![]() |
பரோல்: திரைவிமர்சனம்!Posted : வியாழக்கிழமை, நவம்பர் 10 , 2022 17:14:43 IST
எதிரெதிர் குணம் கொண்ட அண்ணன் தம்பி, உயிரிழந்த தாயின் இறுதி சடங்கிற்காக ஒன்றிணைவதே ‘பரோல்’திரைப்படம்.
தந்தையின் மரணத்தையொட்டி தாயை தவறாக பேசும் நபரை அடித்துக் கொன்றுவிடுகிறார் அவர்களின் மூத்த மகனான கரிகாலன் (லிங்கா). இதனால் அவர் சிறை செல்ல நேர்கிறது. அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கரிகாலன், மூன்று பேரை கொலை செய்துவிடுகிறார். இதனால் ஆறு ஆண்டுகால சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையாகி வெளியே வருகிறார். அவரை கஷ்டப்பட்டு வெளியே எடுக்கிறார் அவரின் அம்மா ஆரா (ஜானகி சுரேஷ்).
வெளியே வந்த கரிகாலன் அம்மாவின் பேச்சை மீறி பலபேரை பணத்துக்காக கொலை செய்து மீண்டும் சிறை செல்ல நேர்கிறது. இந்நிலையில் அம்மா, திடீரென இறந்துவிடுகிறார்.
இன்னொரு பக்கம், அண்ணன் மீது மட்டுமே அம்மா அதீத பாசத்தை வைத்திருப்பதாக எண்ணி ஒருவித மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் தம்பி கோவலன் (கார்த்திக் ஆர்.எஸ்). இதனால், அண்ணனுக்குத் தெரியாமல் அம்மாவின் இறுதிச் சடங்கை தானே செய்துவிடலாம் என நினைக்கிறார். நியாயப்படி அண்ணன் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்க, அண்ணனை பரோலில் எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் கோவலன். இறுதியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? அண்ணன் மீது கோபம் இருந்தும், தம்பி ஏன் பரோல் எடுக்க ஒத்துக் கொண்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை.
வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்த இயக்குநர் துவாரக் ராஜா, அதை எளிமையாக சொல்ல தவறியிருக்கிறார். முன்னும் பின்னுமாக கதை நகர்வதால், சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது.
அண்ணன் தம்பியாக நடித்திருக்கும் லிங்கா, கார்த்திக் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சியில் லிங்கா மாஸ்காட்டியிருக்கிறார். அம்மாக நடித்துள்ள ஜானகி சுரேஷ், குடிசைப்பகுதி அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். வருடையது மிக யதார்த்தமான நடிப்பு. எப்போதும் போல் வினோதினியின் நடிப்பு கச்சிதம். அசல் வழக்கறிஞராக வலம் வருகிறார். நாயகிகள் கல்பிகா கணேஷ், மோனிட்ஷா முரளி. இருவருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும் கூட, நடிப்பு ஓகே.
ராஜ்குமார் அமலின் பின்னணி இசை, படத்திற்கு கூடுதல் பலம். சண்டைக் காட்சிகள் வரும் போது ஒலிக்கும் பின்னணி இசை எழுச்சி கொள்ள வைக்கிறது. கதையிலிருந்த புதுமை, கேமிரா கோணங்களில் எதிர்பார்க்க முடியவில்லை.
‘நினைவு என்பது பூச்சி மாதிரி, சுத்திக்கிட்டே இருக்கும்’, ‘அம்மாவை தவிர வேறு யாரால எல்லோரையும் ஒன்று சேர்க்க முடியும்’ என்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
|
|