???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"வாழும் மனித ஜாதி…. அதில் வாழ்வதில்லை நீதி…" படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 15

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   03 , 2020  03:14:09 IST


Andhimazhai Image

ன்று நாடு முழுக்கப் பற்றி எரிகிற குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறுவதற்கு முன்னரே சத்தமில்லாமல் பல சமாச்சாரங்கள் நடந்து முடிந்துவிட்டன. அதுவும் 2015 ஆம் ஆண்டிலேயே உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு குறிப்பாணை மூலம்.

 

அயல்நாட்டவர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இத்திருத்தத்தின்படி பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், பார்சிக்கள், கிருஸ்தவர்கள், சமணர்கள் இங்கு ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தால் அவர்களை ”சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிறது 2015 லேயே வெளிவந்த இந்த குறிப்பாணை.

 

அடுத்து கமுக்கமாக அவர்கள் நகர்த்திய குறிப்பாணைக் காய்தான் “பாஸ்போர்ட் சட்ட திருத்தம்.” இதுவும் அரங்கேறிய ஆண்டு : 2016

 

இம்புட்டு பேர் இந்தியா வரும்போது இந்த ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் மட்டும் என்ன பாவம் செய்து விட்டார்கள்? என்கிற ஞானோதயம் பிறந்ததன் விளைவாக அவர்களையும் இதில் இணைத்துக் கொண்டார்கள் 2016 இல் கொண்டு வந்த அந்தக் குறிப்பாணை மூலம்..

 

இந்த விவாதம்…. வாக்கெடுப்பு…. அமளி…. வெளிநடப்பு…. உள்நடப்பு… என எல்லாம் அரங்கேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு  முன்னரே தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டு விட்டது பா.ஜ.க. மேற்குறிப்பிட்ட குறிப்பாணைகள் மூலம்.

 

இந்த பங்களாதேஷ்… ஆப்கானிஸ்தான்… பாகிஸ்தான்… சிறுபான்மையினர் மீது மட்டும் உனக்கேன் இவ்வளவு அக்கறை?

உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?

என்று ”பராசக்தி” சிவாஜி பாணியில் கேட்பீர்கள் நீங்கள்.

 

ஆனால் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் அநேகம் உண்டு இந்த அகதிகள் விஷயத்தில்.

 

நிறத்தின் பேராலோ…. இனத்தின் பேராலோ…. மதத்தின் பேராலோ…. மொழியின் பேராலோ…. அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் நம்பிக்கையின் பேராலோ ஒடுக்கப்படும் மக்கள் தஞ்சம் கோருவதும் தஞ்சம் பெறுவதும் அகதிகளின் அடிப்படை உரிமை என்கிறது ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம். (Universal Declaration on Human Rights)

அப்படியிருக்க மதத்தின் பேரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இவ்வுரிமை என்கிற இந்தத் திருத்தச் சட்டம் எந்த விதத்தில் நியாயமானது?

 

எத்தனையோ பாடத் திட்டங்கள் இருக்கும்போது சி.பி.எஸ்.சி சிலபஸ்ஸில்தான் எழுத வேண்டும் என பாகுபாட்டுடன் நீட் தேர்வைக் கொண்டு வந்ததைப் போல…

 

அகதிகள் இனம், மதம், மொழி, நிறம், என எண்ணற்றவற்றால் புலம்பெயர்கின்ற போது அதில் மதத்தை மட்டும் முன்னிறுத்தும் போக்கை என்னவென்பது?

 

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள்  12 ஆண்டுகளுக்கு மேல் இங்கு தங்கியிருந்தால் அவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்கிற இந்திய அரசு….

 

முப்பதாண்டுகளுக்கும் மேலாக இன ஒடுக்குமுறையின் பொருட்டு ஏதிலிகளாக இங்கு வந்து அல்லல்படும் ஈழத் தமிழர்களிடம் மட்டும் ஏன் பாராபட்சமாக நடந்து கொள்கிறது?

 

அவர்கள் விரும்பும் பட்சத்தில் இனத்தின் பேரால் ஒடுக்குதலுக்கு ஆளான ஈழத்து மக்கள் ஏன் குடியுரிமை பெறக்கூடாது ?

 

பல்வேறு ஒடுக்குமுறைகளால் அலைந்து திரியும் லட்சோப லட்சம் அகதிகள் மத்தியில் மத ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் மீது மட்டும் கரிசனம் காட்டக் காரணம் என்ன?

 

வேறென்ன…. மதத்தின் பேரால் நாட்டைக் கூறுபோட்டு அதிகாரத்திற்கு வந்தவர்கள் இனத்தின் பேராலோ நிறத்தின் பேராலோ பாதிக்கப்பட்டோருக்காக ஏன் பரிதாபப்படப் போகிறார்கள் ?

 

ஆனாலும் ஆப்கான் அகதிகள்…. பாகிஸ்தான் அகதிகள்… பங்களாதேஷ் அகதிகள்…. என கூப்பாடு போடும் இந்த நாடுதான் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் (United Nations High Commissioner for Refugees ) இன்னமும் கையெழுத்துப் போடாமல் இருக்கிறது.

 

இந்த அமைப்பு நிறம், மதம், இனம் போன்றவற்றால் அகதிகள் ஆக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல சூழலியல் பிரச்சனைகள், இயற்கைப் பேரழிவுகளின் நிமித்தம் நாடற்றோர் ஆனவர்களுக்கும் சேர்த்துப் பணியாற்றி வருகிறது.

 

அகதிகள் மீது “அதீத அக்கறை” கொண்ட இந்தியா யு.என்.ஹெச்.சி.ஆருடைய அகதிகளுக்கான 1951 கன்வென்ஷனிலும் கையெழுத்திடவில்லை…. அதன் பிற்பாடு அகதிகள் நல மேம்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட 1967 நெறிமுறைகளிலும் கையெழுத்திடவில்லை.

 

அப்படிப் போட்டிருந்தால் நாடற்ற அகதிகளுக்கான கல்வி…. வேலை வாய்ப்பு…. இருப்பிடம்…. உணவு என சகலத்தையும் UNHCR ஏ பார்த்துக் கொள்ளும். அதை விட்டுவிட்டு அகதிகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள் என்கிற பீத்தல்கள் ஒருபுறமும்…. அகதிகளால் எங்களுக்கு எவ்வளவு பொருளாதாரச் சுமைகள் தெரியுமா? என்கிற புலம்பல்கள் மறுபுறமும்தான் இந்தியாவின் ”அகதிகள் நலக் கொள்கை”யாய் இருக்கிறது.

 

இந்தத் தில்லாலங்கடி வேலையை பா.ஜ.க. மட்டும் செய்யவில்லை. காங்கிரசும் செய்தது….. எமர்ஜென்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதாவும் செய்தது.

சரி…. அப்படிக் கையெழுத்துத்தான் போட்டுத் தொலைக்கவில்லை…..

 

நாட்டுக்குள் வந்திறங்கிய அகதிகளையாவது சமமாக நடத்தினார்களா? என்றால் அதுவுமில்லை.

 

நேரு காலத்திலேயே வந்திறங்கிய திபெத்திய அகதிகளுக்கு உயர்தர கல்வி வாய்ப்புகள்…. நவீன குடியிருப்பு வசதிகள்…. தொழில் நுட்ப வசதிகள்… கால்ஃப் மைதானங்கள்…. என்கிற ரத்தினக் கம்பள வரவேற்பு.

 

ஈழத்து ஏதிலிகளுக்கோ இவை ஏதுமற்ற ”அதி நவீன” முள்வேலி முகாம்கள்.

 

அவர்களது குழந்தைகள் கல்வி கற்க…. ஆரோக்கியமான உணவை உண்ண… தூய்மையான உடுப்புகளை உடுத்த…. என ஏதுமற்ற துயர சூழல்.

 

முகாமை விட்டு வெளியில் செல்வதென்றாலும் போலீஸ் அனுமதி தேவை…  வெளியில் உள்ளவர்கள் உள்ளே சென்று இம்மக்களைக் கண்டு உரையாடவும் போலீஸ் அனுமதி தேவை.

 

வேலைக்குச் செல்ல… வேலையின் நிமித்தம் தாமதமாய் திரும்பிவர…. வெளியூர் செல்ல… ரணமாகிப் போன வாழ்வை சிற்சிறு கொண்டாட்டங்களால் ஒன்றுகூடி தணித்துக் கொள்ள…. என ஏதும் செய்ய இயலாத…. திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மக்கள்.

 

“நாங்கள்தான் அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்கள்” என்று நீட்டி முழங்கும் எந்தக் கட்சியும்…. எந்த ஆட்சியும்…. எந்த இயக்கமும்…. இனி செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான்.

அது :

 

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தில் ( U N H C R ) இந்தியா கையெழுத்திட்டே தீர வேண்டும் என உடனடியாகக் குரல் கொடுப்பதுதான்.

 

உலகிலுள்ள 142 நாடுகள் இதில் கையொப்பம் இட்டிருந்தாலும் இந்தியா இன்னமும் மாட்டேன் என வீம்பு பிடிப்பதைப் பார்க்கும்போது…..

 

உண்மையிலேயே இந்த அரசுகளுக்கு அகதிகள் மீது அக்கறை இருக்கிறதா?

அல்லது

 

அண்டை நாடுகளுடன் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கான  துருப்புச் சீட்டாய்  மட்டும் அகதிகளை வைத்திருக்கிறதா ?

 

என்கிற கேள்வி…..

உங்களுக்குள்ளும் எழுந்தால்

நிச்சயம் நீங்களும் நானும் தோழர்களே.

 

(இத்தொடர் வாரம்தோறும் வெளியாகும் )

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...