???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் - 6 - சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   21 , 2015  03:27:30 IST

 
1391-ஆம் ஆண்டு இஸ்தாம்பூல் முதல்முதலாக ஆட்டமன்களால் முற்றுகையிடப்பட்டது.  பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த முற்றுகையில் 1936-ஆம் ஆண்டு முதலாம் பயஸித் (Bayezid I) கருங்கடலின் வழியாக இஸ்தாம்பூலுக்கு உணவும் யுத்தத் தளவாடங்களும் வருவதைத் தடுப்பதற்காக பாஸ்ஃபரஸ் ஜலசந்தியின் ஆசியக் கரையில் ஒரு கோட்டையைக் கட்டினான். கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.  மேலே கருங்கடலையும் கீழே உள்ள மர்மரா கடலையும் இணைப்பதுதான் பாஸ்ஃபரஸ் ஜலசந்தி. இதன் நீளம் 31 கி.மீ. இஸ்தாம்பூல் நகரம் கால்வாசி ஐரோப்பாவிலும் முக்கால்பாகம் ஆசியாவிலும் உள்ளது.  இரண்டு நிலப்பகுதிகளையும் இணைக்க பாஸ்ஃபரஸ் ஜலசந்திப்பின் மீது இரண்டு தொங்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.  அதே சமயத்தில் இஸ்தாம்பூலைக் கொம்பு போல் துளைத்தப்படி செல்லும் ஒரு சிறிய கடற்பகுதியையும் படத்தில் பார்க்கலாம்.  அதன் பெயர் தங்கக் கொம்பு.  அந்த இரண்டு நிலப்பரப்பையும் இணைக்கும் பாலம்தான் வரலாற்றுப் புகழ் பெற்ற கலாட்டா பாலம்.  அது பற்றிப் பிறகு பார்ப்போம். இப்போது இஸ்தாம்பூலில் ஆட்டமன் சுல்தான்கள் நுழைந்த வரலாறு.   
  
பின்வரும் இணைப்பில் இஸ்தாம்பூலின் ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளின் சில நல்ல புகைப்படங்கள் உள்ளன.
http://www.amusingplanet.com/2014/10/istanbul-city-that-lies-in-two.html
 
57 ஆண்டுகள் கழித்து – 1453-ஆம் ஆண்டு – பயஸித்தின் பேரனனான இரண்டாம் மெஹ்மத் இஸ்தாம்பூலை மீண்டும்  முற்றுகையிட்டு பாஸ்ஃபரஸின் மற்றொரு பக்கத்தில் – அதாவது முன்பு கட்டப்பட்ட கோட்டையின் எதிர்ப்புறத்தில் இன்னொரு கோட்டையைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலிருந்து வரவழைத்திருந்த பீரங்கிகளைக் கொண்டு மர்மரா கடலின் பக்கமாக இருந்த இஸ்தாம்பூல் நகரத்து மதில்சுவர்களைத் தகர்க்கத் தொடங்கினான்.   அந்த இடத்தில் இயற்கையாக அமைத்திருந்த தங்கக் கொம்பு ஒரு அரண் போல் இருந்ததால் போர்க்கப்பல்கள் எதுவும் அந்தக் குறுகிய நீர்வழியில் வர வாய்ப்பில்லை என்று தைரியமாக இருந்தது பைஸாண்டைன் சாம்ராஜ்யத்தின் ஆளும் வர்க்கம்.  ஆனால் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருந்தான் இரண்டாம் மெஹ்மத்.  தன்னுடைய கடற்படையிலிருந்து 50 தட்டையான சிறிய கப்பல்களை (Galleys) பாஸ்ஃபரஸின் கரையிலிருந்த தொல்மாபாஹ்ஷி அரண்மனைக்கும் தங்கக் கொம்பின் கரையிலிருந்த காஸிம்பாஷா குவார்ட்டருக்கும் இடையில் உள்ள தரை வழியாகக் கொண்டு வந்தான்.  இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பைஸாண்டைன் படைகள் நிர்மூலமாயின.   
1453 மே 29.  மெஹ்மத் இஸ்தாம்பூல் நகருக்குள் தன் குதிரையுடன் நுழைந்தான்.  ஐரோப்பாவின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்று எனப் புகழ்பெற்றிருந்த ஹயா ஸோஃபியாவுக்குள்ளே (Haghia Sophia) சென்று தொழுகை செய்தான்.  அன்றைய தினத்திலிருந்து ஹயா ஸோஃபியா மசூதியாக மாற்றம் அடைந்தது.  ஆனாலும் அதன் உள்ளேயிருந்த விவிலிய ஓவியங்கள் யாவும் சிதைக்கப்படாமல் இன்றளவும் அப்படியே இருக்கின்றன.
 
         
கி.பி.622-ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மெதினா நகருக்குள் வந்த போது அந்த நகரவாசிகள் அனைவருமே நாயகத்தைத் தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பினார்கள்.  அப்போது நாயகத்தின் குதிரையைத் தனியே விட்டு அது எந்த வீட்டில் நிற்கிறதோ அங்கே தங்குவார் என்று முடிவு செய்யப்பட்டது.  குதிரை அயூப் அல் அன்சாரி என்பவரின் வீட்டின் முன்னே போய் நின்றது.  இஸ்தாம்பூல் நகரை முதல் முதலாக முற்றுகையிட்டவர் இந்த அயூப் தான்.  ஆண்டு 668.  அந்தப் போரில் மரணமடைந்த அயூப் இஸ்தாம்பூல் நகரிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.   அவர் அடக்கமான இடத்தில் ஒரு மசூதியை எழுப்பினான் ஆட்டமன் சுல்தான் இரண்டாம் மெஹ்மத்.  இவரது நினைவாகவே இஸ்தாம்பூலின் தங்கக் கொம்பிலிருந்து கருங்கடலின் கரை வரை உள்ள மாவட்டம் அயூப் (Eyüp) என்று வழங்கப்படுகிறது.  
 
பயண நிறுவனத்தின் வழிகாட்டலில் ஒரு குழுவாகச் சென்றால் அதிகமாகப் பார்க்க முடியாது; மேலும் நாம் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாகப் போக முடியாது என்ற எண்ணம் எனக்கு இருந்தது.  இருந்தாலும் பத்தே நாட்களில் துருக்கியில் பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருந்ததால் குழுவில் இணைந்தேன்.  இருந்தாலும் எங்கள் பயண நிறுவனம் மதியம் இரண்டு மணிக்கே எங்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டதால் அதற்கு மேல் நம் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்ற முடிந்தது.  குழுப் பயணம் என்பது நான் நினைத்த அளவுக்குக் கறாராக இல்லை.    
 
ஹயா ஸோஃபியா ஒரு பிரம்மாண்டம்.  ஆனால் அதற்குப் பிறகு இந்தப் பிரம்மாண்டத்தையே சிறிதாக்கக் கூடிய மகா பெரிய பிரம்மாண்டங்களையெல்லாம் பார்க்க நேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் பார்த்த போது எனக்கு ஒருவித மனச்சுமையே ஏற்பட்டது.  ஒருபக்கம் மாடமாளிகையும் கோபுர வாசமும்,  இன்னொரு பக்கம் மிகப் பயங்கரமான மனிதச் சுரண்டலும் படுகொலைகளுமாகத்தான் வரலாறு முழுக்கவுமே காட்சியளிக்கிறது.  அந்த வரலாற்று உண்மைதான் எனக்கு மனச் சோர்வை அளித்தது.  
 
“அயூப் சுல்தான் மசூதிக்குப் போகலாம் என்று பார்க்கிறேன்; வருகிறீர்களா?” என்று அபிநயாவைக் கேட்டேன்.  சம்மதித்தார்.  டாக்ஸியில்தான் போகவேண்டும்.  டாக்ஸிக்காரர்களை நம்பாதீர்கள் என்று காலையில் ஆஸ்குர் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.  அதை மனதில் வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு டாக்ஸிக்காரரை அணுகினேன்.  ஹயா ஸோஃபியாவிலிருந்து  அயூப் சுல்தான் மசூதிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.  பிலாலிடமும் கேட்கவில்லை.  
60 லீரா கேட்டார் டாக்ஸிக்காரர்.  ஆங்கிலத்தில் அவருக்குத் எண்ணி பத்து வார்த்தைகள்தான் கூடத் தெரியாது என்று தோன்றியது.  ஐந்து நிமிடம் பேசியதில் அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகள் யெஸ், நோ, கம்.  அவ்வளவுதான்.  எண்கள் கூடத் தெரியவில்லை.  எல்லாம் சைகைதான்.  அறுபது என்பதற்கு ஆறு விரல்களைக் காண்பித்து காற்றில் பூஜ்யம் போட்டுக் காண்பித்தார்.  வெளிநாட்டுக்குப் போனால் நாம் செய்யக்கூடாத பிக்காரி வேலை அந்தப் பணத்தோடு நம் ரூபாயைக் கொண்டு பெருக்கிப் பார்க்கக் கூடாது.  
 
பார்க்கலாம்; அமெரிக்கா ஐரோப்பா மாதிரி இருந்தால் பார்க்கலாம்.  பிச்சைக்காரர்களுக்கு அந்த ஆடம்பரமெல்லாம் கூடாது.  உதாரணமாக, இஸ்தாம்பூலில் கழிப்பிடத்தில் சிறுநீர் போக ஒரு லீரா.  23 ரூ.   ஐரோப்பா முழுவதுமே கிட்டத்தட்ட இப்படித்தான் என்று நினைக்கிறேன்.  இதைப் பார்த்தால் நம்மால் நிம்மதியாக ‘ஸூஸூ’ போக முடியுமா?  பலரும் இதை வெளிநாட்டில் எல்லாம் விலை அதிகம் என்றே புரிந்து கொள்கிறார்கள்.  நம்முடைய ரூபாய்க்கு எந்த ஊரிலும் மதிப்பு இல்லை என்பதுதான் அதன் பொருள்.  எனவே டாக்ஸிக்காரர் கேட்ட 60 லீராவை ரூபாயால் பெருக்கிப் பார்க்கும் காரியத்தில் ஈடுபடாமல் வேறு விஷயத்தைத்தான் யோசிக்க ஆரம்பித்தேன்.  20 லீரா தூரத்துக்கு 60 லீரா கேட்கிறாரா?  ஆஸ்குர் சொன்ன ஆள் இவர்தானா?  50 லீரா என்று சைகை காண்பித்தேன்.  ம்ஹும்.  ஒத்துக் கொள்ளவில்லை.  பிறகு வேறொரு டாக்ஸியை அணுகினோம்.  ஆறு அடி உயரம்.  கனத்த குரல்.  இவர் அவரை விடப் பரவாயில்லை.  பத்துப் பதினைந்து ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தது.  இவர் 70 லீரா கேட்டார்.  அவர் 60 தானே கேட்டார் என்றேன்.  யார் அந்த மடையன் என்பது போல் ஏதோ கேட்டார்.  கை காண்பித்தேன்.  உடனே அவருக்கும் இவருக்கும் ஏதோ தகராறு போல் சத்தமாகப் பேசிக் கொண்டார்கள்.  சரி, யாரும் வேண்டாம்; நடந்து பார்க்கலாம் என்று அபிநயாவும் நானும் நடந்தோம்.   ஐந்து நிமிடம் நடந்த பிறகு ஒரு டாக்ஸி மாட்டியது.  சொல்லி வைத்தாற்போல் 60 லீரா கேட்டார்.  ஆனால் டாக்ஸியில் முன்னிருக்கையில் இன்னொரு ஆள் இருந்தார்.  அவரும் டிரைவரும் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.  நாங்கள் ஏறியதும் முன்னால் இருந்தவர் இறங்கி விடுவார் என்று நினைத்தேன்.  இறங்கவில்லை.  இருவருக்கும் 35 வயது இருக்கும்.  ஆறு அடி உயரமும் கட்டுமஸ்தான உடலுமாக பார்க்கவே பயமாக இருந்தது.  இருந்தாலும் துணிந்து ஏறி விட்டோம்.  எனக்குள் பயம் சுரந்தது.  எங்கேயாவது அழைத்துப் போய் என்னை அடித்துப் போட்டு விட்டு அபிநயாவை ஏதாவது… சே சே… இது என்ன டெல்லியா… என்று பயத்தை விரட்ட முயன்றேன்.  பத்து வார்த்தைகளைக் கொண்டே இஹ்சான் (சாரதியின் பெயர்) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் உரையாட முயன்றார்.  எங்கிருந்து வருகிறீர்கள்?  இந்தியா.  உடனேயே ”அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்” என்றார்.  இதேபோல் மறுநாளும் நடந்தது.  அன்றைய தினம் தொல்மாபாஹ்ஷி அரண்மனைக்குச் சென்றது எங்கள் குழு. குழுவில் ஒரு ஈரானியக் குடும்பமும் இருந்தது.  (என்னால் ஓரளவுக்கு இவர் இன்ன நாட்டினர் என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதால் அப்படி அனுமானித்துச் சொல்வதை ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தேன். ஐரோப்பா, ஆசிய கண்டத்துக்குள் என் அனுமானம் சரியாக இருக்கும்.  ஆனால் ஆஃப்ரிக்கா, தென்னமெரிக்கா என்றால் முடியாது.  ஒருவேளை ஒரு மெக்ஸிகன் முகத்தைச் சொல்லி விடலாம்; ஆனால் பெரூ மற்றும் பொலிவிய முகங்களை வித்தியாசப்படுத்துவது எனக்குக் கடினம். அதேபோல் எத்தியோப்பிய முகத்தையும் கின்ய முகத்தையும் வித்தியாசப்படுத்த முடியுமா? தெரியவில்லை.)  
 
நீங்கள் ஈரானா என்று அவர்களில் இளைஞனாக இருந்தவனிடம் கேட்டேன்.  அவன் ஆமாம் என்று சொல்வதற்குள், எங்களோடு பேசுவதற்காகவே காத்திருந்தவரைப் போல் அந்த இளைஞனின் தாயார் அபிநயாவிடம் ”நீங்கள் பாகிஸ்தானா?” என்றார்.  இந்தியா என்றதும் அந்தப் பெண்மணி ”அமிதாப் பச்சன்… ஐஸ்வர்யா…” என்றார்.  பிறகு உடனே, “யூ ஃபாதர் டாட்டர்?  ஹஸ்பண்ட் வைஃப்?” என்றும் அடுத்த கேள்வியை வீசிய போது உலகம் பூராவும் மனிதர்கள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.  அபிநயா ”ஃப்ரெண்ட்ஸ்” என்று சொல்லி விட்டு மேலும் என்னைப் பற்றி பெரிய ரைட்டர் என்று என்னென்னவோ விளக்கிச் சொன்னார்.  
 
எனக்கு யாரிடமும் என்னை ரைட்டர் என்று அறிமுகம் செய்வது பிடிக்காதே என்று அபிநயாவிடம் பிறகு சொன்னேன்.  அதற்கு அபிநயா சொன்ன பதில் என்னைப் பலவாறு சிந்திக்க வைத்தது.  அந்தப் பெண்மணிக்கு நாம் யார் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று இருந்தது.  ஏனென்றால், குழுவில் இருந்த அத்தனை பேருமே ஜோடிகள் அல்லது குடும்பம்.  அந்தப் பெண்மணியிடம் நான் உங்களை விமான நிலையத்தில் சந்தித்தேன் என்று சொன்னால் புரியப் போவதில்லை.  நண்பர்கள் என்றாலும் புரியாது.  அது எப்படி இவ்வளவு வயது வித்தியாசத்தோடு நண்பர்களாக இருக்க முடியும் என்ற சந்தேகமெல்லாம் வரும்.  நீங்கள் கதை எழுதுபவர் என்றால் முடிந்தது கதை.  எழுத்தாளன் கடவுளைப் போல.  பால் வித்தியாசம், வயது வித்தியாசம் எதுவுமே கிடையாது. அதனால்தான் நீங்கள் எழுத்தாளர் என்று சொன்னேன். 
 
டாக்ஸியில் கொஞ்ச நேரம் போனதுமே இஹ்சானையும் அவர் நண்பரையும் பற்றிப் பயந்ததற்காக என்னையே கடிந்து கொண்டேன்.  துருக்கியைப் பற்றி எப்படியெல்லாம் கட்டுக்கதைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.  கையிலிருந்த இஸ்தாம்பூல் சாலைப் போக்குவரத்து வரைபடத்தை வைத்துப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  ஹயா ஸோஃபியாவிலிருந்து சரியான வழியில்தான் போய்க் கொண்டிருந்தார் இஹ்சான்.  அயூப் சுல்தான் மசூதியை அடைந்த போது மீட்டர் 65 லீரா காட்டியது.  ஏற்கனவே 60 லீராவுக்கே ஒரு டிரைவர் வருவதாக இருந்தார் என்று சொல்லியிருந்ததால் நான் 65 லீரா கொடுத்தும் அவர் 60 தான் வாங்கிக் கொண்டார்.  நீங்கள் யார் என்று எங்களைப் பற்றிக் கேட்கவில்லை.  என்னிடம் இஹ்சான் ”சில்ரன்?” என்று சொல்லி ’எத்தனை’ என்பதை சைகையில் கேட்டார்.  நான் ஒன்று என்றேன்.  முகத்தைச் சுளித்தபடி ”கேர்ள்?” என்றார்.  ”இல்லை… பாய்.”  ”வேஸ்ட் வேஸ்ட்” என்று சொல்லியபடி  தனது தடித்த வலது கையை மார்பின் நடுவே வலுவாகக் குத்தி ”மீ!” என்று சொல்லி சல்யூட் அடிப்பது போல் வலது கையை முன்னே தூக்கி மூன்று விரல்களை என் முகத்துக்கு முன்னே காண்பித்தார்.  அதோடு மீசையையும் முறுக்கிக் காட்டினார்.  ”பாய்ஸ்?” என்று கேட்டேன். அதற்கு மிக நீண்ட யெஸ் சொன்னார்.  பிறகு துருக்கி மொழியிலேயே ஏதோ சொன்னார்.  என்னை ஆசீர்வதிப்பது போல் இருந்தது அவரது உடல்மொழி.  ”இன்னும் நிறைய பெற்றுக் கொள்” என்று சொல்கிறார் போலிருக்கிறது.  
 
ரயில் சிநேகிதம் என்பார்கள் அல்லவா, அது போல்தான் ஆகிவிட்டது அபிநயா சிநேகிதம்.  மூன்று நாள் இஸ்தாம்பூலில் இருந்து விட்டு நான் இஸ்மீர் கிளம்பும் போது அவர் ஸோங்குல்டாக் (Zonguldak) கிளம்பினார்.  இஸ்தாம்பூலில் இருந்த மூன்று நாட்களிலும் அதிகம் டாக்ஸியில் சுற்றினோம்.  ஒருவர் கூட பிரச்சினை செய்யவில்லை.  மீட்டர் போட மாட்டேன் என்று சொன்னாலும் மீட்டருக்கு ஆகும் லீரா தான் கேட்கிறார்கள். பொதுவாகவே துருக்கியர்கள் நம் இந்திய கிராமவாசிகளைப் போல் வெகுளியாக இருக்கிறார்கள்.  இதில் நகரவாசி, கிராமவாசி என்ற வித்தியாசம் இல்லை.  அதிலும் இஹ்சான் போன்றவர்களோடு பேசிய போது ஒரு சிறுவனோடு பேசுவது போல் இருந்தது.  அவ்வளவு வெகுளி.  
 
மறுநாளும் எங்கள் கைடாக வந்தவர் பிலால்தான்.  அவர் தொல்மாபாஹ்ஷியைச் சுற்றிக் காட்டி விட்டு ஒரு ஓரத்தில் சாவகாசமாக நின்று கொண்டிருந்த போது முந்தைய தினம் இஹ்சான் பேசியதைச் சொன்னேன்.  எனக்கு இந்த ஊர் டாக்ஸி டிரைவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் இவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசும் போது டாக்ஸி டிரைவர்களுக்கு ஏன் ஒரு வார்த்தை கூடத் தெரியவில்லை?  அவர்களின் படிப்பு என்ன?  பள்ளிக்கூடங்களில் ஆங்கிலமோ மற்ற ஐரோப்பிய மொழிகளோ கற்பிக்கப்படுகிறதா?  பிலால் சொன்ன பதிலை அடுத்த வாரம் சொல்கிறேன்.  இப்போது நாம் தில்ரூபா படித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஜெரார் தெ நெர்வாலுக்கு வருவோம்.
 
நெர்வால் கெய்ரோவில் வாங்கிய அடிமை ஜாவாவைச் சேர்ந்தவள் என்று பார்த்தோம்.  ஜாவாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வந்தவள் மெக்காவில் உள்ள ஒரு  ஷேக்குக்கு விற்கப்பட்டாள்; அந்த ஷேக் இறந்ததும் கெய்ரோ வந்தாள்.  அங்கே ஒரு அந்நியப் பெண்ணாகவே கருதப்பட்டாள்.  ஏனென்றால்,   துருக்கியர்கள் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.  (அப்போது எகிப்தும் ஆட்டமன் துருக்கியர் வசமே இருந்ததால் எகிப்தியரும் துருக்கியர் என்றே அழைக்கப்பட்டனர்.)  துருக்கியருக்கு அபிசீனிய அல்லது கறுப்பின அடிமைகள்தான் வேண்டும்.  இவளோ ஜாவாவிலிருந்து வந்தவள்.  எனவே யாரும் இவளை வாங்க முன்வரவில்லை.  நெர்வாலுக்கு இந்துக்கள் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது.  அவர்கள் கால்நடைகளைப் போல் இலைதழைகளை மட்டுமே உண்பதால் அவருக்கு அவர்களைப் பிடித்திருந்தது.  அப்படி நினைத்து அந்த ஜாவா அடிமையை வாங்கி விட்டார்.  ஆனால் அவளோ ஒரு முஸல்மான்.  நெர்வால் அவளை வற்புறுத்தி சாப்பிடச்  சொன்ன அன்றைய தினம் அவள் நோன்பு பிடித்திருந்தாள்.  மாலை வரை நீர் கூட அருந்த மாட்டாள்.  ஒருநாள் சமையல்காரன் வேலைக்கு வரவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் வரவில்லை என்றால் வேலையிலிருந்து நின்று விட்டான் என்று பொருள்.  அதற்காகவே வேலைக்காரர்கள் தங்கள் சம்பளத்தை அன்றைன்றைக்கு வாங்கிக் கொள்வது வழக்கமாக இருந்தது.   
 
சமையல்காரன் வேலையை விட்டு நின்று விட்டதால் ஃப்ரெஞ்ச் தெரிந்த தன்னுடைய உதவியாளன் மன்ஸூர் மூலமாக அடிமைப் பெண்ணிடம் சமைக்கச் சொல்கிறார் நெர்வால்.  அதற்கு அவள் சொன்ன பதில்: ”ஸிதியிடம் (ஸிதி = சார்) சொல்…  நான் ஒரு பெண்; வேலைக்காரி அல்ல. எனக்கு உரிய மரியாதையை அவர் கொடுக்காவிட்டால் பாஷாவுக்கு எழுதி விடுவேன்.” 
 
“என்னது, பாஷாவா?  இதற்கும் பாஷாவுக்கும் என்ன சம்பந்தம்?  என்னுடைய சமையல்காரன் ஓடி விட்டான்.  இன்னொரு சமையல்காரன் வைத்துக் கொள்ள என்னிடம் காசு இல்லை.  ஏன் இந்தப் பெண் சமைக்கக் கூடாது?  உலகம் பூராவும் பெண்கள்தானே சமைக்கிறார்கள்?” 
 
“மன்ஸூர்… ஸிதியிடம் சொல்.  பாஷாவுக்கு எழுதுவதன் மூலம் ஒரு அடிமை தன்னுடைய எஜமானரை மாற்றிக் கொள்ள முடியும். என்னால் இவர் நஷ்டமடைய வேண்டாம்.  வேறொருவரிடம் விற்று விடலாம்.  நான் ஒரு அடிமையாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு முஸல்மான்.  என்னால் சமையல் வேலையெல்லாம் செய்து என்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது.  ஒரு முஸல்மான் பெண் அப்படிச் செய்யவே மாட்டாள்.”
 
ஆக, ஒரு வேலைக்காரரை விட அடிமையின் நிலை பரவாயில்லை என்று ஆகிறது.  இது எகிப்து.  1850-ஆம் ஆண்டு.  
“என்னால் உன்னை வேறொருவரிடம் விற்க முடியாது.  எல்லா மனிதர்களையும் சமமாகப் பார்க்கும் ஒரு ஐரோப்பியன் ஒருபோதும் அப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான்.  என்னால் அது முடியவே முடியாது.  உனக்கு நான் சுதந்திரம் கொடுத்து விடுகிறேன்.  நீ உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  எங்கே வேண்டுமானாலும் போகலாம்.”
 
”என்னது, சுதந்திரமா?  உங்கள் சுதந்திரம் எனக்கு வேண்டிய ரொட்டியைத் தருமா?  நான் எங்கே தங்குவேன்?”  
 
சுதந்திரத்தையே தனது தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் பாரிஸைச் சேர்ந்த நெர்வால் கடைசியில் எகிப்தை விட்டுக் கிளம்பும் போது ஒரு அடிமைப் பெண்ணையும் தன்னோடு அழைத்துக் கொண்டே செல்கிறார்.  
 
Haghia Sophia.  Photograph: James Roberston, 1850.
 
 
புகைப்படம் எடுத்தவர் பெயர் தெரியவில்லை.  எடுத்த ஆண்டு: 1900
 
 
அயூப் சுல்தான் மசூதி.  புகைப்படம்: Pascal Sebah, 1870.    
 
 
-சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிதோறும்  வெளிவரும். தொடர் பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்   
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...