மனித வாழ்க்கைக்கு சாகசங்கள் தேவைப்படுகின்றன. பயணம் ஒரு பெரும் சாகசமாக இருந்த காலம் ஒன்று உண்டு. உடனடியாக நம் ஞாபகத்துக்கு வருவது இப்ன் – பதூதாவின் பயணக் குறிப்புகள். இப்போதைய வாகன வசதிகள் இல்லாத பதினான்காம் நூற்றாண்டில் 1,20,000 கிலோமீட்டர்களை தரை வழியாகவும் கடல் வழியாகவும் கடந்தார் அவர். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தன் 21-ஆவது வயதில் மொராக்காவின் தாஞ்ஜியர் நகரை விட்டுக் கிளம்பிய அவர் அதற்குப் பின் 24 ஆண்டுகள் கழித்தே மொராக்கோ திரும்பினார். அவர் பயணித்த நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவின் முதல் சுல்தானிய அரசை ஸ்தாபித்தவர் மம்லுக் குத்புதீன் அய்பக். ஆண்டு 1206. மம்லுக் என்றால் அடிமை. (அய்பக் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தவன்.) குத்புதீனும் அவனுடைய சைன்யமும் வந்த பாதையில்தான் 1333-இல் இந்தியா வந்தார் பதூதா. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த பேரரசன் முகமது பின் துக்ளக்கின் நம்பிக்கைக்கு உரியவராகி அவரது நீதிபதிகளில் ஒருவராகவும் பணியாற்றினார். (அவர் அடிக்கடி கொடுத்த தண்டனை, மது அருந்தினால் 80 சவுக்கடி!) பதூதா தன் பயண அனுபவங்கள் அனைத்தையும் ரிஹ்லா (பயணம்) என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அவரது இந்திய அனுபவங்களில் முக்கியமானது, 1335-ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் – அந்தப் பஞ்சத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பசி பட்டியால் இறந்தனர்; துக்ளக்கின் ஆட்சியை எதிர்த்தவர்களை அவர் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சித்ரவதை செய்து கொன்றார். உயிரோடு எண்ணெய்க் கொப்பரையில் போடுவது; உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டுவது போன்றவை அவருடைய தண்டனைகளில் சில. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சித்ரவதைகள் அனைத்தும் அரச சபையிலேயே அனைவருக்கும் முன்னாலேயே நடந்தன. துக்ளக்கை எதிர்த்த ஒரு அதிகாரி சிறையில் உணவு உண்ண மறுத்தார். உடனே வலுக்கட்டாயமாக அவர் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றச் செய்தார் துக்ளக். மறுநாள் அவர் தலை சீவப்பட்டது.
ஒருமுறை பதூதாவே துக்ளக்கிடம் சிக்கினார். பதூதா ஒரு சூஃபி ஞானியிடம் சிநேகம் கொண்டிருந்தார். அந்த சூஃபியோ துக்ளக்கை மதிப்பவர் அல்ல. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொல்பவர். அவரை சிறைப்பிடித்து வந்த துக்ளக் அவர் தாடியை ஒவ்வொரு முடியாகப் பிடித்து இழுத்து ரத்தக் களரியாக்கச் செய்து கொன்றார். பிறகு சூஃபியின் நண்பர்கள் யார் என்று பார்த்த போது அந்தப் பட்டியலில் இப்ன் பதூதாவின் பெயரும் இருந்தது. பதூதாவுக்குத் தன் தலையும் போகக் போகிறது என்று தோன்றி விட்டது. அப்போது பதூதா ஒன்பது நாட்கள் நீரைத் தவிர வேறு ஆகாரமே உண்ணாமல் முழுநேரமும் குரானையே படித்துக் கொண்டிருந்தார். பிறகு தன் உடைமைகள் அனைத்தையும் துறந்து விட்டு ஒரு பிச்சைக்காரனைப் போல் ஆக்கிக் கொண்டார். அதனால் துக்ளக் அவரைக் கொல்லாமல் பிச்சைக்காரனாகவே வாழ அனுமதித்தார். பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து பதூதாவை அரண்மனைக்கு அழைத்தார் துக்ளக். சிரச்சேதம்தான் என்று நினைத்துக் கொண்டே அரண்மனை சென்றார் பதூதா. பதூதா நினைத்தது போல் துக்ளக் அவரைக் கொல்லவில்லை. மாறாக 15 சீனத்துத் தூதர்களுடன் சீனாவில் ஆட்சி செய்த மங்கோலியப் பேரரசனிடம் தன் தூதராக எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களுடன் அனுப்பினார்.
1341-ஆம் ஆண்டு தில்லியிலிருந்து கிளம்பியது பதூதாவின் பரிவாரம். மங்கோலிய அரசனுக்கு வழங்க துக்ளக் கொடுத்திருந்த பரிசு: 200 அடிமைகள், பாடகர்கள், நாட்டிய மங்கைகள், 15 வேலைக்காரர்கள், நூறு குதிரைகள், மற்றும் ஏராளமான விலையுயர்ந்த துணிகள், ஆபரணங்கள். பயண வழியில் இந்தப் பரிவாரம் இந்து வீரர்களால் மறிக்கப்பட்டு ஒரு சண்டை நடந்தது. சண்டையில் பதூதாவின் குழுவே வென்றாலும் பதூதா அவரது பரிவாரத்தை விட்டுப் பிரிய நேர்ந்தது. பிறகு அவர் வேறொரு இந்துப் போராளிக் குழுவினால் சிறைப் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது அவர் ஒரு பிச்சைக்காரனைப் போல் இருந்தார். போராளிகளிடம் கெஞ்சினார். அவர்கள் அவருடைய சட்டையை வாங்கிக் கொண்டு அவரைப் போக அனுமதித்தனர்.
அதற்குப் பிறகு பதூதா தன் பரிவாரத்தைச் சென்றடைந்தார்.
சீனா கிளம்புவதற்காக கோழிக்கோடு கடற்கரையில் நான்கு கப்பல்கள் தயாராக நின்றன. மூன்றில் துக்ளக்கின் பரிசுப் பொருட்கள். நான்காவது கப்பலில் கடல் கொள்ளையர்களோடு போரிடுவதற்காக நூற்றுக் கணக்கான போர் வீரர்கள். கிளம்பும் தினத்தில் கடலில் அடித்த பெரும் சூறாவளியால் நான்கு கப்பல்களும் கடலில் மூழ்கின. பதூதா அப்போது கடற்கரையில் இருந்ததால் உயிர் தப்பினார். ஆனால் மீண்டும் கையில் ஒரு நாணயம் கூட இல்லாத பிச்சைக்காரனாக நின்றார்.
இப்படிப் போகிறது பதூதாவின் ரிஹ்லா. பயணத்தின் மீதான என் தீராத ஆர்வத்துக்குக் காரணமாக இருந்தது அந்தப் புத்தகம்தான். ஆனால் இப்போது நாம் மேற்கொள்ளும் பயணங்கள் எப்படி இருக்கின்றன? இன்பச் சுற்றுலா என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அது கூட பலருக்கும் துன்பச் சுற்றுலாவாக அமைவதையே பார்க்கிறோம். ஒரு பிரபலமான எழுத்தாளர் அமெரிக்கா சென்றார். ஆறு மாதம் இருந்து விட்டுத் திரும்பினார். ஆர்வத்துடன் அவரது பயண அனுபவங்கள் குறித்துக் கேட்டேன். ”சொல்றதுக்கு ஒன்னுமே இல்லிங்க” என்றார். அவர் சொன்னது புரியவில்லை. பிறகு அவரிடம் ஒவ்வொரு நாளும் எப்படிக் கழியும் என்ற விபரம் கேட்டேன். சொன்னார். எழுத்தாளர் எந்த நண்பர் வீட்டில் தங்கியிருந்தாரோ அந்த நண்பரும் அவர் மனைவியும் அலுவலகம் சென்று விடுவார்கள். இரவு அவர்கள் வரும் வரை எழுத்தாளர் படித்துக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் தொலைக்காட்சி பார்ப்பார். சனி, ஞாயிறுகளில் அவர்கள் எழுத்தாளருக்கு ஊரைச் சுற்றிக் காண்பிப்பார்கள். சினிமா, பார்க், மால் அப்படி இப்படி. அமெரிக்க வாழ்க்கை ரொம்பவும் சலிப்பாகி விட்டதால் கிளம்பி வந்து விட்டேன் என்றார். எழுத்தாளரின் ஆறு மாத அமெரிக்கப் பயணம் இப்படி ஆனது. நான் வசிக்கும் மைலாப்பூரிலிருந்து கூட பல கிழவர்கள், கிழவிகள் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்காவில் தங்கிய நாட்கள் முழுவதும் அவர்களுக்கு நரகம். மேலே சொன்ன கதைதான். பிள்ளைகள் அலுவலகம் போய் விடுவார்கள். பேரன், பேத்தியை இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது. Un-paid baby sitters. அதிக பட்சம் இரண்டே மாதத்தில் தலை தெறிக்க இந்தியா ஓடி வந்து விடுகிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம், நம் ஆட்களால் அந்நிய கலாச்சாரத்தோடு எப்படிச் சேர்வது என்றே தெரிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நியூ ஜெர்ஸி போனார். வயது 70. இரண்டே மாதத்தில் திரும்பி விட்டார். மேலே பார்த்த அதே கதை. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பார்க்கில் நடைப் பயிற்சி செல்லும் போது அங்கே வரும் இன்னும் நாலைந்து மைலாப்பூர் கிழவர்களோடு அமெரிக்காவின் அலுப்பூட்டும் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது வழக்கம். மற்றபடி ஒரு அமெரிக்கரோடு கூட என் நண்பர் பேசியது இல்லை. யாரைத் தெரியும்? யாரோடு பேசுவது? என்ன பேசுவது?
இன்னொரு காரணம், ஐரோப்பாவைப் போல் அமெரிக்காவில் வாகன வசதி கிடையாது. கார் வைத்திருந்தால் மட்டுமே சௌகரியம். ஐரோப்பாவில் இந்தப் பிரச்சினை கிடையாது. கார் வைத்திருப்போர் கூட மெத்ரோவிலோ, பஸ்ஸிலோதான் செல்வார்கள். எப்படியும் மூன்று நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்துக்குள் வந்து விடும். நாமே எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.
கடல் கடந்து போய் நம் நண்பர்களின் இல்லத்தில் தங்கி விட்டு வருவதையெல்லாம் பயணத்திலேயே சேர்த்துக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் Wild: From Lost to Found on the Pacific Crest Trail என்ற ஒரு பயண நூலைப் படித்தேன். பசிஃபிக் மலைப் பாதை என்பதை சுருக்கமாக PCT என்று சொல்கிறார்கள். மொத்தப் பாதையின் நீளம் 4286 கிலோமீட்டர். அமெரிக்காவின் மேற்கில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டி, கீழே மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லையிலிருந்து துவங்கி மேலே அமெரிக்கா – கனடா எல்லை வரை தெற்கு வடக்காக கலிஃபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களின் ஊடாகச் செல்லும் மலைப்பாதையை நடந்தே கடப்பதுதான் இதன் விசேஷம். இந்தப் பாதையின் ஒரு பகுதியை, அதாவது கலிஃபோர்னியாவில் லாஸ் வேகாஸ் பக்கத்தில் உள்ள மொஹாவி (Mojave) பாலைவனத்திலிருந்து கிளம்பி வாஷிங்டன் மாநிலத்தில் கொலம்பியா நதியில் கட்டப்பட்டுள்ள Bridge of the Gods பாலம் வரை 1800 கிலோமீட்டர் தூரத்தை நடந்தார் செரில் என்ற அமெரிக்கப் பெண்மணி. அவருடைய பயண அனுபவங்கள்தான் வைல்ட். 1995-இல் வெளிவந்த இந்த நூல் லட்சக் கணக்கான பிரதிகள் விற்றது. இதன் சிறப்பு என்னவென்றால், இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் பயணம் என்பதை ஓர் உன்னதமான ஆன்மீக அனுபவமாக உணர்ந்தனர்.
தாயின் திடீர் மரணத்துக்குப் பிறகு கொடும் தனிமையில் வீழ்ந்த செரில் ஹெராயினுக்கு அடிமையானார். பெண்ணியவாதியும் தேர்ந்த படிப்பாளியுமான செரிலுக்கு ஹெராயினைப் போலவே செக்ஸும் ஒரு வடிகாலாக அமைய ஆரம்பித்தது. யார் அழைத்தாலும் அவரோடு செக்ஸ் வைத்துக் கொண்டார். அதனால் செரில் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த கணவன் விவாகரத்து செய்தான். ஆனால் ஹெராயினோ, செக்ஸோ செரிலுக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை. துயரமும் தனிமையும் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அப்போதுதான் மலையேற்றத்திலோ நீண்ட தூர நடையிலோ எந்த முன் அனுபவமும் இல்லாவிட்டாலும் 1800 கி.மீ. தூரத்தை நடப்பது என்று முடிவு செய்தார் செரில். பொட்டல் பாலைவனம். இடையில் பனிமலைகள். செங்குத்தான குன்றுகள். ஸ்டவ், துணிமணி, கம்பளி, வேண்டிய அளவு தண்ணீர், உணவு, கூடாரத்துக்கான சாதனங்கள் என்று ஒரு பெரிய மூட்டையை வேறு முதுகில் சுமந்து கொண்டு நடக்க வேண்டும். ஒரே ஆறுதல் என்னவென்றால், நூறு கி.மீட்டர் நடந்தால் ஒரு ஓய்வெடுக்கும் விடுதி இருக்கும். அங்கே தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்; குளிக்கலாம். ஊரிலிருந்து நமக்கு வேண்டியவர்கள் அனுப்பும் கடிதங்களும், பயணத்துக்குத் தேவையான பொருட்களும் அந்த விடுதிகளில் கிடைக்கும். செரில் பயணம் செய்த 1800 கி.மீ. தூரமும் இது போன்று இடையில் உள்ள விடுதிகளில் அவருடன் விவாகரத்து ஆன கணவன் அவருக்குத் தேவையான ஜோடுகளையும் புத்தகங்களையும் மற்ற பொருட்களையும் அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தான்.
கிளம்பிய முதல் நாளே செரில் எடுத்து வந்திருந்த ஸ்டவ் வேலை செய்யவில்லை. நடந்து பழக்கம் இல்லாததால் கால் பாதங்கள் கிழிந்து ரத்தம் கொட்டியது. வழியில் செரில் அவரைப் போன்ற சில பயணிகளையும் சந்திக்கிறார். அதில் ஒருவன், அவன் தினமும் 40 கி.மீ. நடப்பதாகச் சொல்கிறான். செரிலோ பத்து கி.மீ. தான் நடக்கிறார். ஒரு இடத்தில் எட் என்பவனைச் சந்திக்கிறார். அவன், ”இவ்வளவு பெரிய மூட்டை எதற்கு, தேவையில்லையே?” என்று கேட்கிறான். ”இதில் உள்ள அத்தனையுமே அத்தியாவசியம் என்று தோன்றுகிறது; வேண்டுமானால் எதையெல்லாம் கழித்துக் கட்டலாம், சொல்லுங்கள்” என்கிறாள் செரில். மூட்டையைப் பிரிக்கும் போது அதில் இரண்டு டஜன் ஆணுறைகள் இருக்கின்றன. “முதலில் இதைக் குப்பையில் போடு; இவ்வளவு ஆபத்தான பாதையில் இதற்கெல்லாம் அவசியம் வராது” என்கிறான் எட். அப்படியும் அவனுக்குத் தெரியாமல் அந்த ஆணுறைகளில் ஒன்றை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறாள் செரில். (அது அவளுக்கு அந்தப் பயணத்தில் ஒரு முறை உபயோகமாகிறது. எப்படி என்பதை நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க முடியாவிட்டாலும் சினிமாவாவது பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். Wild என்ற பெயரில் சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.)
செரிலின் பயணத்தில் மறக்க முடியாத சில அனுபவங்கள் – எடுத்துச் செல்லும் தண்ணீர் காலியாகி விடும் போது ஏற்படும் தவிப்பு. இவ்வளவு சாகசம் எதுவும் இல்லாமல் நாம் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலாவில் கூட கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை: நாம் எடுத்துச் செல்லும் எடை. நம்முடைய நோக்கம் பயணம் என்றால் நாம் யாருக்கும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது. இது விஷயத்தில் நாம் ராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். நாமே கூட அனாவசியமாக ஒரு பொருளைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது. நான் பயணம் செல்லும் போதெல்லாம் இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான் எடுத்துக் கொண்டு போவேன். ஓட்டலிலேயே துண்டு இருக்கும் என்று துண்டு எடுத்துப் போக மாட்டேன். ஆனால் வாடகை கம்மியாக வாங்கும் ஓட்டல்களில் துண்டு வைக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் வேஷ்டியாலேயே துடைத்துக் கொள்வேன். பொதுவாக கணவர் வெளியூர் செல்லும் போது மனைவிதான் கூடமாட ஒத்தாசையாக பயணத்துக்கான துணிமணிகளை எடுத்து வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் மனைவி அவந்திகாவோ இப்படி ஒருமுறை கூட செய்ததில்லை. இந்த முறை அந்த விஷயம் ஞாபகம் வந்து, “ஏன் நீ அப்படிச் செய்வதில்லை?” என்று கேட்டேன். சட்டென்று அவள் பதில் சொன்னாள்: “நீ ஊருக்குப் போவது எனக்குத் தண்டனை. இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க வேண்டும். பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு வர மாட்டேன் என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்காமல் இங்கே கொண்டு வந்து என்னைக் குடி வைத்து விட்டாய். இப்போது பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எப்போதும் துபாயில் இருக்கிறார்கள். வருஷத்துக்கு அஞ்சு நாள் வருவதற்காக இவ்வளவு பெரிய பங்களா. அந்த பங்களாவில் ஒரு பெண் வேறு தூக்குப் போட்டுக் கொண்டு செத்ததாக வாட்ச்மேன் சொன்னார். (இன்னொரு பக்கத்து வீட்டு வாட்ச்மேன்!) எதிர்வீட்டில் பேசலாம் என்றால் அங்கே மனிதர்கள் இருக்கிறார்களா என்றே தெரிவதில்லை. இன்னொரு பக்கத்து வீடும் பங்களா. வாட்ச்மேனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவரும் இப்படி பேய்க்கதையாகச் சொல்கிறார். இப்படி மனித நடமாட்டமே இல்லாத வனாந்திரமாக இருக்கிறது. நீயும் பாதிநாள் ஊருக்குப் போய் விடுவாய். இதில் உனக்கு ’பேக்’ பண்ணி வேறு தர வேண்டுமா? போய்யா.”
ஆனால் நான் அப்படிக் கேட்டு விட்டதனாலோ என்னவோ, இந்த முறை உனக்கு நான் ’பேக்’ பண்ணித் தருகிறேன் பார் என்று சொல்லி விட்டு எல்லாவற்றையும் அழகாக அடுக்கிக் கொடுத்தாள். நானாக இருந்தால் எல்லாவற்றையும் புளி மூட்டை மாதிரி சுருட்டிச் சுருட்டித் திணிப்பேன்.
ஆனால் அவந்திகா ‘பேக்’ பண்ணிக் கொடுத்ததால் துருக்கியில் இருந்த இரண்டு வாரத்தில் பத்து நாட்கள் நிர்வாணமாகவே படுத்துக் கொள்ள நேர்ந்தது. அதை அடுத்த வாரம் சொல்கிறேன். நாம் செரில் கதைக்கு வருவோம். மலைப்பாதைப் பயணத்தில் எந்த அனுபவமும் இல்லாத செரில் கடைசியில் 94 நாள் நடையில் ’கடவுள் பால’த்தைச் சென்றடைந்து விடுகிறாள். உடலை வதைத்த அந்தக் கொடுமையான பயணத்தினால் அவளுக்கு என்ன கிடைத்தது? மிகப் பெரிய விடுதலை. மனிதக் கூட்டத்தினிடையே இருந்த போது மனநோயாளியாகும் அளவுக்கு அவளைத் தனிமையுணர்வு பீடித்திருந்தது. அந்தத் தனிமையும் மனநோயும் இருந்த இடமே இல்லாமல் மலைப் பயணத்தின் முடிவில் நீங்கி விட்டது. கவனியுங்கள். மனிதக் கூட்டத்தினிடையே தனிமை நோய். மனிதர்களே இல்லாத பாலைவனத்தில் தனிமை நோய் நீங்கி விட்டது. எப்படி இது நிகழ்கிறது என்பதுதான் இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் நோக்கம்.
நான் அமெரிக்கா சென்றால் பசிஃபிக் மலைப் பாதையை (PCT) முழுமையாகக் கடக்க முடியாவிட்டாலும் செரில் போல் ’கடவுளின் பாலம்’ வரையாவது 1800 கி.மீ. தூரத்தை நடந்து விடுவேன். என் அமெரிக்கப் பயணத்தில் ஆகப் பெரிய விருப்பமாக இருப்பது அதுதான். அதேபோல் அமெரிக்காவின் கிழக்குத் திசையிலிருந்து – உதாரணமாக, நியூ ஜெர்ஸியிலிருந்து சான்ஃப்ரான்ஸிஸ்கோ வரை தரை வழியாக காரில் ஒரு நெடும்பயணம் செல்லலாம். ஆனால் இதற்கெல்லாம் தமிழ் நண்பர்கள் ஒத்து வர மாட்டார்கள். இதற்கென்று இருக்கும் பயணக் குழுக்களோடு தொடர்பு கொண்டுதான் போக வேண்டும்.
***
ஒருமுறை ஆல்பெர் கம்யூவிடம் ”கால்பந்தா, நாடகமா? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்ட போது ஒரு நொடி கூட யோசிக்காமல் ”கால்பந்து” என்று சொன்னார். என்னிடம் அப்படி, ”எழுத்தா? பயணமா?” என்று கேட்டால் ”பயணம்” என்றே சொல்வேன். ஏனென்றால், பயணம் நம்மைப் புனிதனாக்குகிறது. இப்போது நம்முடைய பிரதமர் கூட நிறைய பயணம் செய்கிறார். பலரும் அது பற்றிப் பலவாறாகக் கிண்டல் செய்கின்றனர். அவர் மட்டுமல்ல; பல செல்வந்தர்கள் பயணம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். நட்சத்திர ஓட்டலில் தங்கி வியாபாரம் பேசி விட்டு, இரவில் மது அருந்திக் கொண்டாடி விட்டு – அது கூட அந்த ஊர் மது அல்ல; உலகம் பூராவிலும் கிடைக்கும் ஸ்காட்ச் விஸ்கி – மீண்டும் விமானத்தில் ஏறி இந்தியா. மற்றபடி ஒரு பயணத்தினால் கிடைக்கக் கூடிய எந்த அனுபவமும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதிகம் போனால் அந்த ஊர் மியூசியத்துக்குப் போய் வருவார்கள். மட்டும் அல்லாமல் நம் பயணங்கள் ஒவ்வொரு நாட்டின் பெருநகரங்களோடு மட்டுமே முடிவடைந்து விடுகின்றன. உதாரணமாக, ஃப்ரான்ஸ் போனால் அங்கே பாரிஸோடு நம்முடைய பயணம் முடிந்து விடுகிறது. முக்கியமாக ஈஃபிள் டவர் ஏறினோமா, அவ்ளோதான் பாரிஸ். நான் இரண்டு தடவைகளில் பாரிஸில் நான்கு மாதம் இருந்தேன். ஒரே ஒரு முறை ஈஃபிள் டவரை கீழேயிருந்து பார்த்தேன். மேலே ஏறவில்லை.
ஃப்ரான்ஸ் என்றால் நாம் போக வேண்டிய முதல் இடம் கோர்ஸிகா தீவுதான். மத்திய தரைக்கடலில் ஃப்ரான்ஸுக்குத் தென்கிழக்கே இத்தாலியின் மேற்கில் உள்ள ஒரு ஃப்ரெஞ்ச் தீவு கோர்ஸிகா. இத்தாலிக்கு அருகில் உள்ளதால் இத்தாலி, ஃப்ரெஞ்ச் என்ற இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை அங்கே காணலாம். பேசுவது கோர்ஸிகன் மொழி. ஏராளமான குன்றுகளும், தரையைக் குடைந்து குடைந்து செல்லும் கடலும் (பல இடங்களில் முழங்கால் அளவு நீர்!) பூலோக சொர்க்கமோ என வியக்க வைக்கிறது கோர்ஸிகா. எல்லாவற்றையும் விட ஆச்சரியம், குன்றின் விளிம்புகளில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.
இந்த வாரம் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை எடுத்த ஜமீல் ஒரு தற்கால பதூதா. கையில் காசே இல்லாமல் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்கிறார். எப்படி சாத்தியம் என்றால், தான் தங்கும் ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்வது. பிறகு வேறோர் தேசம் செல்வது. இவ்வளவுக்கும் ஜமீல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஊர் சுற்றக் கிளம்பி விட்டார். இப்போது கணவரோடும் குழந்தையோடும் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய இணையதளம்: http://jandewheretheybe.com/travel-journal/
இப்படி ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக் கணக்கான பதூதாக்கள் இப்போதும் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
நமக்குத் தெரியாத தேசத்தில், தெரியாத ஊரில் எப்படி நாம் வேலை செய்ய முடியும்? இதற்காக ஒரு இணைய தளமே இருக்கிறது. http://www.helpx.net/ இதன் மூலம் நாம் ஒரு ஊரைத் தேர்ந்து கொள்ளலாம். கோர்ஸிகாவில் 360 கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் தனித்தனி இணையதளங்கள். மேலே குறிப்பிட்ட ஹெல்ப் எக்ஸ் மூலம் நாம் ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து, அங்கே உள்ள ஒரு இல்லத்தில் விருந்தினராகத் தங்கிக் கொள்ளலாம். தனி அறை, அவர்கள் உண்ணும் உணவு என்று நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு பிரியமோ அவ்வளவு நாள், வாரம், மாதம் தங்கிக் கொள்ளலாம். (அங்கே போய் எனக்கு நோ கார்லிக், நோ ஆனியன் சாம்பாரும் இட்லியும் கேட்டால் அடித்துத் துரத்தி விடுவார்கள். இந்த உணவு விஷயம் பற்றி எழுத ஏராளம் உள்ளது. பிறகு பார்க்கலாம்.) அப்படி நாம் தங்கியதற்கும் உணவுக்கும் காசு தர வேண்டியதில்லை. அவர்களுக்கு இதனால் என்ன லாபம்? காசுக்குப் பதிலாக நாம் வேலை செய்து கொடுக்கலாம். கோர்ஸிகாவில் அநேகமாக தோட்ட வேலைதான். ஒரு நாளில் மூன்று மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை. அவ்வளவுதான். அதற்கு மேல் ஊரையும் தீவையும் சுற்றிப் பார்க்கலாம். கோர்ஸிகாவில் உள்ள போனிஃபோஸியோ என்ற ஊரின் புகைப்படங்கள்:
http://www.slow-chic.com/blog/most-beautiful-villages-of-corsica/
http://www.slow-chic.com/blog/most-beautiful-villages-of-corsica/
***
நாம் எந்த அளவுக்குப் பயணத்தின் அருமை கிடைக்காதவர்களாக இருக்கிறோம் என்றால், நம்முடைய அறுபது வயது ஹீரோக்கள் பதினாறு வயது ஹீரோயின்களோடு டூயட் பாடும் போது பார்க்கிறோம் அல்லவா காட்சிகள், அதெல்லாம் நாமே கண்டு களிக்க வேண்டியவை. ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதுமே எதார்த்தத்தை (Reality) விட்டுவிட்டுக் கனவு எதார்த்தத்தில் (hyper-reality) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு உவமானம் சொல்ல வேண்டுமானால், பஞ்சத்தில் இருப்பவனுக்குப் பஞ்சாமிர்தத்தின் படத்தைக் காண்பிப்பது போல. நம்முடைய புலன்களால் அனுபவிப்பதற்குப் பதிலாக யாரோ சிலரது அனுபவத்தின் நிழல்களை நீண்ட படுதாவில் இருட்டு அரங்கினுள் பாப்கார்னை சுவைத்தபடி பணம் கொடுத்துப் பார்க்கிறோம். நம்மை விட அசடர்கள் வேறு யாரும் உண்டோ?
அப்படி நாம் படுதாவில் பார்த்த இடம் ஒன்றை துருக்கியில் நேரடியாகப் பார்த்தேன். இப்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அப்போதைய உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? உண்டு. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
(வெள்ளிக்கிழமை தோறும் சாரு நிவேதிதா எழுதும் இந்த பயணத் தொடர் வெளியாகும். இது பற்றிய கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதுங்கள்)