???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 11 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   06 , 2016  03:47:45 IST
தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக ஆகாயத்திலேயே ப்ரேக் டௌன் ஆகி காற்றின் திசையில் சென்று கொண்டிருந்த போது எனக்கு பழனியின் ரோப் கார் அறுந்து விழுந்து இறந்து போன மனிதர்களின் ஞாபகம் வந்தது.  இந்தியாவில் நடக்கும் ராட்சசக் குடை ராட்டின விபத்துகளெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஓடியது.  உலகிலேயே மனித உயிருக்குக் கொஞ்சம் கூட மதிப்பில்லாத நாடு இந்தியா.  மற்ற நாடுகள் அப்படி அல்ல.  அதிலும் துருக்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் தேசம்.   பலூனின் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை என்றாலும் பலூன் சமயோஜிதமாக ஒரு மரத்தில் இறக்கப்பட்டு, உடனே ஏணியும் வரவழைக்கப்பட்டது. ஏணியின் வழியே தரை இறங்குவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.  இந்த விபத்தில் நான் கவனித்த ஒரு ஆச்சரியமான விஷயம், தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக பலூனின் போக்கு அதன் நடத்துனரின் கையை விட்டுப் போனாலும் அதிலிருந்த இருபது பயணிகளும் பதற்றம் கொள்ளவில்லை.  இந்தியாவாக இருந்தால் பயத்திலேயே ஒன்றிரண்டு பேர் கிழே குதித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.  
***
ஆதிகால மனித வரலாற்றை வரலாற்றாசிரியர்கள் Stone Age, Bronze Age, Iron Age என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதை நாம் அறிவோம்.  அதில் ப்ரான்ஸ் ஏஜைச் சேர்ந்த பல நூறு நகரங்களை இப்போது பூமிக்கடியில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.  இங்கே கிடைத்திருக்கும் களிமண் வில்லைகளில் உள்ள எழுத்துக்களின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல தகவல்களை – குறிப்பாக, வரி வசூல் விபரங்கள், திருமண ஒப்பந்தம், வர்த்தகம் - நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  
கப்படோச்சிய நாகரீகம் கி.மு. 25-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஸிரிய நாகரீகத்தின் தாக்கம் கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கிறார்கள்.  
 
பூமிக்கு அடியில் உள்ள நகரங்களின் பாதைகள்.


கப்படோச்சியாவின் மூலம் கட்பட்டுகா என்ற பெர்ஷிய வார்த்தை.  இதன் பொருள் கம்பீரமான குதிரைகளின் பூமி.  கி.மு. 525-இல் பெர்ஷியர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்கள்.  பிறகு கி.மு. 332-இல் மாஸிடோனிய அரசன் அலெக்ஸாண்டர் கப்படோச்சியாவைக் கைப்பற்றித் தனது பேரரசை நிறுவினான். ஆனால் அதை கப்படோச்சிய மக்கள் விரும்பாததால் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. பின்னர் கி.பி. 17-ஆம் ஆண்டு திபேரியஸ் என்ற ரோம அரசனால் ரோமப் பேரரசு ஏற்பட்டது.  அதிலிருந்துதான் கைஸேரி (Kayseri – Caesera) என்ற பெயரும் புழக்கத்துக்கு வந்தது.  
ரோமப் பேரரசின் காரணமாக கப்படோச்சியா முழுவதும் கிறித்தவ ஓவியங்களாகவே காணப்படுகின்றன.  குறிப்பாக Deesis என்ற காட்சி.  தீஸீஸ் என்பது பைஸாண்டியன் ஓவியக் கலையில் பிரார்த்தனையைக் குறிக்கும் ஓவியம்.  அந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது.  வலது புறம் கன்னி மேரியும் இடது புறம் யோவானும் கிறிஸ்துவை நோக்கியபடி நிற்கிறார்கள்.  கப்படோச்சியாவில் நூற்றுக் கணக்கான தேவாலயங்கள் உள்ளன.  ஆனால் நான் இதுகாறும் பார்த்த தேவாலயங்களுக்கும் அங்கே பார்த்தவைகளுக்கும் பெருத்த  வித்தியாசம் இருந்தது. காரணம், அவை நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்தன.  இது போன்ற நிலவறை ஊர்களிலேயே மிகப் பழமையானது இயேசு பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குக் கீழே 200 அடியில் 18 அடுக்குகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தெரிங்கூயூ என்ற நிலவறை நகரம். தெரிங்கூயூ பற்றிய ஒரு ஆவணப் படத்தை இந்த இணைப்பில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=CxZKV8lCvzs
கப்படோச்சியா பகுதிக்கு முதலில் வந்த பயணி பால் லூகாஸ்.  ஆண்டு 1744.  ஃப்ரான்ஸின் பதினான்காம் லூயி மன்னன் தான் அவரை துருக்கிக்கு அனுப்பினான்.  பிரமிட் போன்ற ஆயிரக் கணக்கான வீடுகளைப் பார்த்து பிரமித்த லூகாஸ், அந்தப் பிரமிட் வீடுகளின் உள்ளே நுழைந்தார்.  ஒவ்வொரு வீட்டிலும் காற்றும் வெளிச்சமும் நுழைவதற்காக பல பெரிய சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  
நான் பார்த்த கப்படோச்சிய குகை வீடுகளை எப்படியெல்லாம்  விவரிக்க முயன்றாலும் அதை நேரில் பார்க்காமல் கற்பனை செய்வது கடினம் என்றே தோன்றுகிறது.  பிரமிட் வீடுகளின் வெளிப்புறத்தில் சாளரங்கள் இருந்தாலும் உள்ளே இருட்டாகத்தான் இருக்கின்றன.  இருட்டை நீக்க ஆங்காங்கே சிம்னி விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  வெளியே பார்ப்பதற்கு சிறிதாகத் தோன்றினாலும் உள்ளே பிரமாண்டமாக இருக்கின்றன.  நிலவறை வீடுகளோ சாகசக் கதைகளில் வரும் பாதாள லோகத்தை ஞாபகப்படுத்துகின்றன.  பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே வந்த முதல் பயணியான பால் லூகாஸ் இதையெல்லாம் பார்த்து என்ன நினைத்திருப்பார் என்று இப்போது யூகித்துப் பார்க்கவே கிளர்ச்சியாக இருக்கிறது.   பார்த்தவுடன் அவருக்கு ஏற்பட்ட மனப்பதிவு ‘இதெல்லாம் சீஸர் காலத்திய கல்லறைகள்’ என்பதே.  அவர் நினைத்தது போலவே ஒரு வீடு முழுவதும் மனித உடல்களாக இருந்தன.   எத்தனையோ ஆண்டுகளாக மக்கிப் போன மனித ’மம்மி’கள்.  உலர்ந்து போன மரக்கட்டைகளைப் போலிருந்தன என்று எழுதுகிறார் லூகாஸ்.  
தென்தாய்லாந்தில் உள்ள Yao Noi என்ற தீவுக் கூட்டத்தில் அமர்ந்திருந்த போது அந்த இடத்தை பூலோக சொர்க்கம் என்று நினைத்தேன்.


 
அது நீரினால் அமைந்த சொர்க்கம் என்றால் கப்படோச்சியா எரிமலைகள் வடிவமைத்த சொர்க்கம்.  பால் லூகாஸ் கப்படோச்சியாவில் பல வழிபாட்டு ஸ்தலங்களையும் கண்டார்.  அங்கிருந்த ஓவியங்கள் அவருக்குப் பல கதைகளைக் கூறின.  அவர் கண்ட ஒரு ஓவியத்தை விவரிக்கிறார்:  கீழே தரையில் நெருப்புக் கங்குகள் தகதகவென கனிந்து நிறைந்து கிடக்கின்றன.  ஒரு பெண் வெறும் காலால் அந்த நெருப்பைக் கடந்து போகிறாள்.  இன்னொரு ஓவியத்தில் ஒரு பெரிய பெண் கடவுளின் சிலை.  அதற்கு முன்னே ஆண்களும் பெண்களும் தீக்குளிக்கிறார்கள்.  (கப்படோச்சியாவுக்குத் தமிழர்கள் சென்றிருக்கிறார்களா என்ன?)
பால் லூகாஸுக்குப் பிறகு கப்படோச்சியாவுக்குச் சென்ற முக்கியமான பயணி C. Texier.  இவர் அங்கே இருந்த காலம் 1833 இலிருந்து 1844 வரை.   உலகில் எந்த இடத்திலும் இப்படிப்பட்ட இயற்கையின் வினோத உருவங்களைப் பார்க்க முடியாது என்று எழுதுகிறார் டெக்ஸியர். அவர் கப்படோச்சியாவில் பார்த்த காட்சிகளை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்.  அந்த ஓவியங்களில் ஒன்று இது.  1944 ஆம் ஆண்டு வரைந்த ஓவியம்:


 
 
கப்படோச்சியா 20000 சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது.   இது தமிழ்நாட்டின் பரப்பளவில் ஆறில் ஒரு மடங்கு.  கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே கிரேக்கர்களின் ஆளுகையில் இருந்ததால் கப்படோச்சியாவுக்கு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கிறித்தவம் நுழைந்து விட்டது.  ஆனாலும் மத்திய காலகட்டத்தில்தான் - பத்தாம், பதினொன்றாம் நூற்றாண்டுகளில் தேவாலயங்கள் கட்டப்பட்டன.  நிலவறைகளிலும், இயற்கையாக நெருப்புக் குழம்பினால் உருவான பிரமிட் வீடுகளிலும் நூற்றுக் கணக்கான சிறிய, பெரிய தேவாலயங்களைப் பார்த்தேன்.  அவற்றில் இருந்த ஓவியங்களைப் பற்றி ஒருவர் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்.  
ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட Karanlik Church (இருண்ட தேவாலயம்)-இல் ஒரு அற்புதமான ஓவியத்தைக் கண்டேன்.  தேவாலயத்தின் உள்ளே வெளிச்சம் இல்லாததால் அந்தப் பெயர்.    
 


அந்த ஓவியம் இயேசுவின் ’கடைசி விருந்து’.  ஏப்ரல் ஏழாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதி வரை யூதர்கள் ரொட்டியை மட்டும் உண்பார்கள்.  பதினான்காம் தேதி மாலை ஆட்டு விருந்து நடைபெறும்.  அந்த விருந்துக்கு முன்பாக இயேசு தனது சீடர்களின் கால்களைக் கழுவுகிறார்.  பின்னர் இயேசுவும் பனிரண்டு சீடர்களும் இருக்கைகளில் அமர்கிறார்கள்.  யூதாஸ் முப்பது வெள்ளிப் பணத்துக்கு இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறான்.  இருக்கையில் அமரும் போது இயேசு “இந்த மேஜையில் என்னோடு அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான்” (லூக்கா 22:21) என்றார்.  யாரைப் பற்றி இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் ஒருவரையொருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டார்கள்.   இயேசுவின் சீடர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த சீடர் ஒருவர் அவரது நெஞ்சருகே உட்கார்ந்திருந்தார்.   அவரிடம் சீமோன் பேதுரு, “யாரைப் பற்றிச் சொல்கிறார்?” என்று சைகையால் கேட்டார்.   அப்போது அவர் இயேசுவின் நெஞ்சிலே சாய்ந்து, “எஜமானே, அது யார்?” என்று கேட்டார்.   அதற்கு இயேசு, “நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” என்றார். பின்பு, ரொட்டித் துண்டைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனான யூதாஸிடம் கொடுத்தார்.   அவன் ரொட்டித் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவன் உள்ளத்தில் புகுந்தான். அதனால் இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்றார்.   ஆனால், எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னாரென அங்கு உட்கார்ந்திருந்த ஒருவருக்கும் புரியவில்லை. (யோவான் 13:22-28)  இயேசுவின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான இந்தச் சம்பவம் – கடைசி விருந்து – பற்றி பல சினிமாக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  கூபாவின் புகழ் பெற்ற இயக்குனர் தொமாஸ் ஆலியாவின் ’கடைசி விருந்து’ என்ற படம் அதில் ஒன்று.          
***
பயணங்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் மூலம் செல்லும் குழுப் பயணம் (Chartered Tour) பற்றி எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.  ஆனால் துருக்கி பயணம் அந்த எண்ணத்தை மாற்றி விட்டது.  ஒரு பயண நிறுவனத்தின் உதவி இல்லாமல் கப்படோச்சியாவுக்கு என்னால் சென்றிருக்கவே முடியாது.  நான்கைந்து நண்பர்களாகவே துருக்கி சென்றிருந்தால் கூட பயண நிறுவனத்தின் துணையின்றி கப்படோச்சியா செல்வது அசாத்தியமே.  இல்லாவிட்டால் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டி வரும்.  பயணத்துக்கு பயண நிறுவனம் நம்முடன் அனுப்பும் வழிகாட்டிகள் பெரும் உதவியாக இருந்தார்கள்.  உண்மையிலேயே நாங்கள் செல்லும் இடங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருந்தார்கள்.  அப்படிச் சொல்வது கூடத் தவறு.  ஆய்வாளர்கள் அளவுக்கு அறிந்து வைத்திருந்தார்கள் என்று சொல்வதே பொருந்தும்.  ஹாட் ஏர் பலூன் பயணத்துக்குச் செல்ல காலையில் ஐந்து மணிக்கு வண்டி வரும் என்று சொல்லியிருந்தார்கள்.  நான் சென்றது வசந்த காலமாக இருந்தாலும் இரவில் குளிர் நடுக்கி எடுத்தது.  நாள் பூராவும் அலைச்சல் வேறு.  தூங்கி விட்டால் என்ன செய்வது?  நான்கு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து ஓடினேன்.  குகை அறையிலிருந்து வாசலுக்கு வரவே பத்து நிமிடம் ஆயிற்று.  மிகச் சரியாக ஐந்து மணிக்கு வண்டி வந்தது.  வண்டியில் ஏற்கனவே எங்கள் குழுவைச் சேர்ந்த ஆட்கள் இருந்தார்கள்.    
இன்னொரு முக்கியமான விஷயம், குடி.  ஏற்கனவே எழுதியதுதான்.  பயணம் செல்லும் போது குடித்தால் பயணத்தில் பல விஷயங்களை விட்டு விட வேண்டியிருக்கும்.  காலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து வரை ஊர் சுற்றி விட்டு அதற்கு மேல் வந்து படுத்து, காலையில் ஐந்து மணிக்குத் தயாராக ஓட்டல் வாசலில் நின்றால்தான் கப்படோச்சியாவை ஆகாயத்திலிருந்து பார்க்க முடியும்.  சாதாரண காட்சியா அது?  பல்லாயிரக் கணக்கான பிரமிட் வீடுகளை ஆகாயத்திலிருந்து பார்க்கக் கிடைக்கும் அனுபவம் என்றால் சும்மாவா?   குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தைப் பெற முடியுமா?    


 
 என் குழுவில் உள்ள ஒரு நண்பர் எடுத்த புகைப்படங்கள்.     
 

(சாருநிவேதிதா எழுதும் இத்தொடர் ஒவ்வொருவாரமும் வெள்ளிகிழமை தோறும் அந்திமழையில் வெளியாகும். தொடர் பற்றிய கருத்துக்களை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...