ்சம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில் விலை உயர்வு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்து, முறைப்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. 100 சதவிகிதத்திற்கு அதிகமாகும்போதும், வேளாண் விளைபொருட்களின் விலையேற்றம் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்போதும், அவற்றின் இருப்பு அளவினை நெறிமுறைப்படுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, தமிழகத்திற்கு ஒப்பந்த கையெழுத்துபோட்டு மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற அபாயங்களை, தமிழ் மண்ணை நோக்கி அழைத்து வந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் என்பதை மறந்துவிட்டு, இன்று திமுக நல்லவர் வேஷம் போடுகிறது".


"இடைத்தரகர்களின் இடத்தை கார்ப்பரேட் நிறுவனமே நிரம்பிவிடும்" - அ. சரவணன், திமுக


வேளாண் சட்டத்திருத்தத்தில் குறைந்தபட்ச ஆதார விலை என்கிற அம்சமே இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுவதற்கான எந்த உத்தரவாதம் இந்த சட்டத்தில் இல்லை. இது வருங்காலங்களில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக எழக்கூடும். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், “இல்லை நாங்கள் உரிய ஆதாரவிலையை கொடுப்போமென” பிரதமர் கூறுகிறார். இங்கு சட்டத்தில் இருப்பதை நடைமுறைபடுத்துவதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் சட்டத்தில் இல்லாததை செய்வோமென பிரதமர் நரேந்திர மோடி கூறுவதை எப்படி ஏற்ப்பது? இதற்கு முன்னரும் இதுபோல் பல்வேறு வாக்குறுதிகள் மக்களிடம் அள்ளிவீசப்பட்டிருக்கின்றன. அதில் எதனை முழுதாக நிறைவேற்றியிருக்கிறார்கள்?

விவசாயத் துறையானது முற்றிலும் மாநிலப் பட்டியலில் இருந்த ஒன்று. அதனை இப்போது முழுவதுமாக கைப்பற்றும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

அதேபோல் இந்த சட்டங்களின் மூலம் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். அதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. இடைத்தரகர்களின் இடத்தை கார்ப்பரேட் நிறுவனமே நிரப்பிவிடும். விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதல் மற்றும் வணிகத்தில் பெருநிறுவனங்களின் பங்களிப்பானது 300 ஏக்கர்கள், 500 ஏக்கர்கள் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் சாதகமாக இருக்கலாம். வெறும் அரை ஏக்கர் ஒரு ஏக்கரில் குறைந்தளவு பயிரிட்டு வாழ்வை நகர்த்தும் ஏழை விவசாயி எப்படி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து வணிகம் செய்ய முடியும்?திறந்தநிலை சந்தையை கொண்டுவந்துவிட்டோம், இது விவசாயிகளுக்கு பல வகையில் உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்திற்கும் விலையை பெருநிறுவனங்கள் தான் தீர்மானிக்கும். ஒரு பெருநிறுவனத்தின் ஒப்பந்தமானது உண்மையில் யாருக்கு சாதகமாக இருக்குமென்பதை விளக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு லாபமளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்வார்கள். அதில் விவசாயிகள் மீதான அக்கறை இருக்கவே முடியாது. பல்வேறு வகையில் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். உதாரணத்திற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலேயே பெருமுதலாளிகள் புகுந்து சிறுவிவசாயிகளை நொடிந்துபோகச் செய்தனர். அப்படியென்றால் இந்தியாவில் இதன் விளைவு எப்படி இருக்குமென சிந்தித்துப் பாருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது சந்தையை விரிவுபடுத்துவதற்கான இலக்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அரிசி விளைந்தால் லாபமில்லை, சோளம் விதையுங்கள் அதனை வாங்கிக்கொள்கிறோம் என நிர்பந்திப்பார்கள்.

ஒப்பந்த சாகுபடி முறை தோல்வியடைந்த ஒன்று என்பதற்கு ஏற்கெனவே இங்கு கரும்பு விவசாயம் சிறந்த உதாரணம். ஒப்பந்த முறையில் கரும்பு விளைவித்த ஏராளமான விவசாயிகள் இன்றும் கரும்பு ஆலைகளிடம் நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் நிலைமைதான் தொடர்கிறது.

பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு எவ்வாறு தோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு இந்தியாவிலேயே பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். ஆரம்ப காலத்தில், ஏராளமான பெருநிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்தன. ஆனால் அவற்றில் இப்போது இரண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இதனால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். கார்ப்பரேட்மயமாக்குதல் இப்படியான விளைவுகளைதான் ஏற்படுத்த முடியும். அதிலிருந்து பாடம் கற்பதைவிடுத்து, நாட்டின் முதுகெலும்பாக திகழும் வேளாண் துறையையே கார்ப்பரேட்மயமாக்குவது  ஆபத்தானப்போக்கு.

விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனம் அதனை நஷ்டத்திற்கு விற்பனை செய்துவிடாது. விற்பனை விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். இதனால் நடுத்தர, விளிம்புநிலை நுகர்வோரும் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதிக விளைச்சல் காலத்தில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கல் செய்து, தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வார்கள்.

பெருநிறுவனங்களுடனான சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தை ஒரு எளிய உழவர் எதிர்கொள்வது சிரமான காரியம். ஒப்பந்தத்தில் தமக்கு சிக்கல் ஏற்படாத வகையில் அதனை வடிவமைத்துக்கொள்வார்கள், ஒருவேளை சிக்கல் எழும்போது எப்படி சட்ட விதிகளைக்கொண்டு அதனை தமக்கு சாதகமாக தீர்த்துக்கொள்வதென அவர்களுக்கு தெரியும், இதில் பாதிக்கப்படப்போவது அப்பாவி விவசாயிகள்தான்.

இடைத்தரகர்கள் பிரச்சினைக்கு உழவர் சந்தை மூலமே திமுக ஆட்சியில் தீர்வுகாணப்பட்டது. விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபடவும், நியாயமான விலையில் பொதுமக்கள் நுகரவும் உழவர் சந்தை வழிவகுத்தது. இன்றைக்கு விவசாய வணிகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் கிடைக்குமென சொல்லப்படும் நன்மைகளை உழவர் சந்தையே அன்று சாத்தியமாக்கியது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் உழவர் சந்தைகளை செயல்படாமல் செய்தனர். இப்போது அதே அதிமுக அரசு தான் பெரும்முதலாளிகளுக்கான விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது. வேலைவாய்ப்பு, அந்நிய முதலீடு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. விவசாயிகளையும் வேளாண்மையையும் அழித்து ஏற்படுத்தும் வேலைவாய்ப்பே நமக்கு வேண்டாம்.


"விலையை விவசாயியே தீர்மானிப்பான்" - எஸ்.ஆர். சேகர், பாஜக


"விவசாய மசோதாக்கள் குறித்து மக்களிடையே ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே இதுகுறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பாஜக அரசு எந்த சட்டம், திட்டம், திருத்தம் கொண்டுவந்தாலும் அதனை எதிர்ப்பது, போராட்டம் செய்வது தான்  எதிர்க்கட்சிகளின் வேலை. சமீபத்தில் நீட், புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது விவசாய மசோதாக்களை கையிலெடுத்திருக்கிறார்கள். முதலில் பஞ்சாப் தவிர வேறெங்கும் இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பே இல்லை. பஞ்சாபில் விவசாயத்தில் அரசியல்வாதிகள், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. விவசாய சட்டம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் அவர்களது தூண்டுதலில் அங்கு போராட்டம் நடக்கிறது.

இந்தியா முழுவதும் விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டமே இல்லையென்ற நிலையை, வேண்டுமென்றே போராட்டம் நடக்கும் சூழலுக்கு மாற்றிவிட்டனர். இதற்கு அரசியல் கட்சிகள் தான் காரணமேயன்றி விவசாயிகள் அல்ல.எந்த தொழிலாக இருந்தாலும், அதன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்த பொருளுக்கான விலையை நிரணயம் செய்கிறது. லாபத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட பொருளின் விலையை அவர்களால் நிரணயம் செய்யமுடிகிறது. ஆனால் 70 ஆண்டுகால் விவசாய துறையில் இது நிகழவே இல்லை. என்ன விலை கொடுக்கப்படுமென விளைவிப்பவனுக்கு தெரிந்ததேயில்லை. அதேபோல் யாரிடம் விற்கப்போகிறோம் என்கிற தேர்வையும் விவசாயியால் செய்துகொள்ள முடியாது. மாநிலங்களை கடந்து விளைபொருட்களின் விற்பனையை நடத்தமுடியாது. முதன்முறையாக விவசாயி தான் விரும்பும் விலைக்கு விற்கமுடியும், தான் விரும்பும் நபருக்கு விற்க முடியும், தேவையென்றால் மாநிலத்தை கடந்தும் விற்பனை செய்துக்கொள்ள முடியும் என்கிற வாய்ப்பை விவசாய சட்டங்கள் அளிக்கும். விவசாய உற்பத்தி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கி ஏதுவான இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துகொள்ள முடியும். இதற்கு ஆதார விலை என்கிற முறையே வேண்டியதில்லை. ஏனென்றால், உற்பத்தி பொருளுக்கு உரிய விலை வழங்கப்படாத நிலையில்தான் குறைந்தபட்ச ஆதாரவிலை என்கிற முறை தேவைப்பட்டது. ஆனால், இங்குதான் தனக்கான விலையை விவசாயியே தீர்மானித்துக்கொள்கிறானே! அப்போது ஏன் ஆதார விலையை பற்றி பேசவேண்டும்? ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டால் அது விளைப்பொருட்களை வாங்கும் நிறுவனத்திற்கே சாதகமாகிவிடும். விவசாயியின் தேர்வுக்கேற்ப அதிக விலையை கொடுப்பதற்கு பதிலாக, அதைவிட குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஆதாரவிலைக்கு பொருட்களை வாங்கி சென்றுவிடுவார்கள்.

விளைவிப்பவருக்கும் நுகர்வோருக்கு இடையில் யாருமே இருக்ககூடாது என்பதுதான் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயச் சட்டத்தின் பிரதான இலக்கு. இந்தியாவின் அனைத்து தொழில்களின் ஜிடிபி-யும் 20 - 30 சதவீதம் என்கிற அளவில் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் விவசாயம் 3% அளவில் தான் பங்களிக்கிறது. எனவே விவசாய பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும்போதுதான் அதன் ஜிடிபி உயரும்.

இப்போது போராட்டம் நடைபெறுவதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளன. விவசாய சட்டங்களால் பாதிக்கப்படுவது விவசாயிகள் அல்ல. இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும்தான். அவர்களால்தான் போராட்டம் நடக்கிறது. மீதமுள்ள பாஜக ஆட்சியில், இந்த சட்டத்தினால் விவசாயத்தின் ஜிடிபி உயர்வதை அனைவரும் பார்க்கத்தான் போகிறோம். அப்போது இதுப்போன்ற எதிர்ப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறர்கள். விவசாயிகள் மத்தியில் அச்சம் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இச்சட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் மட்டுமே அவர்களிடம் முன்வைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் பலன்களை உணர்ந்துகொள்ளும்போது விவசாயிகள் இதனை முழுவதுமாக ஏற்ப்பார்கள்".

 

- வசந்தன் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...