சில பத்து ஆண்டுகளாக நீடித்துவரும் பொருளாதார நெருக்கடியால், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது இதைச் சமாளிப்பதற்காக அரசாங்கங்கள் சில கட்டைகளைப் போடுவது வழக்கமாகிவிட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அதிப்படியான ஊதியம் வழங்கப்படுவதாகக் கூற, அது அவருக்கு கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. மற்ற சில நடவடிக்கைகளும் அவருக்கு எதிராக அரசு ஊழியர்கள் வாக்களிக்கும்படி ஆனது.
ஊதியத்துக்கான பிரச்னை அப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் இப்போது மீண்டும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்றதுதான் விவகாரத்தின் மையம்.
அதென்ன பழைய ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம்?
அரசுப் பணியாளராகச் சேரும் அனைவருக்கும், அவர்களின் பணிக்காலத்தில் 33 ஆண்டுகளை நிறைவுசெய்திருந்தால், அவர்கள் வாங்கிய கடைசி ஊதியத்தில் சரிபாதித் தொகையானது, ஓய்வுபெற்ற பின் மாதம்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். இது, வளர்ந்த நாடுகளில் உள்ள - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் போன்ற ஒரு முன்மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
நீண்டகாலமாக இருந்துவரும் இந்தத் திட்டத்தை மாற்றி, 2003 முதல் கடந்த காங்கிரஸ் தலைமையிலான மைய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அடுத்து வந்த பா.ஜ.க. அரசாங்கமும் அதை அப்படியே பின்பற்றுகிறது.
இந்திய அளவில் 2004 முதலாகவும் தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதலாகவும் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதாவது, 2004 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசுப் பணியாளராக ஆனவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை.
புதிய திட்டப்படி, அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே அளவு தொகையை மாநில அரசும் செலுத்தி, அவர்கள் ஓய்வுபெற்ற பின், பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்வதாக தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அந்தக் கட்சியின் 505 தேர்தல் வாக்குறுதிகளில், இது 309ஆவதாக இடம்பெற்றிருந்தது. அதற்கு நேர்மாறாக, நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மூன்று நாள்களாக மாநில அளவில் அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பிரெட்ரிக் ஏங்கல்சிடம் பேசியதற்கு, ” பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் போன தி.மு.க.வுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கியமாக இருந்தது. அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டங்களை ஏவி சிறையில் அடைத்த ஜெயலலிதா அவர்கள், பின்னர் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதையடுத்து அவரே, 2011 தேர்தல் பிரச்சாரத்தில் சென்னையில் பேசும்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவது பற்றி பரிசீலனை செய்வதாகக் கூறினார். இப்போது திமுகவின் வாக்குறுதிக்கு மாறாகப் பேசியுள்ளார், அமைச்சர். உண்மை அதுவல்ல, புதிய ஓய்வூதியத் திட்டத்தால்தான் அரசுக்கும்கூட இழப்பு.” என்றார் ஏங்கல்ஸ்.
கடந்த ஜனவரி நிலவரப்படி, தமிழகத்தில் 3 இலட்சத்து 14 ஆயிரத்து 945 அரசுப் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 7 இலட்சத்து 15 ஆயிரத்து 761 பேர் ஓய்வூதியமும் (ஊழியர் இறந்தபின்னர் அவர்களின் குடும்பத்தார்) குடும்ப ஓய்வூதியமும் பெறுகின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 01-04-2003 அன்றும் அதன்பின்னரும் பணியில் சேர்ந்த 6 இலட்சத்து 2ஆயிரத்து 377 பேர் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளனர்.
இவர்களில் 29,968 பேர் விலகியதால், 24,719 பேருக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்கிறது, நிதித் துறையின் ஆவணம்.
கடந்த ஜனவரி 31 அன்று நிலவரப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் ரூ. 50, 264. 72 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. ” நிதியமைச்சர் சுட்டிக்காட்டுவதைப் போல, இராஜஸ்தான் மாநிலத்தின் புதிய ஓ. திட்ட நிதி ஓய்வூதிய ஆணையத்திடம் தரப்பட்டுள்ளதால் அது சிக்கலில் இல்லை; சட்டம் எதுவாக இருந்தாலும் எத்தனையோ இலட்சம் பேரின் பணத்தை வாங்கிக்கொண்டு அதை திரும்பத் தரமாட்டேன் எனச் சொல்லமுடியுமா? அப்படிச் சொன்னாலும் அது நியாயமா இல்லையா என்றுதானே பார்க்கமுடியும்.” எனக் கேள்விகளை வைக்கிறார்கள், அரசு ஊழியர்கள் தரப்பில்.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர்தான் வழங்கப்பட வேண்டும்; அதுவரை அவருக்கான ஓய்வூதியத்துக்கு அரசு செலவிட வேண்டியதில்லை. ”இன்றைக்கே புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து என முடிவெடுத்தால், இதுவரை திரண்டுள்ள தொகையில் பாதியான 25 ஆயிரம் கோடி அரசுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்களின் பங்களிப்பு அவர்களுக்குச் சென்றுவிடும்.” என்கின்றனர் அரசு ஊழியர்கள்.
”பழைய திட்டத்தால் ஒவ்வொருவருக்கும் அரசு 2 இலட்சம் செலவிடுகிறது; புதிய திட்டத்தால் அதுவே 50 ஆயிரம் செலவிட்டால் போதும்.” என அமைச்சர் கூறியதை இவர்கள் அப்பட்டமான தவறு என இவர்கள் வாதிடுகின்றனர்.
பழைய ஓய்வூதியப்படி, 33 ஆண்டுகள் பணிநிறைவு செய்தால்தான் முழு ஓய்வூதியம்; அப்படியே பெறும் ஒருவர் சராசரியாக 10 ஆண்டுகள் உயிர்வாழ்கிறார் எனக் கணக்குவைத்தால், அரசாங்கத்துக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் ஆகும்; புதிய திட்டம் என்றால், மாதம்தோறும் செலுத்தவேண்டிய 10 சதவீதம் 30 ஆண்டுகளுக்கு எனக் கொண்டால், அதற்காக சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவாகும் என புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள், புதிய ஓய்வூதியத் திட்ட எதிர்ப்பியக்கத்தினர்.
வெற்று அறிக்கைகளாக அல்லாமல், இந்த விவரங்களை வைத்து விவாதிக்கத் தயாரா என அவர்கள் சவால்விடவும் செய்கின்றனர்.
சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியபோது, முதலமைச்சரும் அவையில் இருந்தார். ஆனால் அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
ஆனால், இந்த விவகாரம் குறித்து ஆய்வுசெய்ய 2016இல் அமைக்கப்பட்ட குழு, 2018 நவம்பர் 27 அன்றே தன் அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டது. அதைப் பற்றி விரைவில் பரிசீலிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறியிருப்பது, இந்த விவகாரத்தில் ஓர் இணக்கப்பாடான புள்ளியாகக் கருதப்படுகிறது.
- இர. இரா. தமிழ்க்கனல்