![]() |
வெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]Posted : வெள்ளிக்கிழமை, மார்ச் 30 , 2018 18:09:52 IST
![]() எப்போது பௌத்தம் அறிமுகம் ஆனது? எனக்கு பௌத்தம் 16 வயதில் அறிமுகம் ஆனது கதைகள் மூலமாக. ஏன் ஒரு அரசன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வெளியேற வேண்டும்? இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பின்னர் நான் சினிமாவைப் படிக்கும்போது அதில் எல்லா இடங்களிலும் பௌத்தத்தைப் பார்த்தேன். ஜப்பானின், ஒசாமா தெசுகா - மாங்காவின் தந்தை. அவர் பௌத்தம் பற்றி எழுதியிருக்கிறார். குரசாவா சாமுராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் படங்கள் முழுக்க ஜென் தருணங்கள் நிறைந்துள்ளன. அப்புறம் மெல்வில் புதிய அலை சினிமாவை உருவாக்கியவர். அவரிடமும் அவர் திரையில் உருவாக்கும் அமைதியில் நான் பௌத்தத்தைக் கண்டேன். அது வியாபித்து இருக்கிறது. குவிண்டின் டேரண்டினோ ‘மாங்கா’ காமிக்ஸால் பாதிக்கப்பட்டவர். உலகம் முழுக்கத் திரைமொழியில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட் இணைக்கப்படுவதற்குமான இடைவெளியில் பேரதிர்வும் பேரமைதியும் ஒளிந்திருப்பதைக் காண்கிறேன். அந்த பௌத்தப் பார்வை சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் உதவியிருக்கிறது. குரானை கொஞ்சம் படித்திருக்கிறேன். சூபிசம் அறிமுகம் உள்ளது. நசிருதீன் கோட்ஜா எனக்கு மிகவும் பிடித்த சூபி மாஸ்டர். அதன் பின்னர் கிறிஸ்து. என் எல்லாப் படங்களிலும் பைபிள் சிந்தனைகளைக் காணலாம். அதற்கு சின்னவயதில் இருந்து என்னை பெற்றோர் தேவாலயங்களுக்கு அழைத்துச் சென்றதுதான் காரணம் என நினைக்கிறேன். எங்கள் வீட்டில் எல்லா மார்க்கங்களையும் வணங்கினார்கள். என்னை வெளிப்படையான முறையில் வளர்த்தார்கள். இந்து குடும்பத்தில் இருந்து நான் வந்திருந்தாலும் என்னை இந்துவாக நான் உணர்ந்தது இல்லை. ஏதோ மன சஞ்சலம் இருந்தால் கதீட்ரல் சர்ச்சுக்கு பின்னர் இருக்கும் கல்லறைக்குச் செல்வேன். என் மகளுடன் அங்கு சென்றிருக்கிறேன். அந்த கல்லறையில் இருந்து கோபுரத்தைப் பார்ப்பேன். கொஞ்ச நாட்களாக புக் ஆஃப் ஜாப் ( Book of job ) படித்துக்கொண்டிருக்கிறேன்.
நடிகர் கமலுடன் செய்வதாக இருந்த பௌத்தப் பின்னணி கொண்ட படம்? வடக்கே தம்ரால்பட்டியில் இருந்து கண்டிக்கு சென்ற பல் பற்றிய கதை அது. புத்தர் இறந்தபின் அவர் உடல் பாகங்கள் எட்டு ராஜ்ஜியங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு பல் பாடலிபுத்திரத்தில் இருந்தது. எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின் ஆண்ட மன்னன் , பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த பல்லை தன் மகள், மருமகனிடம் அளித்து இலங்கைக்கு அனுப்புகிறான், இது ஒரு பௌத்தக் கதை. குலவம்சத்தில் உள்ளது. Buddha's relics என்ற ஆங்கிலப் புத்தகத்திலும் உள்ளது. இதை தம்ரால்பட்டியிலிருந்து கப்பல் வழியாகச் செல்கிறது என்பதற்குப் பதிலாக தமிழகம் வழியாகச் செல்வதாக மாற்றினேன். தமிழ் நாட்டில் இருந்து கதை தொடங்குகிறது. பல் போய்ச் சேர்வதற்குள் என்ன பௌத்த விசாரம் நடக்கிறது என்பதை ஒரு புதினமாக எழுதினேன். அதைப் படமாக்குவதற்குள் நின்றுவிட்டது. அது நின்றதும் பௌத்தம்தான். அது வேண்டாம் என முடிவு செய்தேன். அதில் ஏற்பட்ட நிர்வாணத்தில் பெரிய மகிழ்ச்சி. இப்போது நான் என் படங்களைச் செய்துகொண்டிருக்கிறேன்.
சவரக்கத்தி படம் சொல்வது என்ன? ஒரு நாள் காலையில் எழுந்தேன். இரவு கண்ட கனவை எழுதினேன். கத்தி எதுக்குத்தான் தொப்புள்கொடி வெட்டத்தான் என்ற வரியை எழுதினேன். கத்திகளிலலேயே வெங்காயம் வெட்டும் கத்தியும், சவரம் பண்ணும் கத்திகளும்தான் சிறந்தவை என நான் நினைக்கிறேன். கோபத்தில் வெட்டி சாய்ப்பதற்காக கத்தியைப் பயன்படுத்துகிறோம். மதத்தின் பேரால், கொள்கையின் பேரால் கத்தியைப் பயன்படுத்துகிறோம். இதெல்லாம் ஒட்டுமொத்த பகல் கனவின் பெயரால். இறந்தபின் சொர்க்கத்தில் போய் இருக்கப்போகிறோம் என்ற பகல்கனவு. என்னைப்பொருத்தவரை சொர்க்கத்தில் மரம் இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. மரம் இல்லாவிட்டால் அது சொர்க்கமே இல்லை என நான் நினைக்கிறேன். சொர்க்கத்தில் மரம் இருந்தால் பூமியும் சொர்க்கம்தானே. இதுபோல் பல கேள்விகள் உள்ளன. தொப்புள் கொடியை வெட்டுவதுதான் கத்தியின் மிக உச்சமான பணி. அதன் கூர்மை உயிரை உருவாக்குவதற்காகத்தான், கொல்வதற்கு அல்ல. ஆனால் கத்தி, பின்னாட்களில் உயிரை எடுக்கப் பயன்படுத்தப்பட்டது பெரிய அவலம். நான் ப்ளாக் பிலிம் பண்றவன் என்று சொல்கிறார்கள். அதனால் இதை ஒரு நகைச்சுவைப் படமா எடுக்கலாம் என்றார்கள். ஆனா நான் எல்லாவற்றையும் வாழ்க்கையில் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. நான் ஒரு ironist! இந்த படத்தில் சீரியசா ஒரு காமெடி பண்ணியிருக்கிறேன்.
உங்கள் படத்தில் முகத்தில் வைக்கும் குளோசப்களை விட கால்களுக்கு அதிகம் குளோசப் வைப்பது பற்றி? தமிழ் சினிமாவில் 500 ஷாட்கள் இருந்தால் அதில் 400 ஷாட்கள் குளோசப்கள்தான். அவற்றில் ஏதோ ஒரு மனிதன் வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பான். ஏதோ ஒரு அம்மா அழுதுகொண்டிருப்பார். தன்னுடைய கருத்தை அழுத்தமாகச் சொல்வதற்கு குளோசப் பயன்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் உலகில் உள்ள நாம் சினிமா கற்றுக்கொண்ட மாஸ்டர்கள் யாரும் அப்படி குளோசப் பயன்படுத்துவதே இல்லை. குரசோவாவின் மூன்றரைமணி நேரப்படமான செவன் சாமுராயில் 12 குளோசப்கள்தான். அவ்வளவு பெரிய முகமாக குளோசப்பில் வந்து சொல்வது ஒரு பிரச்சாரம். அதன் மூலம் கதாநாயகனை ஒரு தலைவனாக்குகிறோம். நமது இருக்கையை அவனுக்கு அளிக்கிறோம். அது ஒரு அரசியல் கருவி. அதை யாருமே புரிந்துகொள்வதே இல்லை. கால்களில் ஏன் வைக்கிறேன்? என்னுடைய படங்கள் எல்லாமே பயணங்கள். முகத்தில் குளோசப் வைப்பது எனக்குப் போரடிக்கிறது. முகம் நிறைய பொய் சொல்கிறது. காட்டிக்கொடுத்துவிடுகிறது. நம் வாழ்க்கையில் எங்கே குளோசப் இருக்கிறது? இறந்த அம்மாவின் முகத்தைப் பார்க்கையில், தாயிடம் குழந்தையாகப் பால்குடிக்கையில், காதலியை முத்தமிடுகையில், தந்தை பள்ளியில் நம்மை விட்டுவிட்டுத் திரும்புகையில் நண்பருடன் தோள்மேல் தோள் உரசுகையில் பார்க்கிறோம். அவ்வளவுதான். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு பெரிதாக குளோசப் பார்க்கையில் அது அரசியல் கருவி ஆகிவிடுகிறது. நான் எப்படி க்ளோசப் வைக்கிறேன் என்றால் எங்கெல்லாம் ஷாட் வைக்கத் தெரியவில்லையோ அங்கு மட்டும் வைப்பதாகப் புரிந்துகொள்கிறேன். என் படங்கள் பெரும்பாலும் மிட் ஷாட்டிலேயே வைத்திருக்கிறேன்.
சின்னவயதிலிருந்தே எப்போதும் கால்களை கவனிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறேன். அவை அவர்களின் மனதில் இருப்பதை சொல்கின்றனவா என்று ஒரு யோசனை. ஒரு கதாநாயகனும் நாயகியும் எங்கே போவது என்று நிலைகுலைந்து நிற்கையில் கால்களைக் காண்பிப்பேன். அது என்ன என்று நீங்க புரிந்துகொள்ளவேண்டும். யாரும் சப் டெக்ஸ்ட் புரிந்துகொள்ள மெனக்கெடுவதே இல்லை. யாருக்காகவும் நான் படமெடுக்கவில்லை. எனக்காக எடுக்கிறேன். நண்பர்களிடமும் பார்வையாளர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருக்கிறேன். யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. சாகற வரை காலில்தான் ஷாட் வைப்பேன்.
உங்கள் திரைப்பட ஆளுமையைக் கட்டமைத்தவை என்று ஐந்து விஷயங்களைச் சொல்லுங்கள்.. இதில் முதலில் வருவது என் பாட்டி. அதற்குப் பிறகு நான் மூன்று வயதில் இருந்து வாசித்துவரும் காமிக்ஸ்கள், டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி இருவரும் மூன்றாவது காரணம். அடுத்ததாக குரசோவா, ரொபர்டோ ப்ரஸ்ஸான். இந்த ஐந்துக்குப் பின்னால் பௌத்தம், மரங்கள், இசை (பிலிப் கிளாஸ், மொசார்ட், பீத்தோவன்), இயக்குநர் கிட்டானோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு சில கலைஞர்களை அவர்கள் நடித்திராத வேறுவகைப் பாத்திரங்களில் நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்களே.. (பாண்டிய ராஜன், பாக்யராஜ்) ஒரு சாதாரண மனிதன், ஆனால் தப்பு செய்கிறான். அந்தப் பாத்திரத்துக்கு பாண்டியராஜனைப் போட்டேன். அவரைப் பார்த்தவுடன் மீசையை எடுத்துவிடுங்கள் என்றேன். நான் வாழ்க்கையில் மீசையை எடுத்ததே இல்லை என்றார். அப்படியென்றால் ரொம்ப நல்லது. மீசையை எடுத்துவிடுங்கள் என்றேன். நான் காமெடி ரோல் பண்றவன்... இந்த ரோலுக்கு சரிப்பட்டு வருமா என்றார். பண்ணக்கூடாது என்று எதாவது ரூல் இருக்கா? பண்ணலாம் சார் என்றேன். படம் முடியும்வரை எங்களுக்குள் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. நான் இரண்டாவது படம்தான் எடுக்கிறேன். அவரோ பேர் பெற்ற இயக்குநர். நான் எப்படி படம் எடுக்கக்கூடாதோ அப்படியெல்லாம் எடுக்கிறேன். அப்புறம் படம் முடிந்தபின்னர் சரியாகிவிட்டது. படம் வெற்றிபெற்று நான்காவது நாள் அவர் தேடிவந்து எனக்கு ஒரு மோதிரம் போட்டார்.
பாக்யராஜ் சாருடன் பணிபுரியவேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. வயதான மனிதர் பாத்திரம். ப்ளாஷ் பேக் காட்டாமல் செய்யப்பட்ட பாத்திரம். அதற்கு மக்களுக்குத் தெரிந்த ஒருவர் வேண்டும் என்று விரும்பினேன். அவரைத் தெரியாதவராகக் காட்டுவது எளிது. தாடி வைத்துவிட்டால் போதும். இப்படத்தில் பாக்யராஜ் சாருக்கு வசனமே இல்லை. அதிகம் போனால் இரண்டுவரும் என்றேன். அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் ஷுட்டிங்கின்போது ஒரு காட்சியில் நான் என்ன பண்ணவேண்டும் என்று கேட்டார். ஒன்றுமே செய்யவேண்டாம். சும்மா இருந்தாலே போதும் என்று சொன்னேன். ஒண்ணுமே பண்ணாமல் இருப்பதும் பௌத்தம் தானே.. பாக்யராஜ் சார் சில சமயம் இந்த சீனில் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்பார். எதை வேண்டுமானாலும் நினைச்சுக்கோங்க சார் என்பேன். பிலிம் மேக்கிங்கில் சின்ன சின்ன முடிவுகள் முக்கியம். சினிமா எடுக்கறதே அன்றன்றைய பிரச்னைகளுக்கு விடை காண்பதுதான் என்று நினைக்கிறேன்.
சண்டைக் காட்சிகள் எடுக்க மிகவும் மெனக்கெடுகிறீர்கள்? சின்ன வயதில் சென்னை வந்தபின் குங்பூ கற்றுக்கொண்டேன். நான் பார்த்த முதல் திரைப்படமே எண்டர் தி டிராகன் தான்! திண்டுக்கல்லில் ஐந்து வயதில் என் அப்பா என்னை அப்படத்துக்கு அழைத்துச் சென்றார் காலைக்காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். படம் எப்படிப்பா இருந்தது என்று அப்பா கேட்டார். ரொம்ப நல்லா இருந்தது என்றேன். உடனே சாப்பிடக்கூட இல்லை. திரும்பவும் மறுகாட்சிக்கு தியேட்டருக்குள் நுழைந்து விட்டோம். நான் முதன்முதலில் வாழ்க்கையைப் பார்த்தது புரூஸ்லீயின் கால்களில்தான். என் படங்களில் கால்கள் ஷாட் அடிக்கடி வருவதற்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். புரூஸ்லீயைப் பற்றி விரிவாகப் படித்துள்ளேன். படித்துக்கொண்டே இருக்கிறேன். அவர் ஐப் மேனிடம் சென்றது, ஜே.கேயை தத்துவஞானியாகப் பார்ப்பது, சென்னைக்கு புரூஸ்லீ வந்தது என்று முழுசாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். உடலின் விசையை அதிகமாக உபயோகப்படுத்தாமல் அதிகமான விளைவைப் பெறுவது எப்படி என்பதுதான் அவரது தத்துவம். அதுவும் ஒரு ஷயோலின் கோயிலில் சொல்லப்பட்டதுதான். சாமுராய் பற்றி நிறைய படித்துள்ளேன். அவர்கள் எப்படி வாள் பயிற்சி செய்தார்கள்? அதிகம்போனால் இரண்டு வீச்சுகள்தான் இருக்கும். குரசோவா படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். இது எனக்குத் தெரியும். என் படத்தில் சண்டைக்காட்சிகள் 450 அடிதான் இருக்கும் அதில் 250 அடிகள் வரை சண்டைக்காக தயார்ப்படுத்துவேன். ஒரு கட்டத்தில் அந்தக் கதாநாயகன் அந்த போரைச் செய்துதான் ஆகவேண்டும் என்று தள்ளுவேன். சண்டை குறைவாகத் தான் இருக்கும். சேரன் பாத்திரம் யுத்தம் செய் படத்தில் செய்த சண்டையைப் பார்த்தால் தெரியும். கையில் இருந்து ஒரு நகம்வெட்டியை எடுத்து மோதுவான். அந்த கதாபாத்திரத்துக்கு சண்டைக்கலை தெரியும் என்பதும் புலப்படும். நல்ல சண்டைப்படங்களில் இதுதான் இருக்கும். எதற்காக படம் எடுக்கிறீங்க என்று கேட்டால் சண்டைக் காட்சிகள் எடுப்பதற்காகப் படம் எடுக்கிறேன் என்றுகூடச் சொல்வேன். எதைக் குறைவாகச் செய்யவேண்டும். எங்கே காமிரா வைச்சு எடுத்தால் சிறப்பா இருக்கும் என்று எனக்குத் தெரியும். துப்பறிவாளன் படத்தில் சண்டைக்காக 30 நாள் யோசித்தேன். நன்றாக வந்தது. நிஜவாழ்க்கையில் சண்டை இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால் திரைப்படங்களில் கனவுபோல் சண்டைக் காட்சிகளை அமைக்கிறேன்.
வாசிப்பு அனுபவம் உங்கள் திரை ஆளுமையை உருவாக்கியிருப்பது பற்றி? வாசிப்புதான் அடிப்படை. குரசோவா சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு படிங்க என்றுதான் சொல்கிறார். ஹெர்சாக்கிடம் சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது. அவர் படிங்க, படிங்க என்று பத்து தடவை சொல்கிறார். மெல்விலும் படிங்க என்றுதான் சொல்கிறார். ப்ரஸ்ஸானின் படங்கள் நாவலில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. ஹிட்ச்காக் தீர்க்கமாக படித்துள்ளார். குப்ரிக் உலகின் மிகப்பெரிய படிப்பாளி. ஏன் இலக்கியம் முக்கியம் என்றால் அங்குதான் கதை சொல்லப்படுகிறது.
ஒரு ஊரில் ஒரு யானை இருந்துச்சாம்.. அப்புறம்? இந்த அப்புறம்தான் கட். அது ஒரு நாள் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்ததாம்.. அங்கு ஒரு கிணறைப் பார்த்ததாம். அப்புறம்? இதுதான் கட். கதை சொல்வதில்தான் சினிமா இருக்கிறது. இந்தக் கதைகள் இலக்கியத்தில்தான் இருக்கின்றன. இதுதான் சினிமாவின் தாய். ஒரு காலகட்டத்தில் படங்களைப் பார்த்துப் பார்த்து அதில் உள்ள கதைகளை மறுபயன்பாடு பண்ண ஆரம்பித்துள்ளோம். ஆனால் இலக்கியங்களில் அப்படி இல்லை. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் பாதிரியார் ஜோஷிமா, அலோஷியாவிடம் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும் அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் அது தன்னை உறுத்திக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். இதுபோன்ற ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டா? ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு செல்வதைப் பல படங்களில் பார்க்கிறோம் இதன் மூலமே அன்னா கரினினா தானே? ரோமியோ ஜூலியட்தான் அலைகள் ஓய்வதில்லையில் இருந்து சித்திரம்பேசுதடி வரைக்கும்! சினிமா என்பது கதை சொல்வது. இரண்டு மணி நேரத்தில் சொல்லணும். அதற்கு நாட்கணக்கில் படிக்கவேண்டும். கதை சொல்வதற்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும் இலக்கியம்தான் ஆதாரம்! உலகை ரசிக்க, வாழ்வை நேசிக்க, எல்லாவற்றையும் கற்றுத் தரும் தாயாகவே நான் இலக்கியத்தைப் பார்க்கிறேன்!
[அந்திமழை பிப்ரவரி 2018 இதழில் வெளியான நேர்காணல் ]
|
|