செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
தெய்வ வரம் பெற்ற நாயை மீட்பதற்கு, ஒருவன் நிகழ்த்தும் காமெடி கலாட்டாதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.
தெய்வ வரம் பெற்ற நாயை மீட்பதற்கு, ஒருவன் நிகழ்த்தும் காமெடி கலாட்டாதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). அவர் ரவுடி ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் ஊரைவிட்டுக் கிளம்பலாம் என நினைக்கும்போது, அவரது சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் யோகத்தால் கோடிகளில் புகழடைந்திருப்பதை அறிந்து, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா? இதற்கிடையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. நாயை திருடி உரிமையாளர்களை மிரட்டுவது, மாட்டிக் கொண்டால் சாமார்த்தியமாக சமாளிப்பது, அடி வாங்கி அவதிப்படுவது என வடிவேலு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் எந்த புதுமையும் செய்யாமல் சறுக்கியிருக்கிறார் இயக்குநர் சுராஜ். வடிவேலுவின் குடும்பத்தை பற்றி சொல்லும் காட்சிகள் ஆறுதல் தந்தாலும், சிரிப்பையே வரவைக்காது காமெடிகள் படம் முழுவதும் இருப்பது சோகம். வடிவேலுவின் நண்பர்களாக வரும் ரெடின் கிங்ஸ்லி, வில்லனாக வரும் ஆனந்த் ராஜ் செய்யும் காமெடிகள் ஆறுதல். ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த், விஜய் டிவி ராமர், லொல்லு சபா மாறன், முனீஸ்காந்த், தங்கதுரை, கே.பி.ஒய் பாலா, சச்சு, ராஜா ராணி கார்த்தி, மனோபாலா என பெரிய காமெடி நடிகர் பட்டாளம் இருந்தாலும் காமெடிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. மற்றொரு வில்லனாக வரும் ராவ் ரமேஷ் கொஞ்சம் மிரட்டுகிறார். 'டீசன்ட்டான ஆளு', 'அப்பத்தா' என இரு பாடல்களும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் வித்தியாசம் காட்டியிருக்கிறார். காமெடி படத்திற்குத் தேவையான ஜாலியான சில செட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு, படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வா-வும் ஓரளவு கவனிக்க வைக்கின்றனர். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ வைகைப் புயலை திருப்பிக் கொடுக்கும் எனப் பார்த்தால் வேகம் குறைந்த மாண்டஸ் புயலாக வந்துள்ளது. -தா.பிரகாஷ்