???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 12 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   11 , 2016  05:27:34 IST


ஹாட் ஏர் பலூன் எரிவாயு மூலம்தான் இயங்குகிறது.  என் பலூனிலிருந்து மற்ற பலூன்களைப் பார்க்கும் போது பலூனின் அடியில் நெருப்பு எரிவதைப் பார்க்க முடிகிறது.  ஒவ்வொரு பலூனிலும் இருபது பேர்.  சதுரம் சதுரமாக ஐந்து ஐந்து பேர்.  நடுவில் பைலட்.  எங்கள் பலூனின் பைலட் கத்ரீனா கைஃப் போலவே இருந்தார்.  புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஃபோனில் சார்ஜ் இல்லை.  
***
கீழே உள்ள இரண்டு புகைப்படங்களும் நாங்கள் இருந்த பலூனிலிருந்து என் சக பயணி ஒருவர் எடுத்தவை.   
     
 

 

குழுப் பயணத்தில் இன்னொரு அனுகூலம், பல தேசத்தவர்களையும் சந்தித்துப் பேசவும் பழகவும் கிடைக்கும் வாய்ப்பு.  அப்படி நான் கப்படோச்சியாவில் சந்தித்த ஒரு இளைஞன் லார்பி.  மொராக்கோவைச் சேர்ந்தவன்.  தென்னமெரிக்காவில் சீலே எப்படி எனக்கு ஒரு தாய்நாட்டைப் போன்றதோ அதே போல் ஆஃப்ரிக்காவில் மொராக்கோ.  கிட்டத்தட்ட எல்லா மொராக்கோ எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறேன்.  அறுபதுகளில் புகழ்பெற்றிருந்த பீட் எழுத்தாளர்களின் சொர்க்கமாக இருந்ததும் மொராக்கோதான்.  என்னுடைய ஐரோப்பிய ஆசான்களில் ஒருவரான ஜான் ஜெனே ஃப்ரான்ஸை விட மொராக்கோவையே என் தாய்நாடு என்று சொல்லுவேன் என்று சொல்லி மொராக்கோவிலேயே வாழ்ந்தார்.  தன்னுடைய மரணத்துக்குப் பிறகு தன் பிரேதம் மொராக்கோவிலேயே புதைக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.  ஒருமுறை அவர் தன்னுடைய பதிப்பாளரைப் பார்ப்பதற்காக பாரிஸ் சென்றிருந்த போது அங்கேயே இறந்து போனார்.  அப்போது ஜெனேயின் நண்பர்கள் அவருடைய பிரேதத்தை மொராக்காவுக்குக் கொண்டு வந்து அங்கே Larache என்ற ஊரில் தான் புதைத்தார்கள்.  மொராக்கோவைப் போலவே ஜிப்ரால்டரும் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களின் கனவு பூமியாக இருந்து கொண்டிருக்கிறது.  ஜான் லெனன் தன் காதலி யோகோ ஓனோவைத் திருமணம் செய்து கொண்டது ஜிப்ரால்டரில்தான்.  நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் லார்பி.
 
கொஞ்ச நேரத்திலேயே நான் எழுத்தாளன் என்று தெரிந்து கொண்டு தன்னுடைய கதையை மிக ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தான்.  ஆரம்பத்தில் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் மூலம் ஹஷீஷ் கடத்தி பிறகு அந்தத் தொழில் கொகேய்ன் கடத்தலுக்கு மாறிய போது அதை விட்டு விட்டு இப்போது தாஞ்ஜியரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துக் கொண்டு வாழ்வதாகச் சொன்னான்.  அவனுடைய கதை எனக்கு El Nino என்ற ஸ்பானிஷ் திரைப்படத்தை ஞாபகப்படுத்தியது.  கிட்டத்தட்ட எல்லா தாஞ்ஜியர் சிறுவர்களின் கதையும் ஒரே கதைதான்.  அதுதான் எல் நீஞோவின் கதை.  எல் நீஞோ Daniel Monzón இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம்.  ஹேஸூஸ் (Jesus) என்ற போலீஸ்காரன், எல் நீஞோ என்ற கடத்தல்கார இளைஞன் மற்றும் அவனுடைய நண்பர்கள் ஆகியோரைச் சுற்றி நிகழும் கதை.  கடத்தல்காரர்கள் மட்டுமல்லாமல் போலீஸ்காரர்களின் அவலத்தையும் சொல்கிறது எல் நீஞோ.  கடத்தல் படகைத் தொடர்ந்து விரட்டி வரும் ஹெலிகாப்டரை எல் நீஞோவின் நண்பன் சுட்டு விடுவதால் ஹெலிகாப்டர் நீரில் மூழ்கி அதிலிருந்த பைலட் பிழைப்பாரா என்ற நிலைக்குப் போய் விடுகிறது.  படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஜிப்ரால்டர் குன்று.  
 
பின்வரும் காணொளியில் ஜிப்ரால்டர் குன்று பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.   
நிலவியல் ரீதியாக இஸ்தாம்பூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதை விட அதிக முக்கியத்துவம் கொண்டது ஜிப்ரால்டர் தீபகற்பம்.  28000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் ஜிப்ரால்டர் குகைகளில் வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இப்போது ஜிப்ரால்டரில் வசிக்கும் 30000 பேரும் கலாச்சார ரீதியாக ஸ்பெய்னோடு உறவு கொண்டிருந்தாலும் பிரிட்டனோடு இருப்பதையே விரும்புகிறார்கள்.  காரணம் வெளிப்படை.  ஸ்பெய்னே ஏழை நாடு;  அதோடு எப்படிச் சேர்வது என்பதுதான் ஜிப்ரால்டர்வாசிகளின் மனநிலை.  ஆனால் உயிரே போனாலும் பரவாயில்லை; ஸ்பெய்ன் மண்ணை மிதித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தாஞ்ஜியரில் வசிக்கும் இளைஞர்கள்.  
 
 


 
மேலே உள்ள இரண்டு வரைபடங்களையும் பாருங்கள்.  மொராக்கோவின் இடது பக்கம் அட்லாண்டிக் பெருங்கடல்.  வலது பக்கம் மத்திய தரைக்கடல்.   இந்த நீர்ப்பரப்பைத் தடுப்பது போல் இரண்டு நாடுகள்.  வடமேற்கு ஆஃப்ரிக்காவின் மொராக்கோ;  ஐரோப்பாவின் தென்மூலையில் ஸ்பெய்ன்.  வரைபடத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?  இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள ஜிப்ரால்டர் ஜலசந்தியின் நீளம் வெறும் ஒன்பது மைல்கள்தான்.  இந்த ஒன்பது மைல் தூரம்தான் ஐரோப்பாவுக்கு ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து போதை மருந்துகள் செல்வதற்கு வாசலாக இருந்து வருகிறது.  மொராக்கோவின் கொடூரமான வறுமையிலிருந்து தப்புவதற்காக பல நூறு மொராக்கோ தேசத்தவர்கள் இந்த ஜலசந்தியைப் படகுகளில் கடந்து போகிறார்கள்.  இவர்களைப் பிடிப்பதற்காக ஸ்பானிஷ் போலீஸும் இரவு பகலாக ரோந்து சுற்றுக் கொண்டிருக்கிறது.  உள்நாட்டில் நிலவும் கடுமையான சுரண்டலையும் வறுமையையும் தடுக்க முடியாத மொராக்கோ அரசு ஐரோப்பிய யூனியனின் சேவகனாக விளங்குவதால் மொராக்கோவிலிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடும் ஆட்களைப் பிடிப்பதில் ஐரோப்பியர்களை விட மொராக்கோ போலீஸ் இன்னும் தீவிரமாக இருக்கிறது.  அந்த எஜமான விசுவாசத்திற்காக ஐரோப்பிய கம்பெனிகளும் மொராக்கோவில் அவ்வப்போது தங்கள் மூலதனத்தை முதலீடு செய்வதுண்டு.  சமீபத்தில் ஃப்ரெஞ்ச் கார் நிறுவனம் Renault மொராக்கோவின் தாஞ்ஜியரின் (Tangier) துறைமுகத்தை நவீனமயமாக்கிக் கொடுத்தது.  இருந்தாலும் மொராக்கோவின்  போதை உலக மாஃபியா ஆட்கள் லத்தீன் அமெரிக்க போதை மாஃபியாவோடு கை கோர்த்துக் கொண்டு பெரும் செல்வாக்கோடு இருக்கின்றனர்.  போதைப் பொருட்கள் மட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இந்த ஜிப்ரால்டர் ஜலசந்திதான் வாசலாக இருக்கிறது.   
மொராக்கோவிலிருந்து கிளம்பி ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக ஸ்பெய்ன் சென்று அங்கிருந்து ஃப்ரான்ஸுக்குப் போய்ச் சேரும் அகதிகளைப் பற்றி The Blinding Absence of Light என்ற உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய தாஹர் பென் ஜெலோன் Leaving Tangier என்ற அருமையான நாவலை எழுதியிருக்கிறார்.  இணையத்தைத் தவிரவும் நீங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அந்த நாவலை படித்துப் பாருங்கள்.அவசியம்
சீலே செல்வது எப்படி என் கனவுகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போன்றதொரு கனவாகவே இருக்கிறது மொராக்கோவும்..  அதிலும் குறிப்பாக தாஞ்ஜியர் நகரம்.   காரணம், இஸ்தாம்பூல் போலவே தாஞ்ஜியரின் ஐரோப்பியத் தொடர்பும் அதிகம்.  இவ்விஷயத்தில் இஸ்தாம்பூலுக்கும் தாஞ்ஜியருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இஸ்தாம்பூல் நகரின் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் இருக்கிறது; தாஞ்ஜியர் ஆஃப்ரிக்காவின் விளிம்பில் ஐரோப்பாவைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது.  
 
 

புகைப்படம் நன்றி: Eloise Schieferdecker/Al Jazeera
மொராக்கோவின் தாஞ்ஜியர் கடற்கரையிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உள்ள ஸ்பெய்னுக்குத் தப்பிச் செல்வதையே தங்கள் வாழ்க்கைக் கனவாகக் கொண்டுள்ள சிறார்களின் புகைப்படங்களையே மேலே காண்கிறீர்கள்.  இடது ஓரத்தில் அமர்ந்திருப்பவனின் பெயர் சாபிர்.  வயது 13.  பத்து வயதிலிருந்து தாஞ்ஜியரிலிருந்து ஸ்பெய்னுக்குச் செல்லும் ஏதாவது ஒரு படகு மூலம் தப்பிச் சென்று விட முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.  கடவுள் உனக்கு உதவி புரியட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அவனுடைய பெற்றோர்.  இப்படி தாஞ்ஜியரிலிருந்து தப்பிய 5000 சிறார்கள் ஸ்பெய்னில் பெற்றோர் இல்லாமல் அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றான் லார்பி. 11 வயதிலிருந்து 17 வயதுள்ள சிறார்களே இப்படி மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பி ஓடுகிறார்கள்.  காரணம்?  மொராக்கோவில் பிழைப்புக்கு வழியில்லை.  அப்படியே ஏதாவது எடுபிடி வேலை கிடைத்தாலும் திருமணம் ஒரு நிறைவேறாக் கனவு. அந்த அளவுக்கு யாரிடமும் இங்கே பணம் இல்லை.  லார்பி சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கு Leaving Tangier ஞாபகம் வந்தது.  “எங்களுடைய அருமையான தேசத்தில் பெண்கள் அரிதானவர்களாகப் போய் விட்டார்கள்.  ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டுமென்றால் அவளைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும்.  திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஆடம்பரமான வீடு வேண்டும்.  நிலையான மாத வருமானம் வேண்டும்.  அவ்வப்போது அவளுக்கு விலையுயர்ந்த நகைகளும், பரிசுப் பொருட்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதெல்லாம் இந்தப் பொடியன்களுக்கும் தெரியும்.  அதனால்தான் மொராக்கோவை விட்டு ஓடுகிறார்கள்.  பிடிபட்டுப் பிடிபட்டு மீண்டும் மீண்டும் தாஞ்ஜியரின் கரைக்கு வந்து சேர்கிறார்கள்.  சிலர் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.  சிலர் போலீஸாரால் வன்கலவி செய்யப்பட்டு ரத்தம் கொட்டக் கொட்ட கடற்கரையில் வீசியெறியப் படுகிறார்கள்.   
Leaving Tangier நாவலில் மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பிச் சென்ற பிறகும் அங்கே எந்தத் தீர்வும் கிடைக்காமல் அநாதையாக அலையும் சிலரது கதைகளைச் சொல்கிறார் தாஹர் பென் ஜெலோன்.
இந்தப் பிரச்சினை குறித்து அல் ஜஸீரா வெளியிட்டுள்ள கட்டுரையையும் மேலே உள்ள புகைப்படத்தையும் காண்பித்தான் லார்பி.  ஆனால் நகைமுரண் என்னவென்றால், இந்தச் சிறார்கள் தப்பியோடும் அதே படகில்தான் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மொராக்கோவைப் பார்க்கவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் மொராக்கோவிலேயே தங்கி விடவும் வந்து கொண்டிருக்கிறார்கள்.  வில்லியம் பர்ரோஸிடம் நீங்கள் ஏன் உங்கள் தாய்நாடான அமெரிக்காவையும், உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட்டு விட்டு இங்கே மொராக்கோவுக்கு வந்தீர்கள் என்று கேட்ட போது பர்ரோஸ் சொன்னார்:  ”மற்ற எல்லா நாடுகளையும் விட மொராக்கோவின் சட்ட திட்டங்கள்தான் லகுவாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றன.”   பர்ரோஸுக்கு இந்தியா பற்றித் தெரியாது போல் இருக்கிறது.  இங்கே ஒருவர் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டலாம்.  ஐந்தடி உயரம் உள்ள கிரேட் டேன் நாயையே மோட்டார்பைக்கில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நடு ரோட்டில் போகலாம்.  இந்தியா முழுவதும் எங்கே வேண்டுமானாலும் நட்ட நடு ரோட்டில் ஜிப்பை அவிழ்த்து மூத்திரம் போகலாம்.  பெண்களை எல்லார் முன்னிலையில் கிண்டல் பண்ணலாம்.  கூட்டமாக இருந்தால் கிட்டே போய்த் தேய்க்கலாம்.  லஞ்சம் கொடுக்கலாம்.  காசு நிறைய இருந்தால் கொலை கூட செய்து விட்டுத் தப்பி விடலாம்.  எதற்குமே இங்கே தண்டனை கிடையாது.  பர்ரோஸின் நண்பர் ஆலன் கின்ஸ்பர்க் கல்கத்தாவில் பல ஆண்டுகள் இருந்தவர்.  இருந்தாலும் இந்தியா பற்றி பர்ரோஸிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது.  
 பர்ரோஸ் மொராக்கோ பற்றிக் கூறியது ஒரு அமெரிக்கர் என்ற முறையில் சரியே தவிர அங்கே உள்ள நடைமுறை வேறு.  அவர் தாஞ்ஜியரில் செய்த காரியங்களை ஒரு மொரோக்கோகாரர் செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.  உ-ம்.  சிறுவர்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது.  அமெரிக்காவில் அதற்கு ஆயுள் தண்டனை.  ஆயுள் தண்டனை என்றால் நம் ஊரைப் போல் ஏழு வருடம் எட்டு வருடம் அல்ல; இருநூறு ஆண்டுகள், முந்நூறு ஆண்டுகள் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள்.  மொராக்கோவிலும் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டங்கள் இருக்கின்றன.  இருந்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  அப்படியே யாராவது கண்டு கொண்டால் அம்பது நூறு கொடுத்து விட்டுப் போய் விடலாம்.    அதிலும், வெள்ளைத் தோல் என்றால் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு பெரிதாக இளித்தபடி சலூட் அடித்து ஒரு சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு வாங்கிக் கொண்டு அனுப்புவார்கள் என்றான் லார்பி.  
எங்கள் தேசமும் அப்படித்தான் நண்பனே என்றேன்.  சமீபத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள வர்கலா கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.   
 
கோவாவை ஒத்த அந்தக் கடற்கரையின் மேலே உள்ள விளிம்புப் பகுதிக்குச் செல்ல ஒரு தெரு இருக்கிறது.  அங்கே பல பப்-களும் பார்களும் உள்ளன.  அந்தத் தெருவுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அனுமதி இல்லை.  வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும்.  தெருவின் முனையிலேயே போலீஸ்காரர்கள் நின்று கொண்டு பழுப்பு நிறத் தோலுள்ளவர்களை அடித்து விரட்டுகிறார்கள்.  நானும் நண்பர்களும் கடற்கரையின் கீழேயிருந்து இருட்டில் படிக்கட்டு வழியாக மேலே போய் ஒரு பப்-புக்குப் போனோம்.  வெள்ளைக்காரர்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.  என் நண்பர் பாஸ்கர் நடன தளத்துக்குச் சென்று ஒரு ஓரமாக நின்று ஆடினார்.  உடனேயே தளத்தில் ஆடிக் கொண்டிருந்த இருபது வெள்ளைக்கார மிருகங்களும் அப்படியே நடனத்தளத்தை விட்டு இறங்கி ஒரு ஓரமாக நின்று ஆட ஆரம்பித்து விட்டனர்.   பப்-பின் சொந்தக்காரர் ஓடி வந்து பாஸ்கரையும் என்னையும் மற்ற நண்பர்களையும் வெளியே போகச் சொன்னார்.  இருந்தால் பிரச்சினை ஆகும் என்று பயந்து வெளியே வந்தோம். மொராக்கோவின் வெள்ளை அடிமை மோகம் இந்த அளவுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். நேரில்தான் பார்க்க வேண்டும்.
தாஞ்ஜியரில் உள்ள கஃபே ஹஃபாவுக்கு ஒருமுறை சென்று புதினா தேநீர் அருந்த வேண்டும் என்பது என் தீராக் கனவுகளில் ஒன்று. உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் பால் பௌல்ஸ் இந்தக் கஃபேவில்தான் தன்னுடைய 85-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.   இந்தக் கஃபே பற்றிய ஒரு சிறிய படம் இது:
https://www.youtube.com/watch?v=d4hA2upeidU    
 
 
Leaving Tangier நாவலின் முதல் பக்கமே கஃபே ஹஃபாவிலிருந்துதான் துவங்குகிறது.  


நாகூரின் இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்ததன் காரணமாக நான் பல சமயங்களில் பல சூழ்நிலைகளில் ஒரு அந்நியனாக உணர்வது வழக்கம்.  சில மாதங்களுக்கு முன் தஞ்சை ப்ரகாஷ் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது அதற்கு வந்த எதிர்வினைகளைக் கண்டபோது அப்படி உணர்ந்தேன்.  தஞ்சை மாவட்டத்து இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி பல உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ்.   அது பற்றிய என் கட்டுரை வெளிவந்ததும் ஜெயமோகன் ப்ரகாஷின் கதைகள் போர்னோ என்று எழுதினார்.  எனக்கு அது ஆச்சரியமாக இல்லை.  தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கைக்கு முற்றிலும் அந்நியமான ஒருவருக்கு அப்படித்தான் தோன்றும்.  லார்பி என்னோடு பேசிக் கொண்டிருந்த போது தொடர்ந்து ஒருவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்.  நானும் அவர் பாடல்களை ஏற்கனவே  கேட்டிருக்கிறேன்.  அவர் பெயர் இப்ராஹீம் தத்லிஸஸ்.  இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு துருக்கியின் மிகப் புகழ் பெற்ற இப்ராஹீமை ஒற்றை ஆளாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த நான், துருக்கியின் கப்படோச்சியா என்ற பகுதியில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எரிமலைக் குழம்பினால் ஆன பிரமிட் வீடுகளின் முன்பு மொராக்கோவைச் சேர்ந்த ஒருவன் அதே இப்ராஹீமைக் கேட்கும் தருணத்தில் எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பேன் என்று யூகித்துப் பாருங்கள்.
அப்போது எனக்கு தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் ஞாபகம் வந்தன.  ஏனென்று சொல்ல வேண்டும்.  இந்தியாவில் கிஷோர் குமார் எப்படியோ அப்படித்தான் துருக்கியின் இப்ராஹீம் தத்லிஸஸ்.  இது போன்ற பாடகர்களைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எப்படி அறிமுகம் கிடைக்கிறது என்று பல நண்பர்கள் என்னைக் கேட்பதுண்டு.  எப்போதுமே அதற்கு என் பதில், வாசிப்பு. இப்ராஹீம் தத்லிஸஸ் பற்றி ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த Leaving Tangier  என்ற நாவலின் மூலம் தெரிந்து கொண்டேன்.  
சரி, இப்ராஹீம் தத்லிஸஸைக் கேட்டுக் கொண்டிருந்த போது தஞ்சை ப்ரகாஷும் அவரை போர்னோ என்று எழுதிய ஜெயமோகனும் ஏன் ஞாபகம் வர வேண்டும்?  லார்பி சொன்ன தகவல்தான் காரணம்.  இப்ராஹீம் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லிக் கண்ணடித்தான் லார்பி.  திருமணம் செய்து கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்டேன்.  திருமணம் செய்து கொண்ட போது அவர் வயது அறுபதாம்!   துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளில் எந்தக் கணவனும் தன் மனைவி இப்ராஹீமைக் கேட்பதை விரும்புவதில்லை.  ஏனென்றால்-


(சாருநிவேதிதா எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். தொடர்புக்கு: editorial@andhimazhai.com)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...