???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்-4

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   04 , 2019  08:08:17 IST


Andhimazhai Image
கடந்த மாதம் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்தேன். கல்லூரி விழா ஒன்றிற்காக கூட்டிப்போக மாணவர்கள் வந்திருந்தார்கள்.  நம்ம டூட் மச்சீஸ்களுடன் காரில் பேசிக் கொண்டு போகும் வழியில்… 
கடைசியா என்ன படம் பார்த்தீங்க? என்றேன். 
 
‘‘நே.கொ.பா” என்றார்கள். 
 
அடுத்து… என்ன மாதிரி படங்க எல்லாம் பார்ப்பீங்க? என்று கேட்க…
 
‘‘எல்லாப் படமும்  பார்த்துருவோம்…  குறிப்பா  வோர்ல்ட்  மூவீஸ் (World Movies)” என்றார்கள் கோரஸாக. 
 
இதில் என்ன சிறப்பு என்றால் இருவருமே விஸ்காம் மாணவர்கள்.(காட்சி தொடர்பியல் துறை) அதில் ஒரு நண்பனின் தாய்மொழி தமிழ். மற்றொரு நண்பன் மலையாளம். 
சரி நாம் தமிழில் இருந்து தொடங்குவோம் என்று….
 
மச்சி… பாலு மகேந்திராவோட எந்தப் படம் பிடிக்கும்? என்றேன். 
‘‘சாரி சார் நான் அவர் படம் எதுவுமே பார்த்ததில்லை”
எனக்கு ஏனோ நெஞ்சடைத்தது.
 
‘‘நெஜம்மாத்தான் சொல்றீங்களா”ன்னேன்.
 
‘‘யெஸ் சார்” என்றார் அந்த மண்ணின் மைந்தன் காரை அசால்ட்டாக ஓட்டியபடி. 
 
சட்டென்று ஒரு யோசனை…. அப்படியே இந்த ஓடும் காரில் இருந்து குதித்து விட்டால்தான் என்ன? என்று. ஆனாலும் ஏனோ வாழலாம் என்று ஆசையாக இருந்தது. நம்பிக்கைதானே வழுக்கை….? 
சரி ஹண்ட்ரட் பர்சண்ட் (100%) லிட்ரரி ஸ்டேட்(கேரளம்) சேட்டனிடம் ச்சோதிக்கலாம்ன்னு உத்தேசிச்சிண்டு “ஏதானும் அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா கண்டுட்டுண்டா?” என்றேன் தற்கொலை முயற்சியைத் தள்ளிப்போட்டபடி.
 
“ஆரானு அது?” என்றது அது.
 
இன்னிக்கு ஒரு டெத் கன்பர்ம்முடா… என்று ஏனோ ஒரு பட்சி மனசுக்குள் அலறியது. நல்லவேளையாக அதற்குள் கார் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துவிட நான் லாரியில் அடிபட்டுச் சாவது தள்ளிப்போனது.
முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியவைத்தார் அந்த உதவிப் பேராசிரியை. பீதி படர்ந்த என் முகத்தைப் பார்த்துப் பரிதாபமாக இருந்திருக்கும் போல. அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள்தான் உலகத்தின் எதார்த்தத்தை ஓரளவுக்குப் புரிய வைத்தது எண்டும் சொல்லலாம். அந்தத் தோழி சொன்ன நெத்தியடி டயலாக் இதுதான் தோழர்களே…
 
‘‘சார்…. கார் இருக்கறவனுக்கு பாலு மகேந்திராவத் தெரியாது.
பாலு மகேந்திராவத் தெரிஞ்சவனுக்கு கார் கிடையாது.
என்ன சார் பண்றது….?” 
 
இனி நான் கல்லூரிகளுக்கு நடந்தே போவது என்று தீர்மானித்தேன். 
 
 

                                                              ---------------------

 
னதில் நீண்ட காலமாகவே தரங்கம்பாடி செல்லவேண்டும் என்கிற ஆசை நிழலாடிக் கொண்டே இருந்தது. அது ஓரிரு மாதங்கள் முன்புதான் நிறைவேறியது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு இயந்திரங்கள் அங்குதான் வந்து சேர்ந்தன. தமிழ் மொழியின் அச்சாக்கம் அங்குதான் தொடங்கியது. அதாவது தமிழகத்தில் நிகழ்ந்த முதல் அச்சாக்கம் என்று சொல்லலாம் இதை. ஏனெனில் தமிழகத்தில் தமிழ் அச்சாகும் முன்பாகவே கேரளத்தின் அம்பலக்காட்டில் 1578 இல் “தம்பிரான் வணக்கம்” என்கிற தமிழ்நூல் அச்சாகி விட்டது என்பது அநேகரும் அறிந்த விஷயம்தான். தமிழகத்தின் முதல் காகித ஆலை அமைந்ததும் இதே தரங்கம்பாடியில்தான். இப்படி எண்ணற்ற பெருமைகள் கொண்ட அம்மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் பெருமகிழ்வு என்னைப் பற்றிக் கொண்டது. அங்குள்ள டேனிஷ் கோட்டை… டென்மார்க்காரர்கள் வந்திறங்கிய கடற்கரை… சீகன்பால்கு சுற்றியலைந்த தெருக்கள்… என வரலாற்றின் சுவடுகள் வருடிக் கொடுத்தன. 
 
 
அதைவிடவும் அங்கு நான் வாங்கி வந்த மரிய லாசர் எழுதிய சிறு நூல் எண்ணற்ற அதிசயங்களையும் சுவாரசியங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. தில்லையாடி வள்ளியம்மை குறித்து… மயிலாடுதுறைக்கும் தரங்கம்பாடிக்கும் ரயில் வரக் காரணமாய் இருந்த இராவ்பகதூர் ரத்தினசாமி குறித்து என ஏராளமான தகவல்கள். 
 
அதில் ஒரே நேரத்தில் சிரிப்பையும் துயரையும் ஒருங்கே வரச் செய்த செய்தி என்பது 1600 களில் தரங்கம்பாடி வந்திறங்கிய இரண்டு பாதிரியார்கள் பற்றியது. 
 
ஒன்று : ஸ்டோர்ம்
 
இரண்டு : நீல்ஸ்.
 
சமயப்பணிக்கு வந்த இவர்கள் இரண்டு பேரும் உலக மகா மெகா குடிகாரர்களாய் எப்படி மாறிப்போனார்கள் என்பதைக் கேட்டால் நமக்கே தலை சுற்றும். சமயப்பணி செய்ய வந்த இடத்தில் ஏனிப்படி ஆனார்கள்? ஊரே உதைத்துத் துரத்தும் அளவுக்கு ஏனிப்படிப் போனார்கள்? என்பதுதான் கதை.
 
இந்த மகராசர்களைக் கொண்டு வந்து இறக்கிய கப்பல் டாட்டா காட்டிவிட்டுப் போனது போனதுதான். இவர்களோடு பிற டென்மார்க்காரர்களை இறக்கிவிட்ட கப்பல் தரங்கம்பாடியில் இருந்து புறப்பட்டு ஊர் போய்ச் சேரவும் அங்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தொடங்கவும் மிகச் சரியாக இருக்கிறது. டென்மார்க் மன்னனின் தவறான அரசியல் நகர்வுகளால் அண்டை நாட்டினரோடு சண்டை வேறு ஆரம்பிக்கிறது.
 
டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் கரைகளில் காத்திருந்து காத்திருந்து சலித்துப் போனதுதான் மிச்சம். நாட்கள்… மாதங்கள்… என கடந்தாலும் தங்கள் தாய்நாட்டில் இருந்து யாரும் வருவதாகக் காணோம்.
ஒன்றல்ல இரண்டல்ல… 
 
1642 தொடங்கி 1669 வரையிலான 27 ஆண்டுகள்…
 
இங்கிருந்த டென்மார்க் நாட்டினர் சிலர் தனிப்பட்ட விதத்தில் தங்களுக்குக் கிடைத்த வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இன்னும் சிலரோ கடற்கொள்ளையில் குதிக்கிறார்கள். 
 
உச்சகட்ட வெப்பம்…
 
தனிமை…
 
சலிப்பு…
 
குடும்பத்தினரையும் நண்பர்களையும் காணமுடியாத ஏக்கம்…
 
ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குச் சென்று கூட்டிச் செல்ல கப்பல் வருகிறதா எனப் பார்ப்பது… நீலம் மேவிய நீண்ட கடல் தந்த ஏமாற்றத்தை ஏந்தியபடி ஊருக்குள் திரும்புவது.
இப்படி எல்லாம் சேர்ந்து கொள்ள மதகுருக்கள் ஸ்டோர்மும்  நீல்ஸ்…ம் குடிக்கத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் தொடங்குகிறது துறவிகள் துஷ்டர்கள் ஆன வரலாறு.
குடியென்றால் அதுவும் மரணக்குடி. உள்ளூர் சாராயம்தான் உற்றதுணை அவர்களுக்கு. இரவு பகல் பாராது குடித்துத் தீர்க்கிறார்கள் இருவரும். உள்ளே போனது தன் “வேலையைக்” காட்டத் தொடங்கினால் ஊருக்குள் ஓடத் தொடங்குவார்கள். அதுவும் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல். ஆதாம் ஏவாள் காஸ்ட்யூமில் ஓடிவரும் இவர்களைக் கண்டு ஊரே மிரளும்.
 
இதில் பெண்களை வம்புக்கு இழுப்பது….போதையின் உச்சத்தில் பட்டாக்கத்தியோடு வந்து குறுக்கே புகுந்த குதிரையைப் போட்டுத் தள்ளுவது… செம சரக்கோடு சுவிசேசம் செய்வது… சுவிசேச மேடையிலேயே மட்டையாவது… என ஏகப்பட்ட அலப்பரைகளை இந்த முற்றும் திறந்த துறவிகள் கொடுக்க… பழவேற்காட்டில் தங்கியிருந்த டச்சுப் படையின் தளபதிக்குப் போகிறது தகவல். விசாரணையில் முடிவில் அண்ணார் ஸ்டோர்முக்கும் அண்ணார் நீல்ஸுக்கும் மரணதண்டனை அறிவிக்கிறார் தளபதி.
 
இதில் ஸ்டோர்ம்மின் காலில் இரும்புக் குண்டுகளைக் கட்டி சாக்குப் பையில் போட்டு கடலில் மூன்று மைல் தாண்டி  வீச உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 
 
அன்னார் நீல்ஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குற்றம் சாட்டியவர்களே குறைக்கச் சொல்கிறார்கள். அத்தோடு… அவர் தரங்கம்பாடி வந்திறங்கி…இங்கு போர்ச்சுக்கீசிய மொழியைக் கற்று… தனது பிரச்சாரத்தால் நிறைய போர்ச்சுக்கீசிய கத்தோலிக்கர்களை லூத்ரன் சபைக்கு மாற்றிய சாதனையும் தளபதி மனதில் நிழலாட மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கிறார்.
 
இது பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதை நாம் அப்படியே நம் மனக்கண் முன் விரித்துப் பார்த்தால் இது ஒரு அற்புதமான திரைப்படம் ஆவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது. சுட்டபழத்தையே சுட்டுகிட்டு இருக்குறதுக்கு பதிலா… சுடாத இந்தப்பழத்தை சுடுங்களேன் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களே.
 

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...