அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாசக்கார மனிதர்கள்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   04 , 2020  01:38:35 IST


Andhimazhai Image
என் கிளினிக்குக்குள் அந்த பெண்மணி நுழைந்தார். வரவேற்று அமரவைத்தேன். அவர் கையில் ஒரு பெண் பூனை. அவர் என் மருத்துவமனை வாடிக்கையாளர். வீட்டில் ஏராளமான பூனைகளை வைத்திருந்தார். ஆனால் எதற்கும் கருத்தடை செய்திருக்கவில்லை.
 
நிறைய எண்ணிக்கையில் பூனைகள் அவர் வீட்டில் பெருகியதால் கருத்தடை செய்துவிட முடிவு செய்து என்னிடம் வந்திருந்தார்.
 
அவர் கையில் இருந்த பூனை மிக அழகாக இருந்தது. அவருக்கு இந்த பூனைமீது உயிர்.
 
என் அறையில் மேசை மீது கொண்டுவந்து வைத்தார்கள். அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளை செலுத்தவேண்டும். கதவை மூடினோம். ஏனெனில் பூனைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். அவை மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிவிடும். பின் அவற்றைப் பிடிக்க முடியாது. அதன் உரிமையாளர்களுக்கு பெரும் மனக்கஷ்டம் ஏற்படும். அவை பின்னர் கிடைக்காமலே போய்விடும். இதுபோல் தங்கள்பிரியத்துக்குரிய பூனைச் செல்லங்களை இழந்தவர்கள் ஏராளம்.
 
ஊசியை எடுத்தேன். அந்த பூனைக்கு எங்கள் தோற்றத்தையும் பேச்சையும் பிடிக்கவில்லை. ஊசியை அருகே கொண்டுபோனபோது, சிலிர்த்துக்க்கொண்டு தாவியது. கதவைத்தான் அடைத்திருந்தோம். ஜன்னல் அருகே இருந்த இன்னொரு சிறு ஓட்டையை அடைக்க மறந்துவிட்டோம். அதன் வழியாக ’எஸ்கேப்’. எங்கே போனதென்றே தெரியவில்லை. என் கிளினிக், சுற்றி இருக்கும் தெருக்கள் எனத் தேடியும் கிடைக்கவில்லை.
 
அந்த பெண்மணி அன்று இரவு வரை அங்கேயே பூனையைத் தேடி சுற்றிக்கொண்டிருந்தார்.
 
அன்றிரவு நல்ல மழை. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். மணி இரண்டு இருக்கும். போன் அடித்தது. பூனைக்கார பெண்மணிதான் அழைத்தார்.
 
“சார்.. நல்ல மழை பெய்யுது..”
 
“ஆமாங்க”
 
“அய்யோ இந்த மழையில் என் பூனை என்ன ஆகுமோ?”” அழ ஆரம்பித்துவிட்டார். இரவு மணி இரண்டுக்கு மருத்துவரை போனில் அழைத்து அழுகிறவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நிச்சயமாக இத்தொழிலில் இருப்பவர்களுக்கு வேண்டும்.
 
மறுநாளும் அப்பெண்மணி விடவில்லை. அந்த பூனையின் புகைப்படத்தை ப்ரிண்ட் செய்து என் கிளினிக்கைச் சுற்றீ இருக்கும் ஐந்தாறு தெருக்களில் தன் எண்ணுடன் கொடுத்துக்கொண்டிருந்தார்.
 
அந்த ,முயற்சிக்குப் பலன் இருந்தது. சில நாட்கள் கழித்து அவருக்கு ஓர் அழைப்பு.
 
ஓர் வீட்டின் ஓடுகளால் ஆன கூரைமீது அந்த பூனை இருந்தது. ஏணி வைத்து ஏறி அதைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுபோனார் அவர்.
 
புதிதாக ஒரு கிளினிக் ஆரம்பித்தபோது பூனைக்கென்றே ஓர் அறை செய்ததும், அதில் எந்த ஓட்டையும் இல்லாமல் பார்த்துக்கொண்டதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
 
-------------------------------------------
 
ஒரு வாடிக்கையாளர் ஒர் அழகான லாப்ரடார் வகை நாயை வளர்த்துவந்தார். என் கிளினிக்குக்கு அதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் எப்போதும் அழைத்துவருவார். அவருடன் அந்த நாயும் நன்றாக ஒட்டிக்கொண்டது. இப்படிப் போய்கொண்டிருந்த நிலையில் ஒருநாள் அந்த வாடிக்கையாளர் கவலையுடன் வந்தார்.” சார்… எங்க நாயக் காணலை!” என்றார். வாசலில் நின்றபோது யாரோ இதைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.
 
அவரும் ஊர் முழுக்கத் தேடி வந்தார். கிடைக்கவில்லை.
 
அந்த ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறாரே.. அவர் இங்கிருந்து 15 கிமீ தள்ளி ஒரு ஊருக்குப் போய் இருக்கிறார். அங்கே அந்த நாயை ஒரு வ்வீட்டில் பார்த்திருக்கிறார்.
 
இது எங்கள் நாய்… அதை கொடுங்கள் என்று அவர் கேட்க, அவர்கள் மறுக்க ஊரே கூடி விட்டது.
 
“ நான் என் ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்துகிறேன். அது வந்து இதில் ஏறிக்கொண்டால்.. அது எங்கள் நாய்தான்! நீங்கள் விட்டுவிடவேண்டும்” என பஞ்சாயத்து பேசினார்.
 
ஆட்டோவைப் பார்த்ததும் நாய் பாசமாக வந்து ஏறிக்கொண்டது.
 
நேராக என் மருத்துவமனைக்குத்தான் அவர் கொண்டுவந்தார். அதைப் பரிசோதனை செய்தபின்னர் அது வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டது! உரிமையாளர்கள் மட்டுமல்ல; ஓட்டுநர்களும் பாசக்கார மனிதர்களே!
 
 
------------------------------------------------
நான் அரசுப்பணியில் சேர்ந்து நான்கைந்து நாட்களிலேயே முதல் அறுவை சிகிச்சையை நிகழ்த்தினேன். இன்றைக்கு கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ அறுவை சிகிச்சைகளைச் செய்துவிட்டிருந்தாலும் முதன்முதலில் செய்த அறுவை சிகிச்சை இன்னமும் ஸ்பெஷல்தான்!
 
ராமநாதபுரத்தில் முதல் முதலில் எனக்கு பணி. அங்கே சேர்ந்த நான்கைந்து நாட்களிலேயே ராமநாதபுரம் ராஜா குடும்பத்தில் இருந்த ஒரு குதிரைக்கு  கண்ணில் ஏதோ பிரச்னை என்று என்னை அழைத்தார்கள். விஐபி வீட்டு விலங்கு என்று என் உயர் அதிகாரியும் சென்று பார்த்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார்
 
அந்த குதிரைக்கு கொஞ்ச நாளாக கண்ணில் வெண்ணிற படலம் படர்ந்திருக்க, பல கண்ணில் போடும் மருந்துகளைப் போட்டுப் பார்த்தும் ஒன்றும் பலன் கிடைத்திருக்கவில்லை.
 
நான் அருகில் சென்று அதன் கண்ணை நன்றாகப் பரிசோதித்தேன். கண்ணில் தாக்கும் ஒரு வகைப் புழு இருந்ததும் தெரிய வந்தது. செட்டேரியா எனப்படும் புழு அது. என்ன பிரச்னை என்று கண்டு பிடித்தாகிவிட்டது. இதற்கு ஒரே வழி அறுவைச் சிகிச்சை மூலம் அந்த புழுவை நீக்குவதுதான்.
 
 என்னுடைய முதல் சிகிச்சையும் இதுதான் என்பதால் சற்று படபடப்பாக இருந்தது. இதற்கான கருவிகளைத் தயார் செய்தேன். ஆனால் குதிரைக்குக் கொடுக்கும் மயக்க மருந்து கிடைப்பது அப்போது சிரமம்.
 
நானோ அந்த ஊருக்குப் புதிது. பல தனியார் மருத்துவமனைகளை அணுகி ஒரு குறிப்பிட்ட மயக்க மருந்தைக் கேட்டு வாங்க சிரமப்பட்டேன். பலரும் அதைத் தர மறுத்த நிலையில் ஒரு இடத்தில் புரிந்துகொண்டு எனக்குக் கொடுத்தார்கள்.
 
அதைச் செலுத்தி ஜாம் ஜாமென்று சிகிச்சையை முடித்துவிட்டேன். குதிரையும் நன்றாகிவிட்டது. வெகு நாட்களுக்கு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் என்னுடன் தொடர்பில் இருந்தனர்.
 
இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்த அறுவை சிகிச்சை நினைவில் நிற்பதற்குக் காரணம் அது என் முதல் சிகிச்சை என்பது மட்டுமல்ல. தொடர்புகளே அற்ற ஊரில் மயக்க மருந்தை அலைந்து  தேடிப் பெற்ற சாகசமும் ஒரு காரணம் தான்.
 
இன்றைக்கு சக மருத்துவர்கள் விலங்குகளில் மிக சுலபமாக சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்துவிடுகிறார்கள். ஆனால்  பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிகிச்சை விலங்குகளில் அரிதாகவே பணியிடங்களில் செய்யப்படும். இன்று என் மருத்துவமனையில் மானிட்டர் உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியோடு மனிதர்களுக்குச் செய்யும் அளவுக்குப் பாதுகாப்பாக செய்கிறோம். ஆனால் அன்று அதெல்லாம் அரிது. நான் குளச்சல் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒருவர் பாமரேனியன் நாய் ஒன்றைக் குட்டி போடாத நிலையில்கொண்டு வந்தார். அதற்கான மருந்துகளைக் கொடுத்துப்பார்த்தேன். முடியாத நிலையில் அதற்கு சிசேரியன் செய்து குட்டிகளைக் காப்பாற்ற முடிவு செய்தோம். அதன் உரிமையாளரும் எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
 
அவரது வீட்டில் செய்வது என்று முடிவெடுத்துப் போய்ப் பார்த்தால் அது ஓர் ஓலைக் குடிசை.  அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. என்னுடன் இருந்த உதவியாளரும் அதுவரை சிசேரியனே பார்த்தது இல்லை. அவரை உதவியாளராக வைத்துக்கொண்டே அந்த சிசேரியனை செய்து முடித்தோம்.  சிறப்பாக முடிந்தது. தாயையும் குட்டிகளையும் காப்பாற்றிவிட்டோம்.
 
பல நேரங்களில் சிசேரியன் செய்து கன்றுகளை எடுத்த பிறகு மறுநாளே அந்த மாட்டின் உரிமையாளர் மாட்டை அடிமாட்டுக்கு விற்றுவிடுவதும் நடக்கும். அவ்வளவு சிரமப்பட்டு, அறுவை சிகிச்சை செய்திருப்பேன்.  எல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தமும் மேலிடும். ஒரு முறை ஆடு ஒன்றுக்கு சிசேரியன் செய்து, குட்டியை எடுத்துவிட்டு, தையல் போட்டு முடித்தேன். கைகளைக்கழுவி விட்டு வருவதற்குள் உரிமையாளர் விலைபேசி அந்த இடத்திலேயே விற்றுவிட்டார். ஏன் என்றால் குட்டியுடன் விற்கக்கூடாதாம்! இப்படி வாழ்க்கையே வெறுக்கச் செய்யும் சம்பவங்களும் உண்டு.
 
ஒரு மிகப்பெரிய பணக்காரர். அவர் வீட்டில் மாடு கன்றுபோட சிரமப்பட்டது. உள்ளூர் விஐபி என்பதால் அதற்கு மருத்துவம் பார்க்க இரண்டு மருத்துவர்கள் சென்றிருந்தோம். எவ்வளவு முயற்சி செய்து கன்றை வெளியே எடுக்க முடியவில்லை. கடைசியாக சிசேரியன் ஒன்றே வழி எனச் சொல்லி அந்த பணக்காரரிடம் சொன்னோம். அவர் சொன்ன பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
“நான் இந்த மாட்டுக்கு வீணாகச் செலவு செய்ய விரும்பவில்லை”
 
கடைசியில் அதை விட்டுவிட்டுத் திரும்ப முடியாமல் அங்கேயே இருந்தோம். மாடு கன்று ஈன முடியாமல் இறந்தே போனது. எங்கள் மருத்துவத்துக்குக் கூட அவர் பணம் தரவில்லை! உள்ளூர் விஐபியின் மனநிலையை எண்ணி வருந்தியவாறே வீடு திரும்பினோம்.மனிதரில் எத்தனை வகைகள்?
 
நாகர்கோவிலில் சுக்குக் காப்பி மிகவும் பிரபலம். இதன் விற்பனையாளர் ஒரு வர் இருந்தார். அவர் ஒரு ஸ்பிட்ஸ் இன நாய் வைத்திருந்தார். அவ்வளவாக வசதிகள் இல்லாதவர். ஆனால் எந்த நிலையிலும் அந்த நாயை விட்டுக்கொடுத்தது இல்லை. அந்த நாய்க்கு ஏழு வயதாக இருந்தபோது மார்பகப் புற்றுநோய் வந்தது. அறுவை சிகிச்சை செய்தேன். சில ஆண்டுகள் கழித்து கருப்பையில் சிக்கல் ஏற்பட அதற்கு அறுவை சிகிச்சை. மீண்டும் மார்பகத்தில் கட்டி வர, அறுவை சிகிச்சை செய்தேன். மூன்று பெரிய அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தபோதும் அவர் ஒருபோதும் சலித்துக்கொண்டதே இல்லை. அது தன் பதினேழாவது வயது வரை உயிர் வாழ்ந்தது. கடைசியில் அதற்கு உண்ணிகளால் வரும் சுரம் வந்தது.  எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என்றார் அவர் கண்ணீர் மல்க.
 
“அது தன் முழு வாழ்நாளையும் வாழ்ந்துவிட்டது.. இனியும் என்ன செய்யப்போகிறோம்?’’ என்று சொல்லிப் பார்த்தேன். ஆனாலும் அவர் இன்னும் கொஞ்சநாள் அது வாழ்ந்துவிடாதா என்று ஆசைப்பட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அதன் பின்னர் அது இறந்தது.
 
அந்த சுக்குக் காப்பி விற்பவரை எப்போது சாலையில் கடந்தாலும் காப்பி சாப்பிடாமல் விடமாட்டார். அவரது நாய்க்கு எப்போது நான் கட்டணம் பெற்றே சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் சுக்குக் காப்பிக்கு அவர் காசு வாங்கியதே இல்லை!
 
 
 
---------------------------- 
 
அறுவை சிகிச்சையைப் பற்றிச் சொல்வது என்கிறபோது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் சிகிச்சைக்கு வந்துகொண்டிருந்த ஒரு பாமரெனியனைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
 
அது உள்ளே வந்தாலே எல்லோருக்கும் உற்சாகம்பற்றிக்கொள்ளும். அவ்வளவு பீறிடும் சந்தோஷத்துடன் அது வளையவரும்.
 
ஏன் அதற்கு என்ன அப்படி ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம்.
 
அது மூன்றுமாதக் குட்டியாக இருக்கும்போது அதற்கு காலில் ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் பக்கத்தில்  எந்த பயிற்சியும் இன்றி மருத்துவம் பார்த்துவ ந்த போலி நபர் ஒருவரிடம் காட்டி இருக்கிறார்கள்.  அவர் அதற்கு அயோடக்ஸ் போடச் சொல்லி பரிந்துரைக்கிறார்.
 
விளைவு? அதன் காலில் தொற்று பரவி கால் அழுகி விட்டது.
 
என்னிடம் அதைக் கொண்டுவந்தபோது நிலைமை மிக மோசமாகி இருந்தது. வேறு வழியே இல்லாத நிலையில் அறுவை செய்து அதன் பாதிக்கப்பட்ட காலை தோள் பட்டை வரைக்குமாக நீக்கிவிட்டேன்.
 
இப்படி யொரு நிலை மனிதர்களுக்கு ஏற்பட்டால், சோர்ந்துபோய்விடுவார்கள்.
 
ஒரு கால் இல்லாததை அது ஒரு குறையாகவே நினைக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து எல்லோருக்கும் உற்சாகத்தைப் பரிசளித்து சமீபத்தில்  மறைந்துவிட்டது! நாமும் கற்றுக்கொள்ள அந்த விலங்கு இந்த உற்சாகத்தை விட்டுச் சென்றிருப்பதாக நினைக்கிறேன்
 
--------------------------------------
 
மாடுகளை வளர்ப்பவர்களுக்கு கால்நடை மருத்துவர்களுக்கும் ஒரு இணக்கமான உறவு எப்போதும் இருக்கும். என் மருத்துவமனையில் நான் சந்திக்கும் விவசாயிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பார்கள். சிலர் மிகுந்த புத்திசாலிகளாகவும் இருப்பர்.
 
நிறைய மாடுகளை வைத்திருந்த ஒரு விவசாயி என்னிடம் அடிக்கடி வருவார். அவரது மாடுகளை சினை பிடித்திருக்கிறதா என்று சொல்லவேண்டியது என் வேலை. 45 நாட்களில் சினை பார்த்து உண்டா இல்லையா என்று சொல்லிவிடுவேன்.
 
அடிக்கடி வந்துகொண்டிருந்தவரை ஒரு ஆறு மாதமாகக் காணவில்லை. என்ன ஆச்சு என்று யோசிததுக் கொண்டிருந்தேன்.
 
ஒரு நாள் அவரை சாலையில் பார்த்தேன்.
 
“என்னங்க இப்போ நீங்க வருவதே இல்லையே?” என்றேன்
 
“இல்ல சார்.. இப்பல்லாம் நானே மாடுகள் சினையா என்று பார்த்துக்கொள்கிறேன்…” என்றார்.
 
எப்படி என ஆச்சரியப்பட்டேன்.
 
“நிங்க ஒவ்வொரு முறை சினை பார்த்து சினை என்று சொல்லும் மாடுகள் வீட்டுக்கு வந்ததும் நானே கையைவிட்டு பார்த்து எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதில் நல்ல பயிற்சி ஏற்பட்டுவிட்டது. இப்போது நானே கண்டு பிடித்துவிடுகிறேன்” என்று பதில் சொன்னார்.
 
இவரும் ஓர் ஏகலைவன்!?
 
-------------------------------------- 
 
புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்து விலங்குகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். ஒரு பையன் ஓடி வந்து மூச்சிரைத்தவாறு நின்றான். அடிக்கடி வருகிறவன் தான். அவனிடம் கிண்டலாகப் பேசுவது உண்டு.
 
“சார்.. எங்க எருமை மாட்டுக்கு ஒரு பிரச்னை சார்… அது சினையா இருக்குது. அது முக்கும்போதெல்லாம் பின்னாடி கன்னுக்குட்டி வந்து எட்டிப் பார்க்குது சார்!” என்றான்.
 
பையன் நம்மைக் கிண்டல் செய்கிறான் என்றுதான் நினைத்தேன். அவன் பேசும் தோரணை அப்படி இருந்தது.
 
“ டே.. சும்மா சொல்லாதடே.. “ என சிரித்தேன்.
 
“சார்.. சத்தியமா சார்” சீரியஸாக சொன்னான்.
 
நான் நம்ப வில்லை.
 
“ அப்படின்னா. எருமையை ஓட்டிகிட்டு இங்க வா.. நான் உனக்காக வெயிட் பண்றேன்”
 
அவன் ஓடினான்.
 
நான் புறநோயாளிகள் பிரிவில் இருந்த விலங்குகளின் சிகிச்சையை முழுக்க முடித்திருந்தபோது அவன் ஒரு கிமீ தொலைவில் இருந்த தன் வீட்டில் இருந்து மாட்டை இழுத்து வந்திருந்தான்.
 
பார்த்தேன். அவன் சொன்னது உண்மைதான். கன்றுக்குட்டியின் தலை எட்டிப்பார்ப்பதும் உள்ளே போவதுமாக இருந்தது.
 
பரிசோதித்தேன். ஒரு வாரத்துக்கு முன்பே கன்று போட வேண்டிய நிலை ஏற்பட்டு, கன்றுக்குட்டி வெளியே வந்து அதன் பெண்ணுறுப்பின் வழியில் தங்கிவிட்டது. வெளியே வர முடியவில்லை. அங்கேயே இறந்தும்போய்விட்டது!
 
ஒரு வழியாக இறந்த அதன் உடலை வெளியே எடுத்துப் போட்டேன். இத்தனை நாட்களாக பெரிய அறிகுறிகள், பாதிப்புகள் இல்லாமல் எருமை இருந்தது ஆச்சரியமாக இருந்தது என்றால் அந்த பையன் கன்றுகுட்டி எட்டிப்பார்க்குது சார் என்று சொன்னதில் இருந்த அபத்தமும் அப்பாவித்தனமும் அதை விட ஆச்சர்யம்!
 
 
-மருத்துவர் எஸ். சுப்ரமணியன், கால்நடை மருத்துவர், நாகர்கோவில் ( அந்திமழை பிப்ரவரி 20 இதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...