???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படித்ததும் கிழித்ததும்: பகுதி 2 : பாமரன் எழுதும் தொடர் - 1

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2019  04:43:52 IST


Andhimazhai Image

ழுத்தென்பது ஒரு தவம்.

ப்ரசவ வேதனை மாதிரி… என்கிற எந்த எழுத்தாளனும் தவமும் செய்ததில்லை… காலகற்றிக் கதறியதுமில்லை. குறிப்பாக ஆண் எழுத்தாளர்கள்.

 

நம்மைப் பொறுத்தவரை அது ஒரு ஸ்டார்ட்டிங் சிக்கலுள்ள எஞ்சின். கெளம்பீடுச்சுன்னா போதும்… அது பாட்டுக்குப் போயிக்கிட்டே இருக்கும்.

 

இந்தத் தொடர் மாதிரி.

 

இதில் எதை எழுதுவது என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். சந்தித்த ”மனிதர்கள்” குறித்து…. உதைக்குத் தப்பி ஓடிய தருணங்கள் குறித்து…. இலக்கியவாதிகளிடம் சிக்கி சீரழிந்த தருணங்கள் குறித்து…. வாசித்த அரிய நூல்கள் குறித்து…. என இப்படி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று முடிவாயிற்று.

 

நூல்கள் என்றால் அது அச்சடித்த அட்டைகூட காயாத சூடான பிரதியாகவும் இருக்கலாம்… செல்லரித்தாலும் சொல்லரிக்காத சென்ற நூற்றாண்டு நூலாகவும் இருக்கலாம்.

 

எழுத வேண்டியது என் பணி. வாசித்துத் தொலைக்க வேண்டியது உங்கள் ”விதி”.

அம்புட்டுதான்.

**********

 

றக்குறைய இருபதாண்டுகளுக்குப் பின்னர் நண்பர் நாகார்ஜுனனைச் சந்தித்தேன். அவரை எழுத்தாளர் என்று சொல்வதா அல்லது  Activist என்று சொல்வதா என்பதில் எப்போதும் குழப்பம் உண்டு எனக்குள். எண்பதுகளின் மத்தியப் பகுதியில் ஒரிஜினல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனரும் எனது  குருநாதருமான நெடுஞ்செழியனால் அறிமுகமானவர்தான் நாகார்ஜுனன். செய்தி நிறுவனமான யு.என்.ஐ.யில் பணியாற்றினாலும் ஈழம்…. கூடங்குளம்…. என செயல்பட்டு வந்தவர். நெடுஞ்செழியனின் குழுவினராகட்டும் நாகார்ஜுனனின் நண்பர்களாகட்டும் பேசுகிற சமாச்சாரங்கள் அத்தனையுமே அரிய வகைத் தகவல்களாக இருக்கும். நான் வாயைப் பிளந்து கொண்டு அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பேன்.

அதிலும் என் குருநாதர் நெடுஞ்செழியன் என்னைத் தெளிய வைத்துத் தெளிய வைத்து அடிக்கவில்லையென்றால் நான் அமைச்சராகவோ அல்லது எம்.பி, ஆகவோ ஆகியிருப்பேன். அத்தகைய துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றிய பெருமை என் குருநாதரையே சாரும். ஏனெனில் நான் அப்போதே மாவட்ட அளவில் அலப்பரை செய்து கொண்டிருந்த மாணவர் ”தலைவன்”.

 

நாகார்ஜுனனுடன் சேர்ந்து அணு உலைக்கெதிராக கையெழுத்து இயக்கம், நாடகம், கருத்தரங்குகள் என நண்பர்களோடு பம்பரமாய்ச் சுழன்ற பொழுதுகள் அவை. போதாக்குறைக்கு அவரைப் போன்றவர்கள் பேசிவந்த அமைப்பியல்வாதம் (Structuralisam) குறித்த விவாத அரங்குகளிலும்  உடன் சுற்றி வருவேன் நானும். (அது புரிந்ததா புரியவில்லையா…. தெரிந்ததா தெரியவில்லையா என்பது வேறுவிஷயம்.)

 

அவ்வேளைகளில் எனது ஆரம்பகால எழுத்துக்களை வாசித்துவிட்டு அது சற்று சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அதீத உற்சாகத்தோடு ஊக்குவித்தவர் நாகார்ஜுனன்தான். “உனக்கு எழுத வந்துடுச்சுய்யா…. எழுது… எழுது” என்று உத்வேகப்படுத்தி நானும் ரவுடிதான் என்கிற நம்பிக்கையை எனக்குள் விதைத்த நாகார்ஜுனன் உடனான சந்திப்புகள் சட்டென்று அறுந்து போனது. அதுவும் இருபது ஆண்டுகள்.

 

தமிழகத்திலிருந்து விடைபெற்று லண்டன் சென்ற அவர் அங்குள்ள மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனலின் தலைமையகத்தில் சில வருடப் பணி… லண்டன் பி.பி,சி. வானொலியில் சிலவருடப் பணி என்றிருந்ததில் கரைந்து போயிற்று காலங்கள்.

 

அப்படிப்பட்ட நண்பன் திடீரென்று கோவையில் வந்து நின்றார் அதுவும் மரணக் கிணற்றில் சைக்கிள் ஓட்டும் கோணங்கியோடு. கூடவே நாடகக் காதலன் முருகபூபதி. 

 

நாகார்ஜுனன்…. கோணங்கி… முருகபூபதி என நம் அறையே களைகட்டியது. பறவைகள் பலவிதம்…. ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது மாதிரி பலரகங்களால் அறையே ரணகளமானது அன்றைக்கு. ”சூது கவ்வும்” படத்தில் வரும்…… ”ஹய்ய்ய்ய்ய்யோ நான் காரா ஓட்டுறேன்…..? கடவுளையே ஓட்டுறேன்” என்கிற மனநிலையில் இருந்தேன் நான்.

 

மத்திய இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலை குறித்து….

சத்யஜித்ரேயின் லக்னோ பற்றிய திரைப்படம் குறித்து…

பல சமஸ்தானங்கள் R.S.S ஐ ஊட்டி வளர்த்தது குறித்து….

 

ஈழம் குறித்த புரிதலற்ற நோம் சாம்ஸ்கிக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் புத்திஜீவிகளை ஒன்றுதிரட்டி ஈழமக்களின் அவலம் பற்றி ஒரு விரிவான பகிரங்கக் கடிதம் எழுதியது குறித்து… என அதிகாலை வரை நீண்டது அக்கலந்துரையாடல்.

 

இருபதாண்டுகளுக்கு முன்னரெல்லாம் நாகார்ஜுனனோடு கதைத்தால்….. சிந்துசமவெளி நாகரீக காலத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் காக்கைகள் இருந்தனவா இல்லையா என்பதில் தொடங்கி…. ஈழத்தமிழர் தலையில் இடியாய் வந்திறங்கிய ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் தொடர்ந்து கூடங்குளத்தின் அபாயங்கள் நம்மை என்ன பாடுபடுத்தப் போகின்றன என்பது வரை அவர் விஷயங்களை எடுத்து வைக்கும் பாங்கு என்னை மிகவும் வசீகரிக்கும்.

 

அதுவும் இலக்கிய உலகை நோக்கி நகர்ந்து விட்டாலோ சங்ககாலத்துக்கு முன்பிருந்து தொடங்கி சமகால இலக்கியம் வரை நீண்டுகொண்டே போகும் பொழுதுகள்.

 

அவரது எழுத்துக்களிலேயே என்னை மிகவும் ஈர்த்தது அவர் எழுதிய “கலாச்சாரம் – அ கலாச்சாரம் – எதிர் கலாச்சாரம்” என்கிற நூல்தான்.

 

”அக்னி” ஏவுகணை எதன் குறியீடு என்பது குறித்து…

 

கமல் சுஜாதா(எழுத்தாளர்) காம்பினேஷனில் வந்த ”விக்ரம்” எதை நோக்கி நகர்கிறது… எப்படி அதில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான விஷம் நுட்பமாகத் தூவப்பட்டிருக்கிறது என்பது குறித்து….

 

என எண்ணற்றவற்றைச் சொல்லிச் செல்லும் அந்த நூல்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் வெளிவந்த அந்நூலில் இன்றைக்கும் மறக்கவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை துயரத்தில் ஆழ்த்தும் கட்டுரை ஒன்று உண்டென்றால் அது :

'போபால்: நாம் ஏமா(ற்)றிய குறியீட்டின் கதை' என்கிற கட்டுரைதான்.

போபாலில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நள்ளிரவில் விஷவாயு கசிந்த கணங்களையும்….. மூச்சுத் திணறி மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்த அவலங்களையும் அறிவோம் நாமும். நாகார்ஜுனன் அத்துயரையெல்லாம் விலாவாரியாக அக்கட்டுரையில் சொல்லிவிட்டு போபால் நகரம் குறித்து இறுதியாக ஒன்றைச் சொல்லியிருப்பார். அந்த வார்த்தையைச் சற்று சிந்தித்தால் மனம் அதிரும். ஜீரணிக்கவே இயலாத வார்த்தைகள் அவை. ஆனாலும் எதார்த்தம் அதுதான் என்பதை அடித்துச் சொல்லும் வார்த்தைகள் அவை.

 

எப்படி இன்றைக்கு டிஸ்போசபிள் கப்…. டிஸ்போசபிள் சிரிஞ்ச்…. என்று வந்து விட்டனவோ….. அப்படி…. கடைசி நொடி வரை பிழையாகப் பயன்படுத்தப்பட்டு கசக்கி எறியப்பட்ட ஒரு டிஸ்போசபிள் நகரம்தான் இந்த போபால் என்று முடித்திருப்பார் அவர்.

ஆம்….

போபால் ஒரு Disposable City

வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிவுண்டு என்பதற்கு இவ்வார்த்தையே சான்று.

 

( மரணக் கிணற்றில் சைக்கிள் ஓட்டிய கதை…. காரோட்டிய கதை…. குறித்தெல்லாம் பின்னர் எழுதுகிறேன் )

 

**********

 

லகாலமாச்சு…. இப்படி வாய்விட்டுச் சிரித்து.

தமிழ் எழுத்தாளர்களிடையே பாய்போட்டுப் படுத்திருக்கிற ஒரு பஞ்சம் உண்டென்றால் அது அங்கதப் பஞ்சம்தான். அதுவாகப்பட்டது நகைச்சுவை கலந்த எழுத்து. சிரிக்கக்கூட கூலி கேட்பார்கள் நம்மூர் எழுத்தாளர்கள். அப்பஞ்சத்தைப் போக்க வந்திருக்கும் புத்தகம்தான் “அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்”. பிரபு தர்மராஜ் என்கிற புண்ணியவான் எழுதியது. இதைப் படிக்கப் படிக்க நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து நான் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே சொல்வதானால் அப்படிப்பட்ட எள்ளலான எழுத்து. அதுவும் நாகர்கோவில் நடையில்.

 

யார் இந்த ஆவரான் என்பதிலேயே ஆரம்பித்து விடுகிறது ஆர்ப்பாட்டம். ”நாகர்கோவிலையே ”நார்ல்” என்று ரஷ்யமொழியின் லாவகத்திலும், உச்சரிப்பிலும் விளிக்கும் குமரிக்கண்டத்துக்காரர்களுக்கு இஸ்ரேல் தேசத்துப் பெயரான ஆபிரகாம் எம்மாத்திரம்? ஆப்ரஹாம் என்னும் பெயரை தூக்கிப் போட்டுப் பொளந்ததில் ஆவரானாய் உருமாற்றம் பெற்றான்.” என்பதில் துவங்குகிறது பிரபு தர்மராஜின் எள்ளல்.

 

இந்த ஆவரான் ஊரில் பண்ணும் அலப்பரையும் அதன் பொருட்டு ஊர்படும் பாடும்… பிற்பாடு ”உன் சேவை இங்கு மட்டுமல்ல அரேபியாவுக்கும் தேவை” என்று ஏரோப்பிளேன் ஏற்றிவிடுவதும்… இங்கு மற்றவர்களைப் பாடாய்ப்படுத்திய ஆவரான் அங்கு ஷேக்குகளிடம் சிக்கிக்கொண்டு பாடாய்ப்படும் சம்பவங்களையும் எள்ளலாய்க் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் மனுசன்.

 

அன்னார் ஆபிரகாம் என்கிற ஆவரானின் நதிமூலமோ மிகப் பிரசித்தி பெற்றது. அப்பன் ஏசுக்குட்டி ஊரில் ஒத்தக் குடும்பம்கூட சந்தோசமாய் இருந்துவிடக் கூடாது என்கிற லட்சிய வெறி கொண்ட மகான். அந்த மகானுக்குப் பிறந்த மகன் எப்படி இருப்பார்?

 

புல்லட் வாங்கித் தரவில்லையென்றால் அடுக்களையை உடைப்பது… வாங்கித் தந்தாலோ ஏற்றிக் கொண்டு போன அம்மாவோடு சும்மா தெருவில் போன தயிர்க்காரியையும் சேர்த்து சேற்றில் குப்புறத் தள்ளுவது…

 

கார் வாங்கித் தரவில்லையென்றால் அப்பன் ஏசுக்குட்டியின் டி.வி.எஸ் 50 அய் கிணற்றில் மிதக்க விடுவது…. வாங்கித் தந்தாலோ குறுக்கே வந்த பன்றியையும் கொன்று ஜெபிக்க வந்த பாதிரியாரையும்  பரலோகத்திற்கு அனுப்பி வைக்க முயற்சிப்பது என ஏக அலப்பரை செய்யும் ஆவரானை அரேபியாவுக்கு ஏற்றி அனுப்புவதும் அங்கு ஷேக்குகளிடமும் ஒட்டகங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதும்தான் கதை.

 

ஆபத்தாநந்தவனாக வரும் இஸ்மாயில்… ஷேக்கின் டவுசரைக் கிழித்து ஆவரானைக் காப்பாற்றும் வள்ளியூர் நாகராஜன்…. என அற்புதமான கதாபாத்திரங்கள் ஏராளம் உண்டு

 

வெறும் எள்ளல் மட்டுமில்லை அதற்கூடாக நூல் முழுக்க இழையோடும் மனிதநேயமும் மறக்க முடியாதவை.

 

“எந்த ஊராய், எந்த சாதியாய், எந்த மதமாய் இருந்தால் என்ன? ஒரே நாட்டுக்காரன்! மேலும் சகமனிதன் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கி நின்றது.” என்கிற வரிகள் போதும் பிரபு தர்மராஜ் யார் என்பதை சொல்ல.

 

இப்படி எல்லாவற்றையும் நானே சொன்னால் அப்புறம் நீங்க புத்தகம் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது.

அதனால….

 

புத்தகம் வேணும்ன்னா https://zhakart.com/collections/new-arrivals-1/products/arabiyavukkuppona-thikkozhuthi-aavaran?variant=29467623587910   இந்த லிங்கை கிளிக்கி தாக்குங்க மக்கா. தானா வந்து சேருவான் தீக்கொளுத்தி ஆவரான்..

**********

 

 ன்றைக்கு பணிப்பெண் வேலைக்கு வரமாட்டார் என்கிற பேச்சு காதில் விழ…. தம் அடிக்க வெளியே போனவன் அப்படியே அரை லிட்டர் பால் பாக்கெட்டும் வாங்கி வந்ததைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள் அம்மாவும் துணைவியும்.

 

“பால் வாங்கீட்டு வரச் சொல்லி நீங்க சொன்னீங்களா?”ன்னு துணைவி கேட்க…. ”இல்லியே” என்று தலையாட்டியது தாய். உண்மையிலேயே வீட்டுக்குள் வந்த்து நான் தானா? என்று சோதித்துப் பார்த்துக் கொண்டார்கள் இருவரும். இந்த அரைலிட்டர் பாலுக்கே இவ்வளவு பாராட்டுப்பத்திரம் என்றால்…. ரஜினியைப் போல பக்கவாதம் வந்த அம்மாவைத் தூக்கிக் கொண்டு “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று கோயில் குளமாக ஏறி இறங்கினால் என்ன சொல்வார்கள் என நினைத்துக் கொண்டேன்.

 

ஏற்கெனவே இந்த ஆணிக் காலை வைத்துக் கொண்டு நான் நடப்பதே பெரும்பாடு…. இதில் அம்மாவாவது உயிராவது….. அப்படிக்கிப்படி நடந்துச்சுன்னா கோயில் படியேறுவதற்குள் குளத்துல குப்புறக் கெடக்க வேண்டீதுதான். தெப்பத்துல மிதக்கிற ஆத்தாள அப்புறம் பயர்சர்வீஸ் வந்து காப்பாத்துனாத்தான் உண்டு. உண்மையைச் சொல்லனும்ன்னா…. அந்த ”தாயெனும் தெய்வத்திற்கு” நம்மளால பக்கவாதம் வராம இருந்தாலே போதும்…. அது கோடி புண்ணியம்.

 

(இந்தப் பகுதியை உங்களுக்குப் ”பெருமை”யுடன் ”இணைந்து” வழங்குபவர்கள் என்னைக் கட்டியழும் துணைவியும் இச்”சான்றோனை” ஈன்றெடுத்த தாயும்…..)

 

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...