ஐந்து தேசிய விருதுகளை பெற்ற இவரை வியந்து பேச ஐந்து காரணங்கள் இருக்கின்றன.
1. எளிமையானவர்
2. இளைஞர்களுக்கு முன்னோடி
3. கர்வமற்றவர்
4. பணத்தாசை இல்லாதவர்
5. நடப்பதற்கு அஞ்சாதவர்
இந்த ஐந்து குணங்களைக் கொண்டிருக்கும் திறம் படைத்தவர்தான் எடிட்டர் பி. லெனின். அதென்ன எடிட்டர் மட்டுமா? தன்னுடைய தந்தை பீம்சிங்கிடம் உதவி இயக்குநர், எடிட்டராக வாழ்கையை துவங்கியவர்.
பீம்சிங் யாரென்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. எண்பதுகளுக்கு முன்பாக பா வரிசைப் படங்களை எடுத்த குடும்ப உறவுகளை அச்சுபிசகாமல் அழகாய் காண்பித்த இயக்குநர்.
பாசமலர், பாவமன்னிப்பு, பாகப் பிரிவினை, பார்த்தால் பசித்தீரும், பாலும் பழமும், படிக்காத மேதை, பச்சை விளக்கு, பாலாடை, பந்த பாசம், பழநி, பிரசிடண்ட் பஞ்சாட்சரம் என சொல்லிக்கொண்டே போகலாம். இதில் பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
இதற்கு எதிர்மாறாக த வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, தலைவன், தாயில்லாமல் நானில்லை, தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, தாய்க்குத் தலைமகன் என்று பட்டியல் நீளும்.
எண்பதுகளுக்கு முன்பாக இருந்த செண்டிமெண்ட் நிகழ்வுகள். அப்படிப்பட்ட இயக்குநனர் பீம்சிங்கின் மகன்தான் லெனின். இவரோடு ஒளிப்பதிவாளர் பி. கண்ணன், பி. சுரேஷ் உடன் பிறந்தவர்கள்.
அந்தக் காலத்தில் கதையை முதன்மையாக வைத்து பட மெடுக்கிற இயக்குனர்களுக்கு அடிப்படையாய் எடிட்டிங் அறிவு அவசியம் என்று கருதினார்கள்.
எம்.ஜி.ஆர் அவர்களுக்குக்கூட எடிட்டிங் பற்றிய சிந்தனையோடு கூடிய ஆற்றல் அதிகம் என்று பலரும் கூறுவர். இன்னும் சொல்லப்போனால் ஆர்.எம். வீரப்பன் (சத்யா முவீஸ் அதிபர்) தன் கம்பெனி எடுக்கும் படங்களின் எடிட்டிங்கில் அதிகமாக கவனம் செலுத்துவார் என்பது வெளிப்படை.
அப்படியாக மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக பயணித்து, எதிர்வரும் தலைமுறையினரோடும் ஊடாடி முன்னின்று உதாரணமாக உழைக்கும் படைப்பாளிதான் எடிட்டர் லெனின்.
முள்ளும் மலரும் இயக்குநர் மகேந்திரன் அவர்களோடு தனியாக எடிட்டிங் வாழ்வைத் துவங்கிய பி. லெனின் ஏராளமான முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களுக்கு வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
எனக்கு லெனின் அவர்கள் எண்பதுகளின் துவக்கத்திலேயே அறிமுகம் ஆனார். ஏ.வி.எம் எடிட்டிங் அறையில் லெனினைப் பார்க்க பேச, முற்போக்கு சிந்தனை கொண்ட பலரும் காத்திருப்பர்.
அதிகாலையிலேயே எடிட்டிங் பணியைத் துவக்கிவிட்டு, உதவியாளர்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டுமென்று சொல்லிவிட்டு தனதறையின் முன் கருத்துரையாற்றத் தயாராகி விடுவார்.
நிறைய படிக்கும் சுபாவம் உள்ள லெனின், புதிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர், கதிர், பிரதாப் போத்தன், அசோக்குமார், பரதன், ஆர்.வி. உதயகுமார், பி.சி. ஸ்ரீராம், பவித்ரன், பிரவின்காந்தி, எஸ்.ஜே. சூர்யா, ஜீவா, சேரன், வெங்கட் பிரபு, கங்கை அமரன் இது மட்டுமல்லாது மலையாளம் கன்னடப் படங்களென நூற்றிருபது படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
எப்படி இளையராஜா இசையமைக்க ஒத்துக்கொண்டாலே அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்று எண்ணினார்களோ அதேபோல் பி. லெனின் எடிட்டிங் என்றாலே அந்தப்படம் ஹிட் மட்டுமல்ல தரமான படம் என்றெண்ணிய போக்கு திரையுலகத்தில் இருந்தது.
எனக்குத் தெரிந்து இப்படி எடிட் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று லெனினிடம் பேசிப் பார்த்ததில்லை. லெனின்தான் இப்படி ஒரு காட்சி. அல்லது இப்படி கதையின் போக்கு இருந்தால் நல்லது.
இந்தக் காட்சியில் இப்படி ஒரு க்ளோசப் மிட் ஷாட் இல்லையேல் வேறு சில ஷாட்கள் எடுத்துக்கொண்டு வாருங்கள். அது கதைக்கு உதவும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது வெற்றியும் பெற்றிருக்கிறது.
இப்போதுதானே டிஜிட்டல் மயம். லெனின் சாரோடு இருக்கும்போது உதவியாளர்கள் உஷாராக இருக்க வேண்டும். இரண்டு உதவியாளர்கள் அவரின் எண்ணம் புரிந்துகொண்டவர்கள் இருப்பர். படமெடுத்து வந்தபின் உள்ள பாசிட்டிவ் ரோல்களை மாட்ட ஒருவர், இன்னொருவர் வெள்ளை பென்சில்களை நான்கைந்து சீவி வைத்துக் கொண்டு நிற்பார்.
ஃபிலிம் ரோல் மாட்டி ஓட்ட வேண்டும். 'ம்' என்பார் நிறுத்த வேண்டும். சட்டென நிறுத்த வேண்டும். உடனே மார்க் செய்வார். பிறகு ஓட்ட வேண்டும். மறுபடியும் 'ம்' என்பார். நிறுத்த வேண்டும். மூவியாலோவில் எந்த சத்தமும் இருக்காது. மெஷின் ஓடும் சத்தம். 'ம்' சப்தம். இரண்டைத் தவிர வேறெதுவும் இருக்காது.
வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் டீ, காபி கிடையாது. உதவியாளர்கள் நெளிவார்கள். அதை புரிந்துகொண்டு ஒரு பத்து நிமிடம் இடைவெளி விடுவார். பிறகு பேயாட்டம் தான். வேலையில் கவனம் சிதறாமல் எந்த வெட்டிப் பேச்சும் பேசமாட்டார். தவம் போல் பணியாற்றுவார். அவருக்கு இசையறிவு உண்டு அதனால் மனதில் எப்படி இளையராஜா இசையமைப்பார் என்பதை உணர்ந்து சில பல காட்சித் கோர்வைகளை ரிதத்தோடு வெட்டுவார்.
இன்னும் சொல்லப்போனால் எடிட்டிங்கில் பாரதிராஜா படங்களில் வந்த தந்தன.. தந்தன…. காட்சிகளுக்கு இவரே ஆரம்ப விதை.
இரண்டு ஃபிரேம்/ ஒரு பிரேம் எல்லாம் வெட்டியபின் வேண்டுமென கேட்பார். அதனால் அவர் எடிட்டிங்கில் படம் முடியும்வரை எல்லாமே வேண்டும். என் ஜி என்று எடுத்துப் போட்டுவிட முடியாது.
சாப்பாடு சமயத்தில் எவர் வந்தாலும் உடன் அமர்த்திக் கொண்டு சாப்பிட்டுவிட்டுதான், பிறகு என்ன விஷயமென கேட்பார்.
அவர் நல்ல குணத்தை வைத்துக் கொண்டு அவர் பேர் சொல்லி பிழைத்த பலரை நானறிவேன். இளையராஜா ரீ ரிக்கார்டிங் செல்லுமுன் எப்போதும் லெனின் சாரை அழைத்து பேசுவார். அல்லது லெனின் தான் எவ்வாறு இந்தப் படத்தை அணுகியுள்ளேன் என்று சொல்லுவார். இருவருக்கும் அப்படி ஒரு பொருத்தம்.
ஏ.வி.எம் ஆகட்டும் பிரசாத் ஸ்டுடியோவாகட்டும் லெனினுக்கு முதல் உரிமை. காரில் செல்வதையோ, படாபடோபத்தையோ பெரிதும் விரும்பமாட்டார். ஆனால் அதேசமயத்தில் தன்னோடு இருப்பவர்கள் அப்படி இருக்க வேண்டுமென நிர்பந்திக்கமாட்டார்.
ஒரு சமயம் என்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் எறியபடி ஏ.வி.எம் வந்தார். பலமுறை நான் ஆழ்வார்பேட்டை பீம்சிங் பிளாட்டிலிருந்து ஏ.வி.எம், திருவல்லிக்கேணி என்று நடந்தே பயணித்திருக்கிறோம்.
செங்கல்பட்டில் கலை இரவு நடந்தது. அனேகமாய் அது பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பஸ்ஸில் பயணித்தோம். நான் காரில் வாருங்கள் என அழைத்தும் 'வேண்டாம் நீங்க போங்க' எனச் சொல்ல வேறுவழியில்லாமல் உட்கார சீட் இல்லாமல் நின்றபடியே சென்னை வந்தோம்.
"ஏன் சார் இப்படி"
"பல கோடிகள் உள்ள படத்தை எடிட்டிங் செய்கிறீர்கள். உங்கள் அப்பா பெரிய டைரக்டர் பீம்சிங். வசதியிருக்கிறது. பிறகெதற்கு அதை தவிர்க்கிறீர்கள்" என்று கேட்டேன்.
"ராசி அம்மா வயத்துல இருந்து வெளிய வரும்போது நீ சொல்றதெல்லாம் இல்லை. வசதிங்கறது தேவைக்குத்தான். எனக்கு வசதி நடப்பது. ஜனங்களோடு பழகுறது. புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கிறது. மத்தவங்களுக்கு உதவியா இருக்கிறது. வாழுறதுங்கறது இயல்பா இருக்கிறது. நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சுகிறதுல இல்ல" என்று சொன்னார்.
கொஞ்சம் மார்க்ஸ், கொஞ்சம் ஜெயகாந்தன், கொஞ்சம் ஓஷோ வந்து நினைவுபடுத்திவிட்டு சென்றனர். அவரை கணிக்க இயலாது. எந்த வளையத்துக்குள்ளும் சிக்கமாட்டார். எளிமை, உண்மை, கலை இதில் எப்போதும் லெனின் இருப்பார். எல்லோரும் பிரபலங்களை, புகழை நாடுவர். லெனின் இதற்குத் தலைகீழ்.
பிரபலமாக மணிரத்னம், ஷங்கர், ரஜினி, கமல் படங்கள் எடிட்டிங் செய்யும்போதே இதுபோன்ற படங்களில் நான் இனி வேலை செய்யமாட்டேன். எனக்கு அதில் வேலை இல்லை. புதிய கதையம்சம்முள்ள, சிறிய பட்ஜெட் படங்கள் புதியவர்களுக்கு எடிட்டிங் செய்ய போகிறேன் என உறுதிமொழி எடுத்து அதன்படி செயல்பட்டவர். ஒரு படம் எடுக்க 1 லட்சம் அடிகள் ஃபிலிம் வேஸ்ட் செய்வது பிடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதோடு மட்டுமல்ல படங்களில் வேஸ்ட் ஆகும் 40, 50, 100 அடி நெகட்டிவ் ஃபிலிம்களை பயன்படுத்தி 'நாக் - அவுட்' என்ற டாக்குமெண்டரி படம் எடுத்து ரெக்கார்ட் பிரேக் செய்தார்.
'நாக் - அவுட்' ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரன் , பின்னால் வறுமையில் வாழ எவரும் கண்டுகொள்ளாமல் இறக்கிறான் எனும் கதைதான் அது. அதில் சத்யேந்திரன் நடித்தார். ஆர்.எஸ்.சிவாஜி வெட்டியாளனாக தோன்றினார்.
நான் அப்போது உடனிருந்து பயணித்தேன். பின்னர் அவர் எடுத்த என்.எப்.டி.சி குறும்படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். மிகவும் எளிமையாக, எந்தவித பந்தா இல்லாமல் படமெடுப்பதும், அதை கொண்டுபோய் சேர்ப்பதும் ஒரு போராளியின் அணுகுமுறையாகவே தென்பட்டது.
'அபூர்வ சகோதரர்கள்', 'குணா', 'மகளிர் மட்டும்' போன்ற படங்களை எடிட்டிங் செய்தார். ராஜ்கமலில் தனி மூவியாலோ இருந்தது. கமல் சாருக்கு அலுவலகத்தில் வந்து எடிட் செய்தார்.
அபூர்வசகோதரர்கள் எடிட்டிங் போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அதிகாலை நான்கு மணிக்கு நெகட்டிவ் கட்டிங் பூஜை என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது படமுதலாளி அல்லது இயக்குனர் முன்னிலையில் இது நடக்கும். நானும் வந்து விடுகிறேன் என கமல் ஒத்துக்கொண்டார். லெனினோ, "வேணாம் நாலு மணி ஒத்துவராது" எனச் சொல்ல, "நோ நோ ஷார்ப்பா வந்துவிடுகிறேன்" இன்று சொல்லிவிட்டு சென்றார்.
நானோ எல்டாம்ஸ் ரோடிலிருந்து ஆழ்வார்பேட்டைக்கு மூன்றரை மணிக்கு குளித்துவிட்டு மூன்றேமுக்காலுக்கு போகிறேன். மூணு மணியிலிருந்து லெனின் தயார் நிலையில் இருந்தார். உதவியாளர்கள் வந்துவிட்டார்கள். பூஜைக்கான எல்லாம் ரெடி.
நான்காகப் போகிறது. என்னை லெனின் பார்க்கிறார். "வந்துவிடுவார்" என்கிறேன். ஏனெனில் டைரக்டர் குழு சார்பாக நான் ஒருவனே வந்துள்ளேன். நாலு மணி என்பது எவரும் வருகிற டைம் அல்ல. சினிமாவில் செளகர்யமாய் பகலில் செய்வார்கள்.
ஆனால் லெனினுக்கு அதிகாலை வேலை செய்யப் பிடிக்கும். எதற்கும் எட்டிப் பார்த்துவிடலாம் என ஓடிப்போய் வாசலை பார்க்கிறேன்.
லெனின் குரல் கேட்கிறது. ஓடி வருகிறேன். உதவியாளர் நெகட்டிவ் எடுத்துக் கொடுக்க சரியாக நாலு மணிக்கு மார்க் செய்து வெட்டத் துவங்கி விடுகிறார். என்ன ஏது என எவரும் கேட்கவில்லை. ஒரு அரைமணி நேரம் கழித்து கமல் வருகிறார். அதைக்கூட கண்டுகொள்ளாமல் லெனின் வேளையில் கவனமாக இருக்கிறார்.
கமல், 'சாரி கொஞ்சம் லேட்' என்கிறார். "இருக்கட்டும் நான் வேலையை சரியாக துவங்கிவிட்டேன்" என சிரிக்கிறார். அன்று பார்த்து வேட்டி சட்டையில் கமல் பவ்யமாக வந்தார். கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு சென்றார். லெனின் வேலையில் மூழ்கிவிட்டார்.
லெனின் எவரையும் வியந்ததில்லை. அதுவே அவரை நான் வியந்துபார்க்கக் காரணம். திருப்பதிக்கு சென்னையிலிருந்து நடந்தே போவார். நடப்பது அவருக்கு அவ்வளவு பிடிக்கும்.
ஒருமுறை பீம்சிங் ஃபிளாட்டுக்கு போனேன். அவரே சமையல் செய்து துவையல் அரைத்து சாப்பாடு போட்டார். அவர் அம்மா பிறந்தநாள் என்னை கவிதை எழுதச் சொன்னார். நான் எழுதி படித்தேன். ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாய் தந்தார்.
அவரோடு பல சமயம் குறும்படம், நிகழ்வுகள், கலை விமர்சனங்கள், உலகத் திரைப்பட விழாக்கள் என செல்வதுண்டு. அப்போதெல்லாம் உலகக் கலைத்தன்மையை பாடமெடுப்பார். எப்போதும் உலர்ந்த பழங்களை வைத்திருப்பார். வாயில்கொஞ்சம் போட்டுகொண்டு தண்ணீர்குடிப்பார். இல்லையென்றால் ஒரு தேங்காய் பெத்தை, வாழைப்பழம் இதுதான் உணவு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைசியில் நடித்த படத்தை 'நதியை தேடி வந்த கடல்' படத்தை இயக்கிவர் லெனின்.
பண்ணைபுரத்து பாண்டவர்கள் என்ற படத்தை திருவல்லிக்கேணியில் உள்ள தியேட்டரில் பார்த்துவிட்டு அவரிடம் விவாதித்துள்ளேன். ஏழு படத்தை இயக்கினார். 'காதலே நிம்மதி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். ஏழு படங்களில் (இந்தி) உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
'நாக் - அவுட்' டாகுமெண்டரி படம் தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. ஜெயகாந்தன் அவர்களின் 'ஊருக்கு நூறுபேர்' தேசிய விருது பெற்றுத்தந்தது. அதோடு எடிட்டிங் செய்த காதலன், குற்றவாளி படங்களும் தேசிய விருது பெற்றுத் தந்தது.
பி. லெனின் என்ற ஒரு விருதை தமிழ் ஸ்டுடியோ அருண்.மோ உருவாக்கி இளம் படைப்பாளிகளை கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.
லெனினைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். உச்சகட்ட நிலையில் உள்ளபோதே சினிமாவின் அடுத்தகட்ட இலக்குக்கு தயாராகி டிஜிட்டலுக்கு மாறிய கலைஞர்.
கதையும், எண்ணமும் தான் படைப்பின் முக்கியத்துவம் என்பதை எப்போதும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டி உடன் தோளோடு தோள் சேர்த்து பயணிப்பவர். எனது முதல் படம் 'தேவராஜ்'-க்கு அவரே எடிட்டர். அவரோடு இன்றளவும் பழகவும், பயணிக்கவும் காலம் எனக்கு வாய்ப்பளித்தது பெரும் கொடை.
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)