???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 15 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   01 , 2016  02:21:43 IST

விமான நிலையத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வோம்.  இஸ்மீர் விமான நிலைய அனுபவம் அப்படித்தான் ஆனது.  இடைவழியில் எங்களுக்கு வழி சொன்ன மாணவர்கள் நாங்கள் அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து வருகிறோம் என்று நினைத்துக் கொண்டு தவறான வழியைக் காட்டி விட்டார்கள்.  நாங்கள் இஸ்தாம்பூலிலிருந்து வருகிறோம் என்று சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் சற்று விழித்த போது நாங்கள் உஷாராகியிருக்க வேண்டும்.  நான் எமிராவிடம் பேசுவதில் ஆர்வமாக இருந்தேன்.  எமிராவோ தன் நாட்டின் முக்கியமான எழுத்தாளர் பற்றி ஒரு இந்தியர் பேசுவதில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.  வழியை விட்டு விட்டோம்.  வெளியே இருந்த பாதையில் திரும்பவும் நடந்தோம்.  கைடு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்துக் கொண்டிருப்பாரே என்ற பதற்றத்தில் கொஞ்சம் வேகமாகவே நடந்ததால் அரை மணி நேரத்தில் நாங்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.  ஆனால் அது விமான நிலையத்தின் வெளிப்புறம்.
 
 
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.  அது என் உடல்நிலை.  உடல்நிலை என்பதை விட இதயச் செயல்பாடு என்று சொல்வதே பொருந்தும்.  வாழ்நாள் பூராவும் ஆரோக்கியமாகவே இருந்தேன், இருக்கிறேன்.  ஜுரம், தலைவலி, வயிற்றுவலி, ஜலதோஷம் போன்ற சில்லறை நோய்களோ நீண்ட நாள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய பெரிய நோய்களோ எதுவும் எனக்கு வந்ததில்லை.  சென்னை பூராவும் மக்கள் மெட்ராஸ் ஐ என்றும், சிக்கன்குனியா என்றும், டெங்கு என்றும் அல்லலுறும் போதும் என் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை.  பொதுவாகவே பாராசிட்டமால் போன்ற ஆங்கில மருந்துகளை அதிகம் உட்கொண்டதில்லை.  இதற்காக அடிக்கடி கடவுளுக்கு நன்றி சொல்வதும் உண்டு.  அப்படி நன்றி சொல்லும் போதே ஆரோக்கியத்தைக் கொடுத்து விட்டு கூடவே வறுமையையும் கொடுத்து விட்டாயே என்று குறைப்பட்டுக் கொள்வதும் உண்டு.   ஆனாலும் பொன்னையும் பொருளையும் விட ஆரோக்கியம்தான் மிகப் பெரிய சொத்து என்பது என் கருத்து.
 
 
ஆரோக்கியம் என்பது ஓரளவுக்கு மேலேயிருந்து கொடுக்கப்படும் பரிசு என்றாலும் அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.  அதற்கான வாழ்முறையைத்தான் எப்போதும் நான் பின்பற்றி வருகிறேன்.   டீ காப்பி குடிப்பது கெடுதல் என்று பொதுவான ஒரு கருத்து உண்டு.  ஒருவர் காப்பி பிரியராக இருந்தால் தினம் இரண்டு காப்பி குடிப்பதால் பெரிய கெடுதல் ஒன்றும் வந்து விடப் போவதில்லை.  ஆனால் சரியானபடி டீ குடித்தால் அது மிகப் பெரிய ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நல்கும்.  சீனர்களும், ஜப்பானியர்களும் இதற்கு எடுத்துக்காட்டு.  அவர்களும் தமிழர்களைப் போல் அதிகம் மது அருந்துபவர்கள்தான்.  ஆனால் அவர்களின் சராசரி வயது 95-ஆக இருக்கிறது.  அதை விட முக்கியமான விஷயம், வாழும் காலத்தில் அவர்கள் நம்மைப் போல் நோயாளிகளாக இல்லை.  காரணம், அவர்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மதுவை அருந்துகிறார்கள்.  சீனாவில் அரிசியில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ஒய்ன்.  ஜப்பானில் சாக்கே.  இது தவிர அவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம், நாள் முழுதும் பத்துப் பனிரண்டு முறை அருந்தும் க்ரீன் டீ தான்.  சாப்பாட்டுக்கு முன்னும், சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் (இது மிகவும் அவசியம்) ஒருநாளில் பனிரண்டு டீ குடித்து விடுகிறார்கள்.  பால் சேர்ப்பதில்லை.  உலக நாடுகள் பலவற்றிலும் தேநீரில் பால் சேர்க்கும் வழக்கம் இல்லை.  சர்க்கரையும் சேர்ப்பதில்லை.  தேயிலையையும் புதினாவையும் கொதிநீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து அருந்துகிறார்கள்.  துருக்கி முழுவதும் இதே போன்ற தேநீரைத்தான் நாள் முழுதும் அருந்துகிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன்.  மொராக்கோவிலும் இப்படித்தான்.  இந்தியாவில் இந்தப் பழக்கம் மேட்டுக்குடி வர்க்கத்தில் உண்டு.  என்னுடைய பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் அந்த வர்க்கத்தைச் சார்ந்ததாகவே இருப்பதைக் கண்டு ’பிச்சைக்காரனுக்கும் மேட்டுக்குடிக்கும் என்ன சம்பந்தம்?’ என வியந்திருக்கிறேன்.  குடிக்கும் தேநீரிலிருந்து எல்லாவற்றையுமே ஆரோக்கியத்தை மனதில் கொண்டே வாழ்ந்தாலும் ஊழிற் பெருவலி யாவுள என வள்ளுவரும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என இளங்கோவும் சொன்னது போல் எனக்கு 2005-இல் ஒரு பெரிய மாரடைப்பும்,  2014-இல் அதைவிடப் பெரிய மாரடைப்பும் வந்தது.   இதயத்தில் கடும் வலியுடன் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்ட நானே நடந்து போய் ஆட்டோ பிடித்து நண்பரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை போனேன்.  
 
 
இப்போதைக்கு இதயத்தின் ரத்தக் குழாயில் 50 சதவிகித அடைப்பு உள்ளது.  அதற்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன்.  ஆனால் பிரச்சினை என்னவென்றால், மாலை நான்கு மணிக்கு மேல் எந்தக் கடின வேலையும் செய்ய முடியாது.  பத்து நிமிடம் நடந்தாலே கடுமையான நெஞ்சு வலி உண்டாகும்.  மாடிப்படி கூட ஏற முடியாது.  ஆனால் ஆச்சரியகரமாக துருக்கியில் நான் என்ன அலைந்தும் நடந்தும் நெஞ்சு வலியே வரவில்லை.  கப்படோச்சியாவில் ’குகை ஓட்டலில்’ எனக்குக் கிடைத்தது நான்காவது மாடி.  படிகளும் குகையின் படிகளே.  கொஞ்சமும் நெஞ்சு வலி வரவில்லை.  எந்த உளவியல் காரணங்களும் இல்லை.  வலி வரும் என்று பயந்து கொண்டுதான் இருந்தேன்.  வரவில்லை.  அங்குள்ள உணவு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
 
பன்றிக் கறி,  மாட்டுக் கறி, பாலாடைக்கட்டி போன்ற கொழுப்பு உணவுகளைக் கன்னாபின்னாவென்று தின்னும் ஐரோப்பியர்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை? ஆனால் பயந்து பயந்து வாரத்துக்கு ஒருமுறை கால் கிலோ இறைச்சி எடுத்து (குடும்ப உறுப்பினர் ஐந்து பேர்!) சாப்பிடும் பாவாத்மாவான இந்தியர்களுக்கு ஏன் 50 வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது?  நீண்ட காலமாக எனக்குள் இருந்து வரும் சந்தேகம் இது.  இதற்கு என் நண்பர் ஞான பாஸ்கர் ஒரு பதில் சொன்னார்.  ஐரோப்பியர்கள் தெரிந்தோ தெரியாமலோ Paleo Food உண்கிறார்கள்.  கொழுப்பே உணவு.  சொன்னதோடு மட்டுமல்ல; வெறும் கொழுப்பையே உண்டு அவர் இப்போது ஒரு ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றத்தைப் பெற்று விட்டார்.  அரிசி, கோதுமை, பழம் எதுவும் தொடுவதில்லை.  வெறும் மாமிசம்.  பச்சை மாமிசம் என்று நினைத்து விடாதீர்கள்!  சமைத்ததுதான்.  சைவர்களுக்கும் பேலியோ உணவு முறை இருக்கிறது என்கிறார்கள்.  உடம்பில் இருந்த அத்தனை கறியும் கரைந்து இப்போது ‘கிண்’ணென்று இருக்கிறார் ஞான பாஸ்கர்.  இது தொடர்பாக நியாண்டர் செல்வனின் கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.  ஆனால் நான் இந்தத் தொடரில் அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் செல்ல விரும்பவில்லை.  எனக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே பிச்சைக்காரனை விட கேவலமாக இருப்பதால் பேலியோ உணவையெல்லாம் பரிசோதித்துப் பார்க்கும் நிலைமையில் இல்லை.   இப்படிப்பட்ட எனக்கு துருக்கியில் மாலை நான்கு மணிக்கு மேல் வரும் இதயவலிப் பிரச்சினை வரவே இல்லை. உணவுதான் காரணம்.  அது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  ஆனால் மேற்கிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல ஐரோப்பிய உணவு மெல்ல மெல்ல மறைந்து நம் ஊரைப் போல் காரமும் எண்ணெயும் சேர்ந்து கொள்கிறது.  கப்படோச்சியாவிலேயே அந்த மாற்றத்தை உணர முடிந்தது.  
 
 
இவ்வளவும் எதற்குச் சொல்கிறேன் என்றால், இஸ்மீரின் விமானநிலையத்தில் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பதே முக்கால் மணி வரை நடந்தும் ஒரு வலியும் தெரியவில்லை.  கைடாக வந்த பெண் கடும் கோபத்தில் இருந்தார்.  இருபது வயதுதான் இருக்கும்.  எதுவும் பேசவில்லை.  தவறு எங்களுடைய அல்ல என்று சொல்லி என்ன நடந்தது என்றும் விளக்கினோம்.  அந்தப் பெண் எதுவும் பதில் சொல்லவில்லை.   எங்கள் சாமான்கள் விமானநிலையத்தின் உள்ளே இருந்தன.  நாங்கள் வெளியே இருந்தோம்.   மீண்டும் உள்ளே போக முடியாது.  அந்தப் பெண்ணே விமானநிலைய அதிகாரியிடம் பேசி நான் மட்டும் உள்ளே போக அனுமதி வாங்கினார்.
நான் நினைத்தது போல் இஸ்மீரிலேயே தங்கவில்லை.  இன்னும் போக வேண்டுமா என்று எமிராவிடம் கேட்டேன்.  ”முன்பே சொன்னேனே, நாம் தங்கப் போவது குஷாதாஸி” என்றார்.  இஸ்மீரிலிருந்து காரில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து குஷாதாஸி வந்து சேர்ந்த போது மணி கிட்டத்தட்ட பனிரண்டை நெருங்கியது.  அந்த நேரத்திலும் நாங்கள் தங்கவிருந்த ஓட்டலின் உணவகம் திறந்தே இருந்தது.  ஓட்டலுக்கு ஐம்பதடி தூரத்தில் இஜீயன் கடல்.  எப்போது படுத்தாலும் எனக்கு அதிகாலையில் விழிப்பு வந்து விடும்.  எழுந்து பல் துலக்கி விட்டு அறையிலேயே க்ரீன் டீ போட்டு எடுத்துக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தால் கடலில் ஒருவர் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.  (புகைப்படம்)
 
தேநீர்க் கோப்பையுடன் கீழே இறங்கிப் போய் அங்கே இருந்த உணவகத்தில் அமர்ந்தேன்.  நீண்ட நேரம் ஒன்றுமே செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.  பெரும் பரவச உணர்வு மனதை ஆட்கொண்டது.  கடலின் மேலே ஒரு ஸீகல் பறந்து கொண்டிருந்தது.  ஒருக்கணம் அந்தப் பறவைக்கும் தூண்டில்காரரருக்கும் எனக்கும் ஒரு உறவு ஏற்பட்டது போல் தோன்றிற்று.  அந்த எண்ணமே ஒருவேளை என்னுடைய ஆணவத்தைக் காட்டுகிறதோ எனத் துணுக்குற்றேன்.  ஸீகல் தன்னிச்சையாகப் பறந்து கொண்டிருக்கிறது.  தூண்டில்காரர் தன்னிச்சையாக அமர்ந்திருக்கிறார்.  நான் தான் அந்த இருவரையும் என்னையும் இணைத்து ஏதேதோ வலை பின்னிக் கொண்டிருக்கிறேன்.  தெருவில் ஒரு சந்தடி இல்லை.  சுற்றுலாப் பயணிகளின் ஊர்.   ஜனத்தொகை 60000 தான் என்றாலும் பயணிகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தையும் தாண்டும் என்று படித்திருந்தேன்.  எல்லோரும் மது அருந்தி விட்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள்.  மீண்டும் அந்த ஸீகல் பறவையைப் பார்த்ததும் எனக்கு முராகாமியின் ’மனிதனைத் தின்னும் பூனைகள்’ கதை ஞாபகம் வந்தது.  அதிலும் இதே இஜீயன் கடல்.  ஒரு ஸீகல்.  துருக்கிக்குப் பதிலாக கிரேக்கத் தீவு ஒன்று.  முராகாமி தீவின் பெயரைச் சொல்லவில்லை.  ஆனால் தீவிலிருந்து பார்த்தால் துருக்கி தெரிகிறது.
 
 
நேற்று நள்ளிரவில் உணவு அருந்தும் போது பணியாளர் உலகின் மிகச் சிறந்த வைன் இஸ்மீர் வைன் என்று சொல்லி ஒரு வைன் போத்தலை மேஜையில் வைத்தார்.  எமிராவுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லையாம்.
 
 
அப்போது நான் “Obviously” என்று சொல்லி விட்டேன்.  அவர் ஒரு முஸ்லீம் பெண் என்பதால் அப்படிச் சொன்னேன்.  ஆனால் அவருடைய பதிலிலிருந்து அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது என்று தோன்றியது.  சிரித்துக் கொண்டே “பெய்ரூட்டில் எல்லா உணவகங்களிலும் வைனும் பியரும் மற்ற ஆல்கஹால் ஐட்டங்களும் உண்டு.  எந்தத் தடையும் இல்லை.  சாலைகளிலும் நிறைய மது விளம்பரப் பலகைகளைப் பார்க்கலாம்.  லெபனிய முஸ்லீம்கள் மற்ற அரபி முஸ்லீம்களைப் போல் அல்ல.  எங்கள் நாட்டில் 60 சதவிகிதம்தான் முஸ்லீம்கள்; மீதி கிறிஸ்தவர்கள்” என்றார்.
“ஓ… பிறகு ஏன் நீங்கள் குடிப்பதில்லை?”
 
 
“ஓரிரண்டு முறை வைன் குடித்துப் பார்த்தேன்.  ஒரேயடியாகத் தூக்கம் வருகிறது.  ஏற்கனவே நான் ஒரு Sleepyhead.  அதோடு வைனை வேறு குடித்து விட்டுத் தூங்க வேண்டுமா என்றுதான்…”
 
 
இருந்தாலும் உலகின் மிகச் சிறந்த வைன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று ஒரு கோப்பை அருந்தினார்.  ”எந்த வைனுமே குடிக்காத போது சிறந்த வைனை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? எப்படி இருக்கிறது?” என்றேன்.  ஒன்றும் சொல்லாமல் சிரித்தார்.  நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றேன்.
 
 
”இன்று ஒருநாள் விதிவிலக்கு கொடுங்கள்; உலகின் மிகச் சிறந்த வைனுக்காக.”
 
 
எப்பேர்ப்பட்ட நிலை பாருங்கள் எனக்கு.  எதிரே பத்தடி தூரத்தில் இஜீயன் கடல்.  குஷாதாஸி என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய ஊர் இஜீயன் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய சொர்க்கம்.  என் எதிரே ஒரு லெபனியப் பெண்.  மென்மையாகப் பேசுவதிலும் பழகுவதிலும் உலகிலேயே ஈடு இணையற்றவர்கள் லெபனியர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இவ்வளவுக்கும் சிகரம் வைத்தாற்போல் உலகின் மிகச் சிறந்த வைன்.
 
 
அப்பேர்ப்பட்ட வைனை வேண்டாம் என்று மறுத்தேன்.  அந்தக் கணத்தில் என்னையே கொஞ்சம் பாராட்டிக் கொள்ளவும் செய்தேன். ஆம்… கொஞ்சம் கூட அந்த வைனின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை.  ஏன் என்று கேட்டார் எமிரா.
 
 
 
“குடித்தால் நான் வெளியூர் போகும் போதெல்லாம் குடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.  அப்படிச் செய்தால் பயணமே கெட்டு விடுகிறது.  இமயமலைக்கு நண்பர்களுடன் போனேன்.  எப்படிப்பட்ட இடம் அது!  அங்கே போய் இரவில் குடித்தேன்.  அதிலிருந்துதான் குடியை அறவே விட வேண்டும் என்று தோன்றி விட்டது.  இப்போது ஒரு கோப்பை குடித்தால் இன்னொரு இடத்தில் இன்னொரு கோப்பை குடிக்க வேண்டும் என்று தோன்றும்.  இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்த மது விஷயத்தில் மட்டும் இந்தியனாகவே இருக்கிறேன்…”
 
 
”அப்படியென்றால்…?”
 
 
“சுயநினைவை இழக்கும் வரை குடித்துக் கொண்டே இருப்பது…”
 
 
சிறிது நேரம் சென்ற பிறகு ஒரு ஸ்பூனை எடுத்து காப்பிக்கு எவ்வளவு டிகாக்ஷன் போட்டுக் கொள்வோமோ அத்தனை அளவு எடுத்து - இரண்டு ஸ்பூன் - ஒரு கோப்பையில் ஊற்றி நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றிக் கொண்டேன்.  தேன்.  அமிர்தம்.  காதலியின் இதழ்நீர்.  ம்ஹூம்.  அந்தச் சுவைக்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது.  ஆனாலும் குடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.  நான் சொல்வதை நம்புங்கள்.  இந்தக் கட்டுரைக்காக இதை எழுதவில்லை.  அந்த வைனைக் குடிக்க வேண்டும் என்று இம்மியளவு கூட தோன்றவில்லை.
 
 
முந்தைய இரவு பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே தூண்டில்காரருக்கு மீன் சிக்கி விட்டதைப் பார்த்தேன். அப்போது இரண்டு முதியவர்கள் அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(குஷாதாஸி என்றால் பறவைகளின் தீவு.  ஆகாயத்திலிருந்து பார்த்தால் குஷாதாஸி பறவையின் தலை போல் இருப்பதால் அந்தப் பெயர்.)
 
 
ஹாய் சாரு என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே எமிராவும் உணவகத்துக்கு வந்து சேர்ந்தார்.  அப்பாடா, காலையிலேயே எழும் பழக்கம் உள்ளவர் போலும்.  நிம்மதியாக இருந்தது.   அப்போது நேற்றே கேட்க வேண்டும் என்று நினைத்த அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டேன்.  ”உலகிலேயே லெபனியர்கள்தான் மிகவும் மென்மையாகப் பேசுபவர்கள்; பழகுவதற்கும் இனியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் பார்த்த வரை அது உண்மையாகவும் இருக்கிறது.  இது பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
 
 
”உண்மைதான்.  லெபனியர்களே அதை அடிக்கடி சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.  ஆனால் சற்றே கருப்பு நிறத்தில் இருக்கும் சிரியர்களை (Syrians) அவர்கள் தங்களை விட மட்டமாக நினைக்கிறார்கள்.  அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.  மென்மை, இனிமை என்பதெல்லாம் தங்களை மேலே வைத்துக் கொண்டு வரக் கூடாது.  கீழேயிருந்து வர வேண்டும்.  ’நீங்கள்தான் பெரியவர்கள்.  நான் உங்களை விடச் சிறிய மனிதன்’ என்ற மனோபாவம்தான் உண்மையிலேயே இனிமையும் மென்மையும் கொண்டது.  அப்படி நினைக்கும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா சாரு?”
 
 
எனக்கு உடனே ஆண்டாளின் திருப்பாவை ஞாபகம் வந்தது.  எப்போதும் என் நினைவிலிருந்து நீங்காதிருக்கும் அந்தப் பாடலை தமிழிலேயே பாடிக் காண்பித்தேன்.
 
 
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
 
 
அதில் குறிப்பாக ’வல்லீர்கள் நீங்களே, நானே தானாயிடுக’ என்ற பகுதி.  ’நீங்களே வல்லவர்கள்; நல்லவர்கள்; நான் தான் பலஹீனமானவள்; வாயாடி எல்லாம்’ என்பதை எமிராவிடம் விளக்கினேன்…
 
(சாருநிவேதிதா எழுதும்  இத்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு அனுப்புங்கள்)
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...