Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 31 , 2021 10:20:45 IST
கவிஞர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முக ஆளுமைக் கொண்டவர் தமயந்தி. யாவரும் பதிப்பகம் வெளியிடும் ‘நிழலிரவு’ அவருடைய முதல் நாவலாகும்.
“கிறிஸ்துவமும் கம்யூனிசமும் நடைமுறைக்கு வருகிற போது எப்படிப் பொய்த்துப் போகின்றன என்பது தான் நிழலிரவு நாவலில் மையம்.”என்கிறார் தமயந்தி.
நிதானமாக நாவலின் கதைக்களத்தை சொல்ல ஆரம்பித்தார், “கிறிஸ்துவமும் கம்யூனிசமும் ஒரு சிறந்த சித்தாந்தமாகவும், மனிதர்களின் சிந்தனையியலை மாற்றக் கூடியதாக இருந்தாலும், அவை பொய்த்துப் போவதற்குக் காரணம். யதார்த்தத்தில் அவை சமரசத்திற்கு உள்ளாகின்றன என்பது தான்.
நிறுவனமாக்கப்பட்ட அரசியல் மற்றும் மதம் ஏன் தோற்றுப் போகிறது? கிறிஸ்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையே பெண்களுடைய வாழ்க்கை எங்கு ஊசலாடுகிறது? நிறுவனமாக்கப்பட்ட அரசியல் மற்றும் மதங்களுக்கு இடையே, நிறுவனமாக்கப்பட்ட வாழ்வு எப்படி பாதிக்கப்படுகிறது? குறிப்பாக ஒடுக்கப்பட்டோருக்கு, பெண்களுக்கு. இவற்றையெல்லாம் பேசுவதுதான் நிழலிரவு நாவல். கிட்டத்தட்ட ஒரு செமி ஆட்டோ பையோகிராபி நாவல் தான் நிழலிரவு.
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு மதத்திற்குள் தான் இருக்கிறோம். அரசு ஆவணங்களில் கூட நம்மால் நாத்திகர் என்று போடக் கூடிய நிலைமை இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அரசு ஆவணத்தின் படி எதாவது ஒரு மதத்திற்குள்ளாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. மதம் நேரடியாக ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களிலிருந்து விடுபட்டாலும் கூட, மறைமுகமாக ஏற்படுத்தும் தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான உணர்வை இந்த நாவல் ஏற்படுத்தினால் சந்தோஷம்.” என்றார்.