![]() |
"திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்…”-படித்ததும் கிழித்ததும் -பாமரன் எழுதும் தொடர்- 5Posted : புதன்கிழமை, செப்டம்பர் 11 , 2019 12:31:12 IST
![]() "கண்ணியக் குறைவா பேசக்கூடாதுங்கிறதுக்காக நான் பேசாம இருக்குறேன்”ங்குறார் வலதுபக்கம் குரைப்பவர்…
”நானும் கண்ணியக்குறைவா பேசக்கூடாதுங்கிறதுக்காகத்தான் சும்மா இருக்குறேன்”ங்குறார் இடதுபக்கம் குரைப்பவர்.
”கண்ணியக்குறைவா பேசறத அனுமதிக்க முடியாதுங்கிறதுக்காகத்தான் நானும் இங்கிருக்குறேன்”ங்குறார் சாலமன் பாப்பையா மாதிரி நடுவுல குந்தியிருக்குற நரியாளர்.
அடேய்…. நாங்க கண்ணியக்குறைவா செஞ்ச ஒரே ஒரு காரியம் இந்த டீ.வீ. வாங்குனதுதாண்டா… எங்கள மன்னிச்சு விட்ருங்கடாப்பா… உங்குளுக்குப் புண்ணியமாப் போகும்.
**********
அமேசான் காடுகளின் அணையா நெருப்பால் உலகத்தின் நுரையீரலே பத்தி எரியுதுன்னு அங்க அவனவன் அலறிகிட்டுக் கிடந்தா…. இங்க உள்ளவன் என்னடான்னா அமேசான்ல சென் பாலனுக்கோ… ஜென்பாலனுக்கோ விருது குடுத்தது சரியா? தப்பா?ன்னு மயிர் பொளக்கும் வாதம் பண்ணிகிட்டு இருக்கான்.
அதிலும் ஆகமவிதிப்படி அரியவகை இலக்கியம் Produce பண்ணுற மாவுமோகன் வேற இது இலக்கியமே இல்லை…. வெறும் குப்பைன்னு சொன்னதும் சொன்னார்… அவர் மீது பாய்ந்து விட்டார்கள் நம்மவர்கள்.
இப்ப அவர் என்ன தப்பா சொல்லீட்டார்ன்னு இந்தக் குதி குதிக்கிறார்களோ தெரியவில்லை. ஒரு இலக்கிய குருமகா சன்னிதானமாக வீற்றிருப்பவர் இந்த அருள்வாக்கைக்கூட அருளவில்லை என்றால் எப்படி?
நம்ம சு.சாமி மாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”… “வள்ளலாரின் வளர்ப்புமகன் தான் ஷங்கர்”… என அள்ளிவிடுவது அவரது Routine ஆன ஒன்றுதானே? இதற்குப் போய் கோபித்துக் கொள்வானேன்? கொந்தளிப்பானேன்?
ஒருவேளை சன்னிதானமே எந்திரன் 2 விலோ… சந்திரன் 3 யிலோ பிசியாக இருந்துவிட்டாலும்… “என்ன மாமு…! இந்த மாச ஆன்மீகத் தேடலின் அரியவகை கண்டுபிடிப்பை இன்னும் அவுத்துவிடாம இருக்கீங்க?”ன்னு மனசுவிட்டுக் கேட்க வேண்டீதுதானே? இந்தப் பெருந்தன்மைகூட உங்களைப் போன்ற இலக்கியவாதிகளுக்கு இல்லாவிட்டால் ஆசான் தான் என்ன செய்வார் பாவம்…?
அவர் ஆன்மீகக் கடலை கடையும் வேலையைப் பார்ப்பாரா?
குற்றுயிரும் குலையுயிருமாய்த் தவிக்கும் திரைத்துறையை தூக்கி நிறுத்துவாரா?
தத்துவ தரிசனமே இல்லாமல் தறுதலைகளாய்க் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கடிதம் போடுவாரா?
குப்பைக் கிடங்காய்ப் போய்விட்ட தமிழ் இலக்கிய உலகை clean செய்யும் வேலையைத்தான் பார்ப்பாரா?
ச்சே… கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத ஜனங்களப்பா நீங்கள். அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார் என்று இந்தக் குதி குதிக்கிறீர்கள்?
ஒருமுறைக்குப் பலமுறை அவரது அமேசான் விருது குறித்த தத்துவக் கீற்றுகளை படித்துப் பாருங்கள். அப்போதாவது உங்கள் மரமண்டையில் ஏறுகிறதா பார்ப்போம். அவர் என்ன எழுத வேண்டாம் என்றா சொன்னார்?
“எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில் அனுப்பாமலிருப்பது நன்று.” ன்னுதானே சொல்றார்.
எழுதுங்க சொந்தப்பேரில் எழுதாம ஏதாவது பூனை பெயரில் எழுதுங்க. ஒரிஜினல் பேர்ல எழுதுனா உங்களோட மத்த நூல்களுக்கும் நல்ல வாசகர்கள் அமைய மாட்டார்கள்…ன்னு ஒரு அறிவுரை சொல்றார் இதுக்குப் போயி…. முறையோ குய்யோன்னு கூப்பாடு போடறதா?
ஏன் நம்ம ஆசானோட ”இரவு” நாவல்ல வரும் ஆஸ்தான கேரக்டரே அதுதானே?
பேஸ்புக்குல ஒரிஜினல் ஐடி..ல போயி கமெண்ட் போடறது… அதையவே டூப்ளிகேட் ஐடி..ல போயி காரித் துப்பறது. இதப் பார்த்து வேற யாராவது தொன்மையான தத்துவ தரிசனத்தோடு வந்து திருப்பித் துப்புனா…. அவனை வண்டை வண்டையா போட்டுப் பொளக்குறது…. இதுதான அந்த நாவலோட கதாநாயகனின் பொழுதுபோக்கு?
பின்ன எளக்கியம்ன்னா சும்மாவா? அதப் புரிஞ்சுக்குங்க மொதல்ல. எழுது… சொந்தப் பேர்ல எழுதாதேங்கிறதுக்கெல்லாம் ஒரு கண்டனமாய்யா?
கடல்… காவியத்தலைவன்… பாதியில் பாய்காட் பண்ணிய சிந்துசமவெளி போன்ற காவியங்களின் எழுத்தோவியருக்கு இந்த உரிமை கூட கிடையாதா என்ன?
இப்பவும் சொல்றேன்…. நம்ம இலக்கியத்தின் தர நிர்ணய துலாக்கோலை தூக்கிப் புடிச்சிருக்கிற நம்ம கஜக்கோல் பாண்டியன் ஃபேஸ்புக்ல இல்லன்னு நெனச்சுகிட்டு கன்னாபின்னான்னு எழுதாதீங்க. அவுரு இந்த நாலாந்தர ஃபேஸ்புக்குல மூன்றாம்தரமா மூணு டூப்ளிகேட் ஐ.டி. வெச்சிருப்பாரு… நம்ம “இரவு” நாயகன அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க. தப்பித் தவறி பண்ணுனீங்க அப்புறம் அமேசான் காட்டுத் தீ மாதிரி ஒங்க இலக்கிய ஒலகமே கந்தல்தான். Be careful.
**********
இருந்தாலும் அவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. இப்போது நினைத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நான் ஓரளவுக்கு மறை கழண்டவன்தான் என்றாலும் அவன் நினைத்திருந்த அளவுக்கு நானில்லை என்பதுதான் என் ஆதங்கம்… அங்கலாய்ப்பு… ஆத்திரம் எல்லாம்…. அதுவும் என்னைப் பார்த்து மட்டும் ஏன் அப்படிச் சொன்னான்? அன்று இரவு முழுக்க இதே நினைப்பு.
தஞ்சை கருத்தரங்கம் நிறைவு பெற்றவுடன் நண்பர் சரவணன் விருந்துக்கு அழைத்தாரே என்று போனதுதான் நான் செய்த ஒரே தப்பு. நான் ஏதோ பழைய மாயாபஜார் படத்தில் வரும் ரங்காராவைப் போல சாப்பாட்டில் வெளுத்து வாங்குவேன் என்கிற எண்ணத்தில் அவரது தங்கை சுமதி வேறு ஏகப்பட்ட உணவு வகைகளைச் செய்து வைத்திருந்தார்.
ஆனால் கூட வந்த அந்த இனியன் ஜென்மம்தான் அரைமூட்டை அரிசியை அப்படியே திங்கும். நானெல்லாம் சுத்த வேஸ்ட். உரையாடி உண்டு களைப்பாறிய பிறகு “மூச்சா” போறதுக்கு பாத்ரூம் எங்கிருக்கு? எனக் கேட்டேன் எதிரே இருந்த கவுதமனிடம். ”அதோ அப்படிப் போயி ரைட்ல திரும்புங்க” என்றார்.
போனால் எதிரெ இளித்தபடி இனியன். ஒற்றை விரலை நீட்டிக் காண்பித்தேன்.
“அதோ உள்ளதான்… ஆனா லெப்ட்ல இருக்குற சின்னத் தொட்டில ஊத்து… ரைட்ல இருக்குற பெரிய தொட்டில ஊத்தீராதே…”என்றான்.
ஒருவேளை பெரிய பெரிய வணிக வளாகங்களிலும் சினிமா தியேட்டர்களிலும் இருப்பதைப் போல சிறுவர்களுக்கு உயரம் குறைவான சின்ன பேசினும் பெரியவர்களுக்கு உயரமான பெரிய பேசினும் ஆக இரண்டு வைத்திருப்பார்கள் போலிருக்கிறது என்று உள்ளே நுழைந்தால்….
அதைப்பார்த்ததும் எனக்கு வந்த எரிச்சலுக்கு அளவே இல்லை. அந்த மூதேவி சொன்னது போல இரண்டு தொட்டிதான். ஆனால் இரண்டும் வேறு வேறு உபயோகத்திற்கு.
நான் இதுகூட தெரியாத ஆஃப்பாயிலா?
என்னைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டானே என ஆத்திரம் மேலும் பீறிட்டது. அதுவரை அடக்கி வைத்திருந்ததை வெளியேற்றிவிட்டு அமைதியாக வெளியில் வந்தேன்.
ஏன்யா…. எனக்கு இந்த ரெண்டு தொட்டிக்குமான வித்தியாசம்கூட தெரியாதா? ச்சே…. எனக்கு ஏனோ இந்த வேளையில் முன்னரே நான் எழுதிய ஜார்ஜ் புஷ் கதைதான் நினைவுக்கு வந்தது.
அது :
”பழைய ஜனாதிபதி பில் கிளிண்டன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரலாம் வா” என்று தனது மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் புஷ்.
”வாராது வந்த மாமணி”யைப் பார்த்ததும் அதிர்ச்சியைச் சமாளித்தபடியே “அடடே........ வாங்க புஷ்........ வாங்க........” என்றனர் பில் கிளிண்டனும் அவரது மனைவியும்.
வீட்டையெல்லாம் சுற்றிப்பார்த்த பின்னர் உணவு சாப்பிட அமர்ந்தனர் நால்வரும்.
அந்த நேரம் பார்த்து புஷ்ஷுக்கு ஒன் பாத்ரூம் வர........
ஒற்றை விரலைக் காட்டினார் புஷ்.
”அதோ........ அந்தப் பக்கம் கடைசி ரூம்.” என்று கை காட்டினார் கிளிண்டன்.
தேடிப் போய் தன் “சுமையை” இறக்கி விட்டு வந்த புஷ் “அப்பாடா”என்று அமர்ந்தபடியே தன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க........
பதிலுக்கு புஷ்ஷின் மனைவி கிளிண்டனின் மனைவி ஹிலாரியிடம் காதைக் கடிக்க........ ஏதும் புரியாமல் முழித்தபடி சாப்பிட ஆரம்பித்தார் பில் கிளிண்டன்.
ஒருவழியாய் வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு வந்து படுக்கையில் சாயும் முன்........
”ஆமாம்........புஷ்ஷின் மனைவி உன் காதில் ஏதோ கிசுகிசுத்தாரே.....அது என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டார் கிளிண்டன்.
”அது வேறொன்றுமில்லை........ நமது பங்களாவிலேயே புஷ்ஷுக்குப் பிடித்தது கழிப்பறைதானாம். அதிலும்..... உங்க தங்க முலாம் பூசிய சிறுநீர் கழிக்கும் தொட்டி அவருக்கு ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதாம்.” என்றார் ஹிலாரி.
”என்னது........ தங்க முலாம் பூசிய சிறுநீர் கழிக்கும் தொட்டியா........?
நான் அப்பவே நெனைச்சேன்........ அது எதுவோன்னு நெனைச்சு........
ஏதோ பண்ணித் தொலைக்கும்னு” என்று தலையில் அடித்துக்கொண்டார் பில் கிளிண்டன்.
”ஏங்க........ என்னங்க ஆச்சு........?” என்று ஹிலாரி படபடப்புடன் வினவ........
”அட........ அது சிறுநீர்த் தொட்டின்னு நெனச்சு........ நான் தினமும் வாசிக்கிற சாக்சாபோன்ல ஊத்தீட்டுப் போயிருக்கு அந்த சனியன்.” என்றார் பில்.
ஏம்ப்பா…. நான் தெரியாமத்தான் கேக்குறேன்…. நானென்ன அந்த புஷ் அளவுக்குக் கூறு கெட்டவனா? அந்த ரெண்டு தொட்டிக்குமா வித்தியாசம் தெரியாது?
இருந்தாலும்… அவன்…. என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.
(சகலரது சந்தேகமும் தீர அவ்விரு ”தொட்டி”களின் படங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எஜமான்….நீங்களே பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்.)
(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)
|
|