???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 3 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   02 , 2015  01:34:23 IST


Andhimazhai Image

"15 மே அன்று மதியம் 3.30 மணிக்கு சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு விமானம்…” என்று ஆரம்பிக்கும் பயணக் கட்டுரையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் படிக்க மாட்டேன்.  ஒரு நல்ல பயணக் கட்டுரையில் இந்த விபரம் இருக்காது.  என்றாலும் விமான நிலையத்திலேயே எனக்கு இரண்டு அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்ததால் இப்படி ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

 

வெளிநாடு செல்ல வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.  நான் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே போய் விட்டேன்.  இமிக்ரேஷனை முடிக்க வேண்டும்.  ஒரு ஐரோப்பியப் பயணத்தின் போது இமிக்ரேஷன்காரர்கள் என்னைத் தீவிரவாதியாகவே முடிவு செய்து விட்டது போல் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் பயத்தில் ஏதேதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தேன்.  விமானம் கிளம்பும் நேரம் கூட வந்து விட்டது.  அந்த நேரத்தில் ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பாடலாசிரியர் அறிவுமதி குறுக்கிட்டு என்னைக் காப்பாற்றினார்.  அறிவுமதியை இமிக்ரேஷன் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.  அப்படியெல்லாம் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று கருதியே ரொம்ப முன்னதாகக் கிளம்பினேன்.  11 மணிக்கு சென்னை விமான நிலைய வாசலில் அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்தார்.  எங்கேயோ இவரைப் பார்த்திருக்கிறோமே என்று புருவத்தைச் சுருக்குவதற்குள்ளேயே ஞாபகம் வந்து விட்டது.  என் பயணத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனத்தில் என்னைப் போலவே துருக்கி செல்ல இருந்த பெண்.  நான் செல்ல இருந்த அதே விமானம்.  ஓமன் ஏர்வேஸ்.  மஸ்கட் வரை ஒரு விமானம். மஸ்கட் விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் தங்கி விட்டுப் பிறகு இன்னொரு விமானத்தில் இஸ்தாம்பூல். 

 

இதுவரை என்னுடைய பயணங்களில் என் பக்கத்து இருக்கையில் எழுபது எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் – அதிலும் காது கேளாதவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் போன்றவர்களையே சக பயணிகளாக அடையும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.  இப்போதுதான் முதல்முறையாக ஒரு இளம்பெண்.  பக்கத்து இருக்கையா இல்லையா என்று தெரியாது.  ஆனால் என்னோடு இஸ்தாம்பூல் வருகிறார்.  பயண நிறுவனம் ஒன்றே என்பதால் அநேகமாக இஸ்தாம்பூலில் என்னோடுதான் சேர்ந்து வருவார்.  நான் இஸ்தாம்பூலில் மூன்று நாள் நிற்கிறேன்.  எப்படியோ, பெண்களைப் பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது என்று அந்த எண்ணத்தைத் தொடர்வதைக் கைவிட்டேன்.

 

பொதுவாக பெண்கள் யாரும் ஆண்களிடம் தாமே முன்வந்து பேசி விடுவதில்லை.  நினைவு தெரிந்த நாளிலிருந்து ஆண்களால் அடைந்திருக்கும் தொந்தரவுகளே அதற்குக் காரணம் என்பது தெரியுமாதலால் பெண்கள் என்றாலே காத தூரம் ஒதுங்கி விடுவது என் இயல்பு.  ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்தப் பெண்ணே வலிய வந்து பேசினார்.  அது மட்டுமல்லாமல் என்னை யாரென்றும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  பெஸண்ட் நகர் என்றார்.  பேச்சிலேயே தெரிந்தது.  நுனிநாக்கு ஆங்கிலம்.  தமிழ் தெரியா தமிழ்ப் பெண்.  அபிநயா.  ஆராய்ச்சி மாணவி. எதில் ஆராய்ச்சி?  ஐரிஷ் இலக்கியம்.  துருக்கிக்குத் தனியே பயணம்.  ஆச்சரியம் என்றேன்.  Wanderlust என்றார்.  நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது பின்னால் ஹலோ சாரு என்ற குரல்.  பார்த்தால் ஒரு தோள்பையுடன் ஆனந்த்.  துபாயில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.  அவர் இந்தியா வருவதே எனக்குத் தெரியாது.  மூன்று நாட்கள் கோவில் திருவிழாவுக்காக வந்ததாகச் சொன்னார்.  எனக்கு உள்ளுக்குள் பயம் சுருள ஆரம்பித்தது.  ’சாருவை ஒரு பெண்ணோடு விமான நிலையத்தில் பார்த்தேன்’ என்று யாரிடமாவது சொல்லி வைத்தால் என்ன ஆவது?  நான் பயந்தது போலவே ஆனந்த், “சாரு, ஒரு நிமிஷம் இப்படி வர்றீங்களா?” என்று தனியே அழைத்தார்.  முடிந்தது கதை.  யார் இந்தப் பெண் என்று கேட்கப் போகிறார்.   யாரென்று தெரியாது என்றால் நம்பவா போகிறார்?  ஆனால் ஆனந்த் என் வாசகர் வட்டத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்.  தேர்ந்த படிப்பாளி.  அவர் கூப்பிட்டது இன்னொரு விஷயத்துக்காக.  ”துருக்கியில் உங்களுக்குப் பணம் தேவைப்படும்; இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று 200 திர்ஹாமை என் கையில் திணித்தார்.  உடனே கிளம்பி விட்டார்.  அப்போது எனக்கு ஒரு திர்ஹாமுக்கு எத்தனை ரூபாய் என்று தெரியாது.  பின்னர் துருக்கியில் ஒரு கரன்ஸி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனத்தில் அதை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.  அந்தக் கதை அப்புறம்.

 

நண்பர் ராம் தன்னுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் கார்டை என்னிடம் கொடுத்திருந்தார்.  இரண்டு லட்சம் ரூபாய் வரை அது செல்லுபடியாகும்.  ஆனால் என்னிடமும் டெபிட் கார்டு இருந்தது.  அதில் 50,000 ரூபாய் இருந்தது.  உள்நாட்டுப் போக்குவரத்து செலவு, மூன்று வேளை உணவு என்று எல்லாவற்றுக்கும் சேர்த்தே பயண நிறுவனத்துக்குப் பணம் செலுத்தியிருந்ததால் துருக்கியில் நான் செலவு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.  சென்னையிலிருந்து மஸ்கட் நான்கு மணி நேரப் பயணம். பிறகு அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு இஸ்தாம்பூலுக்கு விமானம் ஏற வேண்டும். 

 

விமானத்தில் அபிநயாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவம் செய்து கொள்ள சென்னை வருகிறார்கள் என்பதை விமானத்தைப் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது.  அங்கே மருத்துவத்துக்குச் செலவு அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை போன்ற பெரிய விஷயங்களுக்கு இங்கே வந்து விடுகிறார்கள்.  கூடவே நோயாளியைக் கவனிக்கவும் இரண்டு பேர்.  மூன்று பேருக்கான விமானச் செலவு, தங்கும் செலவு எல்லாம் போக மருத்துவச் செலவு ஆகிய  இவ்வளவையும் சேர்த்தால் கூட வளைகுடா நாடுகளை விட மருத்துவச் செலவு இங்கே பத்தில் ஒரு மடங்குதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

புத்தகப் படிப்பிலும், தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்ததிலும், என்ன பாட்டு கேட்கலாம் என்று தேடியதிலும் நான்கு மணி நேரம் ஓடி விட்டது.  மஸ்கட் சேர்ந்த பிறகு விமான நிலையத்தில் அபிநயாவைத் தேடினேன்.  தென்படவில்லை.  பிறகு விமான நிலையத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தேன்.  பலவிதமான கடைகளும் அதிலிருந்த பொருட்களும் கண்ணைப் பறிப்பதாக இருந்தன.  எத்தனையோ விதமான பொருட்கள்.  பீங்கான் கிண்ணங்கள்.  விதவிதமான தேயிலைகள்.  வாசனைத் திரவியங்கள்.  விளையாட்டுச் சாமான்கள்.  ஒவ்வொரு கடையாகப் பார்த்து விட்டுக் கடைசியில் மதுபானக் கடைகளுக்குச் சென்றேன்.  ஒவ்வொரு போத்தலாக ஆசையுடன் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன்.  இங்கே நம்மூர் டாஸ்மாக்கில் இருக்கும் பொருளின் பெயரும் மது, சர்வதேச விமான நிலையங்களின் சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகளில் கிடைப்பதும் மது என்றால் சொர்க்கமும் நரகமும் ஒன்று என சொல்வதற்குச் சமம்.  அந்த மதுபானக் கடைகளில் விற்பனையாளர்கள் பெண்களாக இருப்பதையும் கவனித்தேன்.  அனைவரும் ஹிஜாப் (முகத்திரை) அணிந்திருந்தனர்.  நள்ளிரவிலும் அவர்கள் எந்தப் பயமும் இன்றி மதுபானம் விற்றுக் கொண்டிருந்தனர். 

 

ஒரு இடத்தில் ஸப்வே உணவகத்தைப் பார்த்தேன்.  நம் ஊரில் உள்ளது போல் ஸப்வேயில் சைவ உணவே இல்லை.  மேலும், மாட்டிறைச்சியும் இருந்தது.  பொதுவாகவே உணவகங்கள் அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.  மலேஷியாவில் உள்ள ’பவன்’களில் மாமிச உணவும் கிடைக்கும்.  அதே ‘பவன்’களில் இந்தியாவில் அசைவத்தைத் தேடினால், மூச்… கேட்டாலே விபரீதமாகப் பார்ப்பார்கள்.  

 

அறிவிப்பாளர்களின் அரபி மொழியைக் கவனித்த போது அதில் பல உருது வார்த்தைகள் இருப்பதைக் கண்டேன்.  நன்றி என்பதற்கு ஷுக்ரன் என்றார்கள்.  ஷுக்ரியா என்றால் உருதுவில் நன்றி. 

 

வயிறு பசித்தது.  ஒரு தமிழ் உணவகத்தில் கூட்டம் அள்ளிக் கொண்டு போனது.  பலருடைய தட்டுகளில் இட்லி.  மஸ்கட்டுக்கு வந்து இட்லி சாப்பிட வேண்டுமா என்று எண்ணி உணவகங்கள் இருக்கும் வரிசைக்குப் போனேன்.  ஒரு மேற்கத்திய பாணி உணவகத்தில் அமர்ந்து ஸாண்ட்விச் சாப்பிட்டு ஜூஸ் குடித்தேன். சாப்பிடுவதற்கு முன்பே விலைப் பட்டியலைப் பார்த்து விட்டுத்தான் அமர்ந்தேன்.  எல்லாம் சேர்த்து 19 ரியால்தான்.  கணக்குப் போட்டுப் பார்த்தேன்.  ஒரு ரியாலுக்கு சுமார் 20 ரூபாய் இருக்கும்.  400 ரூ.  ம், பரவாயில்லை.  திருப்தியாக சாப்பிட்டேன்.  (இதில் ஒரு விபரீதம் இருந்தது.  பத்து நாள் கழித்துத் திரும்பவும் மஸ்கட் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் காத்திருந்த போதுதான் அந்த விபரீதம் தெரிய வந்தது!)

 

ராம் கொடுத்திருந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக அதைக் கொடுத்தேன்.  வேலை செய்தது.   கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு காஃபி கடையில் போய் கப்பூச்சினோ குடித்தேன்.  3 ரியால்.  என்னுடைய டெபிட் கார்டைக் கொடுத்தேன்.  வேலை செய்தது.  நிம்மதி.  இனிமேல் பத்து நாட்களுக்குப் பணத்துக்குக் கவலை இல்லை. 

 

அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்த போது சினிமா நடிகை போல் படு கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணை ஒரு விமான நிலையக் காவலாளி வெகு விமரிசையாக அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்.  அது பற்றி இன்னொரு காவலாளி சைகையால் ’ம்… நடக்கட்டும், நடக்கட்டும்…  உனக்கு இன்று அதிர்ஷ்டம்தான்’ என்று சொல்வது போல் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் கிண்டல் செய்தார்.  முதல் காவலாளி சிரித்துக் கொண்டே முன்னால் போனார்.  உலகம் பூராவும் ஆண்கள் ஆண்கள்தான் என்று நினைத்துக் கொண்டேன். 

 

இவ்வளவு சுற்றியும் அபிநயாவைக் காணவில்லையே என்று தோன்றியது.  பிறகு அந்தக் கவலை நமக்கெதற்கு என்று நினைத்தபடி ஒரு இடத்தில் அமர்ந்து மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.  அதுவரை அராபியர்களை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை என்பதால் அவர்களுடைய நடையுடை பாவனைகளை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.  பெண்கள் ஹிஜாப் அணிந்து தலையை மறைத்திருந்தாலும் மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தார்கள்.  சில பெண்கள் மூக்கை மூடியபடி ஒரு உலோகத் தகட்டை அணிந்திருந்தார்கள். 

இதன் பெயர் batoola என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  பாலைவனப் பிரதேசங்களில் காற்றிலிருந்தும் மண்ணிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் இதை அணியத் துவங்கினர்.  நம் ஊரில் மெட்டி திருமணமான பெண்ணுக்கு அடையாளமாக இருப்பது போல் பட்டூலா அங்கே திருமணமான பெண்களின் அடையாளமாக இருக்கிறது.  ஆனால் சில நாடுகளில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே பட்டூலா அணிகிறார்கள். ஓமனில் எப்படி என்று தெரியவில்லை. 

 

அந்த விமான நிலையத்தில் ஒரு விஷயம் பெரிய ஆச்சரியத்தை அளித்தது.  எந்தப் பெண்ணுமே தன் குழந்தையைத் தூக்கிச் செல்லவில்லை.  ஆண்கள்தான் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.  பெண்கள் தங்களுடைய டம்பப் பையை ஆட்டிக் கொண்டு டாம்பீகமாகச் செல்ல ஆண்கள்தான் ஒரு கையில் குழந்தையும் ஒரு கையில் பையுமாக ஏதோ வேலைக்காரனைப் போல் போய்க் கொண்டிருந்தார்கள்.  ஒருத்தர் கூட விதிவிலக்கு இல்லை.  ஒரு ஜோடிக்குக் குழந்தை இல்லை.  புதிதாகத் திருமணமான ஜோடி போல் தெரிந்தது. அந்த ஆடவன் மூன்று பெரிய பைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனான்.  அது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் முன்னே போய்க் கொண்டிருந்தாள் மனைவி.  ஹிஜாப் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இங்கே நாம் நினைக்கிறாற்போல் வெளியில் பார்க்கும் போது பெண்ணடிமைத்தனம் இல்லை. அதன் பிறகு துபாய், கத்தர் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் விசாரித்த போது பல புதிய விஷயங்கள் புலப்பட்டன. 

 

அரபு நாடுகளில் பெண்ணடிமைத்தனம் என்பது அமெரிக்க ஊடகங்கள் உண்டுபண்ணிய கற்பிதங்களே.  அரபு சமூகம் வீட்டைப் பொறுத்தவரை தாய்வழிச் சமூகமாகவே இருந்து வருகிறது. மனைவி வெளியே சென்றிருக்கும் போது தனது மூன்று நான்கு குழந்தைகளை கணவன் வீட்டில் தனியே வைத்துப் பராமரிப்பதெல்லாம் சர்வ சகஜம்.  பெண்கள் எங்கே செல்வார்கள்?  உதாரணமாக, திருமண வைபவங்களில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும்.  அப்போது அந்தப் பெண்கள் அணியும் உடைகள் அதிகவர்ச்சிகரமாக இருக்கும்.  ஆனால் ஆண்கள் பார்க்க முடியாது.  அலைபேசிகளுக்கோ புகைப்படக் கருவிகளுக்கோ அங்கே அனுமதி இல்லை.  பெண்களின் பிரதான பொழுதுபோக்கு ஷாப்பிங்.  வாராவாரம் டிஸைனர் ஆடைகள், முகப்பூச்சு, உதட்டுச் சாயம், செருப்பு, நகைகள், டம்பப் பை என்று வாங்கிக் குவிப்பார்கள்.  ஒரு டிஸைனர் ஆடையின் விலை 10,000 டாலர் கூட இருக்கும்.  இதெல்லாம் மத்தியதர வர்க்கப் பெண்கள் செய்வது.   

 

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும் ஒரு பெண்ணை சமாளிப்பதற்குள்ளேயே அவனுக்கு விழி பிதுங்கி விடுகிறது.  அவனிடம் பணம் சேருவதைப் பெண்கள் அனுமதிப்பதே இல்லை.  சேர்ந்தால் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து விடுவானே?  மட்டுமல்லாமல் ஆண்கள்தான் திருமணத்தின் போது பெண்ணுக்குப் பணம் தர வேண்டும்.  (தாய்லாந்திலும் இந்தப் பழக்கம் உண்டு.)

 

பெண்கள் சிகரெட் புகைப்பதும் மிகவும் சகஜமானது.  Marlbrows Lights-ஏ இந்தப் பெண்களுக்காகத்தான் தயாரிக்கப்படுகிறது என்று அங்கே கிண்டலாகச் சொல்வதுண்டு.  பெண்கள் புகைப்பதை நான் ஈரானிய சினிமாக்களில் அதிகம் பார்த்திருக்கிறேன்.  டெஹ்ரானின் பூங்காக்களில் பெண்கள் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்க முடியும்.   

 

அரபு சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தாலும் பெண்களின் நிலையில் ஒரு முரண் உள்ளது.  ஒரு வீட்டில் பெண்களுக்கென்றும் ஆண்களுக்கென்றும் தனித்தனி நிலைவாசல்கள் உள்ளன.  மேலும், பெண் சுதந்திரம் என்றால் உடம்பைக் காண்பிப்பது, குடிப்பது, கண்டவர்களோடு உடலுறவு கொள்வது என்று இல்லாமல் குடும்ப அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்துக் கொள்வது என்ற வகையில் அரபுப் பெண்கள் வலுவான ஸ்தானத்தில் இருக்கிறார்கள். 

 

நள்ளிரவு இரண்டு மணிக்கு இஸ்தாம்பூல் செல்லும் விமானம் பற்றிய அறிவிப்பு வந்தது.  பையை இழுத்துக் கொண்டு கீழ்த்தளத்துக்கு இறங்கினேன்.  அங்கே பார்த்தால் அபிநயா ஒரு நாற்காலியில் குத்துக்காலிட்டு அமர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  பயணிகள் வரிசையில் நிற்க ஆரம்பித்ததும் அவர் அருகில் சென்று பெயர் சொல்லி அழைத்தேன்.  ம்ஹும்.  பயனில்லை.  லேசாகத் தொட்டு எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்தார்.  வரிசையைக் காண்பித்தேன்.

 

இஸ்தாம்பூல் விமான நிலையத்தை அடைந்ததும் துருக்கி என்னதான் ஐரோப்பாவோடு ஒட்டிக் கொண்டிருந்தாலும் ஐரோப்பிய மனோபாவத்தைப் பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  இமிக்ரேஷனில் அதிகாரிகள் டீ குடித்தபடியும், ஜோக் அடித்து சிரித்துக் கொண்டும் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தினார்கள்.  ஒரு கட்டத்தில் பயணிகள் பொறுமையிழந்து கத்திய பிறகே கொஞ்சம் சுறுசுறுப்பாய் நகர்ந்தது வரிசை. 

 

விமான நிலையத்துக்கு வெளியே எங்கள் பெயர் தாங்கிய அட்டையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார் பயண நிறுவனத்தின் ஆள். ஆஸ்குர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அபிநயாவின் பெயரை எல்லா ஐரோப்பியர்களையும் போலவே அபிநாயா என்று உச்சரித்தார்.  காரில் ஏறும் போது ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனித்தேன்.  அபிநயா காரின் முன்னே அமர்வதற்காக கார்க் கதவைத் திறந்து அபிநயாவுக்காகக் காத்திருந்தார் ஆஸ்குர்.  ஆனால் அபிநயா அதைக் கவனிக்காதது போல் பின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.  பிறகு நான் முன்னே உட்கார்வதைத் தவிர வேறு வழியில்லை.  ஆஸ்குரின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.  இருக்கையில் அமர்ந்ததும் எங்கள் இருவருக்கும் ’டர்க்கிஷ் டிலைட்’ கொடுத்தார். 

 

நாம் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் ஒரு இடத்துக்கு நேரில் போய்ப் பார்ப்பதைப் போல் வராது.  மேலே உள்ள பத்தியின் கடைசி வாக்கியம் ஆங்கிலத்தில் இருந்து அதைத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எப்படியெல்லாம் மொழிபெயர்ப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.  கூகிளில் போய்க் கூட தேடிப் பார்க்கும் பொறுமை இல்லாமல் டர்க்கிஷ் டிலைட் என்பதைத் தங்கள் மனம் போனபடி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.  ஐரோப்பியர்கள் கொடுக்கும் ஐரோப்பிய பாணி முத்தம் என்று மொழிபெயர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  டர்க்கிஷ் டிலைட் என்பது ஜெல் மாதிரி இருக்கும் ஒரு இனிப்பு.  எந்தத் துருக்கியரைச் சந்தித்தாலும் முதலில் நமக்கு ஒரு கட்டி டர்க்கிஷ் டிலைட் கொடுத்துத்தான் வரவேற்கிறார்கள்.  பேரிச்சை, பிஸ்தாப் பருப்பு, வால்நட், hazelnut எல்லாம் சேர்த்து சதுரம் சதுரமாக இருக்கிறது.  இதன் சுவைக்கு ஈடாக நாகூரில் கிடைக்கும் தம்ரூட்டையும், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவையும்தான் சொல்ல முடியும்.  

 

பொதுவாக துருக்கியில் யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.  தாய்லாந்து அளவு மோசம் இல்லை.  அங்கே உணவகங்களில் ஆர்டர் கொடுக்க வேண்டியிருந்தாலும் நாம் அந்தப் பொருளுக்குரிய பெயரைத் ‘தாய்’ பாஷையில் தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும்.  உங்களுக்கு மீன் வேண்டுமானால் ’ப்ளா’ என்று சொல்ல வேண்டியதில்லை.  மீனின் படத்தைக் காண்பித்துத் தப்பி விடலாம்.  ஆனால் எல்லாவற்றுக்கும் படம் காண்பிக்க முடியாதே?  உணவில் பச்சை மிளகாய் வேண்டாம் என்பதை பச்சை மிளகாய்க்கு தாய்- பாஷையில் என்ன என்று தெரிந்து கொள்ளாமால் முடியாது.  சொல்லாவிட்டால் குறைந்த பட்சம் 25 பச்சை மிளகாயைப் போட்டு உங்களைக் கொன்று விடுவார்கள்.  இப்படி ஒருமுறை நான் சாகப் பார்த்தேன்.  பச்சை மிளகாய் சாப்பிட்டு உயிர் போகுமா என்று சந்தேகப்படுபவர்கள் தாய்லாந்தில் பாங்காக், பட்டாயா என்ற ஊர்களுக்குப் போய் பெண்களைப் பார்த்துக் கொண்டு நிற்காமல், எங்காவது சிற்றூருக்குச் சென்று அங்கே உள்ள வீட்டுக்கடையில் சாப்பிட்டுப் பாருங்கள்.  அங்கே கிடைப்பதுதான் அசலான ’தாய்’ உணவு.  ஆனால் குறைந்த பட்சம் 25 பச்சை மிளகாய்.  அதுவும் பச்சையாக இடித்து.  அப்படி நான் தாய்லாந்தின் வடகிழக்கு மூலையில் லாவோ எல்லையில் உள்ள ’நோங்க்காய்’ என்ற சிற்றூருக்குச் சென்று அங்கே உள்ள வீட்டுக்கடையில் சாப்பிட்டு சாகப் பார்த்தேன்.  பெரிய நாகரீக உணவகங்களில் இப்படிச் செய்ய மாட்டார்கள்; வீட்டுக்கடையில்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.  வீட்டுக்கடை என்பது வீட்டுக்கு முன்னால் உள்ள இடத்தில் அந்த வீட்டின் பெண் நடத்தும் உணவகம்.  ஆண்கள் (கணவன் உட்பட) எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். 

 

கிராமங்களிலோ சிற்றூர்களிலோ ஆங்கிலம் தெரியாவிட்டால் பரவாயில்லை; பாங்காக் சர்வதேச விமான நிலையத்தின் கவுண்ட்டர்களில் இருக்கும் அழகிய பெண்களுக்கே ஆங்கிலம் தெரியவில்லை.  துருக்கியில் அந்த அளவு மோசம் கிடையாது என்றாலும் அதிக வித்தியாசம் இல்லை.  நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு இஸ்தாம்பூல்காரருக்கும் ஆங்கிலத்தில் பத்து இருபது வார்த்தைகளே தெரிந்திருக்கின்றன.  அதுவும் இஸ்தாம்பூல் முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளின் ஊர் என்பதால் கற்றுக் கொண்டதே அந்தப் பத்திருபது வார்த்தைகளும்.  மற்றபடி துருக்கியின் உள்ளே பயணம் செய்து போனால் சிற்றூர்களிலோ கிராமங்களிலோ நாம் பேசுவது ஆங்கிலம் என்று கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.  மொழி விஷயத்தில் துருக்கிக்கும் தாய்லாந்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம், துருக்கியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓட்டல் வரவேற்பாளர்கள் போன்றவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். 

 

ஆஸ்குர் இலக்கணச் சுத்தமாக ஆங்கிலம் பேசினார்.  30 வயது இருக்கும்.  பயண நிறுவனத்தின் மேனேஜர் என்றும், இந்தியாவிலிருந்து விருந்தாளிகள் வருவதால் தானே வந்ததாகவும் சொன்னார்.  உங்களை ஓட்டலில் கொண்டு போய் விட்டு விட்டு உடனே போய் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்றார்.  துருக்கியின் அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம்.  (அது பற்றிப் பிறகு.)  ஓட்டலில் விட்டு விட்டுக் கிளம்பும்போது “துருக்கியில் உங்கள் பயணம் இனிதாக இருக்க ஒரே ஒரு அறிவுரை.  டாக்ஸிக்காரர்களை நம்பாதீர்கள்.”

 

இஸ்தாம்பூலில் கலாட்டா பாலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் எங்கள் குழுவினர் தங்குவதற்கான ஓட்டல் இருந்தது.  குழு என்பது ஒவ்வொரு ஊருக்கும் மாறிக் கொண்டு இருக்கும்.  இஸ்தாம்பூலில் எனக்கு மூன்று நாட்கள்.  அபிநயாவுக்கு நான்கு நாட்கள்.  பிறகு நான் அங்கிருந்து விமானத்தில் இஸ்மீர் போக வேண்டும்.

 

ஓட்டலில் சிரமபரிகாரம் செய்து கொள்ள ஒரு மணி நேரமே கிடைத்தது.  உடனே ஊர் சுற்ற எங்கள் குழுவின் மற்ற ஆட்கள் வண்டியோடு வந்து விடுவார்கள்.  ஊர் சுற்றி முடித்து, மாலை நான்கு மணி அளவில் ஓட்டலுக்குத் திரும்பினோம்.  அறையில் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு கலாட்டா டவர் வரை நடக்கலாம் என்று கிளம்பினேன்.  ரிஸப்ஷனில் அபிநயா இருந்தார்.  கலாட்டா டவர் வரை நடை என்றேன்.  நான் கேட்காமலேயே நானும் வரலாமா என்றார். 

 

கலாட்டா டவரில் நான் கண்ட காட்சி ஒன்று போதும்.  துருக்கியின் கலாச்சாரம் பற்றி முழுசாகத் தெரிந்து விட்டது. 

(மேலே இருப்பது மாலை ஆறு மணி அளவில் கலாட்டா டவர்.)

 

-வெள்ளிக்கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும்(இந்த வாரம் இரண்டுநாள் தாமதம். மன்னிக்கவும்.) உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்

(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர்  வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு  எழுதுங்கள்) - See more at: http://andhimazhai.com/news/view/nilavu-2.html#sthash.joVPrFlD.dpuf
(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர்  வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு  எழுதுங்கள்) - See more at: http://andhimazhai.com/news/view/nilavu-2.html#sthash.joVPrFlD.dpuf

(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர்  வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு  எழுதுங்கள்)

- See more at: http://andhimazhai.com/news/view/nilavu-2.html#sthash.joVPrFlD.dpuf

 

(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர்  வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு  எழுதுங்கள்) - See more at: http://andhimazhai.com/news/view/nilavu-2.html#sthash.joVPrFlD.dpuf


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...