???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெற்றோர்களை சிறையில் தள்ளுங்கள்!: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்-6

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:51:10 IST

நேற்று :

 

”எங்களது குழந்தைகளின் உடனடியான தேவைகளில் ஒன்றாகக் கல்வி அமைகின்றது. அக்குழந்தைகளுக்கு அரசு வழங்குகிற வசதிகள் என்பவைகூட கல்வியில் நாட்டம் செலுத்த அவர்களைத் தூண்டப் போதுமானவையாய் இல்லை என்கிற அளவுக்கு எங்களது வறுமை கொடுமையானதாக உள்ளது. அரசின் செலவில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு நேர உணவையாவது அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு, அவர்களது கல்விக்காகக் கூடுதல் தொகை செலவு செய்யப்பட வேண்டும்.”   

 

-ராவ் சாகிப் எல்.சி.குருசாமி 1923 மார்ச் 2 ஆம் தேதி நீதிக்கட்சி ஆட்சியில் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை.

 

 

 

ம்…

96 ஆண்டுகள் முன்னர் ஒலித்த இந்தக் குரல்தான் சத்துணவுத் திட்டத்திற்கே அடித்தளமிட்டது.

 

அன்று நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல நினைத்தாலும் வீட்டில் தாண்டவமாடிய வறுமை அவர்களை வேலைக்கு அனுப்பியது. ஓரளவிற்கு வாய்ப்பு இருந்தவர்களுக்குக்கூட சாதியின் பெயரால் கல்விக்கூடங்களின் கதவுகள் திறக்க மறுத்தன. யார் தயவிலாவது உள்ளே நுழைந்தவர்களுக்கோ சோத்துக்கு வழியில்லை. அப்போதுதான் ஒரு நேர உணவுக்காவது உத்திரவாதம் கொடுக்கச் சொல்லி குரல்கள் ஒலித்தன. அதில் மிக முக்கியமானது எல்.சி.குருசாமி அவர்களுடையதுதான்.

 

பகலில் வேலைக்குச் சென்றவர்கள் இரவுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வியைக் கற்றனர். பள்ளிகளில்  உயர்கல்வி முடித்தவர்கள் கல்லூரிகளில் கால் வைக்க இயலாது தவித்தார்கள். அவ்வேளையில்தான் 1927 இல் நீதிக்கட்சி அமைச்சர் முத்தையாவால் கல்வி, வேலை வாய்ப்புகளில் கொண்டுவரப்பட்ட சகல சாதியினருக்குமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

 

இதன் விளைவு…? அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சிறுபான்மையோருக்கும் திறவாமல் இறுக மூடப்பட்டிருந்த    கல்விக்கூடங்களின் கதவுகள் வேறு வழியே இன்றி திறக்கப்பட்டன.

 

அதன் விளைவால் கல்வி கற்று…. வேலை பெற்று… வெளியில் வந்த அந்த மூதாதையரின் வாரிசுகள்தான் நாம்.

 

 

ஊர்விட்டு ஊர் வந்து உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எங்கு தங்குவார்கள்? யார் வீட்டின் கதவுகள் அடைக்கலம் தரும் அவர்களுக்கு? அதன் விளைவாய்த் தோன்றியவைதான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்குமான மாணவர் விடுதிகள்.

 

”அப்பன் தொழிலைத்தான் மகன் செய்யதாக வேண்டும்” என்கிற குரூர எண்ணத்தில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறை  தந்தை பெரியாரால் துரத்தி அடிக்கப்பட்டது.

 

ராஜாஜி மூடுவிழா நடத்திய எண்ணற்ற பள்ளிகள் மீண்டும் காமராஜரால் திறக்கப்பட்டு… முன்னர் சென்னையில் சில பள்ளிகளில் மட்டும் அளிக்கப்பட்ட ஒருவேளை உணவு தமிழகத்தின் பல கிராமங்களுக்கும் மதிய உணவுத் திட்டமாக விரிவு பெற்றது.

 

பின்னர் 1982 இல் எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தின் கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து நகரங்களுக்குமான சத்துணவுத் திட்டமாக அது பரவலாக்கப்பட்டு… முட்டையோடு இணைந்த ஊட்டச்சத்தாக இன்று  உலா வருகின்றது.

 

1992 இல் கல்வி, வேலைக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது சட்டமன்றத்தைக்கூட்டி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தனிச்சட்டம் ஒன்றையும் கொண்டு வந்து அதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கீகாரம் பெற்று அதனை அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்த்து சட்டப்பாதுகாப்பினைப் பெற்றுத்தந்தார் முதல்வர் ஜெயலலிதா.

 

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத் திட்டம் என இருந்த பல்வேறு பாடத்திட்டங்கள் அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு அனைவருக்கும் சமத்துவமான பாகுபாடற்ற ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி முறை 2010 இல் முதல்வர் கலைஞரது ஆட்சி காலத்தில் சட்டமாகியது.

 

இன்றோ…  பஸ்பாஸ்… கால்களுக்குக் காலணி… பள்ளி செல்ல மிதிவண்டி… அன்று எட்டாமல் எங்கோ உயரத்தில் இருந்த கணினி இன்று கரங்களில் தவழ… கல்விக்கூடங்களை வலம் வருகிறார்கள் நம் மாணவர்கள். 

 

இவ்வளவும் எதற்காக? எப்படியாவது நம் குழந்தைகள் கல்வி கற்றாக வேண்டும். தங்கள் தலைமுறையின் துயரத்தைப் போக்கியாக வேண்டும் என்பதன்றி வேறென்ன? ஆரம்பத்தில் கேலி பேசிய உதடுகள் இவைகளை இந்தியா முழுமைக்கும் பரவலாக்க வேண்டும் என முணுமுணுக்கின்றன.

 

எப்பாடுபட்டாவது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தாக வேண்டும்… எப்பாடுபட்டாவது பள்ளிக்கல்வியை முடிக்க வைத்து கல்லூரியில் கால்பதிக்க வைத்தாக வேண்டும் என்கிற சமூக அக்கறையில்தான் இவை ஒவ்வொன்றும் அரங்கேறின கடந்த காலங்களில்.

 

அதற்குத்தான் இன்றைக்கு வந்திருக்கிறது ஆப்பு.

 

 

இன்று:

 

ற்கெனவே ”நீட்”டின் நாசக்கரங்களால் அநேக அனிதாக்கள் காவு வாங்கப்பட்டாயிற்று. எஞ்சியவர்கள் தங்களது மருத்துவக் கனவை மூட்டை கட்டிவைத்து விட்டு வேறேதேனும் கற்கலாமா எனக் கவலையோடு அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

திகார் சிறையின் மினியேச்சர்களாக விளங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்தில் இருந்து  சி.பி.எஸ்.சி.க்கு மாறுவேடம் பூண்டு அழைப்பு விடுக்கின்றன.

 

அரசுப் பள்ளிகளோ யாரும் கேட்பாரற்ற அனாதைகளாக…

 

இந்த  லட்சணத்தில்  10, 11, 12 வகுப்புகளுக்கு இருக்கும் பொதுத் தேர்வு போதாதென்று 5 ஆம் வகுப்புக்கும், 8 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு வைத்தால்தான் தரம் உயரும் என சில தறுதலைகள் திட்டம் போடுகின்றன.

 

 எதிர்ப்புக் குரல்களின் எண்ணிக்கை அதிகமாகவே இப்போதைக்கு மூன்று ஆண்டுகளுக்கு இல்லை என்கிறார் கல்வி அமைச்சர். நாம் கவனிக்க வேண்டியதே இதுதான். எப்போதைக்கும் இல்லை என்று சொல்லவில்லை அமைச்சர். இப்போதைக்கு இல்லையென்றுதான் சொல்கிறார்.

 

“நீட்”டை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவோம் என நீட்டி முழக்கிய இந்த மாவீரர்கள் மூன்றாண்டுகள் கழித்து அதே பாணியில் அல்வா கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அல்லது ”மூன்றாண்டுகளுக்குப் பிறகு நாமெங்கு ஆட்சியிலிருக்கப் போகிறோம்?” என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.

 

பத்து வயதுக் குழந்தைக்குப் பொதுத் தேர்வு என்பதைக் கேட்டால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட வாய் விட்டுச் சிரிப்பார்கள். எட்டாவது வரை தேர்வே இல்லை என்பதால் தரத்தோடுதான் தாண்டிவருகிறார்களா என்பதைச் சோதிக்கவே இப்பொதுத்தேர்வு என்பவர்கள் மாணவர்களை சோதனை எலிகளாக்கப் பார்க்கிறார்கள்.

 

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைந்திருக்கிறதா என சோதிப்பதற்கு முன்னதாக ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மேம்பாடு அடைந்திருக்கிறதா எனப் பரிசோதிப்பதுதான் புத்தியுள்ளவர்கள் செய்யக்கூடிய வேலை.

 

ஐந்திலோ எட்டிலோ மறு தேர்விலும் தேர்ச்சியடையாத மாணவர்களை அதே வகுப்பில் உட்கார வைப்பதற்கு பதில் இவர்களை தேர்ச்சி அடைய வைக்கும் பொறுப்பில் இருந்து தவறிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம். பொறுப்பாகப் போதித்த ஆசிரியருக்கு பதவி உயர்விலும் ஊதிய உயர்விலும் முன்னுரிமை அளிக்கலாம்.

 

”தகுதி”யுறாத மாணவரை அதே வகுப்பில் அமர வைப்பது நியாயமெனில் தகுதிப்படுத்தத் தவறிய ஆசிரியரையும் அதே பதவியில் தொடரச் செய்வதுதானே நியாயமானது? மாணவனின் ”தகுதியினை” உரசிப்பார்க்கத்தான் தேர்வு எனில் ஆசிரியரின் தகுதியினை  உரசிப்பார்க்க என்ன வைத்திருக்கிறோம் நாம்? ஆனாலும் மாணவர்களை ஐந்திலோ எட்டிலோ பெயிலாக்குவது எந்த விதத்திலுமே நியாயமாகாது.

 

எட்டாவது வரை வந்துவிட்ட மாணவன் ஒன்பதாவது தாண்டி பத்தில் கால்வைத்துவிட்டால்கூட போதும். ஆட்டோ ஓட்டியாவது பிழைத்துக் கொள்வான். அதை ஓட்டிப் பிழைப்பதற்குக்கூட பெயிலோ.. பாஸோ… பத்தாவது போயிருக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுனருக்கான லைசன்சே கிடைக்கும்.

 

 “நீட்” தேர்வில் 750 க்கு 150 மார்க் எடுத்தாலும் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேரலாம்… ஆனால் 600 மார்க் எடுத்தவன்கூட உள்ளே நுழையமுடியாது என்றால் இது யாருக்கான கல்வி ?

 

இன்றைக்கு நுழைவதற்கே லட்சம் லட்சமாய் பணம் கொடுப்பவன் நாளை மருத்துவன் ஆவதற்கும் பணம் கொடுத்துத்தான் பாஸ் ஆகப் போகிறான். இதுதான் தகுதியா? இதுதான் திறமையா?

 

அப்பா அம்மாக்கள் துயிலெழுப்பி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி சொந்த வாகனத்தில் பள்ளிக்கு  கொண்டு போய் விடப்படும் மாணவனுக்கும்…

 

ரோட்டோரக் கடையில் கடனுக்கு டீ குடித்து… ஆறு மணிக்கே ரோல்காலுக்கு ஆஜராகி… குப்பை லாரியில் ஏறிப்போகின்றவர்கள் மகனுக்கும் ஒரே தேர்வு…

 

 

இதில் அதிக மார்க் எடுப்பவனே அறிவாளி. அவனே ”தகுதி”, “திறமை” உள்ள மகாமேதை.

 

ஒரே மாதிரியான வாழ்க்கைச் சூழல் இருந்து…

ஒரே மாதிரியான பள்ளிகள் இருந்து…

ஒரே மாதிரியான  கல்வி முறை இருந்து…

ஒரே மாதிரியான தேர்வும் இருந்தால் சரி.

தகுதியைப் பற்றியும் திறமையைப் பற்றியும் வானம் கிழியும் அளவுக்குப் பேசலாம்.

 

ஆனால்…

ஒருபக்கம் செல்வமும் சொகுசுமான வாழ்க்கை….

மறுபக்கம் பஞ்சைப் பராரியான வாழ்வு.

 

ஒருபக்கம் காசை நீட்டினால் குதிரை ஏற்றத்தில் இருந்து கம்ப்யூட்டரின் அப்டேட்டட் வெர்ஷன் வரை ஊட்டிவிடும் பள்ளிகள்….

 

மறுபக்கம் கழிப்பறைக்குக்கூட வக்கின்றி ஓடுகள் உடைந்த வகுப்பறைக்கு நடுவே மாணவர்களுக்கு போதிக்கும் பள்ளிகள்.

 

ஒருபுறம்…

சி.பி.எஸ்.சி.(Central Board of Secondary Education - CBSE)…

சி.ஐ.எஸ்.சி.இ.(Council for the Indian School Certificate Examinations - CISCE)…  ஐ.பி.(International Baccalaureate - IB)…

ஐ.ஜி.சி.எஸ்.இ.(International General Certificate of Secondary Education – IGCSE) போன்ற பாடத் திட்டங்களில் படித்தவர்கள்…

மறுபுறமோ மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள்.

இதுதான் இந்த நாட்டினுடைய கல்வியின் இன்றைய லட்சணம்.

 

ஆனால் இந்த எழவெல்லாம் எதுவும் புரியாமல் கிளாஸ் பர்ஸ்ட்… ஸ்கூல் பர்ஸ்ட்… ஸ்டேட் பர்ஸ்ட்… என தங்கள் குழந்தைகளைச் சித்ரவதை செய்யும் மனநோயாளிகளாகிப் போனார்கள் மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள். இவர்கள் மனநோயாளிகளாகிப் போனது போதாதென்று தங்கள் மழலைகளையும் மனநோயாளிகளாக்குகிறார்கள் இந்த மடையர்கள்.

 

விளைவு?

பத்தாவது தோல்வியென்றால் தற்கொலை…

+2 தோல்வியென்றால் தற்கொலை…

 

என அந்தப் பிஞ்சுகள் சிறுவயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றன. வாழவே தெரியாத இவர்கள்தான் தங்கள் குழந்தைகளை ”வளர்த்து”கிறார்களாம். இவர்களும் பீதியாகி இவர்களது பிள்ளைகளையும் பீதிக்குள்ளாக்கி உலகத்தின் தொடர்புகளே அற்றுப்போன நடைபிணங்கள் ஆக்குகிறார்கள் இந்த மூடர்கள். கேட்டால் ”காம்பிடிஷன்” அந்த அளவுக்காம்…

 

…..த்தூ.

 

 என்னைக் கேட்டால் எந்த மாணவராவது தேர்வில் தோல்வியென்று தற்கொலை செய்து கொண்டால் அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய பெற்றோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது அளித்து ”உள்ளே” தள்ள வேண்டும். உண்மையாக யோசித்தால் அவர்களது சாவுக்கு முழுமுதற் காரணமே இவர்கள்தான். அரசுகள் தங்களது அபத்தமான கல்விக் ”கொள்கை”களால் பலிவாங்கியது போதாதென்று இவர்களும் தங்கள் பிள்ளைகளைக் காவு வாங்குகிறார்கள். பள்ளிப் பருவத்தில் பலியாவதைத் தடுக்க இதற்கென தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி பத்து பெற்றோராவது தண்டிக்கப்பட்டால்தான் எஞ்சியுள்ள இளம்தலைமுறையாவது மிஞ்சும்.

 

நாளை :

 

ரசுக்கோ…

ஆசிரியர்களுக்கோ…

பெற்றோர்களுக்கோ…

இதுவரை ஓலமிட்டதெல்லாம் எவர் காதிலும் விழாதபட்சத்தில்…

”நேற்று” என்னவெல்லாம் நமது மூதாதையர்களுக்கு நடந்ததோ அதுவே நமது ”நாளை”யாகவும் இருக்கும்.

வரலாறு மீண்டும் தனது பாடத்தை முதலில் இருந்து தொடங்கும்.

அவ்வளவே.

 

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...