![]() |
நான் மிருகமாய் மாற: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 19 , 2022 17:55:00 IST
![]() இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’. தனது தம்பியைக் கொன்றவனைப் பழி வாங்கப் போகும் சசிகுமார், கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படம், பூமிநாதன் (சசிகுமார்) என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே முழுக் கதையும் விவரிக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான கதையை ரத்தம் தெறிக்கும் திரைக்கதையாக எழுதியிருக்கும் இயக்குநர், வன்முறை காட்சிகளையும் ஆபாச வசனங்களையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
பழிவாங்கலில் ஈடுபடும்போது ஆக்ரோசம், மாட்டிக் கொண்டபோது ஏற்படும் பரிதவிப்பு, கொலை செய்யும் முயற்சியில் தடுமாற்றம், குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு என விரியும் காட்சிகளை ஒற்றை மனிதராக தாங்கியிருக்கிறார் சசிகுமார்.
க்ளோஷப் காட்சிகளிலேயே வரும் விக்ராந்த் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஹரிப்பிரியா கதாபாத்திரம் வலுவாக இல்லை என்றாலும், குழந்தைக்கு அம்மாவாக சிறப்பாகவே நடித்துள்ளார். படத்தில் குறைந்த கதாபாத்திரங்கள் என்றாலும், அதை ஏற்று நடித்தவர்கள் தேவையான உழைப்பை வழங்கவே செய்திருக்கின்றனர்.
படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் ஜிப்ரானின் பின்னணி இசை கதையின் விறுவிறுப்பிற்கு பலம் சேர்த்திருக்கிறது. இரவு நேர மற்றும் சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ராஜா பட்டச்சார்ஜி சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநருக்கு நிகரான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகாந்த் NP.
சசிகுமார் விக்ராந்த் இடத்தை கண்டறியும் விதம், கொலைகளைக் காவல் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது, பிரச்சினை தீர்ப்பதற்கு எளிமையான வழிகள் இருந்தும், சிக்கலான பாதையை சசிக்குமார் தேர்ந்தெடுப்பது போன்றவை லாஜிக் மிஸ்ஸிங்.
சந்தர்ப்ப சூழ்நிலை சாதாரண மனிதனை எவ்வாறு மிருகமாக மாற்றுகிறது என்பதை அனைவரும் பார்க்கும் படி உருவாக்கியிருக்கலாம். அதுவே படத்தின் வெற்றிக்கு வழி!
|
|