???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுகோட்டுப் பெரும்பழம் : நாஞ்சில்நாடன்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   24 , 2018  03:24:35 IST


Andhimazhai Image
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்’ என்பதைப்போல, முக்கனிகள் எவை எனக் கேட்டால் தமிழர் என்னும் இனம் மறக்காமல் சொல்வது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி என்று. தமிழ் ஐயாக்களும் மேடைச் சொற்பொழிவு ஐயாக்களும் மறக்காமல் சொல்வார்கள் மா, பலா, வாழை என்று. முக்கனிகளுமே தமிழர் பண்பாட்டின் முக்கியமான கனிகள்.
 
 
இந்தியத் துணைக்கண்டத்தில் மாம்பழத்தில் மட்டும் 5600 இனங்கள் உண்டு என எங்கோ 
வாசித்த நினைவு. 5600 மரங்கள் அல்ல, இனங்கள். எனதிந்த அலைச்சல் வாழ்க்கையில் முப்பதுக்கும் குறைவில்லாத இனத்து மாம்பழங்களை தின்று செரித்திருக்கிறேன். உடனடியாக நினைவிலிருந்து தசேரி, லங்கடா, அல்போன்ஸா, மன் பசந்த், இமாம் பசந்த், குதாதத், பைரி, ருமானி, பங்கனபள்ளி, மல்கோவா, குண்டு, செந்தூரம், கிளிமூக்கு, சூடன், செங்கவருக்க, பஞ்சவர்ணம், நீலம்... இவை யாவும் கூகுள் பார்த்துப் பகர்ந்தவை அல்ல. ஒவ்வொன்றின் மணம், குணம், நிறம், வடிவம் நினைவில் உண்டு.
 
 
வாழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் இருபது வகைகள் வாங்கக் கிடைக்கும். எந்த முறுக்கான் கடையிலும் ஏழெட்டு இனங்கள் எந்த நாளிலும் தூங்குவதைக் காணலாம்.
 
 
முக்கனிகள் பற்றி இப்போது பேசுவதற்கான முகாந்திரம் என்ன? அண்மையில் கேரள சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார், அறிவிப்பு ஒன்று செய்தார். பலாப்பழத்தைக் கேரளத்தின் அதிகாரப்பூர்வமான பழமாகக் கொண்டாட வேண்டும் என்பது. இந்திய நாடு முழுவதும், உலகமெங்கும் அதன் தரத்தை, சிறப்பைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன்.
 
 
யானை மாநில விலங்கு, இருவாட்சி மாநிலப் பறவை, கரிமீன் மாநில மீன், கணிக்கொன்றை மாநில மலர் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டாயிற்று. பலாப்பழத்தின் மூலமாகவும், பலாப்பழத் தயாரிப்புகள் மூலமாகவும் ஆண்டுக்கு 15000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் (இந்தச் சந்தர்ப்பத்தில் நமது மாநிலத்தின் ஆண்டு டாஸ்மாக் வருமானத்தை நாம் மனதில் கொள்ளலாம்). ஆண்டுக்கு 30 கோடி பலாப்பழங்கள் இயற்கையாக ரசாயன உரங்களோ பூச்சிக்கொல்லி மருந்துகளோ இன்றி விளைச்சலாகப் பெறப்படுகிறது கேரளத்தில்.  
 
 
பருவ காலங்களில் அமோக விளைச்சல் பெறும்போது, வெட்டி மாட்டுக்குப் போடாமல், உரக்குண்டில் வீசாமல், வணிக ரீதியாகப் பயன்படுத்தும் திட்டம். துருவிய தேங்காய்ப்பூ, தென்னை இளநீர் போல, பதநீர் அல்லது நீரா அல்லது தெளுவு அல்லது அக்கானி போல. Value added Product- ஆக பலாப்பழத்தை மாற்றிக்காட்டலாம். கள்ளும் கூட அவ்விதம் வணிகப்படுத்த வாய்ப்புண்டு, பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் என்று. தமிழ்நாட்டு உயர்நீதிமன்றம் மட்டுமே கள்ளைத் தடை செய்கிறது. IMFL  நிறுவனங்களுக்கு ஆதரவாகவா என்ற கேள்வியும் உண்டு. ஒவ்வோரு பனை அல்லது தென்னை மரத்தின் அடியிலும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் சாத்தியமில்லை என்பதால். நீதி அரசர் எவரும் ரேஷன் கடையில் அரிசி வாங்கிப் பொங்கித் தின்றிருப்பார்களா என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.
 
 
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில், மார்ச் மாத மத்தியில் ஏழு நாட்கள் இருந்தேன். பொதுச் சந்தையில் சந்தால், முண்டா, ஹோ இனப் பழங்குடி மக்கள் விற்றுக்கொண்டிருந்த ஹண்டியாங் எனப்பட்ட கள் வாங்கிக் குடித்தேன். குழைய வேக வைக்கப்பட்ட அரிசிச் சோற்றில் சில மூலிகைகள் சேர்த்து மூன்று நாட்கள் புளிக்க வைத்து நீருற்றி இளக்கி, வடிகட்டப்பட்ட கள். அது பற்றி விரிவாக பின்னை நாளில் எழுதலாம்.
 
 
நாம் பேச வந்த விடயம் பலாப்பழம் குறித்து. பலா மரம் என்பது கேரள மாநிலத்து மட்டுமே வளரும் மரம் அல்ல. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கையான கொடைகளில் ஒன்று. மராட்டிய மாநிலத்தில் சாங்ளி, சத்தாரா, இரத்தினகிரிப் பகுதிகளிலும், கோவாவிலும், கர்நாடகத்தில் உடுப்பி, கார்வார் பகுதிகளிலும் கேரளத்தின் காசர்கோடு தொடங்கி களியக்காவிளை வரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லைச் சீமையின் தென்காசி, குற்றாலம், செங்கோட்டைப் பகுதிகளிலும், கண்மணி குண்சேகரனின் நடு நாட்டில் கடலூர், விருத்தாச்சலம், பண்ருட்டி பகுதிகளிலும் விளைவது.
 
 
பலா, கேரளத்துக்கு மாத்திரமேயான மரம் அல்ல என்பது நமக்கும் தெரியும். கேரள வேளாண்துறை அமைச்சருக்கும் அறியாம். என்றாலும் கர்வத்துடன் அவர்கள் பலாப்பழத்தைக் கொண்டாடத் தலைப்படுகிறார்கள். நல்ல விடயத்தை எவர் கொண்டாடினாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ மலையாள மொழிபெயர்ப்பு அங்கு லட்சம் படிகள் விற்றிருக்கிறது. இங்கும் சில காரணங்களுக்காக சிலரின் நூல்கள் விற்கும். அது ஒற்றைப் பிரதிகளின் விற்பனை அல்ல. ஆயிரக்கணக்கான படிகளைக் குத்திச் செலுத்துதல். பெயர் சொல்லத் துணிய மாட்டேன். அறிவார். அறிவார்.
 
 
நமக்கு ஒரு வேளை அந்தச் சொல் நகைப்பு தரக் கூடும். சக்க என்னும் சொல்லில் இருந்தே JACK என்னும் ஆங்கிலச் சொல் பிறந்ததாக மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். பலாவில் எமக்குத் தெரிந்த சில இனங்கள் உண்டு. வர்க்கச் சக்க, செம்பருத்திச் சக்க, கூழன் சக்க என்று. கூழன் சக்கை என்பது பழுத்தால், சுளை கொழகொழவென்று குழைந்தாற்போல இருக்கும். அதற்கு சந்தையில் மவுசு இல்லை. காயாக வெட்டிக் கறிக்குப் பயன்படுத்தலாம். சக்க என்றாலும், சக்கப் பழம் என்றாலும், பலா என்றாலும் பலாப்பழம்தான்.    
 
 
Madras University Tamil Lexicon சக்கை என்னும் சொல்லுக்கு கோது, பட்டை, சிராய், இறுக்கும் மரத்துண்டு, பலா, காட்டுப்பலா, என்று பொருள் தருகிறது. முதன் முதலில் 2016-ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மலையாளம்-தமிழ் இரு மொழி அகராதி 23000 சொற்களைப் பட்டியல் இடுகிறது. அதில் சக்க-பலா, சக்கப்பழம்-பலாப்பழம், சக்கப் பிரதமன் - பலாப்பழப் பாயசம், சகினி, சவணி, சேணை - பலாச்சுளையைச் சுற்றியிருக்கும் நார் எனப் பல சொற்களைப் பட்டியலிடுகிறது.
 
 
மலையாளம், சங்கத் தமிழ் சொற்களின் பெட்டகம் எனக் கருதுபவன் நான். சக்க என்னும் சொல்லின் மாற்றுச் சொல்லாக அவர்கள் பிலாவு, பிலா என்ற சொற்களையும் பயன்படுத்துவதுண்டு. அதனைப் ப்லாவு, ப்லா என உச்சரிப்பார்கள்.
 
 
சங்க இலக்கியம் பலவு மற்றும் பலா என இரு சொற்களை ஆள்கிறது.
 
 
சக்க இனத்துடன் சேர்ந்த மற்றொரு மரம் ஆயினிச் சக்க. நாம் ஆயினிப் பலா எனலாம். பலாப்பழத்தின்   Miniature போல பெரிய ஆரஞ்சு அளவில் இருக்கும். அதனுள் சுளை, சுளையினுள் கொட்டை. ஆயினிப் பலாச் சுளையை வாயிலிட்டு உதப்பி, கொட்டையை உமிழ்வோம். கொட்டைகளைச் சேகரித்து வறுத்துத் தின்போம். நிலக்கடலைப் பருப்பு அளவில் சுவையாக இருக்கும். மலையாளத்தில் புருத்திச் சக்க எனில் அன்னாச்சிப் பழம். அது பாலாக் குடும்பம் அல்ல. தாழை இனம். தாழைக்குத் தமிழில் இன்னொரு சொல் கைதை. புருத்திச் சக்கையை மலையாளிகள் கைதைச் சக்கை என்பதுமுண்டு. சீமைச் சக்க என்றால் கறிப்பலா. துரியன் என்றொரு பழம் கேள்விப்பட்டிருப்பீர்கள். விரும்பி தேடிச் சென்று சாலையோரக் கடையோரம் உண்டோம் கோலாலம்பூரில், ஜெயமோகனுடனும் பிற நண்பர்களுடனும்.
 
 
சற்றுத் தீவிரமான பலாப்பழ வாசனை. அதுவும் பலா இனம்தான். ஆனால் உயர்தர தங்கும் விடுதிகளில் துரியனுக்கு அனுமதி இல்லை. எங்ஙனம் இந்திய ரயிலில் விமானத்தில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி இல்லையோ அங்ஙனம். தொலிக்காத தேங்காய் அளவிலான பலாப்பழமே போன்று முள் தோல் கொண்ட பச்சை நிறத்துத் துரியனைப் பிளந்தால் உள்ளே பலாச்சுளை போன்றே வரிசையாய்ச் சுளைகள். 
 
 
பலாவைப் பனசா என்கிறது தெலுங்கும் கன்னடமும். பனஸ் என்கிறது இந்தி. பனஸ் என்ற சொல்லுக்கு கதல் என்றொரு பிணைச் சொல்லும் உண்டு. மராத்தியும் பனஸ் என்றே வழங்கும். மும்பையில் பனஸ்வாடி என்றொரு சதுக்கம் உண்டு. கோவையில் கரும்புக் கடை என்று சொல்வதை ஒத்து. பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதி பனசம் என்னும் சொல்லை வடமொழி என்கிறது. பனஸ் எனும் சொல்லின் தமிழாக்கம். கம்பன் மாரீசன் வதைப்படலத்து பாடலில் பனசம், வாழை என்கிறான். அதாவது பலா, வாழை என்று குறிப்பிடுவதற்காக.  
 
 
கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே? வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை - டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை - நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு பரோட்டா என்பார்கள்.
 
 
சினிமா மட்டுமே அதிகாரப்பூர்வமான கலை என்றும், கிரிக்கெட் ஒன்றே அதிகாரப்பூர்வமான விளையாட்டு என்றும் இந்தி மட்டுமே அதிகாரப் பூர்வமான மொழி என்றும் இந்துக்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமான குடிமக்கள் என்றும் அறிவிக்கப்படும் காலம் வந்துவிட்டதோ என்று அச்சத்துடன் சில சமயம் யோசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது இன்று.
 
 
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி போகும் வழியில் வடகாடு என்னும் ஊரில் விளையும் பலாப்பழம் சுவையானது என்று அறிகிறேன். அளவில் சிறியதாக இருக்குமாம். தமிழ்நாட்டில் வணிக ரீதியாகவும் புகழும் வெற்றியும் பெற்ற பலாப்பழம் பண்ருட்டி பலாப்பழம். எனது நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’ தங்கர் பச்சானால் ‘சொல்ல மறந்த கதை’ என்று திரைப்படம் ஆனபோது கதாநாயகனாக நடித்த சேரன் பலாப்பழ மண்டியில்தான் ஆரம்பக் காட்சியில் அறிமுகம் ஆனார். மராத்தியர்கள் சத்தாரா, சாங்கிலி, ரத்னகிரி, கோலாப்பூர் பலாப்பழங்களின் பரணி பாடுவார்கள்.
 
 
வாசமும் சுவையும் மஞ்சள் அல்லது தாமரைச் சிவப்பு நிறமும் கொள்ளையான இனிப்பும் கொண்டது பலாப்பழம். சில இனங்களின் சுளை மெல்லியதாக இருக்கும். தேன் சொட்டும். சில இனங்களின் சுளை கனமானதாகவும் பலாச்சுளையில் 22.5% சர்க்கரை, 10% பலாச்சாறு, 5% சிட்ரிக் அமிலம், 15% நீர்ச்சத்து, சிறிது பொட்டாசியம் மெட்டா பை சல்பைட், மீதம் மாவும் நாரும். வேர்ப்பலா அல்லது தூர்ப்பலா, கோட்டுப்பலா என்பார்கள் சங்கப் புலவர்கள். சுளை நார் நாராக இருந்தால் அதை நார்ப்பலா எனலாம். கோட்டுப்பலா என்பது கிளைகளில் காய்த்து தொங்குவது. வேர்ப்பலா அல்லது தூர்ப்பலா எனில் பலா மரத்தின் தூர்ப்பகுதியில் - வேர்ப்பகுதியில் காய்ப்பது. பலா மரத்தின் சமீபத்தில் நின்றால் காய்கள் நமது முழங்கால் உயரத்தில் காய்த்திருக்கும்.
 
 
சென்னையில் நாகேசுவர ராவ் பூங்கா சமீபத்தில் இருக்கும் ஈஷா உணவகத்தின் உள்ளே வேர்ப்பலா ஒன்று நிற்கக் காணலாம். ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரில் பழுத்த பலா!’ என்ற பாரதிதாசனின் பாடல் வரியொன்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
 
 
பலாக்காயை கனியை வெட்டினால் வெள்ளையாகப் பால் வடியும். பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மையுடையது. தேங்காய் எண்ணை தொட்ட விரல்களால் சுளை எடுத்தால் பிசின் ஒட்டாது. அந்தப் பிசின் சேகரித்து வைத்து நெற்றியில் பொட்டுக்கள் ஒட்டப் பெண்கள் பயன்படுத்தினார்கள். நாம் அதை சக்கப் பிசின் என்றோம்.
 
 
சுளையினுள் இருப்பது கொட்டை. மலையாளம் குரு என்னும் சொல்லைக் கையாளும். எதணூத அல்லது ஓதணூத. பலாப்பழத்துக்கு முரட்டு முள்முள்ளான வெளித்தோல். உள்ளே சுளைகளைக் காக்க பூஞ்சு எனப்படுகிற சவிணி. ‘நடு நாட்டுச் சொல்லகராதியில்’ வேறெதும் சொல் இருக்கும். சுளையின் உள்ளே கொட்டையைப் பாதுகாக்க பட்டுப்போன்ற மஞ்சள் நிறத்தோல். பிறகு கண்ணாடித்தோல். அதனுள் தவிட்டு நிறமுடைய, உரித்து எடுக்க இயலாத, சுரண்டினால் மட்டுமே வரக்கூடிய தவிட்டுக் காப்பு. பிறகே கொட்டையின் மாப்பகுதி. கொட்டையின் கண்ணாடித் தோலை நீக்கிவிட்டால் முளைக்காது. பழந்தமிழ்ப் பாடல் ஒன்று சொல்லும் பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் உமி நீங்கினால் முளைக்காது என்று.        
 
 
சக்கக் குருவினை தீக்கங்கினுள் போட்டு சுட்டுத் தின்னலாம். வேகவைத்தும் தின்னலாம். தோல் நீக்கி அவித்துப் பொரியல் செய்யலாம். இங்கு நான் பொரியல் என்பது ஊணூதூ எனும் பொருளில். சக்கைக் கொட்டைப் பொரியல் என்போம். முதிர்ந்த சக்கைச் சுளை, தோல் நீக்கிய கொட்டை இவற்றை அரிந்து போட்டு எரிசேரி செய்வார்கள். தேங்காய் வறுத்து ஒன்றிரண்டாய் அரைத்து மிளகாய்ப்பொடி தூவிய ஒரு வகைக்கூட்டு என்று கொள்ளலாம்.
 
 
பழுப்பதற்கு முந்திய பருவத்து சக்கைச் சுளைகளை முழுதாக விதை எடுக்காமல் பானையில் போட்டு வேகவைத்து - தேங்காய்ப் பாலில் வேகவைப்பதும் உண்டுதான். எல்லோரும் கூடி இருந்து அவரவர் சிறு பாத்திரங்களில் எடுத்து வைத்து உண்பார்கள். கொட்டையின் தோல்களைத் தின்னும்போது நீக்கிக் கொள்வார்கள். தொட்டுக்கொள்ள உப்பும் குருமிளகும் நுணுக்கிய பொடி. நாட்டுப்புற மக்களுக்கு இது பகல் உணவு. பலாக்காய் இல்லாவிட்டால் கப்பக்கிழங்கு. ‘வாடி என் கப்பக் கிழங்கே’ கேட்டிருப்பீர்கள் தானே? கப்பக்கிழங்கு என்பதைத்தான் கொள்ளி, மரச்சீனி, மரவள்ளி, ஏழிலைக்கிழங்கு அல்லது குச்சிக்கிழங்கு என்கிறோம். ஏழிலைக் கிழங்கின் மாமிசம் என்றொரு கவிதைத் தொகுப்பு உண்டு. இரா.சின்னசாமி எழுதியது. காலச்சுவடு வெளியீடு.
 
 
பலாக்கொட்டை பற்றி மலையாளத்தில் இளக்காரமான பாட்டு ஒன்று உண்டு.
 
‘ சங்கரன் குட்டிக்கு மக்கள் இல்லாயப்போழ்
 
சக்கக் குழுவினைத் தத்தெடுத்து;
 
சங்கரன் குட்டிக்கு மக்கள் உண்டாயப்போழ்
 
சக்கக் குருவினை சுட்டுத் திந்நு.’
 
பொழிப்புரை எழுதினால் - சங்கரன் குட்டிக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்த போது, பலாக்கொட்டையைத் தத்தெடுத்தான். சங்கரன் குட்டிக்கு மக்கட்பேறு உண்டானபின் பலாக்கொட்டையைச் சுட்டுத் தின்றான். இது நேரடியான உரை. இதற்கு குறிப்புரை ஒன்றும் எழுதலாம். அரசியல்வாதியாக, சமூகநீதிக் காவலனாக, பண்பாட்டுச் சேவகனாக, மொழிப்போர் வீரனாக ஆகும் முயற்சியில் இருந்தபோது வீரதீரமான கொள்கைகளைத் தத்தெடுத்தனர். சில நூறு கோடிகள் தேற்றிய பின்னர் அந்தக் கொள்கைகளைக் கொளுத்தி குளிக்க வெந்நீர் போட்டனர்.
 
 
சக்கைக் கொட்டை பொரியல் போல, சக்கைக் கொட்டை தீயல் வைப்பார்கள். தீயல் என்பது காரக்குழம்பு என்று புரிந்துகொண்டால் போதுமானது. சக்கைக் கொட்டையை நீளவாக்கில் பிளந்து மலையாளத்துக் கூட்டு அவியலில் சேர்ப்பதுண்டு. முருங்கைக் காயும், சக்கைக் கொட்டையும் அவியல் செய்யலாம். தண்டன் கீரையுடன் பலாக்கொட்டையைச் சன்னமாக அரிந்து போட்டு துவரன் வைப்பார்கள். நான் துவரன் என்று குறிப்பிடுவது உங்கள் மொழியில் பொரியல்.
 
 
அரை விளைச்சலான பலாக்காயின் சுளை எடுத்து கொட்டை எடுத்து கொஞ்சம் மடலும் சேர்த்து புளிக்கறி வைப்பார்கள். தேங்காய் அரைத்துவிட்ட, வற்றல் மிளகு வைத்த, புளி ஊற்றிய மஞ்சள் நிறத்துக் குழம்பு அது. சோற்றில் ஊற்றிப் பிசையலாம். சக்கைக் புளிக்கறிக்கு அரைக்கும் போது ஐந்தாறு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பாள் அம்மா. சக்கை புளிக்கறி ஊற்றிச் சோறு பிசைந்து தின்று எட்டுப் பத்தாண்டுகள் இருக்கும் எனக்கு.
 
 
பிஞ்சுப் பலாக்காயை - பலா மூசு என்பார்கள். தோல் நீக்கி முழுதாக அரிந்து துவரன் வைக்கலாம். பெரிய துண்டுகளாய் வெட்டி வேகவைத்து இடித்தும் துவரன் வைக்கலாம். இடி சக்கைத் துவரன் என்பார்கள். பலா இலையில் தொன்னை செய்து கரண்டி போல் பயன்படுத்தி கஞ்சி கோரிக் குடிக்கலாம். கஞ்சி அற்றைநாளில் மலையாளிகளின் தேசிய உணவு. ‘கஞ்சி குடிச்ச மலையாளி, சோத்தைக் கண்டால் விடுவானா?’ என்றொரு இளக்காரப் பழமொழி இருக்கிறது.
 
 
இலையைப் பார்த்தால் பலாவை ஒத்திராத பப்பாளி இலையை ஒத்த இலை கொண்ட பலா ஒன்றுண்டு. அதனை சீமச்சக்க என்பார்கள். அது பழத்துக்கு ஆவதில்லை. கறிக்கே ஆகும். விளைந்து பறித்து தோலும் நடுத்தண்டும் நீக்கி மசால் கறி வைப்பார்கள். மசால் ரோஸ்ட் ஆகவும் செய்யலாம். உருளைக்கிழங்கு கைகட்டி நிற்கும். அந்தச் சக்கையில் சிப்ஸ் போடுவதும் உண்டு. சிப்ஸுக்கு தமிழ்ச்சொல் என்ன? வறுவலா? சரி.
 
 
பருவ காலங்களில் சக்கையின் சுளை எடுத்து வறுவல் செய்யலாம். தமிழகம் எங்கும் தாராளமாகக் கிடைக்கும். 2012ஆம் ஆண்டில் வட கரோலினா மாநிலத்தில் சார்லெட் நகரில் என் மகன் அழைத்துப்போன குஜராத்தி படேல் கடையில் பலாச்சுளை வறுவல் பார்த்தேன். பாமாயில் அல்லது கடலை எண்ணையில் வறுக்காமல் தேங்காய் எண்ணையில் வறுத்துப் பாருங்கள். பொன்மலர் நாற்றம் உடைத்து கொண்டாட்டமாக இருக்கும். வற்றல் வடக வகைகளைக் குறித்த மலையாளச் சொல், கொண்டாட்டம்.
 
 
கூழஞ்சக்கையை சுளை எடுத்து, பச்சரிசி வெல்லம் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பூ கலந்து இலைப்பணியாரம் செய்வார்கள். வாழை இலைத்துண்டு பூவரச இலையில் பணியார மாவை வைத்து மூடி இட்லிக் கொப்பரையில் அவித்து எடுப்பது. எண்ணெய்ப் பயன்பாடு இல்லை. வருக்கைச் சக்கை என்றால் பொடியாக சுளைகளை நறுக்கி வறுத்து தோலுரித்த பாசிப்பயிறு தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏல அரிசிப்பொடி எல்லம் சேர்த்த பூரணம் செய்து தகடு போல் அரிசி மாவைப் பரத்தி அதில் அடைப்பம் வைத்து அவிப்பார்கள். சக்கைப்பழ இலைப்பணியாரம்.
 
 
வருக்கைச் சக்கை சுளைகள் எடுத்து உளியால் சிறு துண்டுகளாய் கொத்தி நல்ல நயம் கோட்டயம் சர்க்கரைப் பாகு எடுத்துக் கலந்து, ஏலக்காய் பொடித்துத் தூவி, வெண்கலச் சிறு உருளியில் நெய்யூற்றி, அடுப்பில் ஏற்றி, பலாச்சுளைக் கலவை சேர்த்து சற்றே இளக்கமான அல்வா பதத்தில் வறட்டி எடுப்பார்கள். சக்க வறட்டி என்பார்கள். பலாப்பழப் பருவ காலம் முடிந்து பல மாதங்கள் சென்ற பின்பும் பலாப்பழ வறட்டி இருக்கும். அப்படியே தின்னலாம். பலாப்பழப் பருவம் இல்லாத காலத்தில் பலாப்பழப் பாயசம் செய்ய உதவும். கடந்த விளம்பி புத்தாண்டு தினத்தில் எங்கள் வீட்டில் சக்கப் பிரதமன். உமக்கு சுகர் இல்லையா என்பீர்கள்? அது கிடக்கிறது சவம்.
 
 
மலையாளத்தில் அது சக்கப் பிரதமன். அவர்களது கல்யாணப் பந்தியில், ஓணம் சத்தியில் கடையில் வாங்கும் எந்த இனிப்பும் இருக்காது. மாற்றாக, சக்கப் பிரதமன், ஏத்தன் (நேந்திரன்) பழப்பிரதமன், அடைப் பிரதமன், பாலடைப் பிரதமன், கடலைப் பருப்பு பிரதமன், சிறு பயிறு பருப்புப் பிரதமன், பால் பிரதமன், கோதுமைப் பிரதமன், இவற்றுள் எப்படியும் மூன்று வகை பரிமாறப்படும். மலையாளத்தார் வைக்கும் பிரதமனுடன் ஒப்பிடும்போது நாம் செய்து விளம்புவதை இனிப்பான கஞ்சி எனலாம். தமிழினத் துரோகி என்று அழைக்கப்பட்டாலும் எனக்கு அது ஒரு பொருட்டில்லை. உண்மை நின்றிடல் வேண்டும்.
 
 
எனவே கேரளத்தின் அதிகாரப்பூர்வமான பழமாகப் பலாப்பழம் அறிவிக்கப்பட்டிருப்பது எல்லாவிதத்திலும் தகுதியுடையது. கன்னடத்துக்காரன் தனிக்கொடி வைத்துக் கொள்கிறான். கடவுச்சீட்டு கன்னட மொழியிலும் இருக்க வேண்டும் என்கிறான். நம் தலைவர்கள் பணம், துட்டு, காசு, மணி, மணி என்று நாய்ப்பறத்தம், பேய்ப்பறத்தம் பறக்கிறார்கள்.
 
 
வடலூர் வள்ளலார் பெருவெளிக்குப் போனவர் அறிந்திருப்பர். ஐந்தமுதம் என்றோர் படையல் பிரசாதம். தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து ஒன்றாகக் கூட்டி  நற்கருப்பஞ் சாற்றுடன் சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்து காய்ச்சி, இளம் சூட்டில் இறக்கிவைத்து உண்ணத் தருவார்கள்.
 
 
பங்குனி சித்திரை மாதங்கள் பலாப்பழப் பருவக் காலம். அருகிலிருக்கும் பழச் சந்தைக்கு விரைந்து செல்லுங்கள். கூரான, பரந்த, பச்சை நிர முட்களை உடைய, விம்மிப் புடைத்த, வாசம் வீசுகிற, மெதுவாக அழுத்தினால் அமுங்குகிற, குண்டு குழி இல்லாத, நிரப்பான பலாப்பழத்தைத் தேர்ந்து வாங்குங்கள். தேவைப்பட்டால் சூர்ந்து பார்த்துக்கொள்ளலாம். அது கேரளத்தின் அதிகாரப்பூர்வமான பழமாக புகழ் பரவட்டும். நம் நாவும் இனிக்கட்டும்.
 
 
மேற்குத் தொடர்ச்சி மலையின் அருங்கொடை. ஆறு மடங்கு விலை கொடுத்து அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய  இறக்குமதிப் பழங்களுக்கு எவ்விதத்திலும் இளைத்தவன் அல்ல பலா. சர்க்கரை நோயாளிகளாகவே இருக்கட்டும்! நான்கு பலாச்சுளைகள் தின்பதன் மூலம் ஆயுளில் அரைமணி நேரம் குறைந்துவிடும் என்றால் குறைந்துதான் போகட்டும். பன்னெடுங்காலம் சேனைக் கிழங்கு போல் வாழ்ந்துதான் என்ன மலையை மறித்துவிட்டோம்? ஊழல் மாந்தரைத் தூக்கி வீசத் துப்பில்லை! சோற்றுக்குச் செலவு, பூமிக்குப் பாரம்!
 
 
 
[அந்திமழை மே 2018 இதழில் வெளியான கட்டுரை]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...