???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்! 0 எஸ்.வி.சேகர் யார்? அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்?: முதலமைச்சர் 0 டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் 0 மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து! 0 சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை! 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுறாமீன் சாப்பிடும் பிராமின்!- கவிஞர் பழநிபாரதிகட்டுரை

Posted : வியாழக்கிழமை,   மே   12 , 2016  02:30:36 IST

அந்த நடிகரிடம் நிருபர்கள் கேட்டார்கள்.
 
“நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணமென்ன?”
 
“ வறுமை”
 
“ நீங்கள் எதை நம்பமாட்டீர்கள்?”
 
“ நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை”
 
“சாக வேண்டும் என்று எப்போதாவது  நினைத்தது உண்டா ?”
 
“ நினைத்ததுண்டு”
 
 
வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் நடிக்க வந்த அந்த நடிகர், பின்னாளில் பலருடைய வறுமையை தீர்த்து வைத்தார். புகழ் நிரந்தரமானது இல்லை என்று நம்பியவரின் புகழ் நிரந்தரமானது. சாக நினைத்ததுண்டு என்று சொன்னவர், மரணித்துக் கால்நூற்றாண்டு கடந்தும் மக்களின் மனங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவர் தான் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டம் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.
 
 
‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ என்றொரு நூல். கவிஞர் வாலி தன்னை வாழ வைத்த, தான் வியந்த எம்.ஜி.ஆரின் தகைமைகளை அழகிய தமிழில் சிலாகித்திருக்கிறார் . என் உணவில் உப்பாகவும், உதிரத்தில் வெப்பாகவும் எம்.ஜி.ஆரே கலந்திருக்கிறார் என்கிறார். இது துக்ளக் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  நூலாக்கம் குமரன் பதிப்பகம்.
 
 
எம்.ஜி.ஆருக்கென்று உள்ள கதாநாயகக் குணங்களைக் கட்டமைத்து “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே’ என்று அவருக்கேயென பாடல்களை வடிவமைத்தார் வாலி. அது வாலியின் வெற்றியாகவும் வடிவெடுத்தது.
 
 
“இனி என் எல்லாப் படங்களுக்கும் வாலிதான் பாட்டெழுதுவார் ”  என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பிரகடனப் படுத்தினார் எம்.ஜி.ஆர். “ உங்கள் திரைப்பாடல்கள் திமுகவின் வெற்றிக்கு வெகுவாக உதவுகின்றன”  என்று அண்ணாவும் வாலியை அள்ளிக் கொஞ்சினார்.
பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இரண்டும் திமுக வின் கொள்கைகளாக இருந்த போது, பார்ப்பனராகவும் தீவிர கடவுள் பக்தராகவும் இருந்த வாலியை எது எம்.ஜி.ஆரோடு பின்னிப் பிணைய வைத்தது ? நட்பின் தளத்தில் ஒரு புரிதல் எப்போதும் இருந்திருக்கிறது. நான் ஒரு பிராமணன் என்று பதாகையை தூக்கிக்கொண்டு அலைந்தவரல்ல வாலி.
 
 
 
அவர் பிறந்த பொழுது அவரது தாயாருக்கு ஜன்னி நோய். அவரது தந்தையிடம் பணியாற்றிய  இப்ராஹிம் என்ற இஸ்லாமியரின் துணைவிதான் வாலியைத் தன் இன்னொரு குழந்தையாக  வாரியணைத்து தன் மார்பில் அமுதூட்டியிருக்கிறார், “ இன்று நான் முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்” என்று இந்தச் செய்தியை தனது ‘நினைவு நாடாக்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறார் வாலி. ஒரு முறை அவரைப் பற்றிக் கிசுகிசு எழுதிய பத்திரிகையாளரைப் பார்த்து, நான் சுறாமீன் சாப்பிடுகிற பிராமின் என்று எச்சரித்திருக்கிறார்.
‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ நூலில் ஒரு இடம்..
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் அன்னதானம் செய்வதற்காக நேர்ந்து கொண்டபடி திருச்சிக்குக் காரில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் வாலி. அவருடன் ஒரு பாகவத நண்பர்.
அந்நேரம் அவரை ‘ நவரத்தினம்’ படத்திற்கு அவசரமாக ஒரு பாட்டெழுத வேண்டுமென்று இயக்குனர் ஏ.பி.நாகராஜன் சத்யா ஸ்டுடியோவுக்குத் தொலைபேசியில் அழைக்கிறார். உடனே வர இயலாது; இரண்டு நாளாகும் என்கிறார் வாலி. தொலைபேசி துண்டிக்கப்பட்டு மீண்டும் ஒலிக்கிறது, இப்போது எம்.ஜி.ஆரின் குரல்.
 
 
“ ஆண்டவனே ! ( எம்.ஜி.ஆர் வாலியை இப்படித்தான் அழைப்பாராம்) இப்ப வந்து பாட்டை எழுதிக் கொடுத்திட்டு போயிருங்க , நான் குன்னக்குடியை வெச்சு டியூன் பண்ணிக்கிறேன் . நீங்க இரவுல புறப்படாம, அதிகாலையில் கிளம்பி, திருச்சி போயி- சமயபுரம் பிரார்த்தனையை நிறைவேத்திடுங்க... இப்ப பாட்டு அவசரம், உடனே வாங்க... என்னுடனே சாப்பிட்டுப் பாட்ட எழுதிக் கொடுத்திட்டுப் போங்க. உங்களை இரண்டு மணி நேரத்துல விட்டுடுறேன்.”
 
 
எம்.ஜி.ஆர் பேச்சைத் தட்டமுடியாமல் நண்பர் பாகவதரோடு சத்யா ஸ்டுடியோவுக்குப் போகிறார் வாலி. ‘ நவரத்தினம்’ படப்பிடிப்பு. வாலியை பார்த்ததும் காட்சியை முடித்துக்கொண்டு ஒப்பனை அறைக்கு அழைத்துச் சென்று பாட்டின் சூழலை விளக்குகிறார்.
 
 
மதிய உணவு நேரம். எம்.ஜி.ஆருக்கு இடப்புறம் வாலி, வலப்புறம் லதா. உணவுப் பரிமாறல் தொடங்குகிறது . வாலிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கிற பாகவதரின் நினைவு வந்து, அவரை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வரச்சொல்லலாம் என எழுந்திருக்கிறார் .
“ ஏன் எழுந்திருக்கிறீங்க?” என்று எம்.ஜி.ஆர் வாலியின் கையைப் பிடித்து அமரவைத்து, செய்தியைக் கேட்டு அவரே வெளியில் சென்று அந்த பாகவதரை உள்ளே அழைத்து வருகிறார். அருகே அமரவைத்து அற்புதமான விருந்து வைத்து மகிழ்கிறார். இதை வாலி சுவையாக சொல்கிறார்.
நான் சொல்ல வருவது அதல்ல... அப்போது அந்த விருந்தில் எம்.ஜி.ஆர் வீட்டிலிருந்து மீனும் கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த மீன் அதிகமான முள்களை உடைய சுவை மிக்க ஒரு வகை. வாலிக்கு மீன் பிடிக்கும், ஆனால் விரால் மீன் மட்டும் தான் 
சாப்பிடுவார். அதில் அதிகமான முள் தொந்தரவு இருக்காது. அதனால் எம்.ஜி.ஆரிடம் அந்த சிக்கலைச் சொல்லி மீன் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் விடவில்லை, அந்த மீனின் சுவையை எடுத்து சொல்லி அவரே முள்களையும் களைந்து கொடுத்துச் சாப்பிட வைத்திருக்கிறார்.
 
 
துக்ளக் பத்திரிகையில்  இந்த தொடரில்.. மீன் சாப்பிடும் பகுதி மட்டும் சோவின் தணிக்கைக்கு உள்ளாகிவிட்டது. வாலிக்கு வருத்தம். அவருக்கும்  சோவுக்கும் வாக்குவாதம் நடந்தது . ‘என் பத்திரிக்கையில் ஒரு பிராமணன் மீன் சாப்பிட்டான் என்பதைப் பதிவிட மாட்டேன்’ என்று பிடிவாதமாக சோ தவிர்த்துவிட்டார். இதை வாலிதான் என்னிடம் சொன்னார். இது நூலாக வெளியாகும் நேரம் வாலி இல்லை. அதனால் இந்த செய்தியை நூலிலும் சேர்க்க முடியவில்லை.
இராமாயணத்தில் வனத்திற்குப் போகும் வழியில் இராமன் தவச்சாலையில் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க வருகிறான் குகன். ‘உணவாகத் தேனையும் , மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன் . தங்களின் எண்ணம் யாதோ?’ என்று கேட்கிறான்.
 
 
இராமன் புன்னகைத்தபடியே ‘அன்பின் மிகுதியால் நீ கொண்டுவந்தவை என்பதால் இந்த தேனும் , மீனும் அமிழ்தத்தைக் காட்டிலும் சிறந்தவை. எம் போன்றோரால் ஏற்கத்தக்கவையே’ என்கிறார் .
தேன் மலையுச்சியில் மிக உயரத்தில் இருப்பது, மீன் கடலின் மிக ஆழத்தில் வசிப்பது. இராமன் மீது தான் கொண்ட அன்பின் உயர்வையும், ஆழத்தையும் ஒரு சேர உணர்த்தும் படியாகத்தான் குகன் தேனையும், மீனையும் கொண்டுவந்தான் என்று என் தமிழாசிரியர் கோமதி நாயகம் அதற்கொரு அழகான விளக்கத்தை சொன்னார். நல்ல வேளையாக இராமாயணத்தை சோ பதிப்பிக்க வில்லை.
இப்போது இது தான் என் நினைவுக்கு வருகிறது.
 
 
வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த ‘தாய்’ வார இதழில், நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா ? அசைவ சாப்பாடா? என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு வலம்புரிஜான் சொன்ன பதில்:
 
 “ எம்.ஜி.ஆர். சாப்பாடு!”
 
(மே 2016 அந்திமழை இதழில் வெளியான விருந்தினர் பக்கக் கட்டுரை)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...