???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி – 1- இயக்குநர் ராசி. அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   08 , 2019  03:21:14 IST


Andhimazhai Image

நட்சத்திரங்கள் ஆகாயத்தின்  வியப்புக் குறிகள். அவைகளின் வெளிச்சம் பூமிக்கு எப்போதும் பயன்தரக் கூடியதல்ல. அந்த வெளிச்சத்தில் அமர்ந்து உலகப் பொதுமறை திருக்குறளை வாசிக்கக் கூட இயலாது… ஆனால் அந்த ஜொலிப்பு- எவரையும் வசீகரிக்க வல்லது.,

 

நட்சத்திரங்களின் சங்கமத்தில் நிலா-கவிஞனின் பாடு பொருளாகி விடுகிறது..இரவின் இருட்டுப் போர்வையில் நட்சத்திரங்களின் உலா எவரையும் கனவு காண வைக்கிற வியப்பு..

 

’’நட்சத்திரங்கள்

எப்போதும்

சோற்றுப் பருக்கைகளாக மாறாது…

இது தான் நிஜம்..

இந்த சிந்தனை ஒரு

வண்ணத்துப்பூச்சிக்கு வரக் கூடுமா?

வந்தால்தான் என்ன?

வருவதால் என்ன பிரச்சனை?

 

நட்சத்திரங்கள் தொடுதூரம் தாண்டி-வண்ணத்துப்பூச்சியோ தரைமலர் தீண்டி மகரந்தங்களை ஏந்தி சுதந்திரமாய் பறந்து திரியும் ஒரு வண்ண உயிர்..

 

இரண்டு ஒன்றா எனில் இல்லை..

ஆனால் நட்சத்திர வாழ்வின் மின்னாளுகையில் ஊடாடிச் செல்ல வாழ்க்கை பணித்தது.

அது எவருக்கும் திகழலாம்.

அது போல்தான் சிகப்பு நிறம் கலந்த ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு

பயணமும் நிகழ்ந்தது…

 

வண்ணத்துப்பூச்சி அருகி வரும் இக்காலத்தில் இப்போதுதான் தமிழகம் வண்ணத்துப்பூச்சிக்கு மாநில அந்தஸ்து அளித்துள்ளது..அதற்கு ‘தமிழ் மறவன்’ என்று பெயரும் இட்டுள்ளது..’

 

மறவன் தானா? ஏன் மறத்தி இல்லையா என்று நாம் வாதாடுதல் அவசியம் இல்லை.. ஏனெனில் மறவன்’ என்பது இருபால் ஒருங்கிணைந்த ஒன்றாய் அழைக்கும் குறியீடு எனக் கருதிக் கொள்வோம்..

 

வண்ணத்துப் பூச்சி என்றதும் அதன் வாழ்வியல் குறிப்பைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

 

உலகம் முழுவதும் வண்ணத்துப் பூச்சிகள் 15 குடும்பங்களாகவும் 20 ஆயிரம் இனங்களாகவும் உள்ளன. இந்தியாவில் 10 குடும்பங்களாக 1500 வகை வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கின்றன. தென்னிந்தியாவில் 45 வகை வண்ணத்துப் பூச்சிகளாக பயணிக்கின்றன.

 

இப்படித்தான் எதோ ஒரு சிறிய கிராமத்தில் பிறந்,  நகர நவீன வாழ்வியல் அடைய பறக்கும் பல்லாயிரம் வண்ணத்துப் பூச்சிகளின கதைகள் பதியப் படாமலே காற்றில் கரைகின்றன…

 

அப்படி ஒரு வண்ணத்துப்பூச்சியாகத்தான் இப்போது உங்கள் முன் நான் நின்று இமைகளை அசைக்கிறேன்.

 

ஒரிரு வயதில் தாயைப் பறிகொடுத்து-நெசவாளர் குடும்பத்தில் வயோதிகத் தந்தைக்குப் பிறந்து, தட்டுத் தடுமாறி ஆரம்ப பள்ளியைக் கடந்து-வரப்புகளில் கால் பதித்து மூன்று மைல் தூரம் கடந்து கருங்காலி  குப்பம் ராமு ரெட்டியார் நடு நிலைப் பள்ளியில் இலவச மதிய உணவுக்கு தட்டு நீட்டி பசியாறி படித்து மீண்டும் இல்லம் திரும்பி-வாழ்ந்த ஒரு சராசரி பொருளாதார நசிவு கண்ட தென்னிந்திய  பிள்ளைகளின் வரலாறு போல்தான் எனது சிறு பிராயம் நகர்ந்தது..

 

அறுபதுகளைத் தொட்டு தழுவிய அக்காலத்தில், சமத்துவமறியாத வரப்புகளடர்ந்த கிராமிய  வாழ்க்கையின் பொழுதுகளில் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தான்..இரவில் நட்சத்திரங்கள்  வசீகரமாக ஓளிர்ந்தன..

 

இந்த காலகட்டத்தில் பெரியார் சிந்தனையும், கம்யூனிசம் கலந்த சோவியத் பாதையின் வீச்சும்  பட்டி தொட்டியெல்லாம் பயணித்து -பசிக் கொடுமையில் தத்தளித்த பிள்ளைகளைப் பற்றிக் கொண்டு படு வேகமாய் பயணம் செய்தது. அதில் நானும் தப்பிக்கவில்லை காரணம்- எனது வாழ்வின் நியதி முற்றிலும் மாற்றிப் போட்டிருந்ததுதான்..

 

எண்பது வீடுகள் அடங்கிய நெசவாளர்கள் வாழும் பகுதி எனது கிராமம். அதிகாலை முதல் இரவு பத்துமணி வரை நெசவு ஓசை… ’லடக்..லடக்’ என்று கேட்கும்…எவரும் ஒன்பதாவது வகுப்பைத் தாண்ட இயலாது.. பிள்ளைகளைத் தறிக்குழியில் போட்டு அமிழ்த்தி விடு வார்கள்..

 

வேறு என்ன செய்வது.. ஒரு குடும்பத்தில் நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தால் ஓரளவு கூழோ, கஞ்சியோ குடித்து வாழ முடியும்.

 

இதிலிருந்து ஓரிரு குடும்பத்தினர் மட்டும் தப்பித்து, வெளியூரில் நூல்  வாங்கி வந்து நெசவாளர்களுக்கு வேலை கொடுத்து அதில் ஏஜெண்ட், தொழிலாளி போல் சுக போக வாழ்க்கை வாழ முயன்றது எப்படி என்று இன்று வரை எனக்கு புரியவில்லை.

 

இப்படி வியாபாரம் செய்கிற பெருஞ் சிந்தனையாளர் ஒருவர் என் படிப்புக்கும் வேட்டு வைத்தார். எட்டாவது வகுப்பை தாண்ட விடாமல் தடுத்தார்.

 

ஏற்கனவே எனது தாயார் இல்லாமல் நான் தான் வீட்டில் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, கோலம் போடுவது...

 

எனவே என் சக வயதில் உள்ள பெண் பிள்ளைகள் எல்லாம் என்னை பாவாடை என்று கேலி செய்வதில் இருந்து தப்ப முடியவில்லை.

 

இந்த ‘பாவாடை’ என்ற கேலி சொல்-நான் மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் படிக்கும்போதும் தொற்றிக் கொண்டது.. காரணம் பேண்ட் போட்டுக் கொண்டு செல்ல வசதியில்லாததால் வேட்டிக் கட்டிக் கொண்டு போவேன்.  கிராமத்தான் அல்லவா?  கண்ணம் ஒடுங்கி பார்க்க கேலியாகத்தான் இருந்தேன் என நினைக்கிறேன். அதனால்தான் ’பாவாடை’ என கேலி செய்வார்கள்.

 

இந்த கேலியும்  கிண்டலும்  எனக்குள் ஒரு வெறியை ஏற்படுத்தியது. எப்படியாவது இவர்கள் என்னை வியந்து பார்க்க வேண்டும்  என்று துடித்தேன்.

 

அதற்காகவே படிப்பதும், எழுதுவதும், மேடைகளில் பேசுவதுமான முயற்சியில்  ஈடுபட்டேன். அதற்கு என்ன செய்வது?

 

ராமாயணம், மகாபாரதம் , சங்கத் தமிழ், பழம் பெருமை பேசுகிற கால கட்டத்தை உணர்ந்து  இதை முதலில் மறுதலித்து வேறு வழி காண வேண்டுமென்று முடிவெடுத்தேன். அதற்கு மூலமாய் அமைந்தார்கள் பெரியார், அம்பேத்கார், காரல் மார்க்ஸ் அண்ணா, வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்….

 

அடித்து துவைத்து துவம்சம் செய்து முகமுன் பேசுவதைத் தவிர்த்து வாழ்வின் மையமான சமத்துவம் பேசி கல்லூரியில் 28க்கும் மேலான விருதகள் வாங்கியபோதான் ‘பாவாடை’ என்ற கேலிச் சொல் மறைந்து என் முகம் பார்க்கத் துவங்கியது கல்லூரி உலகம்.

 

தாழ்ந்த நிலையிலுள்ள எந்த ஒரு மனிதனுக்கும் நடக்கும் நிகழ்வுதான்.

 

’’வாழ்ந்தால் மரம்  போல் வாழ்
வீழ்ந்தால் மழை போல் வீழ்’’ என்று – இப்போது எழுதுகிற என் சிந்தனைக்கு முன்பு- பள்ளிக் காலத்தில் நான் வியந்த  தமிழ்க்கவி நட்சத்திரம் உவமைக்  கவிஞர் சுரதா..

சுரதா என்றால்-சுப்புரத்தின தாசன்..இவர் தாசன் ஆவதற்கு சுப்புரத்தினம் யார் என்றால் அவர்தான் பாரதிதாசன் – பாரதிதாசனுக்கு கனக சபை சுப்புரத்தினம் என்றுதான் பெயர். அதனால் சுப்புரத்தினத்திற்கு தாசன் ஆகி-முதல் எழுத்துகளைச் சேர்த்து சுரதா என்றழைக்கப்பட்டார். சொந்த பெயர் இராச கோபாலன்.

 

அந்த சுரதா எனது பள்ளி நாட்களில் வேட்ட வலம் வந்து சேர்ந்தார். மீசையில்லாமல் மொழு மொழு வென்று- தோளில் பூ போட்ட சால்வை போர்த்திக் கொண்டு வந்தார்.

 

அவரிடம் நான் என் கவிதைக்கு பரிசு வாங்கினேன். கண்ணாடி போட்ட கருவிழிக்குள் எப்போதும் நையாண்டியும், நக்கலும் குதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

 

நான் கண்ணதாசன், கலைஞர் மு. கருணாநிதி இவர்களின் கவிதைகளை வாசித்துவிட்டு  எவ்வாறு கவிதை  எழுதுவது என எனக்குள் ஒரு தீர்மானம்  செய்து கொண்டு வேட்டவலம் பள்ளிக்கு அருகே உள்ள மணலில் அமர்ந்து எழுதியது ‘ இந்திய சோவியத் நட்புறவுப் பாலம்’ என்ற கவிதை.

 

அதை  வாசித்துக்  காட்டி சுரதாவிடம் பரிசு பெற்றபோது வண்ணத்துப்பூச்சி கொஞ்சம் நிறம் மாறி பறக்க எத்தனித்தது.

பரிசைப் பெற்ற கையோடு ’’யார் நீ’’ என்று கேட்டார்.

நான் ’அழகப்பன்’- என்றேன்.

‘அட… செட்டிப் பயலா-அதன் கவிதை வந்து முட்டுது’’ என்றார்.

எனக்கு சரியான கோபம்… சுரதா எதற்கு சாதிப் பெயரை எல்லாம் இழுக்கிறார் என்று இரத்தம் கொதித்தது.

 

பின்னாளில் பழகிப் பார்த்தபோது தான் அறிந்து கொண்டேன். சுரதா அப்பழுக்கற்ற குழந்தை-தஞ்சாவூர் அருகே பழையனூரில் திருவேங்கடம், செண்பகம் பெற்றோருக்குப் பிறந்த (1921 நவம்பர் 23) பகுத்தறிவுக் குழந்தை.

 

அவர் எல்லோரிடமும் பார்த்ததும் பேர் கேட்பார், சாதி கேட்பார், ஊர் கேட்பார் அந்தந்தப் பகுதி, சாதிக்கு உண்டான குணங்களை வைத்து நையாண்டி செய்வார். ஆனால் அதில் எப்போதும்  வேற்றுமை பார்க்காத பெருங்குணம் இருக்கும்.

 

 நான் பல சமயம் அவருடன் பயணித்திருக்கிறேன். நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமானது. தன் கைக்காசு போட்டு முதலில் எதையும்  செய்யமாட்டார். கூட வருபவர்களிடம் ‘இது வேண்டும்’ என்று கை நீட்டுவார். அது சமயத்தில் ‘வேர்க் கடலை’யாகக்கூட இருக்கும்.

 

ஒரு முறை அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன் – ‘அய்யா எதற்கு ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற கவிதை நூலை எழுதினீர்கள். அதில் தேவையில்லாமல் சரோஜா தேவி போன்ற நடிகைகளைப் பற்றியெல்லாம்  விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள்-எம்.ஜி.ஆர் கூட கோபித்துக் கொண்டார் என்று கேள்விப்பட்டேன் ’என்று கேட்டேன்.

 

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ’’காத்துகூட பலமா அடிச்சாதான்யா மதிக்கிறான். பேசாம இருந்தா மூக்குக்கு உள்ள போறதுதானேன்னு அலட்சியமா நினைக்கிறான்’’

 

அது எதற்கான பதில் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை . ஆனால் சுரதாவிடம் தமிழ் ஆளுமையும், தமிழ் கர்வமும் (தன்னம்பிக்கை) அதிகமாக இருந்தது. எவரையும் துச்சமென தூக்கிப் போடுவதில் அஞ்சா நெஞ்சர்.

 

வீட்டுக்கு வந்து ஒரு கவிஞர் தன் கவிதை நூலுக்கு அணிந்துரை கேட்டார். அதற்கு பணம் கேட்டார் சுரதா. அவர் ஆச்சரியமாக ‘’இதுக்குப் பணமா?’’ என்று வியந்து கேட்டார்.

 

உடனே,’ நீ என்ன முதலியாரா? இப்படி வாயப் பிளக்கறே’ என்றார். அவர் ஆமாம் என்றதும் சிரித்தபடியே-

 

’’ உன்ன யாரு கவிதையை எழுதச் சொன்னது? அப்படியே எழுதினா நூலா போட்டு மக்களுக்குத் தர வேண்டியதுதானே... ஏன் சுரதாவைத் தேடறே…/ ஏன்னா சுரதா எழுதுனா உனக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாலு புத்தகம் விற்கும்… அதானே ..நான் நேரம் செலவழிச்சு உனக்கு படிச்சி, என் திறமைய கொட்டி அணிந்துரை எழுதினா அதுக்கு பணம் தரமாட்டே. உழவன் உழுதுட்டு வெறும் ஏர்கலப்பைய தோளில் தூக்கிட்டு போகணும்கிற…தோ பார் தம்பி. நான் எழுத்தாளன். எனக்கு எழுதுறது படிக்கிறது தொழில். என் தொழில்ல நீ கை வச்சா.. என் உழைப்பு கேட்ட ஊதியம் கொடு.. இதுல என்ன தப்பு.? கவிஞன், எழுத்தாளன் பிறகு எப்படி வாழறதாம்’’ என்று சொல்லி கறாராக பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதிக் கொடுத்தார்.

 

அது அவரின் நேர்மையான குணம். பின்னால் பேசுகிற கவிஞர் அவர் அல்ல. சுரதா எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

 

‘’டேய்..தூங்கும்போது கூட காலாட்டிகிட்டே தூங்கணும். இல்லேன்னா செத்துட்டான்னு தூக்கில் போட்டுடுவாங்க,’’ என்று விழிப்புடன் இருக்க அறிவுறுத்துவார்.

 

தமிழ் கவிதைகளை ஆற்றங்கரை ஓரம், படகில் ரெயிலில், இரவில் என வித்தியாசமாக எங்கு வேண்டுமானாலும் கவியரங்கம் நடத்தலாம் என்று செய்து காட்டியவர் சுரதா.

 

எனது பிறந்த நாளன்று அவர் வீட்டில் ஒரு மரக் கன்றை கொடுத்து நடு ஆணையிட்டார். குடும்பத்தோடு மரம் நடுகிற பழக்கத்தை பிறந்த நாட்களில் கொண்டாடப் பழக வேண்டும். ‘கேக் வெட்டும்  கேவலம் தகாது’ என்று நெற்றியில் அறைந்ததுபோல சொன்னார்.

 

’முகத்தில் முகம் பார்க்கலாம்’

அமுதும் தேனும் எதற்கு ‘

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே’

என்ற திரைப்பட பாடல்கள் சுரதாவின் அடையாளம்.

பாரதிதாசனின் புரட்சிக் கவி நாடகத்தில் அமைச்சராக சுரதா நடித்ததும், அதை என்.எஸ்.கே , பெரியார் பார்த்து ரசித்ததும் எத்தனை பேருக்கு தெரியும்.?

 

‘தேன்மழை, சுவரும் சுண்ணாம்பும், அமுதும் தேனும், எச்சில் இரவு, சாவின் முத்தம், பட்டத்தரசி, பாவேந்தரின் கால மோகம், தமிழ் சொல்லியக்கம் ‘ என்ற  சுரதாவின்  படைப்புகள் இப்போது  நாட்டுடைமை.

 

இப்போது சுரதா அசோக் பில்லர் சென்னை-அருகே ஒரு திருப்பு முனையில் புன்னகையுடன் சிலையாகக் காட்சியளிக்கிறார்.

 

அவரது நகைச்சுவை சொற்கள் காற்றில் பறந்து கொண்டிருப்பதை ஒரு வண்ணத்துப்பூச்சி நினைவு கூர்கிறது.

 

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...