???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 25- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  06:28:07 IST


Andhimazhai Image

நான் சிறையில் இருந்த போது உமது சிறுகதையைப் படித்தேன் நன்றாக இருந்தது தொடர்ந்து எழுதுங்கள் என்று பார்த்த மாத்திரத்தில் சொல்லி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டவர்  இன்று இந்திய அரசியலில் மிக முக்கியமான தலைவரராகவும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை தலைவராக மதிக்கப்படுபவருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் .

 

என்ன திருமாவளவன் அவர்களைத் தெரியுமா? எப்படி? உங்களுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம்? என்ற வினாக்கள் என்மேல் பலர் பலசமயம் தொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் திருமா பிறந்த நாள் விழா பெரியார் திடலில் நடந்தது. நம்பமாட்டீர்கள் மாலையில் துவங்கிய விழா நள்ளிரவைத்தாண்டி நடைபெற்றது.

 

கூட்டம் எங்கேயும் நகராமல் உணவைப் பற்றியும் கவலைப்படாமல் அசராமல் கேட்டுக் கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வு எம்ஜிஆர் , கலைஞர்க்கு மட்டும்தான் நிகழ்ந்துள்ளது. அதற்குப்பின் திருமாவுக்கு அவரின் அன்பிற்கும் சொல்லுக்கும் கட்டுண்ட தமிழினத்தை நேரில் கண்டு பிரமித்துப் போனேன். அந்த விழாவில் வந்து ஐந்தரை மணிக்கு பேச வந்த ரங்கராஜ் பாண்டே இரவு 11. 30 க்குத்தான் பேச வந்தார்.

 

அவர் பேசும்போது”  திருமாவின் அறையில் எப்போதும் பத்துப் பதினைந்து பேர் இருந்து கொண்டு இருப்பர். இப்படி ஒரு எளிமையான ஒரு தலைவனை நான் பார்த்ததில்லை. உதவி கேட்டு எந்த நேரத்தில் போனாலும் தட்டாமல் கேட்பவர். என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன் “ என்றார்.

 

என் அளவில் எப்போது அழைத்தாலும் அலைபேசியின் மறுமுனையில் திருமா பேசுவார். நட்பையும் மொழியையும் கண்போல் காக்கிறவர். விழாவுக்கு செல்லும் முன் தாய் பிரபு நினைவு படுத்தினார். திருமா,  நாம் பணியாற்றிய தாய் வார இதழ் அலுவலகத்துக்கு கவிதை நோட்டை எடுத்துக்கொண்டு வந்து கவிதை போடச் சொல்வார்.  சரி அதற்கென்ன நிச்சயம் போடலாம் முதலில் வாருங்கள் என அழைத்துக்கொண்டு போய் நெல்சன் மாணிக்கம் சாலையில்  ஒரு டீக்கடையில் டீ வாங்கித் தந்து எல்லோரும் சாப்பிட்டோம் உனக்கு நினைவில்லையா ? அவர்தான் திருமா என்று சொல்ல விளையாடாதே, பேசாமலிரு என்று எச்சரித்தேன்.

 

ஆனால் மேடையில் திருமா அருகில் என்னை ஒருபுறமும் பழநிபாரதியை  ஒருபுறமும் அமரவைத்துக் கொண்டார். மேடையில் மேலும் யுகபாரதி, இளையகம்பன், தேன்மொழி வன்னியரசு அமர்ந்தனர். ஒரு தலைவன் ஏன் மற்றவர்களால் போற்றப்படுகிறார் என்பது அன்று நடந்த நிகழ்வு எனக்கு பளிச்சென உணர்த்தியது.

 

எவ்வளவு உயர்ந்தாலும் தனது கடந்த கால வாழ்வின் சம்பவங்களை நினைவு கூர்ந்து மனம் திறந்து பேசுவது என்பது சாதாரணமாக நிகழாது . ஆனால் தாய்பிரபு என்னிடம் சொன்ன சம்பவத்தை திருமா என்காதருகில் சொல்ல வியந்து போனேன். திருமா இன்று பெற்றுள்ள உயரம் உழைப்புக்கு நான் யார் தெரியுமா என்று கடந்து போயிருக்கலாம் . ஆனால் தனது மனத்தை ஈரத்தோடும் மனிதத்தோடும் வைத்திருப்பதால் தான் அவரை இன்று தமிழினம் தாண்டிய உயரிய மதிப்பை காலம் தந்திருக்கிறது.

 

நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய தேவராஜ் படம் முடித்த பின் நட்பின் அடிப்படையில் படம் பார்க்க அழைத்திருந்தேன். மாநிலக் கல்லூரி மாணவர்கள், வின் தொலைக்காட்சி தேவநாதன் ஆகியோருடன் திருமாவும் வந்து பார்த்து பாராட்டியதும் நினைவுகூறும் நிகழ்வு. பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஜெயராம், நான் சொன்ன கதை கேட்டு உடனே படத்தில் நடிக்கத் தேதி தந்தார்.

 

வர்த்தகரீதியான கதையிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து உயரும் கலெக்டரை தொடர்ந்து எதிர்க்கும்  காவல் அதிகாரி. அதாவது சாதி மனப்பான்மையால் இடையூறு செய்து நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி படம் எடுத்திருந்தேன். ஐபிஎஸ் அதிகாரி ஆக ஆனந்தராஜ் நடித்திருந்தார் . இப்போது சொன்னால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை ஆனாலும் சொல்கிறேன் .

அந்தப் படத்தில் கல்லூரி மாணவியாக நடிகை ரஞ்சிதா  திறம்பட நடித்திருந்தார். அப்போதெல்லாம் புத்தகம் கையோடுதான் இருப்பார். ஒவ்வொரு ஷாட்டுக்கு நடுவிலும் ஓடிப்போய் நாற்காலியில் அமர்ந்து ஆங்கில நாவல்களை படிப்பார். இப்போது என்னடாவென்றால் நித்யானந்தாவின் ஆன்மீக பீடத்தில் ஈடுபாடு காட்டுகிறார். திருப்பங்கள் எப்போது எப்படி எதற்காக நடக்கிறதென்று கணிக்க இயலவில்லை.

 

போகட்டும் இந்தப் படம் இப்போது ஆர்ட்டிகிள் 15 திரைப்படம் வந்து இந்திய நுண்மை திரைரசிகர்களை விழிப்படைய செய்கிறதே இது போன்ற நுட்பமே அதிலும் கையாண்டிருந்தேன். ஒருவர் கல்வி மூலம் மேம்பட்டு உயர்ந்தாலும் எப்படி சமூகம் அணுகுகிறது என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியுள்ளீர்கள் என்று மனம்   திறந்து பாராட்டினார் திருமா .

 

அப்போதைக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம். ஒருமுறை சோழிங்கநல்லூர் பகுதி கூட்டுறவு வங்கி செயலாளர் சுப்புராஜ் தான் எழுதிய கவிதைத்தொகுதி வெளியிட திருமாவளவன் அவர்களைத்தான் அழைத்து வெளியிட வேண்டும் என்று ஒரே பிடிவாதத்தில் இருந்தார். அவர் கலைஞரின் எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவர். எனினும் பல சமயம் திருமா குணநலன்களைப் பற்றி நான் பேசக் கேட்டு திருமா வேண்டுமென விரும்பினார் .

 

அழைத்தபோது சென்னைக்கும் நானிருக்கும் சோழிங்கநல்லூர் பகுதிக்கும் நிறைய தூரம். வருவாரோ மாட்டாரோ என்று தயக்கத்தோடு அழைக்க உடனே வருகிறேன் என்றார். அந்த நாள் விழாவுக்கு முன் இன்ப அதிர்ச்சியாக வீட்டுக்கு வந்து  விட்டார்.  மழை பெய்து குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி நிற்க அதைத்தாண்டி தாண்டி வர பின்னால் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அதே போல் வர குட்டிச் சந்து திகைத்து திணறிவிட்டது.

 

 தேனாம்பேட்டை வாடகை வீட்டிலிருந்து தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து வீடு சிறிய அளவு கட்டிக்கொண்டு அக் கம் பக்கம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த போது என் வீட்டுக்கு இப்படி திருவிழா போன்று வந்ததைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்து வியக்கத்தான் செய்தனர். எல்லோரும் வரவழைக்க ஆசைதான் அதற்கு இடம் வேண்டுமே. சூழலைப்புரிந்து கொண்ட திருமா கூட வந்த வன்னியரசு விடம் தோழர்களை தயவு செய்து வெளியே இருக்கச் சொல்லுங்க என்றார். பிறகுதான் பிரச்சனை துவங்கியது. எனது துணைவியார் செண்பகவடிவு எதையும் மறைக்காமல் பட்பட்டென்று தேங்காய் உடைப்பது போல் கேட்டுவிடுவார்.

 

 “  முன்கூட்டியே சொல்றதிலையா? பால் கொஞ்சமாதான் இருக்கு போய் எல்லோருக்கும்  டீ போட பால்பாக்கெட் வாங்கிட்டு வாங்க” என்று அதட்ட எனது கவிதை நூலை எடுத்துப் படித்துக் கொண்டிருந்த திருமா “ அண்ணி அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நாங்க திடீரென வரணும்னு வந்தோம்.  சிரமப் படாதீங்க என்றார். “ ”இதிலென்ன சிரமம் நீங்க போங்க” என துணைவியார் விரட்ட தர்ம சங்கடம் என்பார்களே அது இதுதானா என்பதை அன்று அனுபவபூர்வமாக உணர்ந்தேன். வீட்டுக்கு வந்த ஒரு தலைவர் நட்பு பாராட்டி புரிந்து கொள்வார் என்றாலும் முகமன் என்பது இனிய தருணமாக்குவதுதானே…

 

சரி வேண்டாம் என்று மறுப்பதைத் தாண்டி மனைவியிடம் அடுத்த நாள் வாழ வேண்டியதுள்ளதே. எனவே ஓடிப்போய் அருகிலுள்ள கடையில் பால் பாக்கெட் வாங்கிவந்து தர வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. கவிதை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர் நட்புக்காக வீட்டில் வந்து நலம்விசாரித்து விட்டுச் செல்கிற மனம் வியக்கத்தக்கது.

 

திராவிடர் இயக்கங்கள் மிகவும் தாழ்ந்த இடத்திற்கும் சென்று அவர்களோடு பழகி உறவாக்கிக் கொண்ட யுக்திதான் அரசியல் உயர்வுக்கான காரணம் என்பர். ஒருவகையில் அது அரசியல்தான் என்றாலும் அதைக்கூட மற்ற இயக்கங்கள் செய்யவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். திருமா எந்த வித அரசியல் எண்ணங்களைத் தாண்டி நட்பையும் இலக்கியத்தையும் உயர்வாகக் கருதுபவர் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவார்கள்.  சுப்புராஜின் கவிதைச்சாரல் கவிதைத்தொகுதியை அலசி உயர்வாக எடுத்துரைத்தார்.

 

கட்சித் தலைவராக இல்லாமல் இருந்தால் திருமா மிகச் சிறந்த ஆளுமைமிக்க கவிஞராக திகழ்ந்திருப்பார். சொல்லமுடியாது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போல் திரைப்படங்களில் மாறியிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும். அன்றைய மேடைப் பேச்சு தமிழ்ச்சுவை கலந்து கம்பீரமாக கவி உரையாக மாறியதை பலரும் பல நாட்கள் விமர்சித்தனர். நன்றாக நினைவிருக்கிறது இன்றைய சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் அப்போது பேரூராட்சி தலைவராக பதவியேற்கும் ஓரிரு நாள் முன்பு ஒரே மேடையில் முக்கிய கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிகழ்வு.

 

வேலப்பன் சாவடி அருகில் வார்த்தை சித்தர் வலம்புரிஜான்  வாடகை வீட்டில் இருந்து இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினேன். அங்கு போனால் தெருவிளக்கு கூட தெருவில் இல்லை. ஆளும் கட்சியில் அப்போது அவர் இல்லை என்பதால் எவரும் கண்டுகொள்ளவில்லை . அப்போது நினைவுக்கு வந்தது திருமாதான். தாய்பிரபுவும் நானும் தலைவர்களை அழைத்து தகவல் சொல்லியவண்ணம் இருந்தோம்.

 

 எங்கோ சென்று கொண்டிருந்த தொல் திருமாவளவன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மரியாதை செலுத்திவிட்டுப் போனார் அதன்பின் வாசன், வைகோ வந்து சேர்ந்தனர். இன்னும் சொல்லப் போனால் பத்திரிகையாளர்கள் கவிஞர்கள் இலக்கிய சமூக சிந்தனையாளர்களை முதலில் தவறாமல் கட்சிக்கு அப்பாற்பட்டு கலந்து கொள்வதில் திருமா முதலாமவர் என்று சொல்வதில் நியாயம் உண்டு.

 

துணை இயக்குனர் நண்பர் ஜீவன்பிரபு நெஞ்சாங்கூட்டில் என்ற ஒரு கவிதைத்தொகுதி கொண்டு வந்து அணிந்துரை எழுதச் சொன்னார். எழுதிய பின்புதான் தெரிந்தது அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் . திருமா சார்கிட்ட அணிந்துரை வாங்கித் தரணும் என்றார்.

 

 

அது சரியா வராது நான் யார்கிட்டயும் போய் நிக்கமாட்டேன். இன்னும் ஒன்று. நட்பு கெட்டு விடும் என்றேன். அவர் என்ன ஆனா எனக்கென்ன என்ற தீவீர எண்ணத்தில் திருமா வாழ்த்து இல்லன்னா இதை வெளியிடமாட்டேன் என்று உறுதியாக அடம்பிடித்தார். தோழர் வன்னியரசுவிடம் தலைவர் வந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் சரி என்றார். அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வன்னியரசு பிஸி என்பதே உண்மை.

 

நேரம் சரியாக வாய்க்கவில்லை கவிஞரோ காதல் தொகுதி எழுதிவிட்டு துடிக்கிறார். ஏன் ஜீவன், திருமா இல்லாமல் வேறு பிரபலத்திடம் வாங்கித் தரவா எனச் சொல்ல,அவரோ எரித்து விடுவது போல் பார்த்து விட்டு சொன்னார். என் லட்சியம் திருமா வாழ்த்து தான் அதுவும் அவர் கையால் வெளியிடுவதுதான் முடிஞ்சா செய்ங்க இல்லன்னா விடுங்க என்று சுயமரியாதைக்கு சவால் விட்டார். அப்போது பாரதிராஜா போன்ற முன்னணி படங்களுக்கு டிசைன் செய்யும் அஞ்சலை முருகன், “ சார் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க’ என வேறு வழியில்லாமல் திருமாவுடன் இருக்கும் தோழர்  எஸ்எஸ் பாலாஜிக்கு போன் செய்து விஷயம் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் “ சார் தலைவர் தலைமையில் இருக்கிறார் நீங்க போங்க சொல்லிடறேன் என்றார்.

 

அஞ்சலை முருகன் சார் வரட்டுமா என்று சேர்ந்து கொண்டார். மூவரும் போனோம். சொன்னது போல் இருந்தார் . ஆனால் அவரைப் பார்க்க வந்த கூட்டம் ஏராளம். அட டா இது இன்னிக்கு நடக்கிற வேலையில்லை என நினைத்த போது போட்டோகிராபர் வந்து சார் ஒரு பத்து நிமிடம் ஒரு டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கார் முடிஞ்ச உடனே பார்த்துடலாம் என்று அமர வைத்தார். இவருக்கு என்ன இங்க வேலை என்று சில பார்வைகள் குறுகுறுத்த வண்ணம் இருந்ததை உணரமுடிந்தது.

 

பிறகு சிறிது நேரத்தில் அழைக்கப்பட உள்ளே போனதும் வாங்க கவிஞரே என்று சிரித்தார் . நேரடியாக விஷயத்திற்குப்போனேன் . ஜீவன் என்னிடம் சொன்னதை அப்படியே ஒப்பித்தேன். சிரித்துக் கொண்டே மேசையைக் காட்டினார். ஒரு பத்து ஸ்கிரிப்ட் இருந்தது. இதெல்லாம் அணிந்துரைக்கு வந்துள்ளது என்றார். நான் வேறு வழியில்லாமல் இது உங்களை வழிபடுகிற முதல் நூல் கவிஞன் கூடவே காதல் கவிதைகள்தான் புதுக்கவிதை காரில் போகிற போக்கில் அரைமணி நேரத்தில் படித்து விடலாம் என்றேன் ஒருவாரத்தில் கிடைத்தால் சிறப்பு என்றேன். உறுதி தந்ததோடு இங்கேயே இடமிருக்கிறது வெளியிட்டு விடலாம் என்றார். புகைப்பட புரிதலுடன் விடைபெற்றோம்.

 

இது அல்ல செய்தி. அந்த சந்திப்புக்குப்பின் சில வாரங்கள் கடந்து நேரில் வாழ்த்துக்குப் போனால்்அங்கே புதிய பரபரப்பு. திருமாவைச் சுற்றி கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கூடிக்கூடி பேசுகின்றனர். காத்திருப்பிற்குப்பின் உள்ளே போனேன் அப்போதுதான் உணவு உண்டு இருந்து நிமிர்ந்தார் என்னைப்பார்த்ததும் அருகில் சேர் போடச்சொல்லி பேசத் துவங்கினார். அதற்குள் தலைவா பல இடங்களில் இந்து கோவில்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்பதற்காக காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர் என்று ஒருவர் சொல்ல அப்படியா எனக் கேட்கிறார். நான் இது எப்போது பேசியது எனக் கேட்கிறேன் . அவர் சில நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் கம்பன் கலையரங்கம் நிகழ்வில் நான் பேசுகிற நிகழ்வைப் பார்த்துவிட்டு நானும் பாண்டியில் சொந்தக்காரர் திருமணத்திற்கு வந்துள்ளேன்.

 

எனவே வந்து விடுகிறேன்னு சொன்னீங்களே அந்த நிகழ்வில் பேசியது வேண்டுமென்றே பேசவில்லை. சர்ச் இப்படி இருக்கும் மசூதி இப்படி இருக்கும்.  இந்து கோயில் கோபுர வடிவங்கள் இப்படி இருக்கும் என்று சொல்லவந்த போது வந்த வார்த்தைகள் நிஜமாகவே வேண்டுமென்று சொல்லவில்லை என்று சுற்றியுள்ளோரிடம் விளக்கிக் கொண்டிருந்தார் . என்னவோ தெரியவில்லை வருகிறேன் என்று சொன்ன அன்று இரவு கோவிலில் பக்தர்கள் கூட்டம் சனிக்கிழமையன்று அலைமோதியதால் லேட் ஆகி விட்டது. சார் அன்னிக்கு மேரேஜ் அரேன்ஜ்மெண்ட்டால் கூட்டத்திற்கு வரமுடியவில்லை என்றேன். அது பரவாயில்லை நான் எப்போதும் இந்துவைப்பற்றி தாழ்வாகப் பேசியதில்லை. இந்துக்கள் மற்றும் அனைவரும் தானே எனக்கு வாக்களித்து எம்பி யாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் நான் எப்படி அப்படி பேசுவேன் பேசும்போது ஒரு ப்ளோவில் வந்த சொற்கள் என்று அவர் மனமுணர்ந்து சொன்னதை விகல்பமின்றி புரிந்து கொள்ள முடிந்தது.

 

அப்போதும் அந்தச் சின்ன அறையில் இருபதுக்கும் மேற்பட்டோர் வித்தியாசமின்றி குழுமியிருந்தனர் . எப்போதும் தனக்கென்று ஒரு தனித்த உயர்ந்த இடத்திற்கு ஆசைப்படாமல் தன்னை எளிமையாக வைத்துக்கொண்டு வாழ எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. தான், தனது குடும்பம் என்று வாழாமல் கர்மவீரர் காமராஜர் போல் தான் சார்ந்த சமூகத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு வாழ்வது என்பது எளிதல்ல. ஆனால் திருமா அப்படி வாழ்கிற தலைவனாக மாறியுள்ளார். அவரின் பேச்சும் செயலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவுபடுத்துகிறது .

 

 

மலேசியாவிற்கு நான் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பள்ளிகளில் பேச சென்ற போது பல மாநிலங்களில் திருமாவை வழிபடுவதைப் பார்த்தேன். உலகத் தமிழர்களின் மத்தியில் நம்பிக்கைக்குரியவர் திருமா என்பது வெளிப்படை. அவர் மட்டும் வேறு சூழலில் பொதுத்தளத்தில் பயணப்பட்டிருந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மாயாவதி போல் ஆட்சியைப் பிடித்திருக்கக்கூடும். திருமா அரசியலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் நட்பின் முகவரி. அது மாநிலக்கல்லூரி தந்த முகம்!

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...