அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 33 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   03 , 2020  21:13:58 IST


Andhimazhai Image
மரணம் என்பது வாழ்வின் முடிவு. அது எவர் கையிலும் அகப்படாத நிகழ்வு. அதை எவரும் வலியவந்து விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. வாழ்தல் தான் அடிப்படை மனித மாண்பு.
 
ஆனால், சில நாட்களுக்கு முன்பு பாடகர் டி.எம். சவுந்தரராஜன் அவர்களின் பேரன் எனக்கு போன் செய்து இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மரணம் அடைந்து விட்டாராமே? தெரியுமா? என்றதும் எனக்கு அண்ணா பதில் சொல்வதென்றே தெரியாமல் விழித்தேன். அது போதாதென்று சில மணித்துளிகளில் முகநூலில் மாரடைப்பால் மறைந்தார் என செய்தியை பரப்பி விட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்களும் அதுகுறித்து பேச ஆரம்பித்துவிட்டன.
 
'அட என்னடா இது வாழ்க்கை' என்று அலசிப் பார்த்தபோது தெரியவந்தது இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் ஒரு குடும்ப விழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார் என்று...
 
இப்படித்தான் பல பிரபலங்கள் மரணமடைந்துவிட்டதாக மலேசியாவிலிருந்து எம்.ஜி.ஆர் வேடமிட்டு கோலாலம்பூரில் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் தேவன் கேட்பார். நமக்கா பயங்கர சங்கடம். என்னடா, இந்த மலேசிய நண்பர்கள் என்று அயற்சி. நான் அவர் தொலைபேசி அழைப்பு வந்தால் பயந்துவிடுவேன். இப்போது யாரை கேட்கப்போகிறாரோ என்று.
 
வலைதளத்தில் வேண்டியோர், வேண்டாதோர் என கண்ணுக்குப் புலப்படாமல் தோன்றிவிட்டது பலமா? பலவீனமா? என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பல சமயம் ஏன் தான் முகநூலில் பயணிக்கிறோம் என்கிற அயற்சி ஏற்படுவதுண்டு. மரண செய்திகள் நெஞ்சை சங்கடப்படுத்துகின்றன.
 
போகட்டும். மரண வதந்தி பெரியோர் வழக்கில் திருஷ்டி கழிந்தது என எண்ணிக் கொள்வோம். மிக நீண்ட ஆயுளோடு பயணங்கள் முடிவதில்லை இயக்குநரே என வாழ்த்துவோம்.
 
சரி அவரைப் பற்றி நினைவுபடுத்திவிட்டார்கள். எனக்கு அவரை 1982-இல் சந்தித்த நினைவுதான் பளிச்சிடுகிறது. அப்போது சினிமா என்றால் 92சி அண்ணா சாலை முகவரிதான். ஏன் அப்படி என்கிறீர்களா?
 
தமிழில் கொடிகட்டிப் பறந்த பல கலைஞர்கள், டைரக்டர்கள், நாடக நடிகர்கள் அந்த 92சி பில்டிங்கில்தான் தங்குவார்கள். தங்குவார்கள் என்ன... வாழ்ந்தார்கள்.
 
காரைக்குடி ஸ்டைலில் கீழே பெரிய வராந்தா - ஒருபுறம் கிணறு. மாடிகள் உண்டு. குட்டி குட்டி அறைகள். ஒரு அறையில் நான்கைந்து கலைஞர்கள் தங்குவார்கள். சினிமா சான்ஸ் கிடைத்தால் உடனே கிணற்றில் இருந்து நீர் இறைத்து வாளியை அப்படியே கவிழ்த்து தலையில் குளிப்பாட்டி துண்டு எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள்.
 
அட... அதை சினிமாக்காரர்களின்  சேவல் பண்ணை என்று கூடச் சொல்லலாம். திறந்தவெளி குளியல்தான். பின்னாளில் மழை. கழிவு நீர் தேங்கி குட்டையாக இருந்த நிலையிலும் செங்கற்களை படிக்கட்டுபோல் போட்டு அதில் கால் வைத்து தாண்டி தாண்டி ரூமுக்கு சென்று அடைவார்கள்.
 
கஷ்டகாலம். ஆனாலும் அதுதான் பலருக்கு வாழ்க்கை தந்தது. அந்த அனுபவம்தான் ஆர். சுந்தர்ராஜனுக்கு பயணங்கள் முடிவதில்லை படத்தின் கருவாக அமைந்தது. படமெடுத்தார், வென்றார்.
 
அங்கே கவுண்டமணி, செந்தில், ஆர். சுந்தர்ராஜன், சங்கிலி முருகன், குள்ளமணி, கோலப்பன், குமரிமுத்து, இன்னும் நிறையபேர் சந்தித்தும் தங்கியும் இருந்தார்கள்.
 
இப்போது அந்தக் கட்டிடமே இல்லை. ஆனந்த பவன் தேனாம்பேட்டை சிக்னலில் உள்ள ஹோட்டல். அதன் பக்கத்தில் தான் 92 சி. அண்ணாசாலை பில்டிங் இருந்தது. இதைப்பற்றி தாய் வார இதழில் அப்போது எழுதி பதிய வைத்தேன். அங்கே சந்தித்த ஆர். சுந்தர்ராஜனை நினைக்க வியப்பாக உள்ளது.
 
என்ன வியப்பு?
 
நக்கல் நையாண்டிக்கு இவரைவிட்டால் எவருமில்லை. கவுண்டர் அடித்து பேர் வாங்கிய கவுண்டமணி அவர்களே தோற்றுவிடுவார்.
 
முகத்துக்கு நேரே பளார் என்று விமர்சனம் வைப்பார். எதிரி என்ன நினைப்பார் என்பதெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. காரணம் அவர் மனதில் தோன்றுவதை அப்படியே பட்டவர்த்தனமாக பேசி விடுவார். மனதில் எந்த திட்டமிடுதலும் வஞ்சனையும் இல்லாதவர்.
 
சர்வ சாதாரணமாக, எளிமையாகப் பழகுபவர். நான் பத்திரிகையாளனாக இருந்தபோது அவரை பேட்டி கண்டு எழுதும் போதும் சரி இப்போது சரி . பார்த்ததும் தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பேசுவார்.
 
நான் கமல் சாரோடு இருக்கும் போது 'என்னய்யா, நல்லா மேக்கப் போடுறாரா? என்பார். யார் சார் என்றால் ' அட கமல்தான்யா... நிறைய பேருக்கு மேக்கப் போடுறதா கேள்விப்பட்டேன்'.
 
எனக்கு சங்கடம்.
 
நான் என்ன சொல்வது?
 
நான் கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். நம்மிடம் இப்படிச் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வது?
 
"சார் என்ன இப்படி சொல்றீங்க? அவர் நல்ல நடிகர்"
 
"அதான்யா நானும் சொல்றேன். நல்ல நடிகர். இவருக்கு ஏன்யா இந்த வேலை? மேக்கப் போடத்தான் மேக்கப் மேன் இருக்கானே" என்று சொன்னார்.
 
அப்போது நாயகன் க்ளைமாக்ஸ் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் படமாக்கப்பட்ட தருணம். நாயகன் வில்லன் போலிஸாக நடிக்கும் நடிகருக்கும் அவர் அம்மாவிற்கும் அடிபட்டு ரத்தம் வருகிற காட்சிக்கான மேக்கப் ராஜ்கமல் அலுவலகத்தில் நடந்தது. அதை கமல் சார் தான் போட்டார்.
 
யாரோ இந்த சம்பவத்தை மிகைப்படுத்த, இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இப்படி என்னிடம் கேட்டார்.
 
பிறகு ஒரு நாள். "சும்மா சொல்லக் கூடாதுய்யா... கமல் மாதிரி ஒரு டெடிகேட்டிவ் சினிமாக்காரனை வேறெங்கும் பார்க்க முடியாது" என்று பாராட்டித் தீர்த்துவிட்டார். இதுதான் ஆர். சுந்தர்ராஜனின் சுபாவம்.
 
பகுத்தறிவு கொள்கைக்காரர். சென்ற ஆண்டு இயக்குநர் சங்கத் தேர்தல் நடந்தது. நான் செயற்குழு உறுப்பினராக சுயேட்சையாக நின்றேன். அப்போது தேர்தல் வாக்கு கேட்கிற இடத்திலும் 'உனக்குத்தான் ஒட்டு, ஆனா நீ இதுல வந்து என்ன பண்ணப் போற? ஆர்.கே. செல்வமணி செல்வாக்கு ஜாஸ்தி... நீ அவர்கிட்டயும் ஒர்க் பண்ணிருக்க. உனக்கு தெரியாதது இல்ல. எல்லாம் அதிகாரம், அரசியல்னு மாறிப்போச்சு. சரி விடு. நிக்கறது நம்ப வேலை. ஜெயிக்க வைக்கிறதும், வைக்காததும் சூழல். ஜெயிச்சா இங்க வேலை செய்யலாம். இல்லன்னா நீ உன்னப்பத்தி நினைச்சு முன்னேறலாம்' என்கிற யதார்த்தமான பேச்சுக்களாக பேசி அந்த நேரத்திலும் சமூக சூழலாக மாற்றினார். அது அவரால்தான் முடியும்.
 
அதில் நான் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஒட்டு பெற்றதும், எவ்வளவோ பேர் என் மீது அன்பு வைத்திருந்ததும் புரிய வைத்தது. சரி விஷயத்திற்கு வருவோம்.
 
படப்பிடிப்பில் கூட தன்னையே கிண்டல் செய்துகொள்வார். 'வைதேகி காத்திருந்தாள்' சூப்பர் சார் என்றதும், 'ஆமா தண்ணி பிரச்சனைதான் கதை' 
எப்படி? என்றேன். 'என்னய்யா நீ' தண்ணியால ஒருத்தன் அவஸ்தை. ஒருத்தன் தண்ணியில்லாம அவஸ்தை. அதான் மேட்டர்' என்றார்.
 
கதை வசனமின்றி பல சமயம் மான்டேஜ் ஷாட்டுகளாக எடுத்துவிட்டு டப்பிங்கின் போது அந்தக் காட்சி மேல் வசனம் பேசி கதையாக்கி விடுகிற சாதுர்யம் ஆர். சுந்தர்ராஜன் அவர்களுக்கு உண்டு.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் எப்படி கதை சொல்லியிருப்பார் என நினைக்கும்போதே சுவாரஸ்யம் கூடுகிறது.
 
ஒரு சமயம், "சார்... கதை என்னன்னு தெரிஞ்சா நல்லது" என நடிகர் கேட்க...
"அட... அத தெரிஞ்சா நான் சொல்லமாட்டானா?" என தமாஷ் பேசி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்... ஆனால் அந்தப் படம் சூப்பர் ஹிட். வெள்ளிவிழா கண்டது.
எப்படி எதிர்மறையாகப் பேசினாலும் ஒரு யுக்தி அவர் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். டப்பிங் துர்கா அவர்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த நிலையில் அடிக்கடி தேனாம்பேட்டையில் அவர் தென்பட்டார். படப்பிடிப்பு இல்லையென்றால் பாண்டி பஜார் அருகிலுள்ள தபால் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு தையல் கடையில் இவரைப் பார்க்கலாம். கூடவே அனுமோகன் உள்ளிட்ட உதவியாளர்களுடன் செம அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்.
 
எனது நண்பர் பாபுஜி இயக்குநர் அவருடன் தென்படுவார். புகழ்பெற்ற நிலையிலும் சரி, இப்போதும் சரி அங்கு இவரைப் பார்க்கலாம். நட்புதான் இவரின் வலிமை.
 
மக்கள் ஆட்சி படத்தில் நான் அசோசியேட் டைரக்டராக பணியாற்றினேன். அதில் மம்மூட்டி, ரோஜா, ஆர். சுந்தர்ராஜன், லிவிங்ஸ்டன் என பலர் பணியாற்றினார்கள்.
 
அப்போது ஆர்.கே. செல்வமணியிடம் "ஏன்யா எப்படியா இந்த மம்மூட்டிக்கு மூணு தேசிய விருது கொடுத்தாங்க, எப்பப்பாரு முகத்தை இறுக்கமா வச்சிக்கிட்டு ஒரே ரியாக்ஷன் குடுக்குறாரு. நாமளும் அப்படி இருந்தா தேசிய விருது கிடைக்கும் போல" என்று நகைச்சுவை பேசினார்.
 
இதைக் கேட்டு மம்மூட்டியே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கோயம்புத்தூர் குசும்பு. மணிவண்ணனுக்கு ஒருபாணி என்றால் ஆர். சுந்தர்ராஜன் இன்னொரு வகை.
 
ஆர். சுந்தர்ராஜன் படத்தில் நகைச்சுவை, கிண்டல் பரிமாற்றம் அதிகம் காணப்படும். அவர் மகன் நடித்து ராஜராஜன் ஒளிப்பதிவில் வெளிவந்த 'சித்திரையில் ஒரு நிலா' என்றெண்ணுகிறேன். இது பாதி பிலிம் மீதி டிஜிட்டல் இதில் ஒரு சின்னத் தள்ளாட்டம் இருந்தது.
 
பழைய டெக்னலாஜியில் தனது கற்பனையை வெளிப்படுத்தத் தெரிந்த இவர் இதில் திணறிவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
 
மாறும் விஞ்ஞான அணுகுமுறை பல சமயம் மிகப்பெரிய திறமையாளரை வீழ்த்தி விடுகிறது. காரணம் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளாததே! ஆனால் இயக்கத்திற்குப் பின் சாதுரியமாக நடிப்பில் மாறிவிட்டார். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி வெற்றிபெற்றார். சின்னத்திரையிலும் அவரின் நடிப்பு எடுபடுகிறது.
 
பயணங்கள் முடிவதில்லை படத்தில் இவர் தந்த மைக் நடிகர் மோகனிடமிருந்து சினிமாவில் நீண்ட காலம் பிடுங்கவே முடியவில்லை. இசைஞானி இளையராஜாவோடு மிக சகஜமாகவே பேசும் உறவுக்காரர் ஆர். சுந்தர்ராஜன்.
 
ராவுத்தர் கம்பெனியில் ஒரு ஜோக் இன்னும் உலவிக் கொண்டு வருகிறது. ராவுத்தர் (இப்ராஹிம்) இருக்கும்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றுகிற ஒருவரைப் பார்த்து "டேய்... இங்க நீதான் அதிகம் படிச்சிருக்கிறேங்கற திமிர் உனக்கு வந்துடக் கூடாது" என மிரட்டி அனுப்பினாராம். அவன் படித்தது மூன்றாவது. இப்படி நையாண்டி பண்ணுவதில் இவர் பலே பாண்டியா!
 
ஆர். சுந்தர்ராஜனுக்கு நல்ல இசை ஞானம் உண்டு என்பது வெளிவராத செய்தி. கதை ஒருவரிதான். அதைப் பின்னி திரைக்கதையாக்குகிற பாணி அவருக்கு இயல்பிலேயே அமைந்த ஞானம்.
 
இப்படிப்பட்ட காலத்தில் இவர் வைகோ கட்சிக்கு சென்று மேடைகளில் நகைச்சுவையாக பேசி கவனம் ஈர்த்தார். ஆனால் எவரிடமும் அடிபணிந்து இருக்க இயலாத கலைஞர் ஆர். சுந்தர்ராஜன்.
 
அவரின் பலம் சுயமரியாதை. அதுதான் பலரையும் ஈர்த்தது. அப்படிப்பட்டவரைதான் சமூகம் சங்கடத்தில் ஆழ்த்துமே... அதற்கும் கவலைப்படாமல் கடப்பவர்தான் ஆர். சுந்தர்ராஜன். இந்த மரணப் புரளியிலும் சிரித்தபடியே கடக்கிறார். கண்ணதாசன் தன் மரணத்தை அறிவித்துக்கொண்டு பின் நடந்த நிகழ்வை பார்த்து சிரித்தது போல!....
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...