அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 34 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   10 , 2020  18:39:09 IST


Andhimazhai Image
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
 
- இந்த ஆத்திச்சூடி வரிகள் என் மனதில் எப்போதும் விரியும். அதன் விளைவு தான் நான் எழுதிய மழைத்தேன், கும்மிருட்டு, உயிர்க்காற்று , தாய்நிலம் என்ற இயற்கை சூழ் கவிதை நூல்களில் முதலில் இந்த ஆத்திச்சூடியை கொஞ்சம் எனக்கானதாக்கி எழுதியிருப்பேன்.
 
ஏன் இதை சொல்கிறேன் என்றால் இந்த ஆத்திச்சூடியை உலகிற்கு தந்த ஒளவை எப்போதும் சுவைபட அறிமுகம் செய்தது, ஒளவை நடராஜன் அவர்கள்.
 
"ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்" என்று பள்ளிக் காலங்களில் வாயாரப் பாடியிருக்கிறேன்.
 
ஆனால் அதோடு சம்மந்தப்பட்ட ஒளவை நடராஜனை சந்திப்பேன், பல ஆண்டுகள் அவரோடு பயணிப்பேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் நடந்தது.
 
நான் சென்னை மாநிலக் கல்லூரியில் எண்பதுகளைத் தொடுமுன் ஆண்டுகளில் அவரை கலைவாணர் அரங்கில், அவரின் சொற்பொழிவு கேட்டு, பின் அவரோடு பயணித்த காலம்.
 
பல மேடைகளில் அவரோடு பேசியுள்ளேன். வெளியூர்களுக்கு பயணம் சென்றுள்ளேன். மிகவும் அன்பானவர். ஏது தீங்கற்ற பேச்சும் பயன்படுத்தாத சொல்லாளர். பல சமயம் அவரின் மனைவி தாரா (மருத்துவர்) கைகளால் உணவருந்தியும் உள்ளேன்.
 
அவரது மகன்களை அறிவேன். கண்ணன், அருள், பரதன். இதில் சமீபத்தில் அருளை தமிழக செயலகத்தில் சந்தித்தேன். தமிழக செயலகத்தில் மொழிபெயர்ப்பு வளர்ச்சித்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரைப் பற்றிச் சொல்கிறபோதே உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருமான விஜயராகவன் நினைவும் வருகிறது. தமிழ் பால் நேசம் கொண்டு செயலாற்றுகிற ஆற்றல்மிக்கவர்கள். இவர் மாநிலக் கல்லூரி மாணவர் என்பது கூடுதல் மகிழ்வு.
 
ஒளவை அருள் நடராஜனுக்கு வருகிறேன். என்னை வரவேற்று பேசி, அமர வைத்து சூழலை மிகவும் இனிமையாக்கினார். துறைசார்ந்த பணியாளர்களை அறிமுகம் செய்து, இடுகின்ற கட்டளை வலிக்காது வெற்றிபெறும் வார்த்தைகளை கையாண்டது அவரின் தந்தையை அப்படியே நினைவுபடுத்தியது.
 
தமிழக செயலகத்தில் ஐ.ஏ.எஸ் படிக்காமல் அரசு செயலாளராக பணியாற்றிய ஒரே கல்வியாளர் ஒளவை நடராஜன். அதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் செய்தார். எம்.ஜி.ஆருக்கு ஒளவை மேல் அதீதப்பற்று.
 
ஒளவை நடராஜன் என்றால் இப்போது பலர் அறிய வாய்ப்பில்லை. எண்பதுகளில் அவர்தான் நட்சத்திர இலக்கிய பேச்சாளர். சாலமன் பாப்பையா, லியோனி, சுகிசிவம், ஞானசம்பந்தன் இவர்களுக்கெல்லாம் முன்பு உலகின் ஒட்டுமொத்த கவனிக்கத்தக்க அழகியல் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் சாட்சாத் ஒளவை நடராஜன் தான். இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன். இதனால் சத்யசீலன், த. ராமலிங்கம், சுமதி, பாரதிபாஸ்கர், ராஜா, மோகனசுந்தரம், மணிகண்டன் கோபித்துக் கொண்டாலும் சரி.
 
மேடை ஏறிப் பேசுகிறபோது சொற்களை கையாளும் விதமே அழகியலாக இருக்கும். என்னை எடுத்து பயன்படுத்து என்று மெல்லிய அழகியல் சொற்கள் தவம் கிடக்கும்.
 
அவரின் பேச்சில் நான் அடிக்கடி பிறரிடம் பயன்படுத்துவது...
 
"லட்டும் லட்டும் மோதிக் கொண்டால்
பூந்தியாக மாறும்".
 
அப்படிதான் மேடையில் பட்டிமன்றத்தில் பேசுகிறவர்கள் அனல் காக்கும் உரை இருந்தது என்று நடுநிலைமையுடன் இப்படிக் குறிப்பிடுவார். இது அவர் பயன்படுத்தும் சொற்கள். திருப்பதியில் நான் லட்டு வாங்க வரிசையில் நிற்கும்போதும் ஒளவை நடராஜன் அவர்கள் பயன்படுத்துகிற இந்த லட்டு மோதல் காட்சி நினைவுக்கு வரும்.
 
தென் மாவட்டங்களில் இலக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும்போது தி.நகர் கே.பி ட்ராவல்ஸில் ஏறிச் செல்வோம். எட்டு மணிக்கு ஒரு பஸ், பிறகு அரைமணி நேரம் கழித்து ஒரு பஸ். விஐபி-களும், அமைதி பயண நேசர்களும் கே.பி-யை விரும்புவர். சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்துசேர்ந்துவிடும், இரைச்சல் இருக்காது.
 
பயணத்தை இனிமையாக ஆக்கிக்கொள்வதில் அசாத்திய திறன்படைத்தவர். ஒரு இளநீர், மோர், சைவ உணவு, அழகான அறை, சந்திக்கும் நபர்கள், அதற்குரிய நேரக் கணிப்பு என்று திட்டமிட்டு பயணத்தை இலகுவாக ஆக்கிக்கொள்வார்.
 
அப்படி அவரோடு மதுரைக்கும், திருக்கோவிலூர் கபிலர் விழாவுக்கு, திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கும், பட்டிமன்ற பேச்சுக்களின் போதும் உடன் பேசும் உரையாளனாகச் சென்றுள்ளேன்.
 
ஆச்சரியம் என்னவென்றால் நான் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையில் இளங்கலை பயில்கிறேன். நான் புதுமுக வகுப்பு படித்த அதே திருவண்ணாமலை கல்லூரிக்கு ஒளவை நடராஜன் அவர்களோடு நான் பேச்சாளனாக செல்கிறேன்.
 
அப்போது அவர் தமிழக செயலகத்தில் அரசுத்துறை செயலாளராக பணியாற்றுகிறார். அவர் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் பேச, நான் அதே மேடையில் கல்லூரி மாணவர் மன்றத்தை துவக்கி வைத்துப் பேசினேன். அப்போது என்னை வானொலிக் கவிஞர் என்று அழைத்தனர். காரணம் அப்போது நிறைய வானொலிகளில் கவிதைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.
 
கம்பன் விழாவிலும் பேசுவேன், கவியரங்கம், பட்டிமன்றம் என்று மாநிலமெங்கும் சுற்றிக்கொண்டிருப்பேன். என்ன விசேஷம், கல்லூரிப் பேச்சில் என்றால் என்னுடன் படித்த நண்பன் மோகன் கல்லூரி மாணவர் தலைவர், பேராசிரியர்கள், முதல்வர் உட்பட நான்தான் என்றறிந்து மகிழ்ந்தனர். இந்த வாய்ப்புக்குக் காரணம் வேறு யாருமில்லை. ஒளவை நடராஜன் தான்.
 
என்னை எப்போதும் கோபக்கார இளைஞன் என்பார். இன்னும் சாதிக்கலாம் முனைப்பாக இரு என்று வைரமுத்துவை சுட்டிக்காட்டுவார்.
 
வைரமுத்து, பொன்மணி திருமணப் பின்னணியில் அவரின் வாழ்த்தும், வழிகாட்டுதலும் உண்டு. வைரமுத்துவுக்கு மொழிபெயர்ப்பு துறையில் பணி கிடைக்க ஒளவை நடராஜன் ஒரு காரணம்.
 
அந்தத் தம்பதிகள் போல் நீயும் இலக்கியம் அறிந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஒரு மதுரை பயணத்தின்போது அறிவுரை செய்துகொண்டே வந்தார்.
 
அந்தப் பெண்ணும் அப்போது என்னுடன் மேடைகளில் பேசுபவர்தான். திறனும், அழகியலும் நிரம்பப் பெற்றவர்தான். ஆனால் அவர் பேச்சுக் கைகூடாமல் போனதற்கு ஒரு காரணம் அப்போது கல்லூரிப் பேராசிரியராக இருந்த பெண்மணியின் அறிவுரையும்கூட.
 
நானே பல காதல் திருமணங்களை நடத்திவைத்தும், வாழ்த்தியுமுள்ளேன். ஆனால் என் பொருளாதாரச் சிந்தனையும், சூழலும் அதிலிருந்து என்னை தள்ளியே வைத்திருந்தது.
 
சரி. விஷயத்திற்கு வருவோம். ஒரு சமயம் திருக்கோவிலூருக்கு ஒளவை சாருடன் போனேன். கபிலர் விழாவை நடத்துகிற தியாகராஜன் சிறப்பாக நடத்தினார்.
 
அப்போது ஒளவை நடராஜன் அவர்களுக்கு இளநீர் தேவைப்பட்டது. அதை எப்படி கையாண்டார் தெரியுமா?
 
"தியாகராஜன் ...
வெப்பம் அதிகம். மழை பெய்தால் தரையைத் தொடுமுன் ஆவியாகிவிடும். "தென்னையைப் பெத்தா இளநீரு... தியாகு, நீர் அதைவிட மேன்மையானவர்.
 
அங்கவையும், சங்கவையும் நிலாவெளிச்சத்தில் நடந்துபோன கதை கொண்ட ஊர். உங்களுக்கு மனதில் தோன்றுகிறது. ஒரு அருமையான, சுவையான இளநீர் தரவேண்டுமென்று, எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை. இவருக்கும் சேர்த்து இரண்டாக கொடுத்துவிடுங்களேன்.
 
உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். '
பிறகு இளநீர் வந்தது, குடித்தோம். ஆனால் ஒளவை நடராஜன் அவர்கள் பயன்படுத்துகிற சொற்கள் மலர்கணை போன்ற சாகசசொற்களாகவே இருக்கும்.
 
எதிர்மறைச் சொற்களை தவிர்ப்பார். உற்சாகம் தரும் சொற்களை தேர்ந்தெடுத்து செயலாக்குவார்.
 
 
ஒளவை துரைசாமியின் பிள்ளை, ஒளவை நடராஜன் (சிவபாதசேகரன்) ஏப்ரல் 24-இல் 1936-இல் செய்யாறு கிராமத்தில் நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகளோடு பிறந்த இவருக்கு எல்லா சிறப்பும் உண்டு. 1958-லேயே பச்சையப்பன் கல்லூரியில் 'சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு' என்ற ஆய்வு செய்து முனைவர் ஆனவர்.
 
மதுரை தியாகராஜர், மன்னர் சரபோஜி கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர். இவரின் சொல், செயல், மாண்பு அறிந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கிடைத்தது.
 
தமிழ்த்துறை வளர்ச்சி இயக்குநரானார். பிறகு செம்மொழிக்கு ஆலோசகராகவும், சட்டக்கதிர் நூலுக்கு ஆலோசகராகவும், அறம் விருதுக்கு உறுப்பினராகவும் தொடர்ந்து, பின் பாரத் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராகவும் செயல்படுகிறவர்.
 
சொக்கும் சொல் சிலம்பம் ஜெகத்ரட்சகன் எம்.பி அவர்கள் ஒளவைக்கு தனி மதிப்பும் மரியாதையும் இன்றளவும் தந்து கொண்டிருக்கிறார்.
 
"பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, வாழ்விக்க வந்த வள்ளலார், சங்க இலக்கியப் பெண்பால் புலவர்கள்" என 12 நூல்களை எழுதியுள்ளார்.
 
ஆனால் அவர் பேசிய மேடைப் பேச்சுக்களை அவர் விடாமல் தொகுத்திருந்தால் தமிழுக்கு பெரிய பொக்கிஷமாக இருந்திருக்கும். ஏனோ அதிகம் எழுதுவதில் நாட்டம் காட்டாதிருந்தார்.
 
அவரின் தனித்தன்மை, 
 
"தமிழை உயர்த்துவது 
தமிழ் வாழ்வின் அடையாளமாவது
எவரையும் தாழ்த்தாது
உயர்த்தும் உயர்மனம் கொள்வது".
 
அதனால்தான் முட்களில்லாத ரோஜாக்களை பயன்படுத்துகிற தமிழ்முகமாக ஒளவை நடராஜன் வெளிச்சமாக இருக்கிறார்.
 
எண்பத்து நான்கு வயதிலும் மூப்படையாத இளைஞனாக தமிழாக வாழ்கிறார். அவரின் இன்னொரு வடிவமாக, ஒளவை அருளை அதே தமிழக செயலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பார்க்கிறேன்.
 
சொல்வதற்கு செய்திகள் நிறைய, காலத்திற்கு குறியீடாக சில போதும்தானே!
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...