???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் -9 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   18 , 2015  02:46:50 IST

 

பாரிஸிலிருந்து 411 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரதூர் சூர் க்ளான் (Oradour-sur-Glane) என்ற ஊரில்.  ஆண்டு 2001.
 
பாரிஸின் மிகப் பெரிய கல்லறைத் தோட்டத்தின் பெயர் பியர் லாச்செஸ் (Pere Lachaise).      பல்ஸாக், ஆஸ்கார் ஒயில்ட் போன்ற இலக்கிய மேதைகள், சோப்பின் போன்ற இசைக்கலைஞர்களின் கல்லறை இங்கேதான் உள்ளன.  1906 இலிருந்து 1912 வரை மேற்கு ஐரோப்பாவில் பல இடங்களைச் சுற்றிய ஸேனாப்,  தன் அனுபவங்களையெல்லாம் கடிதங்களாக எழுதினார்.  அந்தக் கடிதங்களிலிருந்து நாம் மூன்று முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.  ஒன்று, மேற்கு ஐரோப்பிய நிலம்.  இரண்டு, கீழைத் தேச கலாச்சாரத்துக்கும் மேலைக் கலாச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம்.  மூன்று - இதுதான் மிக முக்கியமானது – இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் பற்றியும் மேலைநாட்டினரின் கருத்துக்கள் யாவும் தவறானவை; கற்பிதமானவை.  இதனால்தான் ஸேனாபின் கடிதங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.  அவருடைய கடிதங்களை வைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவின் பல நூறு கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் நாம் செல்லலாம் என்று தோன்றுகிறது.  உதாரணமாக, Hendaye என்ற நகரைப் பற்றிச் சொல்கிறார் ஸேனாப்.  அது ஃப்ரான்ஸின் தென்மேற்குக் கோடியில் பிஸ்கே விரிகுடாவில் ஃப்ரான்ஸ் – ஸ்பெயின் எல்லையில் உள்ள ஒரு துறைமுக நகரம்.  நாம் ஃப்ரான்ஸ் சென்றால் பாரிஸ் போகாமல் ஹோந்தாயி சென்றால் அது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.  
ஏழு ஆண்டு ஐரோப்பிய வாழ்வில் ஸேனாபின் ஐரோப்பா பற்றிய கனவுகள் யாவும் கலைந்து விட்டன.  
”ஐரோப்பியப் பெண்களை விட நாங்கள் மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறோம்.  ஆனால் இதை ஐரோப்பியப் பெண்கள் அறிய மாட்டார்கள்.  அவர்கள் எங்களை இன்னும் எழுதப் படிக்கத் தெரியாத மூடப் பெண்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்களோ இப்போது ஐரோப்பிய இலக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.  எங்களிடம் இருந்த பலதார மணமெல்லாம் எப்போதோ ஒழிந்து விட்டது.  அதன் விளைவாக ஹேரமும் இப்பொது இல்லை.  எனக்குத் தெரிந்து நான்கோ ஐந்தோதான் கான்ஸ்டாண்டிநோப்பிளில் இப்போது இருக்கின்றன.  எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான நாற்பது வயதான பாஷா ஒருவருக்குப் பல அடிமை-மனைவிகள் உண்டு.  அதனால் அவரது அரண்மனையில் ஹேரம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அடிமை-மனைவிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.   என்றாலும் அவருடைய ஹேரம் ஒரு விதிவிலக்கு தான்.  பாஷாவின் மனைவி என் அம்மாவின் தோழி என்பதால் அடிக்கடி அவரைப் பார்க்க அம்மாவோடு நானும் போவேன்.  அற்புதமான பெண்மணி அவர்.  பேரழகியும் கூட.  15 வயதில் அவருக்கு ஒரு மகன் இருந்தான்.  ஆனாலும் அந்தப் பெண்மணி பாஷாவின் அடிமை-மனைவிகளுக்குப் பிறந்த மற்ற 14 குழந்தைகளையும் தன்னுடைய சொந்தக் குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார்.  என் குழந்தைகள் என்றுதான் சொல்வார்.  ஒருபோதும் பிரித்துப் பேசியதே இல்லை.  
அந்தப் பெண்மணியை பாஷா கண்டு கொள்வதே இல்லை.  இதெல்லாம் என் தலைவிதி என்றே சொல்லிக் கொள்வார் அந்தப் பெண்.  அதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.
நூற்றாண்டு நூற்றாண்டுகளாக எங்கள் தாய்மார்களும் பாட்டிமார்களும் இந்தத் தலைவிதியைச் சுமந்து கொண்டிருந்தார்கள்.  அநீதியையும் அநியாயத்தையும் கொடுமையையும் தவிர வேறு என்ன இருக்கிறது அந்த வாழ்க்கையில்?  எனவே அந்தத் தலைவிதியை நானும் என் தங்கையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தோம்.  எங்கள் மூதாதையர் இதை அமைதியாகப் பொறுத்துக் கொண்டார்கள்.  பொறுமையும் கலாச்சாரமும் ஒரே பல்லக்கில் பயணம் செய்ய முடியாது.  துருக்கி அழிந்து போனதற்குக் காரணமே அந்தப் பொறுமைதான், அந்த சகிப்புத்தன்மைதான்.    அந்தப் பொறுமை மட்டும் இல்லாதிருந்தால் இத்தனை வேதனையும் அநீதியும் இருந்திருக்காது.  உங்களுக்குத் தெரியுமா, எங்கள் வீட்டுக்கு எந்த விருந்தினர் வந்தாலும் அவர்களின் பெயர்ப் பட்டியலையும் அவர்களைப் பற்றிய விபரங்களையும் எங்கள் தாயார் சுல்தானுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  உடனே சுல்தான் அந்தச் சந்திப்புக்குக் காரணம் என்ன என்று விசாரிப்பார்.  ஏன் இத்தனை பேரைச் சந்திக்கிறீர்கள் என்பார்.  உணவு விடுதிகளில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது.  பேசினால் தகவல் சுல்தானுக்குப் போய் விடும்.  அதனால் ஆண்கள் வெளியே போகாமல் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர்.  உங்கள் வீட்டை இரவும் பகலும் உளவாளிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் அனுபவத்தையும்,  உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரே ஒரு ஆளின் தயவில்தான் இருக்கிறது என்பதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?  சுல்தானின் வேலை என்பது தன் குடிமக்களைக் கண்காணிப்பதும் தண்டிப்பதும்தான்.  விசாரணையெல்லாம் கிடையாது.  சுல்தானின் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கிறதோ அதற்குத் தகுந்த தண்டனை கிடைக்கும்.  விஷம்; அல்லது, எங்கேயாவது அரேபியப் பாலைவனத்துக்கு நாடு கடத்தப்படுவார். இத்தனைக்கும் குற்றவாளிக்குத் தன் குற்றம் என்ன என்றே தெரிந்திருக்காது.  
(ஆட்டமன் அரசின் வீழ்ச்சிக்கு இந்த அடக்குமுறை ஆட்சிதான் அடிப்படையான காரணமாக அமைந்தது.  இந்தியாவின் எமர்ஜென்ஸி காலத்தை நினைவு கூரவும்.)


 (துருக்கியில் எல்லா ஊர்களுமே மேலேயிருந்து பார்க்கும் போது இது போன்ற தோற்றத்தையே தருகின்றன.)


எனக்குத் தெரிந்த பல குடும்பங்களே இப்படிக் காணாமல் போயிருக்கின்றன.  என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு குடும்பம் – அம்மா, அப்பா, மகள், மகன்.  அவர் பெயர் பே.  கவிஞர்.  ஒருநாள் காலையில் பார்த்தால் வீட்டில் ஆட்களே இல்லை.  என்னுடைய அலியை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டேன்.  அவர்களைப் பற்றி விசாரித்தால் கூட நம்மையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றான் அவன்.   பிறகுதான் என்னுடைய வெளிநாட்டு நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன், ஒருநாள் இரவு கவிஞரின் வீட்டில் நடந்த சோதனையில் பல கவிதை ஏடுகள் அகப்பட்டிருக்கின்றன.  அவர் கவிதை எழுதுவதை சுல்தான் தடை செய்திருந்தார்.  அந்தத் தடையையும் மீறிக் கவிதை எழுதியிருந்தார் பே.  விளைவு, பத்தாண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆட்டமன் சுல்தானின் அரசு எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.  
 
   
எதிர்காலம் பற்றி எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.  என்ன வாழ்க்கை இது?     இதை விட மரணம் பரவாயில்லை என்று தோன்றியது.   எப்போதும் கைத்துப்பாக்கியை வைத்துக் கொள்ள ஆரம்பித்தோம்.  எந்நேரமும் எங்களை சுட்டுக் கொள்ளத் தயாராக இருந்தோம்.  வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லாத இந்த ஊரில் வாழ்க்கையைப் பணயம் வைப்பதில் என்ன தவறு?  அதிர்ஷ்டம் இருந்தால் ஐரோப்பா சென்று விடலாம்.  மாட்டினால் சுட்டுக் கொண்டு சாகலாம்.  பல சமயங்களில், குடிக்கின்ற காஃபியில் ஒருதுளி விஷத்தைக் கலந்து குடித்து விடலாமா என்று கூடத் தோன்றும்.  மரணம் இந்த வாழ்வை விட மோசமாக இருக்காது அல்லவா?”
துருக்கி வாழ்க்கையை இப்படியெல்லாம் வருணிக்கும் ஸேனாபுக்கு ஐரோப்பா மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது.  பல நூறு சம்பவங்களைச் சொல்கிறார்.
“பாரிஸில் ஒரு பெண் என்னிடம்  உங்கள் தந்தைக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டார்.   உங்கள் கணவருக்கு எத்தனையோ அத்தனை என்று சொன்னேன்.  எவ்வளவு முட்டாள்தனமான கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது தெரியுமா?  ”துருக்கியிலிருந்து நீங்கள் ஓடி வந்ததற்கு என்ன காரணம்?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். விட்டால், ’நான் உங்களை கான்ஸ்டாண்டிநோப்பிளில் பார்த்த போது ஒரு நீலநிறை ஆடை அணிந்திருந்தீர்களே, அதை ஏன் இன்று அணியவில்லை?’ என்று கூடக் கேட்பார்கள் போலிருக்கிறது.  
”உங்கள் பெற்றோரைப் பிரிந்து வந்தது வருத்தமாக இருக்கிறதா?”  நாங்கள் துருக்கியர் என்பதால் எங்கள் இதயம் கல்லாக இருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?  தந்தை சொன்னார், ”எங்களைப் பார்க்க சீக்கிரமே வந்து விடுங்கள். அடுத்த வாரமே கூட எதிர்பார்க்கிறேன்.”   அவர் அப்படிச் சொன்ன போது ஓடிப் போய் அவரது தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.   ஆனால் ஆண்டாண்டுக் காலமாக இந்த சமூகத்தில் நாங்கள் அனுபவித்து வரும் சித்ரவதை ஞாபகம் வந்தது.  கண்ணீரை அடக்கிக் கொண்டு  முயற்சி செய்கிறேன் என்று மட்டுமே சொன்னேன்.”  
***
பாரிஸுக்கு அருகில் உள்ள Fontainebleau என்ற ஊரிலிருந்து 1906-ஆம் ஆண்டு இப்படி எழுதுகிறார் ஸேனாப்:
ஃப்ரான்ஸ் பற்றிய என்னுடைய முதல் மனப்பதிவை எழுதச் சொல்லியிருக்கிறீர்கள்.  என்னவென்று சொல்வது?  ஃப்ரான்ஸ் பற்றி எழுதுவதை விட நான் உணர்ந்த சுதந்திரமான மனநிலை பற்றி நிறைய எழுதலாம்.  ஆனால் இந்த நகரில் சில மணி நேரங்கள் தங்குவதற்குக் கூட எங்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை.  கிறிஸ்தவர்களின் கருணை எங்கு போயிற்றோ தெரியவில்லை.  நான் உடல்நலமின்றி இருந்தேன்.  அறை கிடைக்காததற்கு அதுதான் காரணம்.  அறையிலேயே செத்து விடுவேன் என்று பயந்தார்கள்.  செத்தால் என்ன?  ஓ… அவர்களுக்கு அது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம்.  சில நாட்களுக்கு அந்த ஓட்டல் பக்கமே யாரும் வர மாட்டார்கள்.  கிறிஸ்தவர்கள் ஏன் இப்படி மரணத்துக்கு அஞ்சுகிறார்கள்?  மரணத்தைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை.  பௌத்தர்களைப் போலவே மரணத்தையும் வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதுகிறோம்.  இறந்தவர்கள் குறித்து நாங்கள் அழுது புலம்புவதில்லை.  
’சாகும் நிலையில்’ உள்ள ஒரு பெண்ணுக்கு இடம் தருவதற்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் தயாராக இல்லை.  இப்படியே ரோட்டில் கிடந்து சாக வேண்டியதுதானா?  அப்போதுதான் எங்கள் நண்பர்கள் கொடுத்திருந்த ஒரு விலாசம் ஞாபகம் வந்தது.  அவர் ஒரு மருத்துவர்.   அவரிடம் போய் விடலாம்.  அவர் எங்களை மறுதலிக்க முடியாது.  உண்மையில் உடல்நலம் குன்றியிருப்பதே அவரிடம் செல்வதற்கு ஒரு தகுதியாகி விட்டது அல்லவா?  
ஃப்ரான்ஸில் இறங்கியதும் என் அனுபவம் மோசமாகவே இருந்தாலும் நான் அனுபவித்த சுதந்திரமான உணர்வை எப்படிச் சொல்லுவேன்? கான்ஸ்டாண்ட்டிநோப்பிளில் என் அறையிலிருந்த இரும்பு ஜன்னல் கம்பிகள் இங்கே இல்லை.  எனக்கும் வானத்துக்கும் இடையே, எனக்கும் ஆரஞ்சு மரங்களுக்கும் இடையே, எனக்கும் மலைகளுக்கும் இடையே, எனக்கும் சைப்ரஸ் மற்றும் ஆலிவ் மரங்களுக்கும் இடையே எந்தத் தடைகளும் இல்லை.  
எங்கள் வாழ்விலேயெ முதல்முறையாக இரும்புக் கம்பிகளும் முகத்திரையும் குறுக்கிடாமல் வானவெளியைப் பார்க்கிறோம்.  கம்பிகள் இல்லாத ஜன்னல் திறந்தே இருக்கிறது…   
***
வெனிஸின் புகழைப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் நான் பிராமணர்கள் தங்கள் கடவுள்களை அமைதியாக துதி செய்வது போல துதி செய்ய விரும்புகிறேன்.  எனக்கு கான்ஸ்டாண்டிநோப்பிளின் அருமை தெரியாதது போலவே வெனிஸ் மக்களுக்கு வெனிஸின் அருமை தெரியவில்லை.  அவர்கள் வெனிஸை விட பகலில் சுற்றுலாவாசிகளின் கூச்சலும் இரவில் கொசுக்களின் சத்தமும் கொண்ட லிதோவையே விரும்புகிறார்கள்.  (லிதோ வெனிஸுக்கு அருகில் 11 கி.மீ. நீளமுள்ள ஒரு தீவு.)
திருமண வாழ்க்கை சந்தோஷத்தைக் கொடுக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலும் இந்த ஃப்ரெஞ்ச் பெண்கள் திருமணம் செய்து கொள்வது பற்றியே பேசிப் பொழுதைக் கழிக்கிறார்கள்.  அதேபோல் விவாகரத்து பற்றியும்.  தான் மட்டும் விதிவிலக்காக இருப்போம் என்றே ஒவ்வொரு பெண்ணும் நம்புகிறாள்.  துருக்கியப் பெண்களுக்குத் திருமணத்தின் மேல் இத்தனை நம்பிக்கை கிடையாது.   ரிச்சர்ட் ஸ்ட்ராஸின் சலோமி பற்றியும் இன்னும் இசை பற்றி எத்தனையோ விஷயங்கள் பற்றியும் ஃப்ரான்ஸில் யாரிடமாவது பேசலாம் என்று நினைத்திருந்தேன்.  நானே ஒரு துருக்கிய ஃபிலிஸ்டைன்.  ஆனால் பாரிஸ் பெண்களோ என்னை விட ஃபிலிஸ்டைனாக இருந்தார்கள்.   

***
டிசம்பர் 1906-இல் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள Territet என்ற ஊரிலிருந்து எழுதுகிறார் ஸேனாப்.  லெமான் ஏரியில் அமைந்துள்ள அந்த ஊர் பூலோக சொர்க்கம் என்று சொல்லத் தகுந்தது.  
”என் முன்னே பரந்து விரிந்திருக்கும் லெமான் ஏரி எனக்கு பாஸ்ஃபரஸை நினைவூட்டுகிறது.  பாஸ்ஃபரஸின் எதிர்க்கரையில் தெரியும் ஸ்தூபிகளும் மினாராக்களும் எங்கே?  
பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக அதன் கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருமுறை என் தோழி சொன்னாள்.  பாஸ்ஃபரஸில் கல் எறியாதே.  அதற்கு வலிக்கும்.  இந்த நேரத்தில்தானே மோதினார் (Muezzin) பாங்கு சொல்லி எல்லோரையும் பிரார்த்தனைக்கு அழைப்பார்?  
இந்த மாலை நேரத்தில் மலையடிவாரத்தில் வானளாவிய மரங்களுக்கிடையே தனியாக நடந்து கொண்டிருக்கிறேன்.  சூரியனின் சிவந்த அந்திமக் கிரணங்கள் அடர்த்தியான மரங்களுக்கு இடையே வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கின்றன.  துருக்கியில் இந்த நேரத்தில் இப்படி ஒரு பெண் தனியாக நடந்து செல்வதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?  
இங்கே ஸ்விட்ஸர்லாந்தில் கூட என்னுடைய கடிதங்கள் பிரித்துப் படிக்கப்பட்ட பிறகே உங்களுக்குக் கிடைக்கும்.  ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து கொண்டு சுல்தானுக்கு எதிராக நான் ’பயங்கரமான’ ’புரட்சிகர’ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் நினைக்கக் கூடும்.  இங்கே உள்ள மனிதர்கள் இந்தக் காற்றை சுதந்திரமாக சுவாசித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.  எந்த அரசாங்கமும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை.  ஏன் நான் ஒரு ஐரோப்பிய தேசத்தில் பிறக்காமல் துருக்கியில் பிறந்தேன்?
***
1906-இல் இப்படி எழுதிய ஸேனாப் 1912-இல் ”என் கனவு முடிந்து விட்டது.  கனவுக்கும் எதார்த்தத்துக்கும் அதிக தூரம் இருக்கிறது. ஐரோப்பா ஒரு கானல் நீர்.  நான் துருக்கிக்கே திரும்புகிறேன்” என்று எழுதி விட்டு கான்ஸ்டாண்டிநோப்பிள் திரும்புகிறார்.  முதலாம் உலக யுத்தம் தொடங்கியிருந்த நேரம் அது.  இத்தாலியும் துருக்கியும் எதிரிகள்.  ஸேனாப் இத்தாலியில் இருந்தார்…
 

(சாரு நிவேதிதா எழுதும் இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com   க்கு எழுதுங்கள்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...