பெங்களூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் பழனி.கிருஷ்ணசாமி (எ) சகதேவன், ‘அடிவாழை’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் அறியப்பட்டவர். அவர் புதிதாக எழுதியுள்ள ‘அந்திமம்’ அவருடைய முதல் நாவலாகும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத வந்திருப்பவரிடம் நாவலின் கதைக்களம் பற்றிக் கேட்டோம்.
“கொங்கு நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பெங்களூரில் நாற்பது வருடமாக வசித்து வருபவன் நான். என்னுடைய பண்பாட்டுப் பின்னணியும், பெங்களூரின் பண்பாட்டுப் பின்னணியும் வேறாக உள்ளது. இந்த இரண்டு பண்பாட்டையும் இணைக்கும் கண்ணிகள் என்ன என்பதை இதுநாள் வரை யோசித்து வருகிறேன்.
அதேபோல், பண்பாட்டையும் தாண்டிய சில இயற்கை நியதிகளைப் பற்றி யோசிப்பதற்கு என்னால் முடியவில்லை. ஆனால் சாதி, மதம், பண்பாடு, தேசம் என எல்லாவற்றையும் தாண்டி சில விஷயங்கள் நம்மை இயக்குகிறது என்பதைப் புரிந்து கொண்டு இருக்கிறேன். இந்த நாற்பது வருடத்தில் நன் பெற்றது, இழந்தது, புரிந்து கொள்ள முடிந்தது, புரிந்து கொள்ள முடியாது என பலவற்றையும் யோசித்துப் பார்த்தேன். கடையில் எனக்கு மிஞ்சியது குழப்பமா? சரியான புரிதலா? என்பது எனக்குத் தெரியவேயில்லை. அதை அப்படியே ‘அந்திமம்’ நாவலில் விவாதத்திற்கு விட்டிருக்கிறேன்.
மனிதனுடைய உறவுகள், மனிதநேயம், தீர்க்கவே முடியாத சில பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் போது ஏற்படும் பதட்டத்தை, தத்தளிப்பை இந்த நாவலில் பேசியிருக்கிறேன்.
நாவலில் தமிழ் பண்பாடு, கன்னட பண்பாடு போன்றவை வந்தாலும், அவை உள்ளார்ந்த அளவில் இல்லை. இருவேறு பண்பாட்டில் வாழ்ந்தாலும் எந்த பண்பாட்டையும் தூக்கிப் பிடிக்கவில்லை. நேர்மையாகவே இரண்டு பண்பாடுகளையும் அணுகியிருக்கிறேன்.
பெங்களூரில் உள்ள கோரமங்களாவைப் பற்றி அலசி ஆராய்ந்திருந்தாலும், இது பெங்களூரைப் பற்றிய நாவல் இல்லை. இது ஒருவருடைய வாழ்க்கை அனுபவம் என்பதைத் தாண்டி சில விஷயங்கள் பேசியிருக்கிறேன். கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்குப் பிழைக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் இந்த நாவல் ஓர் இணக்கத்தை கொடுக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்