![]() |
நெஞ்சுக்கு நீதி: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 12:52:47 IST
![]() பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட தலித் சிறுமிகளின் நீதிக்காகப் போராடும் போலீஸ் அதிகாரி ஒருவரின் கதையே 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம்.
தமிழகத்தின் மேற்கு மாவட்ட கிராம் ஒன்றில் தலித் சிறுமிகள் மூவர் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டிருக்கிறது. ஒரு சிறுமி காணாமல் போகிறார். இந்த சமயத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் (விஜயராகவன்) அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்க, காவல் துறையினராலேயே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால், சந்தேகம் அதிகரிக்க அவர் விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார். அதில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகிறது.
அந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்குடையவர்களாகவும், காவல் துறை அதிகாரிகளாகவும் இருப்பதால், உதயநிதி எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? அந்த சிறுமிகள் ஏன் கொல்லப்பட்டனர்? காணாமல் போன சிறுமியை அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்தியில் வெளிவந்த 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் 'நெஞ்சுக்கு நீதி' என்றாலும், கதை நிகழும் இடம், கதாபாத்திர தேர்வு, வசனம் என அனைத்திலும் முழுமையான ஒரு தமிழ் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக வரும் உதயநிதி ஸ்டாலினின் உடல் மொழியும், அவர் பேசும் வசனங்களும் திரையரங்கில் கைத்தட்டலை அள்ளுகிறது. அவருடைய சினிமா மற்றும் அரசியல் கேரியரில் நிச்சயம் இந்த படத்திற்குத் தனி இடம் உண்டு. படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வேகவேகமாக நடந்து சென்று பேசும் காட்சிகளில் அசாத்தியமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஷிவானி ராஜசேகர், ஆரி அர்ஜுனன் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இளவரசு, மயில் சாமி, தன்யா ரவிச்சந்திரன் நடிப்பும் ஓகே தான்.
படத்திற்கு திபு நினன் தாமஸ் இசை கைகொடுத்த அளவிற்கு இரண்டு பாடல்களும் சோபிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பொள்ளாச்சியைப் பச்சை பசேலென்று படம்பிடித்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு பார்வையாளர்களை சோதித்து பார்க்கிறது.
படம் மிக முக்கியமான பிரச்சினையைப் பேசியிருந்தாலும், அழுத்தமாக சொல்லப்படவில்லை. ஓரிரு இடங்களில் காமெடியும், வசனமும் காத்திரமாக இருந்தாலும் படம் முழுவதுமே தட்டையாக செல்கிறது.
'ஆர்டிகிள் 15' போன்ற திரைப்படம் சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் உருவாகி உத்தர பிரதேசத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், தலைகீழாக நடந்திருந்திருக்கிறது. எப்படியிருப்பினும் படம் பேசும் கதை களத்திற்காக ‘நெஞ்சுக்கு நீதி’ கொண்டாட வேண்டிய திரைப்படமே.
|
|