Posted : சனிக்கிழமை, நவம்பர் 26 , 2022 11:48:05 IST
கிராமத்து வாழ்வியலை யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யும், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பட்டத்து அரசன்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.
கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊரின் மதிப்பிற்குரிய மனிதராக இருக்கும் ராஜ்கிரண் (பொத்தேரி) மகன்,மகள், பேரன், பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழ்த்து வருகிறார். இந்த சூழலில், தன் மகன் ஆர்.கே.சுரேஷை கபடி போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு ராஜ்கிரண் அனுப்பி வைக்கிறார். போட்டியில் எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிடுகிறார். இதனால், மாமனார் ராஜ்கிரண் மீது கோபம் கொண்டு, மகன் அதர்வாவுடன் தனியாக சென்று வாழ்கிறார் ராதிகா. வளர்ந்த பிறகு தன் தாத்தாவுடன் சேர நினைக்கும் அதர்வாவுக்கு பல தடைகள் வருகிறது. இதற்கிடையே, ராஜ்கிரணின் குடும்பத்தை ஊரே சேர்ந்து தள்ளி வைக்கிறது. இறுதியில் அதர்வா தனது தாத்தாவுடன் சேர்ந்தாரா இல்லையா? ராஜ்கிரண் குடும்பம் ஊருடன் ஒன்று சேர்ந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.
தாதா – பேரன் உறவை கபடி விளையாட்டின் மூலம் யதார்த்தமாக சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். பொத்தேரியின் ஃப்ளாஷ் பேக், குடும்பத்துடன் ஒட்ட நினைக்கும் அதர்வா, ஜெயப்பிரகாஷ் மற்றும் ராதிகாவின் வீண் வீராப்பு, வில்லனின் வஞ்சகத்தனம், கபடி பயிற்சி பெறும் காட்சிகள் என எதிலும் உணர்ச்சியே இல்லை. முழுப்படமும் மேலோட்டமாக செல்வது மிகப் பெரிய பலவீனம்.
அதர்வாவின் உடல் மொழி உணர்வுகளுக்கு ஏற்ற பாவனைகளை வழங்கினாலும், அவர் கதாபாத்திரத்திலிருந்து விலகியே நிற்கிறார். கிராமத்துக் கதைகளுக்கு ஏற்றவாறு அதர்வா தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. இளைஞர் மற்றும் முதியவர் தோற்றத்தில் வரும் ராஜ்கிரண் நடிப்பில் அசத்தவே செய்திருக்கிறார். மற்ற நடிகர்களான ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ராதிகா, ஆஷிகா ரங்கநாதன், சிங்கம் புலி ஆகியோர் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை ஆறுதல். ‘அஞ்சனத்தி’ பாடல் கேட்க மட்டும் அல்ல பார்க்கவும் குளுமை. வழக்கம் போல் சற்குணம் படத்தில் இருக்கும் யதார்த்தமான கிராமத்தை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது. ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஸ்ரீநிவாசன் அதை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.