தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றி கிடைத்த தவறான உளவு தகவலின் அடிப்படையில், நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் என்எஸ்சிஎன் (கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், என்எஸ்சிஎன்(கே) அமைப்பின் யங் ஆங் பிரிவினர் சிலர் இந்தியா-மியான்மர் எல்லையை ஒட்டிய நாகலாந்து மாநிலத்தின் மோன் பகுதியில் நடமாடி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, ஓடிங்-திரு கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில், நிலக்கரி சுரங்கத்தில் வேலை முடிந்து கிராம மக்கள் வழக்கம் போல் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனில் தீவிரவாதிகள் வருவதாக எண்ணிய பாதுகாப்பு படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சிலர் காயங்களுடன் தப்பி கிராமத்திற்கு சென்று விஷயத்தை கூறினர். பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்ததில், வேனில் வந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல என தெரியவந்தது. உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதற்கிடையே, ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இதனால், ராணுவ வீரர்கள் தங்களின் பாதுகாப்புக்காக மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மேலும் 5 கிராம மக்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர். கிராம மக்கள் தாக்கியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்துள்ளார். இத்தகவல்களை உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.