???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்நாட்டின் இரு துருவ அரசியல் சூழல் மாறுமா?

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   06 , 2016  22:54:56 IST


Andhimazhai Image

 

 

 

அதிமுக என்கிற கட்சி உருவாகக் காரணமாக அமைந்தது எந்த கொள்கைச்சிக்கலோ மக்கள் பிரச்னைக்கான போராட்டமோ இல்லை.  இரு ஆளுமைகளுக்கு இடையிலான உரசல்தான் காரணம். கலைஞர் மு.கருணாநிதியுடன் அவரது நீண்டநாள் நண்பராகவும் அண்ணாவுக்குப் பின்னர் அவர் முதல்வர் நாற்காலியில் அமரவும் காரணமாக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட உரசல்!. யார் பெரியவர் என்பதில் உருவான  இந்த மோதல் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தமிழக அரசியலைத் தீர்மானித்தது. இந்த இருதுருவ அரசியல் ஒருவிதத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் சாபக்கேடாகவும் இருந்தது என்று விமர்சகர்கள் கருதினாலும் அதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது.

 

1977-ல் எம்ஜிஆர் முதல்வர் ஆனபின்னர் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்தது பரஸ்பர வெறுப்பால் ஆன அரசியல் உறவுதான். சட்டமன்றங்களில் கடும் மோதல். நேருக்கு விழாக்களில்கூட சந்திப்பு இல்லை. ஒருவர்  வரும்போது இன்னொருவர் அங்கே இருக்கமாட்டார். மிக அரிதாகத்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். கட்சியில் மேல்மட்டத்தில்  நிலவிய முறுகல், கீழ்மட்டத் தொண்டர்கள் வரை நீடித்தது.

 

எம்ஜிஆர் உடல் நலிவுற்றபோது அவருடைய உடல்நிலை பற்றி, திமுக பேச்சாளர்கள் பேசிய பேச்சுகள் மிகவும் நாகரீகம் அற்றவையாக அமைந்தன. பின்னர் எம்ஜிஆர் திடீரென மரணம் அடைந்தபோது விடியற்காலையில் யாரும் கூடுவதற்குமுன்பே கருணாநிதி சென்று மலர் வளையம் வைத்துவிட்டு வந்தார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர் உடல்நிலை குன்றி இருந்தபோது தேர்தல் பிரச்சாரங்களில் நண்பர் என்றே கருணாநிதி அவரை விளித்தார்.

 

13 ஆண்டுகள் கழித்து 1989-ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். இதற்கிடையில் அதிமுகவில் இடையில் ஏற்பட்ட சிலமாத தொய்வுக்குப் பின்னர் அக்கட்சி மீண்டும் ஜெயலலிதாவின் கீழ் ஒருங்கிணைந்தது. பழைய எம்ஜிஆர்- கருணாநிதி  மோதலுக்கு அவர் உயிர் தந்தார். ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழல் இந்த மோதலை மேலும் வலுக்கச் செய்தது. சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி பட்ஜெட் வாசிக்கையில் ஏற்பட்ட நேரடி கைகலப்பு, ஜெயலலிதாமீதான மோசமான தாக்குதலாக மாறி இரு கட்சிகளும் எதிரணியினர் என்ற நிலையில் இருந்து எதிரி அணியினர் என்ற நிலைக்கு மாறும் மிகமோசமான எதிர்முனை உருவானது.

 

விளைவாக 1996-ல் ஆட்சியைக் கைப்பற்றிய திமுக ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் கைது செய்து ஏராளமான வழக்குகளால் துன்புறுத்தியது. இந்த ஊழல் வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை என்று சொல்ல இயலாது. ஆனாலும் இது திமுகவின் பழிவாங்கலாகக் கருதப்பட்டது.

 

ஆனால் அரசியலில் தராசுத்தட்டு ஒரே பக்கம் சரிந்திருப்பது இல்லை. அடுத்த தேர்தலில் அதிமுக ஜெயித்து ஜெயலலிதா முதல்வர் ஆனார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு கட்சிகளும் இரு முனைகளில் நின்று செயல்பட்டன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த நிகழ்ச்சிகளிலும் சந்தித்ததே இல்லை. சட்டமன்றத்திலும்கூட ஒருவர் இருக்கும்போது இன்னொருவர் அவையைப் புறக்கணிப்பார். மிக அரிதாகவே இருவரும் ஒரே நேரத்தில் அவையில் இருந்தனர். கருணாநிதியை எப்போதும் தீயசக்தி என்று கூறுவதையே ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிமுக, திமுக இரு கட்சிப் பேச்சாளர்களும் மேடைகளில் வாயைத் திறந்தால் வசை மாரி பொழிவதுதான் வரலாறு.

 

காலம் சிறந்த பாடம் புகட்டும் கருவி. 2006ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதியோ, 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ பழைய பகைமையை மனதில் வைத்து ஒருவரை மீண்டும் சிறைக்கூடத்துக்கு அனுப்பவில்லை. வழக்குகள் மட்டும் தொடர்ந்தன. இடையில் முரசொலிமாறன் மரணமடைந்தபோது அதிமுக சார்பில் இரங்கல்கள்கூட சொல்லபடவில்லை. மாறாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

 

தற்போது ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் கருணாநிதி ஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும் என வாழ்த்தினார். முகஸ்டாலினும் ராசாத்தி அம்மையாரும் அப்போலோ சென்று பார்த்துவந்தனர். தமிழக அரசியலில் புதிய நாகரிகம் முகிழ்த்ததாகப் பேசப்பட்டது.

 

இப்போது ஜெயலலிதா மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார். இந்நிலையிலாவது இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர்     பொதுப்பிரச்னைகளில் சந்தித்துக்கொள்வார்களா? எதிரிகளாகக் கருதாமல் எதிர் அணியினராகச் செயல்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

ஆனால் ஒரு விஷயம் எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து செயல்பட்டனர். பின்னர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒரு எதிர்த்துச் செயல்பட்டனர். இது தமிழகத்தின் அரசியல் முழுக்க இந்த இரு ஆளுமைகளையும் கட்சிகளையும் சார்ந்து செயல்பட உதவுவதாக அமைந்தது. இந்த போட்டியில் வேறு எந்த கட்சிக்கும் வளர்வதற்கு இடம் இல்லாமல் போனது.

 

எழுபதுகளின் இறுதியில் திமுக- அதிமுக இரு கட்சிகளையும் இணைக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. கட்சிப்பொறுப்பை கருணாநிதியும் ஆட்சிப்பொறுப்பை எம்ஜிஆரும் பார்த்துகொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் அதை எம்ஜிஆர் ஏற்க மறுத்துவிட்டார். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் அது கருணாநிதி- எம்ஜிஆர் இருவருமே சேர்ந்து எடுத்த கூட்டு முடிவாகக்கூடத் தோன்றலாம். இருவரும் இணையாமல் எதிர் அரசியல் செய்ததன் விளைவாகத்தான் தமிழகத்தின் பெரும்பாலான வாக்கு வங்கி இந்த  இரு கட்சிகள் இடையே மட்டும் இருந்தது, வேறு புதிய கட்சியோ தலைவரோ தோன்ற முடியவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தேய்ந்தது. பாஜகவுக்கு வளர்ச்சியே இல்லை. இந்த இரு துருவ அரசியல் எம்ஜிஆருக்குப் பின்னாலும் தொடர்ந்தது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக –திமுக இருகட்சிகள்தான் தமிழ்நாட்டில். அவைகளைச் சார்ந்து இயங்காத வேறு எந்த கட்சிகளுக்கும் இடமே இல்லை என்று துடைத்து எறிந்தது. இது ஒருவிதத்தில் இரு கட்சிகளுக்கும் வெற்றி. அதே சமயம் ஜனநாயகத்துக்கு மாற்றுக்குரல்கள் வரமுடியாத இழப்பு.

 

இது ஒரு புறம் இருக்கட்டும். பரஸ்பர வெறுப்பில் உருவான இந்த இரு துருவ அரசியலின் மோசமான பக்கம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறிச் செயல்படுவதற்கான வாய்ப்பையே தரவில்லை. பொதுவான மாநிலப் பிரச்னைகளில் கூட ஒரே அணியில் திரளமுடியவில்லை. 

 

இன்று ஜெயலலிதா என்கிற ஒரு துருவம் இல்லை. இன்னொரு துருவமாக இருக்கிற கருணாநிதியும் முதுமையின் பிடியில் இருக்கிறார். இருதுருவ அரசியல் மறைந்து பல்துருவ அரசியல் தமிழ்நாட்டில் முகிழ்க்கும் வாய்ப்பு தொலைவானத்தில் தெரிகிறது. உண்மையில் அது உருவாகுமா? அப்படி உருவானால் அது தமிழ்நாட்டுக்கு நன்மைகளைத் தருவதாக அமையுமா?

 

இந்த கேள்விகளுக்கான பதிலை காலம் சொல்லட்டும்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...