???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“ உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்…! ”- படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 8

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   10 , 2019  03:48:16 IST


Andhimazhai Image

ம்ம குடும்பத்துக்கான ஒரே பேஸ்ட்…

நம்ம குடும்பத்துக்கான ஒரே பெயிண்ட்…

நம்ம குடும்பத்துக்கான ஒரே துணிக்கடை…

நம்ம குடும்பத்துக்கான ஒரே நகைக்கடை…

நம்ம குடும்பத்துக்கான ஒரே நாளிதழ்….

நம்ம குடும்பத்துக்கான ஒரே முறுக்குக் கம்பி…

நம்ம குடும்பத்துக்கான ஒரே சுறுக்குக் கயிறு….

 

அடேய்    முதலாளிகளா…!
 

உங்கள நெனச்சாத்தான் ரொம்பப் பாவமா இருக்கு… இப்புடி எங்க குடும்பங்களுக்காகவே ராப்பகலா ஒழைக்கறீங்களே…. ஒடம்பு என்னத்துக்கு ஆகும்…?

 

அப்புறம் உங்க குடும்பத்தை யார்தான் பாத்துக்குவா?

 

அதனால… அட்லீஸ்ட்…  ஒரு ஜட்டியையாவது உங்க குடும்பத்துக்குன்னு ஒதுக்கி வையுங்கப்பா. மாத்தி மாத்தியாவது போட்டுக்கலாம்….

 

ஏய்… யாருப்பா அது…? மாத்துங்கப்பா முழக்கத்தை ….

“உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்.”

 

**********

 

து டுவிட்டர் ஆகட்டும்… முகநூல் ஆகட்டும்… அக்கா தமிழிசை தொடங்கி சீன அண்ணன் ஜிங் பிங் வரைக்கும் ஆல் ரவுண்ட் அலப்பரை கொடுக்கும் ஒரு குசும்பன் உண்டென்றால் அது காலச்சித்தன் ஆகத்தான் இருக்க முடியும்.

 

இவரது எக்குத்தப்பான எகத்தாளம் தாங்காமல் “பிளாக்” செய்துவிட்டு ஓரங்கட்டிய அரசியல் தலைகள் அநேகம்.

 

அப்பேர்ப்பட்ட ஆசாமி தனது கவிதை நூலோடு வந்து நிற்பார் என யார் கண்டது?

 

கொஞ்சம் அதிர்ச்சியைச் சமாளித்தபடி அவரது “பால் வாசம் நுகரும் கொலுசு” நூலைப் புரட்டினால் ஒவ்வொன்றும் ஓகோ ரகம்.

 

எளிய மனிதர்களையும் அவர்தம் வாழ்வையும் சொல்லும் இவரது கவிதைகள் அதற்கூடாக சமூக வரலாற்றையும் சத்தமின்றிச் சொல்கின்றன.

 

 

காணாமல் போய்விட்ட டூரிங் டாக்கீஸ்களும் இடைவேளைகளில் வரும் முறுக்கும், பர்ப்பியும் இருந்த நிலை மாறி  இணையத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக் குளிர் பாண வகையறாவோடு சிலிர்த்தெழும் தேசபக்தியைச் செப்புகிறது இவரது  “இணையவழி இருக்கை” கவிதை.

 

மழைக்காலத்தில் பலகாரம் விற்று… வெயிலில் கம்பங்கூழுக்கு மாறி… பனிக்காலத்தில் சுக்குக்காப்பிக்குத் தாவி… வசந்தகாலத்தில் குல்பி ஐஸ்கிரீமுடன் வளையவந்து வயிறு வளர்த்தவன் பிறழ்ந்து போன இயற்கையால் பருவமற்றுப்போன இந்நாட்களில் கரும்புச்சாறு பிழியப்போன கதையைச் சொல்கிறது ”எல்லாப் பருவத்துக்குமான கரும்புச்சாறு” என்கிற கவிதை.

 

மனதைத் துயரில் மருளச் செய்த வரிகள் உண்டென்றால் அது “கடைசியாய் சாகும் சர்க்கஸ் சிங்கம்”கவிதைதான். புனைவின் உச்சமெனக் கொள்ளலாம் இதை.

 

இன்றைய சூழலுக்கு …  10 சதவீத ”பரம ஏழைகளைப்” புரிந்து கொள்ள வேண்டுமானால் ”கருகும் முப்புரி”யை கவனமாகப் படித்தால் போதுமானது என்பதை அழுத்திச் சொல்வேன் நான்.

 

தமிழின் கேடுகெட்ட சினிமாக்களில் ஒன்றான “சிவாஜி” அங்கவையையும் சங்கவையையும் எள்ளி நகையாடியபோது ”சங்கத்தமிழ்” தந்தவரில் தொடங்கி சந்துமுனையில் சிந்துபாடும் கவிஞர்கள் வரைக்கும் சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்ததைக் கண்டபோது தந்தை பெரியார் கவிஞர்கள் குறித்து கொண்டிருந்த பார்வை சரியானதுதான் என்கிற எண்ணம் என்னுள் வலுப்பட்டது. (இதில் இதைக் கண்டுகொள்ளாத பெண்ணியக் கவிஞர்களும் உள்ளடங்குவர்.) ஆனால்… ”நான் அப்படிப்பட்ட கூட்டத்தைச் சார்ந்தவனில்லை” என உரக்கச் சொல்கிறார் காலச்சித்தன்.

 

தனது “அடர்நிறப் பெண்” கவிதை வாயிலாய்.

இதோ அக்கவிதையின் சிறு துளி :

 

கறுப்பென்பது நிறமல்ல…

என் தாயின்

கருவறை இருட்டு…

 

கறுப்பென்பது நிறமல்ல…

தகிக்கும் சுடரின்

நாக்கு…

 

கறுப்பென்பது நிறமல்ல…

எம் திராவிடத்

திமிர்…

 

கறுப்பென்பது தாழ்ச்சியில்லை…

நினைவில் கொள்ளுங்கள்

அடர் கறுப்பிலிருக்கும்

அண்ட வெளியால் தான்

வெளுத்துத் தெரிகிறான்

வெயிலோன்…

 

“அடர்நிறப் பெண்”ணுக்குத் திராவிடத் திமிர் என்றும் பெயரிடலாம் தவறாகாது.

 

இத்தொகுப்பிலேயே என் மனதுக்கு மிக நெருக்கமாக நின்று சமகால வாழ்வையும் அது துள்ளித் திரிந்த பசுமைமிகு காலங்களையும் சொன்னதென்றால் அது “பறவையகன்ற கூடு”தான். வார்த்தை ஜாலங்களால் வித்தை காட்டாமல் வாழ்வின் வலியைச் சொல்லிச் செல்கிறது இந்த ஆவணம். இதனைக் கவிதை என்றும் சொல்லலாம்.

 

சுதர்சன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த ”பால் வாசம் நுகரும் கொலுசு” கவிதைத் தொகுப்பினை வாசிக்கும்போது இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாக வலைத்தளங்களில் வலம்வரும் இக் காலச்சித்தனுக்குள் இவ்வளவு ஆழமான நுண்ணுணர்வுகள் புதைந்து கிடக்கிறதா என அதிர்ந்து போவீர்கள் நீங்கள்.

 

மானுடத்தை நேசிப்பவர்களுக்கு மத்தியில் ஆத்திகமோ நாத்திகமோ நந்தியாக நிற்க முடியாது என்பதை நெத்தியடியாய் அடித்துச் சொல்வதுதான் பெரியாரைக் காதலோடு கொண்டாடும் “கடவுளைக் கற்பித்தவன்” என்கிற கவிதை.

 

எல்லாக் கவிதைகளிலும் இப்படிச் சொல்ல ஏதோவொன்றிருக்கிறது.

ஆனால்…

 

அம்புட்டையும் நான் இங்கிட்டே சொல்லீட்டா…  அப்புறம் நீங்க புத்தகம் வாங்காம அல்வா குடுத்திருவீங்க.

 

அதனால புத்தகம் வாங்க போடுங்க போனை : 63800 40326

 

 

**********

 

னி விமானம் வாங்கப் போகிறோமோ அல்லது பீரங்கி வாங்கப் போகிறோமோ எதை வாங்கப் போகும்போதும்  பணம் கொண்டு போகிறோமோ இல்லையோ மறக்காமல் எலுமிச்சம் பழத்தைக் எடுத்துக் கொண்டு போவதுதான் உத்தமம்.

 

ஃபிரான்ஸுக்குப் போன ராஜ்நாத்து ஏரோப்பிளேனுக்கு ….

பூ வெச்சு… பழம் வெச்சு…

குங்குமம் வெச்சு…சந்தனம் தேச்சு…

சூடம் கொளுத்தி… இந்தீல ”ஓம்”…. ன்னு எழுதி…..

எலுமிச்சம் பழம் நசுக்கி… தேங்காய் உடைச்சு…

ஆயுதபூஜை போட்டுக் கெளப்பீருக்கார் வண்டியை.

 

ஆனால் நமது ஆதங்கமெல்லாம்  வேறு….

 

இந்துக்கள், இசுலாமியர்கள், கிருஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் என பலகோடி மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில்…

 

இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் தருகின்ற வரிப்பணத்தால் இயங்கும் ஒரு அரசாங்கத்தில்…. 

 

அதனது பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்காக போர் விமானம் வாங்கச் செல்லுமிடத்தில்  தனது சொந்த மதச் சடங்கை செய்வதும், தனது சொந்த மொழியில் விமானத்தின் மீது எழுதுவதும் எந்த விதத்தில் தார்மீக ரீதியில் நியாயமானது? என்பதுதான் நமது கேள்வியே.  

 

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான பணம் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் மக்களுடையது. அதன் பின் ஒளிந்திருக்கும் உழைப்பு இந்த நாட்டின் சகல மக்களுக்குமானது. அமைச்சரது சொந்தப் பணமோ அவரது கட்சியினரின் பணமோ அல்ல.

 

அப்படியிருக்கையில்… இஸ்ரோ செயற்கைக்கோள் விட்டால் திருப்பதியில் வைத்து பூஜை செய்வது… விமானம் வாங்கப் போனால் சிதறு தேங்காய் போடுவது… என்பதெல்லாம் அறிவியலை தங்களது ஆச்சாரங்களுக்கு அடிபணிய வைக்கிற அப்பட்டமான அபத்தங்கள்.

 

எது எப்படியோ….

 

நல்லவேளை… பெட்ரோலுக்கு   பதிலாக   மாட்டு மூத்திரத்தை ஊத்தாம  விட்டாரே இந்த மகராசன்னு பெருமூச்சு விட்டிருப்பார்  ஃபிரான்ஸ் பிரதமர். 

 

அது மட்டும் Confirm.

 

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...