அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் அதிகாரி 0 சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர் 0 விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு 0 டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது மத்திய குழு 0 சென்னை உயர்நீதிமன்றம்: 5 நீதிபதிகள் பதவி ஏற்பு! 0 கர்நாடக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் களம்! 0 அதானி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் 0 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர்! 0 கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும்: அண்ணாமலை விருப்பம் 0 சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 0 திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல: திருமாவளவன் 0 மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி 0 வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு 0 பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் 0 பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   04 , 2022  14:48:05 IST


Andhimazhai Image

இது ஒரு வித்தியாசமான கதை. எல்லா ஆசிரியர்களும் தங்கள் கதையை வித்தியாசமானதாகத் தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் ஆரம்பிக்கிறார்கள்.. அப்படியாக இல்லாமல் இது உண்மையாகவே வித்தியாசமானது தான். நாய்களுடனான என் அனுபவங்கள், நான் நாய் வளர்த்த கதைகள் இதைத்தான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

நான் முதன் முதலில் வளர்த்த நாய் பெயர் 'ப்ளூட்டோ'. ப்ளூட்டோ என் மனதிற்கு மிகமிக நெருக்கமானது. கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ப்ளூட்டோவை மீண்டும் உயிருடன் தாருங்கள் என்பேன்.. ப்ளூட்டோ என்னிடம் வரும் முன்பு நான் பாசம் வைத்த, என்மேல் பாசம் வைத்த நாய்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அதனால் இந்த முதல் அத்தியாயத்தை ஒரு முன்கதை என்று வைத்துக் கொள்ளலாம்.

சேகர், பப்பு மற்றும் பலர்...

நாய்களின் வாலாட்டலில் மயங்கி, அவை ஆசையாகப் பின்னால் வருவதையும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தலையை நீட்டி தன்னை தடவிக் கொடுக்கச் சொல்வதையும் பார்க்கும் எந்த ஒரு குழந்தையும் ஒருமுறையேனும் தன் அம்மா அப்பாவிடம், 'நாமளும் ஒரு நாய் வளர்ப்போமாப்பா?' என்று கேட்காமல் இருந்திருக்காது.

குழந்தை என்றால் தனக்குக் கீழ், தன் மிரட்டல் உருட்டல்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு உயிரினம் என்ற எண்ணம் பெரியவர்களுக்கு உண்டு. அப்படியான ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், இப்போது தான் நடக்கப் பழகிய குழந்தையிடமும் மரியாதை செலுத்தி வாலாட்டும் நாய்கள் மீது குழந்தைகளுக்கு தனிப்பாசம் வருவது இயல்பு தானே..

எனக்கு நினைவு தெரிந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாதம் ஒரு முறையாவது, நாம் ஒரு நாய் வளர்த்தால் என்ன என்று என் பெற்றோரிடம் கேட்டிருக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகின் பிற பெற்றோரைப் போலவே, 'இருக்கிற ரெண்டு நாய்களையே வளர்க்க முடியலை.. இதுல இன்னொண்ணா?' என்ற பதிலே எப்போதும் கிடைத்து வந்தது. இந்த பதிலை எப்போது சொன்னாலும் அன்று தான் புதிதாகச் சொல்வது போலவே ஒவ்வொரு முறையும் சொல்வார் என் அம்மா.

'நாய் கொஞ்ச காலத்துக்குத் தான் உயிர் வாழும். அது மேல ரொம்ப பாசம் வச்சுட்டு அதுக்கப்புறம் பிரிஞ்சு போறது ரொம்ப நாளைக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும்' என்ற பதிலை ஒவ்வொரு முறையும் வேறு வேறு எடுத்துக்காட்டுகளுடன் அப்பா கூறுவார்.

அதனால் பக்கத்து வீட்டு நாய்களை என் நாய் என்று நினைத்து கொஞ்சநாள் திருப்திப் பட்டிருக்கிறேன். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது குற்றாலத்தில் வாங்கிய ஒரு பச்சை கலர் ப்ளாஸ்டிக் நாய் பொம்மைக்கு பிரபு என்று பெயர் வைத்து அதன் கழுத்தில் ஒரு கயிறைக் கட்டி அங்கும் இங்கும் இழுத்துக்கொண்டு போவேன். நாளடைவில் அதற்குக் காது பிய்ந்து போய் இருக்கிறது, அதன் சக்கரம் உடைந்து போயிருக்கிறது, அதன் சிவப்பு நிற, வழுவழுப்பான சக்கரங்களை மாற்றி கருப்பு கலர் சக்கரங்களை யாரோ மாட்டித் தந்தார்கள். மாற்றித் தந்தவரின் முகம் நினைவுக்கு வரவில்லை, ஆனால் அவரது கரங்கள் பிரபுவை கவிழ்த்திப் பிடித்து ஒரு காரில் இருந்து கழற்றிய சக்கரத்தை கம்பியால் முறுக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த பிரபுவுக்கு கழுத்தில் மணி கட்டுவது, ஒரு சட்டையைப் போட்டு விடுவது, ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டி அங்குமிங்கும் இழுத்த பல சந்தோஷமான தருணங்கள் வாய்த்தன. இன்றும் என் வீட்டுப் பரணில் ஒரு பையில் பிரபு அமைதியாகப் படுத்திருக்கிறான்.

தெரு நாய்கள் சிலவற்றின் உருவங்கள் மனதில் நிற்கின்றன. அவற்றிற்கு ஆதிகாலத்துப் பெயர் என்னவாக இருந்தாலும் தெருநாய் என்ற பதவிக்கு வந்த பிறகு அதற்கு ஒரு தருணத்தில் மணி என்ற பெயர் கிடைக்கிறது. வெகுவிரைவில் நம்ம தெரு மணி, நம்ம மணி ஆகிறது. 'வேற எந்த நாயையும் நம்ம மணி தெருவுக்குள்ள விடாதுடே!' என்ற வார்த்தைகள் நாங்கள் பேசியவை.. அதே வார்த்தைகள் இதோ இப்போதும் என் வீட்டினருகில் கேட்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் என் தங்கை வீட்டருகே இருந்த இரண்டு நாய்களை நாங்கள் கவனிக்க நேர்ந்தபோது மணி, மினி என்றே அவைகளுக்குப் பெயர் வைத்தோம்.

'நம்ம நாய்', அதாவது நமக்கு நெருங்கிய தொடர்புள்ள நாய் என்று நான் முதன் முதலில் சொந்தம் கொண்டாடியது பப்பு நாயைத் தான். லட்சுமி ஆச்சி வீட்டில் அதை வளர்த்தார்கள். Fawn colour என்பார்களே, ஒரு அழுக்கான வெள்ளை நிறம், அந்த நிறத்தில் இருந்தது அது. நல்ல அறிவாளி, சொன்னதைக் கேட்கும், பூனைகளைத் துரத்தோ துரத்தென்று துரத்தும்.. ஆனால் எப்படியோ மனிதர்களைக் கடிக்கப் பழகி விட்டது. அதனால் தெருவைக் கடந்து செல்லும் மக்களின் பயத்தையும் வீட்டினரின் கோபத்தையும் சம்பாதித்தது.

'உங்க நாய் கடிச்சிருச்சு' என்று புகார் கூறுபவர்கள் அதிகமானார்கள். 'பப்பு சனியனை சோலியை முடிச்சுர வேண்டியது தான்' என்று லட்சுமி ஆச்சி வீட்டில் சொல்ல ஆரம்பிக்க, நானும் பப்பு மேல் பிரியம் வைத்த வேறு சில சிறுவர்களும் சேர்ந்து புகார்தாரர்களை ஆச்சி வீட்டுக்குள் விடாமல் வாசலிலேயே வைத்து, 'அது நல்ல நாய் தான், ஏதோ தெரியாம கடிச்சிருச்சு'  என்று சமாதானம் செய்ய முயன்ற கதைகளும் நடந்தன.

அப்புறம் பப்புவிடம் கடி வாங்கிய ஒரு சிறுவன் இறந்து போனதாகவும் நாய்க்கடி விஷமே அதற்குக் காரணம் என்றும் ஒரு பேச்சு உலவியது. 'பப்பு கடிச்சுரும்' என்று என்னையும் லட்சுமி ஆச்சி வீட்டுக்குப் போக விடவில்லை. இன்று யோசித்துப் பார்த்தால் அந்த சிறுவன் நிச்சயம் ரேபீஸால் இறந்திருக்க மாட்டான், வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவன் இறந்து போய் பல மாதங்கள் கழித்தும் பப்பு ஆரோக்கியமாகவே சுற்றிக் கொண்டிருந்தது என் எண்ணத்திற்கு வலு சேர்த்தது.

 இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக பப்புவை ஒரு நாய் பிடிக்கும் குழு வந்து பிடித்துவிட்டுச் சென்றது. அவர்கள் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் என்ன செய்வார்கள் என்று நான் பார்ப்பவர்கள் அனைவரையும் கேட்பேன். கறி வச்சு சாப்பிடுவாங்க, அடிச்சுக் கொன்னு புதைச்சிருவாங்க, வீட்ல வளப்பாங்க என்று வேறு வேறு பதில்கள் கிடைத்தன.

அதில் 'அவங்க காட்டுல வேட்டைக்குப் போறவங்க.. அதனால வேட்டைக்குப் பழக்கி நல்லபடியா வச்சுக்குவாங்க' என்ற பதிலே எனக்குப் பிடித்தமானதாக இருந்ததால் இன்றுவரை அதுதான் நடந்திருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

பப்புவுக்கு அடுத்தபடியாக என் தோழி பிரேமாவின் வீட்டில் இருந்த சேகர் என்ற நாய் என் நட்பு வட்டத்தில் இணைந்தது. வெள்ளைக் கலரில் ஆங்காங்கே கருப்பு திட்டுகளுடன் இருக்கும் அந்த நாய். ஹெச். எஃப் வகை மாடுகளிலும் அதேபோன்ற வண்ணம் உண்டல்லவா.. அப்படியான மாடுகளை பார்த்தால் 'மேப் (map) மாடு' என்று கூறுவோம். அதே பழக்கத்தில் சேகரையும் 'மேப் நாய்' என்று கூறி வந்தோம். பிரேமாவின் வீடு எங்களுக்கு அடுத்த வீடு என்பதால் சேகர் அடிக்கடி எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்து விடுவான்.

அம்மா ஆசையாக வைத்திருந்த ரோஸ் செடிகளை சேகர் ஒரு முறை தோண்டிப் போட்டதால் பகலில் எப்போதும் திறந்திருக்கும் எங்கள் கேட், சேகருக்குப் பயந்து பூட்டப்பட்டது. இருந்தாலும் அவ்வப்போது எட்டிப் பார்த்து விட்டுப் போவான் சேகர். பல சமயங்களில் எங்கள் வீட்டுவாசலில் மலம் கழித்து வைத்ததால் 'ஏ சேகர்! போ!' என்று சத்தம் எங்கள் வீட்டுக்குள் இருந்து அடிக்கடி கேட்கும். பல தருணங்களில் சரியாக நாங்கள் 'சேகர், வெளியே போ!' என்று சொல்லும் நேரத்தில் எங்கள் அன்புக்குரிய மாமாவான சேகர் மாமா எங்கள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருப்பார்.

'உங்களைச் சொல்லல மாமா! சேகர் நாயைச் சொன்னோம்' என்று சமாளிப்போம். அந்தத் தெருவில் இருந்து வீடு மாறி போனபின் சேகருக்கும் எனக்குமான பந்தம் முடிவடைந்துவிட்டது. அதன் பின் அவ்வப்போது நான் பழைய தெருவில் எட்டிப் பார்க்கும்போது லேசாக வாலாட்டுவதுடன் சேகர் நிறுத்திக் கொள்ளும். 'இதே நம்ம பப்பு நாயா இருந்தா நாம புது வீட்டுக்கு வர்ற வரைக்கும் கூடவே வரும்லா' என்ற எண்ணம் அடிக்கடி எழத்தான் செய்தது.

 திருமணமாகி புதிய ஊருக்கு வந்த புதிதில் என் புகுந்த வீட்டினர் டைசன் என்ற தெரு நாய்க்கு உணவளித்து வந்தனர். எங்கள் வீடு மற்றும் என் கணவரின் இரண்டு அக்காக்கள் வீடும் அதே தெருவில் இருந்ததால் மூவர் வீட்டிலும் மாற்றி மாற்றி சாப்பிட்டுக் கொள்ளும் டைசன். என் இரு நாத்தனார்களின் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருப்பார்கள். அவர்களுக்குத் துணையாக டைசன் வந்துசெல்லும்.

அந்தத் தெருவில் ரத்த வெறி பிடித்த பத்து தெரு நாய்கள் இருந்தன. 'கொரில்லா' போன்ற பல போர் முறைகளில் அவை திறமை பெற்றவை. அந்த நாய்கள் சேர்ந்து வேட்டையாடுவதை ஒரு உயரமான மொட்டை மாடியில் நின்று பார்த்தால் பல ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடுவதைப் போல் இருக்கும்.  கூட்டமாகப் போகும் பன்றிகளில் ஒன்றைமட்டும் தனியாக ஒதுக்கி, காலியாக கிடந்த பெரியதொரு வீட்டு மனையின் புதர் மண்டிய இடங்களில் ஆங்காங்கே ஒளிந்திருந்து வேட்டையாடித் தின்றுவிடும்.

ஒருநாள் அவை ஒன்றுகூடி டைசனையும் கடித்து விட்டன. என் நாத்தனார் வீட்டு மாடிப்படியில் படுத்து விடிய விடிய ரத்தம் சிந்தி காலையில் உயிரிழந்து விட்டான் டைசன். நாங்கள் அதிகாலையில் அவனைப் பார்த்த போது சாவின் விளிம்பில் இருந்தான். அவனை கனத்த மனதுடன் அந்தக் காலி இடத்திலேயே புதைத்தோம்.

நாய் வளர்ப்புடன் சேர்ந்தே வருவது சோகமான பிரிவு என்று அப்பா சொல்வது சரிதான், இனிமேல் நாயே வளர்க்கக்கூடாது, நாய்க்கு ஆசையும் படக்கூடாது என்று டைசன் அத்தியாயம் என்னை எண்ண வைத்தது. ஆனால் இப்போதைக்கு முடியப் போவதில்லை நாய்களுக்கும் எனக்குமான பந்தம் என்று கூறுவது போல எங்கள் வீட்டிற்கு, சொல்லப்போனால் எனக்கே எனக்கு என்று ப்ளூட்டோ வந்து சேர்ந்தான்..

 

(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...